Sunday, July 10, 2016

விந்தானுவிந்தர்களைக் கொன்ற அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 098

Arjuna killed Vinda and Anuvinda! | Drona-Parva-Section-098 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : ஜெயத்ரதன் இருந்த இடத்தை நோக்கிச் சென்ற கிருஷ்ணார்ஜுனர்கள்; அர்ஜுனனின் குதிரைகள் களைப்படைந்திருப்பதைக் கண்டு அர்ஜுனனை அணுகிய விந்தனும், அனுவிந்தனும்; விந்தனையும், அனுவிந்தனையும் கொன்ற அர்ஜுனன்; குதிரைகளின் களைப்பைப் போக்கத் தேரிலிருந்து கிருஷ்ணன் அவற்றை அவிழ்த்தது; க்ஷத்திரியர்கள் பலரை எதிர்த்துத் தரையில் நின்று தனியாகப் போராடிய அர்ஜுனன், குதிரைகளுக்காக ஒரு தடாகத்தையும், அம்புகளாலான ஒரு கூடத்தையும் உண்டாக்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சூரியன் அஸ்த மலைகளின் முகடுகளை நோக்கித் தன் கீழ்நோக்குப் பயணத்திற்குத் திரும்பிய போது, ஆகாயமே புழுதியால் மறைந்திருந்த போது, சூரியக் கதிர்களின் வெப்பம் தணிந்த போது, அந்தப் பகல் பொழுது வேகமாக மங்கத் {மறையத்} தொடங்கியது. படைவீரர்களைப் பொறுத்தவரை, வெற்றியை விரும்பிய அவர்களில் சிலர் ஓய்ந்திருந்தனர், சிலர் போரிட்டனர், சிலர் மோதலுக்குத் திரும்பினர். வெற்றி நம்பிக்கையால் தூண்டப்பட்ட துருப்புகள் இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.


குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம், (எதிரி படைவீரர்களின் ஊடாக) தன் தேருக்கு வேண்டிய அளவு போதுமான வழியை உண்டாக்கினான். இவ்வழியிலேயே ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} (தேரை வழிநடத்திச்) சென்றான். பாண்டுவின் உயர் ஆன்ம மகன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே உமது துருப்புகள் பிளந்து வழிவிட்டன. பெரும் சக்தியைக் கொண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} பல்வேறு வகையான சுழல் நகர்வுகளை {மண்டலகதிகளைக்} காட்டித் தன் தேரோட்டும் திறனை வெளிப்படுத்தினான்.

{அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்டவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், யுகநெருப்புக்கு ஒப்பானவையும், நரம்புகளால் {இழைகளால்} கட்டப்பட்டவையும், நேரான முட்டுகள் {அழுந்திய கணுக்கள்} கொண்டவையும், தொலைதூரம் செல்லக்கூடியவையும், மூங்கிலாலோ (மூங்கில்பிளவுகள் அல்லது அவற்றின் கிளைகளாலோ), முழுக்க இரும்பினாலோ ஆனவையுமான அர்ஜுனனின் கணைகள், அந்தப் போரில், பல்வேறு எதிரிகளின் உயிரை எடுத்து, (அங்கே இரை தேடி கூடியிருந்த) பறவைகளுடன் சேர்ந்து உயிரினங்களின் குருதியைக் குடித்தன. அர்ஜுனன் தன் தேரில் நின்று தன் கணைகளை முழுமையாக இரண்டு மைல்கள் {ஒரு குரோச} தூரம் ஏவி, அந்தக் கணைகள் தன் எதிரிகளைத் துளைத்து, {அவர்களை மேலுலகத்திற்கு} அனுப்பிய போது அந்த இடத்திற்கு அந்தத் தேரே வந்துவிட்டது [1]. கருடன், அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டவையும், நுகத்தடிகளைச் சுமந்தவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உலகமே வியக்கும் வகையில் தேரை வேகமாகச் செலுத்தினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் தேரோ, ருத்திரனுடையதோ, வைஸ்ரவணனுடையதோ {குபேரனுடைய தேரோ} கூட அவ்வளவு வேகம் சென்றதில்லை. மனம் விரும்பிய வேகத்தில் அர்ஜுனனின் தேர் சென்றதைப் போல, போரில் வேறு யாருடைய தேரும் அதற்கு முன்பு சென்றதில்லை.

