Wednesday, September 25, 2024

விஷ்ணு சஹஸ்ரநாமம் - மென்னட்டை அச்சுநூல் (Paperback)

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்பது, மஹாபாரதத்தின் அநுசாஸன பர்வம், 149ம் அத்தியாயத்தில் பீஷ்மர் மூலம் யுதிஷ்டிரனுக்கு வெளிப்படுத்தப்படும் முக்கிய துதியாகும். இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை இயற்றியவர் வியாசர் என்று பீஷ்மரே இந்த அத்தியாயத்தின் 141ம் சுலோகத்தில் சொல்கிறார்.

பத்ம புராணம், ஸ்கந்த புராணம், கருட புராணம் ஆகியவற்றிலும் இதன் வெவ்வேறு பதிப்புகள் உள்ளன என்றும், சுந்தர குட்கம் என்ற படைப்பில், இதன் சீக்கிய பதிப்பும் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் "ஸஹஸ்ரம்" என்றால், "ஆயிரம்" என்றும், "நாமம்" என்றால், "பெயர்" என்றும் பொருள். எனவே, இந்த நாமாவளியை "விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்" என்றும் பொருள் கொள்ளலாம்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும் ஆயிரம் பெயர்களும், கர்மத்தைக் கட்டுப்படுத்தும் தெய்வத்தின் சக்தியையே குறிப்பாகத் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து வரும் பெயர்களும் கூட, ஒரு வாக்கியமாக அமைந்து, பெரும் பொருளை உணர்த்தவல்லவையாக இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

மஹாபாரதம், அநுசாஸன பர்வத்தில் வரும் 149ம் அத்தியாயமானது, இந்நூலில் முன்கதை, துதி, பலன் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் 142 சுலோகங்கள் வருகின்றன. அவற்றில் முதல் 13 சுலோகங்கள், "முன்கதை" என்ற தலைப்பில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 14ம் சுலோகத்தில் இருந்து 120ம் சுலோகம் வரையுள்ள 107 சுலோகங்களும், "துதி" என்று பிரிக்கப்பட்டுள்ளன. 121ம் சுலோகம் முதல் 142ம் சுலோகம் வரையுள்ள 22 சுலோகங்களிலும், விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் படிப்பதால் கிட்டும் பலன்களை பீஷ்மர் சொல்வதால், அந்தப் பகுதி, "பலன்" என்ற தலைப்பில் பிரிக்கப்பட்டுள்ளது. மத்தியில் வரும் "துதி" என்ற பகுதியே விஷ்ணு சஹஸ்ர நாமமாகும்.

இந்தத் துதியும், இந்நூலில் நான்கு வகையில், நான்கு முறை சொல்லப்பட்டுள்ளது. முதலில், தமிழ் எழுத்துருவில் எளிமையாக்கப்பட்ட சம்ஸ்கிருதத் துதி கொடுக்கப் பட்டிருக்கிறது. இரண்டாவதாக, நேரடியான மூல சம்ஸ்கிருதத் துதி, தமிழ் லிபியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, "பொருள்" என்ற தலைப்பில், விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆயிரம் பெயர்களின் பொருள்களும் சுலோக வரிசைப்படியே தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. நான்காவதாக, விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களும், அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டு, ஒவ்வொரு பெயரின் பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.


***

பதிப்பகம்: Notion Press

Paperback விலை: ₹ 205.00 

விஷ்ணு சஹஸ்நாமம் அச்சு நூல் வாங்க - https://notionpress.com/read/vishnu-sahasranamam-141015680

***