Tuesday, October 17, 2017

கர்ணன் உங்கள் அண்ணன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 27

Karna is your elder brother! | Stri-Parva-Section-27 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 12) [ஜலப்ரதானிக பர்வம் - 01]


பதிவின் சுருக்கம் : கங்கையின் கரைக்கு நீர்க்கடன்களைச் செய்ய வந்த குருக்கள்; கர்ணன் பாண்டவர்களின் அண்ணன் என்ற உண்மையைத் துயரத்துடன் பாண்டவர்களுக்குச் சொன்ன குந்தி; பெருங்கலக்கமடைந்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனின் புலம்பல்; கர்ணனின் குடும்பத்தை வரவழைத்து அவர்களோடு சேர்ந்து நீர்க்கடனைச் செய்த யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "புனித நீர் நிரம்பியதும், பல தடாகங்கள் அடங்கியதும், உயர்ந்த, அகன்ற கரைகளைக் கொண்டதும், பரந்த படுகையைக் கொண்டதுமான மங்கலக் கங்கையை அடைந்த அவர்கள், தங்கள் ஆபரணங்கள், மேலாடைகள், கச்சைகள் மற்றும் இடைக்கச்சைகளைக் களைந்தனர். பெருந்துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருந்த குரு குலப் பெண்கள், தங்கள் தந்தைமார், பேரர்கள், சகோதரர்கள், உறவினர்கள், மகன்கள், மதிப்புக்குரிய பெரியோர்கள், கணவர்கள் ஆகியோருக்கு நீர்த்தர்ப்பணம் செய்தார்கள். கடமைகளை அறிந்த அவர்கள், தங்கள் நண்பர்களுக்காகவும் நீர்ச்சடங்கைச் செய்தனர்.(1-3) அந்த வீரர்களின் மனைவியர், தங்கள் வீரத் தலைவர்களுக்கான இந்தச் சடங்கைச் செய்த போது, (பலரின் பாதங்களால் உண்டான) பாதைகள் மறைந்து போனாலும், அந்த ஓடைக் கடப்பதற்கு எளிதானதாகவே இருந்தது.(4) அந்த ஓடையின் கரைகள், வீரர்களின் துணைவர்களால் {மனைவியரால்} நிறைந்து, அகன்ற பெருங்கடலைப் போலக் கவலையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளித்தது.(5)


ஓ! மன்னா {ஜனமேஜயா}, அடுக்கடுக்காக ஏற்பட்ட துயரத்தின் காரணமாகத் திடீரென அழுத குந்தி, தன் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} இந்த மென்மையான வார்த்தைகளில்,(6) "பாண்டவர்களே, தேர்ப்படைப்பிரிவுகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வீரத்தின் அனைத்து நற்குறிகளையும் கொண்டவனும், தனித்துவமான போர்வீரனும், பெரும் வில்லாளியும், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டவனும்,(7) ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவனும், படைகளுக்கு மத்தியில் சூரியனைப் போலவே ஒளிர்ந்து கொண்டிருந்தவனுனும்,(8) உங்களையும், உங்கள் தொண்டர்களையும் எதிர்த்துப் போரிட்டவனும், துரியோதனனின் படைக்குத் தலைமை தாங்கியபோது பிரகாசமாகத் தெரிந்தவனும்,(9) சக்தியில் தனக்கு இந்தப் பூமியில் ஒப்பில்லாதவனும், உயிரைவிடப் புகழே பெரிதென நினைத்தவனும்,(10) உண்மைக்கு உறுதியுடன் இருந்தவனும், களைப்பில்லா போர்வீரனும், களைப்பை ஒருபோதும் அடையாதவனுமான அந்த வீரன் உங்கள் அண்ணனாவான். பகலின் தேவன் {சூரியன்} மூலம் முன்பு எனக்குப் பிறந்த உங்கள் அண்ணனுக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவீராக. அந்த வீரன் காதுகுண்டலங்களுடனும், கவசங்களுடன் பிறந்து, சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தான்" என்றாள் {குந்தி}.(11,12)