[1] "வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அர்ஜுனனின் தேரானது, தன்னில் இருந்து ஏவப்பட்ட கணைகள் எதிரியை அடையும்போதே எதிரி இருந்த இடத்தை அடைந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அஃதாவது அந்தத் தேரானது அர்ஜுனனின் அம்பின் வேகத்திற்கு இணையான வேகத்தில் சென்றது.

ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அந்தப் போருக்கான தேரை எடுத்துக் கொண்டு குதிரைகளை முடுக்கி (பகைவரின்) துருப்புகளினூடாகவே சென்றான். அந்தத் தேர்க்கூட்டங்களுக்கு மத்தியில் பெரும் சிரமத்தோடு அர்ஜுனனின் தேரை இழுத்து வந்த அந்தச் சிறந்த குதிரைகள், போரில் மகிழும் பல வீரர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுப் பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தன. எனினும் அவை, இறந்த குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்கள், உடைந்த தேர்கள், ஆயிரக்கணக்கான மலைகளைப் போலத் தெரிந்த இறந்த யானைகளின் உடல்கள் ஆகியவற்றின் மேல் ஏறிச் சென்றாலும், அடிக்கடி அழகாக வளையமாகச் சுழன்றன {மண்டல கதிகளை வெடிக்காட்டின}.

அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவந்தியின் வீரச் சகோதரர்கள் இருவரும் (விந்தனும், அனுவிந்தனும்), தங்கள் படைகளின் தலைமையில் நின்று கொண்டு, அர்ஜுனனின் குதிரைகள் களைத்திருப்பதைக் கண்டு அவனுடன் மோதினர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், அர்ஜுனனை அறுபத்துநான்கு {64} கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் {70}, (அர்ஜுனனின் தேரிலிருந்த) நான்கு குதிரைகளை ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தனர். ஓ! மன்னா, கோபத்தால் நிறைந்தவனும், உடலின் முக்கியப் பகுதிகளைக் குறித்த அறிவுடையவனுமான அர்ஜனன், உயிர்நிலைகளையே ஊடுருவவல்லவையான ஒன்பது நேரான கணைகளால் அந்தப் போரில் அவ்விருவரையும் தாக்கினான். அதன்பேரில், அந்தச் சகோதரர்கள் இருவரும், சினத்தால் நிறைந்து, பீபத்சு {அர்ஜுனன்} மற்றும் கேசவனைக் கணைமாரியால் மறைத்து சிங்க முழக்கம் செய்தனர்.

வெண்குதிரைகளைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அப்போது இரு பல்லங்களைக் கொண்டு, அவ்விரு சகோதரர்களின் அழகிய விற்களையும், தங்கம் போலப் பிரகாசிக்கும் அவர்களது கொடிமரங்களையும் அந்தப் போரில் விரைவாக அறுத்தான். ஓ! மன்னா, வேறு விற்களை எடுத்துக் கொண்ட விந்தனும், அனுவிந்தனும், கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் கணைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கலங்கடிக்கத் தொடங்கினர். பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெருங்கோபத்தை அடைந்து, இரு கணைகளைக் கொண்டு தன் எதிரிகளின் இரு விற்களையும் மீண்டும் வேகமாக வெட்டினான். மேலும் அர்ஜுனன், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான மேலும் சில கணைகளால் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள் மற்றும் அவர்களது பின்புறத்தைப் பாதுகாத்த போராளிகள் இருவர் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்தோர் ஆகியோரைக் கொன்றான். பிறகு, கத்தி போன்ற கூர்மையுள்ள மேலும் ஒரு பல்லத்தினால் {அவர்களில்} மூத்த சகோதரனின் {விந்தனின்} தலையை வெட்டியதால், அவன் {விந்தன்}, காற்றினால் முறிந்த மரத்தைப் போல உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அனுவிந்தன், குதிரைகளற்ற தேரில் கொல்லப்பட்டுக் கிடக்கும் விந்தனைக் கண்டு ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். பிறகு, விந்தனின் தம்பியான அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அனுவிந்தன்}, தன் அண்ணனின் கொலைக்குப் பழிவாங்குவதற்காகக் கையில் கதாயுதத்துடன் ஆடிக் கொண்டே சென்றான். சினத்தால் நிறைந்த அனுவிந்தன், அந்தக் கதாயுதத்தைக் கொண்டு வாசுதேவனின் முன் நெற்றியைத் தாக்கினான். எனினும் நடுங்காத பின்னவன் {கிருஷ்ணன்}, மைநாக மலையைப் போல அசையாதிருந்தான். அப்போது அர்ஜுனன், ஆறு கணைகளைக் கொண்டு, அவனது கழுத்து, இரு கால்கள், இரு கரங்கள் மற்றும் சிரம் ஆகியவற்றை அறுத்தான். இப்படி (துண்டுகளாக அறுபட்ட) அனுவிந்தனின் அங்கங்கள் பல மலைகளைப் போலக் கீழே விழுந்திருந்தன.

