Friday, August 05, 2016

துரியோதனனை வீழ்த்திய சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 119

Satyaki defeated Duryodhana! | Drona-Parva-Section-119 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 35)

பதிவின் சுருக்கம் : கௌரவத் துருப்புகளை அச்சுறுத்திய சாத்யகி; சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கௌரவர்கள்; தன் தேரோட்டியிடம் மீண்டும் பேசிய சாத்யகி; பயங்கரப் போர்; அர்ஜுனனே ஏற்படுத்தாத பேரழிவை ஏற்படுத்திய சாத்யகி; துரியோதனனின் தேரோட்டியைக் கொன்றது; துரியோதனனின் தேர் களத்தைவிட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டது; சாத்யகியை வழிபட்ட கௌரவத் துருப்புகள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "யவனர்கள் மற்றும் காம்போஜர்களை வீழ்த்தியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான யுயுதானன் {சாத்யகி}, நேராக உமது துருப்புகளுக்கு மத்தியில் அர்ஜுனனை நோக்கிச் சென்றான். அழகிய பற்களைக் கொண்டவனும், சிறந்த கவசத்தைப் பூண்டிருந்தவனும், அழகிய கொடிமரத்தைக் கொண்டிருந்தவனுமான அந்த மனிதர்களில் புலி (சாத்யகி), மான்களைக் கொல்லும் வேடுவனைப் போலக் கௌரவத் துருப்புகளைக் கொன்று அவர்களை அச்சங்கொள்ளச் செய்தான்.


தன் தேரில் சென்ற அவன் {சாத்யகி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், மிகக் கடினமானதும், தங்க நிலவுகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லைப் பெரும் பலத்துடன் அசைத்தான். தங்க அங்கதங்களைக் கொண்ட தன் கரங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தலைப்பாகையுடனும், தங்கக் கவசம் அணிந்த தன் உடலுடனும், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட தன் கொடிமரம் மற்றும் வில்லுடனும் மேருவின் சிகரத்தைப் போல அவன் ஒளிர்ந்தான். இப்படி ஒளிர்ந்த அவன், தன் கையில் அந்த வட்டமான வில்லுடன் கூதிர் காலத்தில் தோன்றிய மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்தான். காளையின் கண்கள், நடை மற்றும் தோள்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, மாட்டுக் கொட்டகையில் உள்ள ஒரு காளையைப் போல உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தான்.

தன் மந்தையின் மத்தியில் செருக்குடன் நிற்கும் மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனும், அதன் நடையைக் கொண்டவனுமான அவனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, யானை மந்தையின் மதங்கொண்ட தலைவனை {தலைமை யானையை} அணுகும் ஒரு புலியைப் போல உமது போர்வீரர்கள் அவனை அணுகினர். உண்மையில், அவன் {சாத்யகி} துரோணரின் படைப்பிரிவையும், கடக்க முடியாத போஜர்களின் படைப்பிரிவையும் கடந்த பிறகு, ஜலசந்தனின் துருப்புகள், காம்போஜர்கள் படை ஆகியவற்றைக் கொண்ட கடலை அவன் {சாத்யகி} கடந்த பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எனும் முதலையிடமிருந்து அவன் தப்பிய பிறகு, பெருங்கடலைப் போன்ற அந்தப் படையை அவன் கடந்த பிறகு, உமது படையின் தேர்வீரர்கள் பலர் கோபத்தால் தூண்டப்பட்டு அந்தச் சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.

சாத்யகி முன்னேறிச் செல்கையில், துரியோதனன், சித்திரசேனன், துச்சாசனன், விவிம்சதி, சகுனி, துஸ்ஸஹன், இளமை நிறைந்த துர்த்தர்ஷணன், கிராதன் மற்றும் ஆயுதங்களை நன்கறிந்தவர்களும், வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான பிற துணிச்சல் மிக்கவர்கள் பலரும் அவனைப் {சாத்யகியைப்} பின்னால் இருந்து தொடர்ந்து சென்றனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஆரவாரமானது, பெருங்காற்றால் சீறும் முழு அலைகளைக் கொண்ட பெருங்கடலைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.