தங்கள் தாய் சொன்ன வலிநிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் கர்ணனுக்கான தங்கள் துயரத்தை வெளிப்படுத்த தொடங்கினர். உண்மையில், அவர்கள் எப்போதையும் விட அதிகம் பீடிக்கப்பட்டவர்களானார்கள்.(13) பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், மனிதர்களில் புலியுமான வீர யுதிஷ்டிரன், "கணைகளையே தன் அலைகளாகக் கொண்டு, தன் நெடுங்கொடிமரத்தையே சுழியாகக் கொண்டு,(14) தன் வலிய இரு கரங்களையே பெரும் முதலைகளாகக் கொண்டு, தன் உள்ளங்கையொலிகளையே, புயலின் முழக்கமாகக் கொண்டு, தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனாலும் தாங்கிக் கொள்ள முடியாத பெருங்கடலாக இருந்தானே அந்தக் கர்ணன், ஓ! தாயே {குந்தியே}, அந்த வீரனின் {கர்ணனின்} தாய் நீதானா? தேவர்களுக்கு ஒப்பான அந்த மகன், முந்தைய நாட்களிலேயே உனக்கு எவ்வாறு உண்டானான்?(15,16) அவனது கரங்களின் சக்தி எங்கள் அனைவரையும் எரித்தது. ஓ! தாயே, துணியின் மடிப்புகளுக்குள் நெருப்பை மறைப்பவளைப் போல, எவ்வாறு நீ அவனை மறைத்தாய்? {எவ்வாறு எங்களிடம் நீ சொல்லாமலிருந்தாய்?}(17)

காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} வலிமையை நாங்கள் வழிபடுவதைப் போலவே, தார்தராஷ்டிரர்கள், அவனது கரங்களின் வலிமையை எப்போதும் வழிபட்டு வந்தனர்.(18) வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் முதல்வனும், போரில் பூமியின் தலைவர்கள் அனைவரின் ஒன்றுபட்ட சக்தியைத் தாங்கிக் கொண்டவனுமான அவன் {கர்ணன்}, எவ்வாறு உனது மகனானான்? அந்த ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் எங்கள் அண்ணனா? அற்புத ஆற்றலைக் கொண்ட அந்தப் பிள்ளையை நீ எவ்வாறு வளர்த்தாய்?(20) ஐயோ, இக்காரியம் உன்னால் மறைக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் என்ன காரியம் செய்துவிட்டோம்? கர்ணனின் இறப்பால் நாங்கள் எங்கள் நண்பர்கள் அனைவருடன் பெரிதும் பீடிக்கப்பட்டோம்.(21) அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் இறப்பும், பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களின் அழிவும் ஏற்படுத்திய துயரத்தைவிடக் கர்ணன் இறந்ததற்காக நான் உணரும் இந்தத் துயரமானது நூறு மடங்கு பெரியதாகும். நெருப்பில் வீசப்பட்ட மனிதனைப்போலக் கர்ணனை நினைத்து நான் துயரால் எரிந்து கொண்டிருக்கிறேன்.(22,23) சொர்க்கத்தையும் சேர்த்து எதுவும் எங்களால் அடையப்பட முடியாததல்ல. ஐயோ, {நீ முன்பே சொல்லியிருந்தால்} குருக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருந்த இந்தப் பெரும்படுகொலைகள் நிகழ்ந்திருக்காது" என்றான் {யுதிஷ்டிரன்}.(24)

இதுபோன்ற புலம்பல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அதிகத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டான். பிறகு அந்தப் பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் அண்ணனுக்காக {கர்ணனுக்காக} நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினான்.(25) அப்போது அந்த ஆற்றின் கரையில் கூட்டமாக இருந்த பெண்கள் அனைவரும் திடீரெனத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(26) நுண்ணறிவு கொண்டவனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன், கர்ணனின் மனைவியரையும், அவனது குடும்பத்தையும் தனக்கு முன்பு கொண்டு வரச்செய்தான்.(27) அற ஆன்மா கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, தன் அண்ணனுக்கான {கர்ணனுக்கான} நீர்க்கடனை அவர்களுடன் சேர்ந்து செய்தான். அந்தச் சடங்கை முடித்த அம்மன்னன், கங்கையின் நீரிலிருந்து உணர்வுகள் கலங்கிய நிலையில் எழுந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(28)

ஸ்திரீ பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 28
*********ஜலப்ரதானிக உபபர்வம் முற்றும்*********

*********ஸ்திரீ பர்வம் முற்றிற்று*********

*********அடுத்து சாந்தி பர்வம் *********


ஆங்கிலத்தில் | In English