அவ்விருவரையும் பின்தொடர்ந்து வந்தவர்கள், அவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு, சினத்தால் நிறைந்து, நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி (அர்ஜுனனை நோக்கி) விரைந்தனர். அவர்களை விரைவாகக் கொன்ற அர்ஜுனன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பனிக்காலத்தின் முடிவில் காட்டை எரிக்கும் நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். சற்றே சிரமத்துடன் அத்துருப்புகளைக் கடந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, மேகங்களுக்கிடையில் மறைந்திருந்து, அவற்றை மீறி வெளிவந்த உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட கௌரவர்கள் அச்சத்தால் நிறைந்தனர். ஆனால் விரைவாக மீண்ட அவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவன் {அர்ஜுனன்} களைத்திருப்பதையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் தொலைவிலேயே இருப்பதையும் புரிந்து கொண்டு, அவனை நோக்கி மீண்டும் மகிழ்ச்சியாக விரைந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைச் சூழ்ந்து கொண்டு சிங்க முழக்கமிட்டனர்.

கோபத்தில் நிறைந்திருந்த அவர்களைக் கண்டவனும், மனிதர்களில் காளையுமான அர்ஜுனன் புன்னகைத்தபடியே, தாசார்ஹ குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} மென் சொற்களில், "நம் குதிரைகள் கணைகளால் பீடிக்கப்பட்ட களைத்திருக்கின்றன. சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் தொலைவிலேயே இருக்கிறான். இப்போது செய்வதற்குச் சிறந்தது என நீ எதை நினைக்கிறாய்? ஓ! கிருஷ்ணா, எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. மனிதர்களில் நீயே எப்போதும் விவேகியாவாய். பாண்டவர்கள் உன்னையே தங்கள் கண்களாகக் கொண்டு, போரில் தங்கள் எதிரிகளை வெல்வார்கள். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்று நான் நினைப்பதை உண்மையாக நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மாதவா, குதிரைகளை நுகத்தடியில் இருந்து அவிழ்த்து, அவற்றின் {உடல்களில் தைத்திருக்கும்} கணைகளைப் பிடுங்குவாயாக" என்றான் {அர்ஜுனன்}. பார்த்தனால் இப்படிச் சொல்லப்பட்ட கேசவன், "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நானும் நீ வெளிப்படுத்திய கருத்தையே கொண்டிருக்கிறேன்" என்றான். அப்போது அர்ஜுனன், "ஓ! கேசவா {கிருஷ்ணா}, மொத்த படையையும் நான் தடுத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது எதுவோ, அதை நீ முறையாகச் செய்வாயாக" என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கிய தனஞ்சயன், தன் வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டு அசையாத மலையென அங்கே நின்றான். தனஞ்சயன் தரையில் நிற்பதைக் கண்டு, அதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதிய க்ஷத்திரியர்கள், வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் உரக்க முழங்கியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். தனியாக நின்று கொண்டிருந்த அவனைப் பெரும் தேர்க்கூட்டங்களால் சூழ்ந்து கொண்ட அனைவரும், தங்கள் விற்களை வளைத்து, அவன் {அர்ஜுனன்} மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர். கோபத்தில் நிறைந்திருந்த அவர்கள் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவி சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் பார்த்தனை முழுமையாக மறைத்தனர். சிங்கத்தை நோக்கி விரையும் மதங்கொண்ட யானைகளைப் போலப் பெரும் க்ஷத்திரியர்கள் அனைவரும் மனிதர்களில் சிங்கமான அந்த க்ஷத்திரியக் காளையை {அர்ஜுனனை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்.