தன்னை நோக்கி விரையும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கண்ட அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, "மெதுவாகச் செல்வாயாக. ஓ! சாரதியே, பௌர்ணமியில் உச்சபட்ச உயரத்தை அடைந்து பெருகி வரும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, ஓ! தேரோட்டியே, இந்தப் பெரும்போரில் (சினமும், செருக்கும்) பெருகியதும், யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள் நிறைந்ததும், தன் தேர்களின் ஆழ்ந்த முழக்கத்தால் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடி என்னை நோக்கி வேகமாக விரைவதும், பூமி, வானம், ஏன் கடல்களையே நடுங்கச் செய்வதுமான இந்தத் துருப்புகளின் கடலை நான் தடுப்பேன். ஓ! தேரோட்டியே, இந்திரனுக்கு இணையான என் ஆற்றலை இந்தப் பெரும்போரில் நீ காண்பாயாக. என் கூரிய கணைகளால் இந்தப் பகைவரின் படையை நான் எரிக்கப் போகிறேன். இந்தக் காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியன ஆயிரக்கணக்கில் என்னால் கொல்லப்படுவதையும், சீற்றமிக்க என் கணைகளால் அவர்களது உடல்கள் துளைக்கப்படுவதையும் காண்பாயாக" என்றான் {சாத்யகி}.

இவ்வார்த்தைகளைச் சாத்யகி (தன் தேரோட்டியிடம்) சொன்ன போது, போரிட விரும்பிய அந்தப் போராளிகள், அளவிலா ஆற்றலைக் கொண்ட அவனுக்கு முன்பாக வேகமாக வந்தனர். அவர்கள், "கொல்வீர், விரைவீர், நிற்பீர், காண்பீர், காண்பீர்" என்று சொல்லிக் கொண்டே பேரொலியை உண்டாக்கினர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களில், சாத்யகி, தன் கூரிய கணைகளின் மூலம் முன்னூறு {300} குதிரைவீரர்களையும், நானூறு {400} யானை வீரர்களையும் கொன்றான். (ஒரு பக்கத்தில்) ஒன்று சேர்ந்திருந்த வில்லாளிகள், (மறு பக்கத்தில்) சாத்யகி ஆகியோருக்கிடையில் இருந்த ஆயுதங்களின் பாதையானது {போரானது}, (பழங்காலதில்) தேவர்களுக்கு அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாக மிகவும் மூர்க்கமானதாக இருந்தது. {அப்போது} ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.

சிநியின் பேரன் {சாத்யகி}, மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்த உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் வரவேற்றான். அந்தப் போரில் தன் கணை மழையால் அனைத்துப் பக்கங்களையும் நிறைந்தவனும், வீரமிக்கவனுமான அந்த வீரன் {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்றவகையில் பெரும் எண்ணிக்கையில் உமது துருப்புகளைக் கொன்றான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் எந்தக் கணையும் {இலக்கை} தவறவில்லை, ஓ! மன்னா, அங்கே நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்ததும், காலாட்படை வீரர்கள் என்ற முழு அலைகளால் ஆனதுமான அந்தத் துருப்புகளின் கடலானது, சாத்யகி என்ற அந்தக் கரையைத் தொட்டதும் அசையாமல் நின்றது.

சாத்யகியின் கணைகளால் மீண்டும் மீண்டும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கொல்லப்பட்டதும், பீதியடைந்திருந்த போராளிகள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் படையானது, குளிர்காலத்தின் உறைய வைக்கும் வெடிப்புகளால் பீடிக்கப்பட்டதைப் போல அங்கேயும், இங்கேயும் திரிந்தது. யுயுதானனால் தாக்கப்படாத காலாட்படை வீரர்களையோ, தேர்வீரர்களையோ, யானைகளையோ, குதிரைவீரர்களையோ, குதிரைகளையோ நாங்கள் காணவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்குச் சாத்யகி ஏற்படுத்திய பேரழிவைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பல்குனன் {அர்ஜுனன்} கூட ஏற்படுத்தவில்லை. பெரும் கரநளினம் கொண்டவனும், மனிதர்களில் காளையும், களங்கமற்றவனுமான அந்தச் சிநியின் பேரன், தன் உச்சபட்ச திறனை வெளிப்படுத்திபடி அர்ஜுனனையே விஞ்சிப் போரிட்டான்.