சினத்தால் நிறைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, எண்ணற்ற வீரர்களைத் தடுப்பதில் தனியாக வென்ற போது, நாங்கள் கண்ட அவனது கர வலிமை மிகப் பெரியதாக இருந்தது. பலம் நிறைந்த பார்த்தன், தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைக் கலங்கடித்து, எண்ணற்ற கணைகளால் அவர்கள் அனைவரையும் விரைவாக மறைத்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த அடர்த்தியான கணைகள் மழையாகப் பொழிந்து மோதியதன் விளைவாக, ஆகாயத்தின் அந்தப் பகுதியில், தீப்பொறிகளை இடையறாது வெளியிடும் நெருப்பொன்று உண்டானது. போரில் வெற்றியை விரும்பியவர்களும், குருதியில் நனைந்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த குதிரைகள் மற்றும் பேரொலியுடன் பிளிறியபடியே எதிரிகளைக் கலங்கடிக்கும் மதங்கொண்ட யானைகள் ஆகியவற்றின் துணையுடன் கூடியவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், ஒரு பொதுநோக்கில் ஒன்றிணைந்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்த எண்ணற்ற பகைவீரர்கள் அனைவராலும் அங்கே அந்தச் சூழல் மிகவும் வெப்பமடைந்தது [2].

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, "இரத்தத்தால் நனைக்கப்பட்டவர்களும், பெருமூச்சு விடுகின்றவர்களுமான மகாவில்லாளிகளாலும், நன்றாகப் பிளக்கப்பட்டவைகளும், கனைக்கின்றவைகளுமான குதிரைகளாலும், யானைகளாலும் முயற்சியுள்ளவர்களும் யுத்தத்தில் ஜயத்தை விரும்புகிறவர்களும், ஒரே காரியத்தில் பற்றுதலுள்ளவர்களும், கோபம் கொண்டவர்களுமான அநேக சத்ரு வீரர்களாலும் அந்த இடத்தில் தாபமுண்டானது போல இருந்தது" என்றிருக்கிறது.

கணைகளை நீரோட்டமாகவும், கொடிமரங்களைச் சுழல்களாகவும், யானைகளை முதலைகளாகவும், காலாட்படை வீரர்களை எண்ணற்ற மீன்களாகவும், சங்கொலிகள் மற்றும் பேரிகை ஒலிகளை முழக்கமாகவும், தேர்களைப் பொங்கும் அலைகளாகவும், போராளிகளின் தலைக்கவசங்களை ஆமைகளாகவும், குடைகள் மற்றும் கொடிகளை நுரையாகவும், கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைத் தன் பாறைகளாகவும் கொண்டிருப்பதும், அகன்றதும், கடக்க முடியாததும், கலங்கடிக்கப்பட முடியாததுமான அந்தத் தேர்களின் எல்லையற்ற பெருங்கடலைத் தன் கணைகளால் ஒரு கரையைப் போலத் தடுத்துக் கொண்டிருந்தான்.

பிறகு, அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் அன்பு நண்பனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனிடம் அச்சமற்ற வகையில், "ஓ! அர்ஜுனா, குதிரைகள் நீரருந்த இங்கே இந்தப் போர்க்களத்தில் எந்தக் கிணறும் இல்லை. குதிரைகள் குடிப்பதற்கே நீரை விரும்புகின்றன, குளிப்பதற்காக அல்ல" என்றான். வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அர்ஜுனன் மகழ்ச்சியாக, "இதோ இருக்கிறது" என்று சொல்லி, ஓர் ஆயுதத்தைக் கொண்டு பூமியைத் துளைத்து, குதிரைகள் நீரருந்த ஒரு சிறந்த தடாகத்தை உண்டாக்கினான்.

சக்கரவாகங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தடாகத்தில் அன்னங்களும், வாத்துகளும், நிறைந்திருந்தன. அகலமாகவும், தெளிந்த நீர் நிறைந்திருந்ததாகவும் இருந்த அது, முழுதும் மலர்ந்த நல்ல வகைத் தாமரைகளால் நிறைந்திருந்தது. மேலும் அதில் பல்வேறு வகைகளிலான மீன்களும் இருந்தன. ஆழத்தில் அடியற்றதான அது, பல முனிவர்களால் அடையப்படுவதாக இருந்தது. ஒரு கணத்தில் அங்கே உண்டாக்கப்பட்ட அத்தடாகத்தைக் காண தெய்வீக முனிவரான நாரதர் வந்தார்.

(தெய்வீகத் தச்சனான) துவஷ்டிரியை {த்வஷ்டாவைப்} போல அற்புதச் செயல்களைச் செய்யவல்ல பார்த்தன் {அர்ஜுனன்}, கணைகளையே விட்டங்களாகவும், மச்சுகளாகவும் {கைமரங்களாகவும்}, தூண்களாகவும், மேற்கூரைகளாகவும் கொண்ட கணைமயமான ஒரு கூடத்தையும் அங்கே உண்டாக்கினான். பார்த்தனால் உண்டாக்கப்பட்ட கணைமயமான அந்தக் கூடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கோவிந்தன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே, "நன்று, நன்று" என்று சொன்னான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English