அப்போது மன்னன் துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} தேரோட்டியையும் {முகுந்தனையும்}, நான்கு கணைகளால் அவனது {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} மூன்று கணைகளாலும், மீண்டும் எட்டு கணைகளாலும் சாத்யகியையும் துளைத்தான். துச்சாசனன், பதினாறு கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையைத் துளைத்தான். சகுனி, இருபத்தைந்து கணைகளாலும், சித்திரசேனன் ஐந்தாலும் சாத்யகியைத் துளைத்தனர். துஸ்ஸஹன், பதினைந்து கணைகளால் சாத்யகியின் மார்பைத் துளைத்தான். பிறகு, இப்படி அவர்களின் கணைகளால் தாக்கப்பட்ட அந்த விருஷ்ணிகளில் காளை {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி, அவர்களில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் செருக்குடன் துளைத்தான்.

பெரும் சக்தி கொண்ட கணைகளால் தன் எதிரிகள் அனைவரையும் ஆழத் துளைத்தனும், பெரும் சுறுசுறுப்பையும் ஆற்றலையும் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒரு பருந்தின் வேகத்துடன் அந்தக் களத்தில் திரிந்தான். சுபலன் மகனின் {சகுனியின்} வில்லையும், அவனது கையை மறைத்த தோலுறையையும் அவன் வெட்டினான். யுயுதானன் {சாத்யகி}, மூன்று கணைகளால் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். மேலும், அவன் {சாத்யகி} சித்திரசேனனை நூறு கணைகாளலும், துஸ்ஸஹனை பத்தாலும் துளைத்தான். பிறகு அந்தச் சிநி குலத்துக் காளை இருபது கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட உமது மைத்துனன் (சகுனி), எட்டு கணைகளாலும், ஐந்தால் மீண்டுமொரு முறையும் சாத்யகியைத் துளைத்தான். துச்சாசனன் மூன்று கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} துளைத்தான். ஓ! மன்னா, துர்முகன் பனிரெண்டு கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்., எழுபத்துமூன்று கணைகளால் மாதவனை {சாத்யகியைத்} துளைத்த துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அவனது தேரோட்டியை {முகுந்தனைத்} துளைத்தான். அப்போது சாத்யகி, போரில் ஒன்றாக மூர்க்கத்துடன் போரிட்ட அந்தத் துணிச்சல்மிக்க, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.

பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (யுயுதானன் {சாத்யகி}) ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} தேரோட்டியை விரைவாகத் தாக்கினான், அதன் பேரில், பின்னவன் {தேரோட்டி} உயிரையிழந்து கீழே பூமியில் விழுந்தான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தேரோட்டி வீழ்ந்ததும், உமது மகனின் {துரியோதனனின்} தேரானது அதில் பூட்டப்பட்டிருந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகளால் போர்க்களத்திற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களும், பிற வீரர்களும், மன்னனின் {துரியோதனனின்} தேரில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்து, நூற்றுக்கணக்கில் தப்பி ஓடினர். உமது படை தப்பி ஓடுவதைக் கண்ட சாத்யகி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டு, கூர்முனை கொண்ட கணைகளின் மழையால் அந்தப் படையை மறைத்தான்.

எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த உமது போராளிகள் அனைவரையும் முறியடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தேரை நோக்கி முன்னேறிச் சென்றான். உண்மையில், யுயுதானன் {சாத்யகி} கணைகளை ஏவுவதையும், தனது தேரோட்டியைப் பாதுகாப்பதையும், போரில் தானே போரிடுவதையும் கண்ட உமது துருப்புகள் அவனை {சாத்யகியை} வழிபட்டன" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English