Monday, January 07, 2013

பௌசியனும் உதங்கரும்! | ஆதிபர்வம் - பகுதி 3 ஆ

Paushya and Utanka! | Adi Parva - Section 3b | Mahabharata In Tamil

(பௌசிய பர்வம்)

பதிவின் சுருக்கம் : வேதாவின் கதை; உதங்கரின் குருகுல வாசம்; வேதாவின் மனைவி உதங்கரிடம் கேட்ட குரு தட்சணை; பௌசியன் மனைவியிடம் உதங்கர் பெற்ற காதணி; உதங்கரும், பௌசியனும் மாறி மாறி அளித்த சாபங்கள்...

அதன்பிறகு அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனான வேதா {பைதன்} அழைக்கப்பட்டான். அவனிடம் மீண்டும் பேசிய அவனது ஆசான் {அயோதா தௌம்யர்}, "வேதா, எனது மகனே, எனது இல்லத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்து எனக்குச் சேவை செய்வாயாக. அஃது உனக்கு ஆதாயத்தைத் தரும்" என்றார்.(78) வேதாவும் அவரது {அயோதா தௌம்யரின்} இல்லத்திலேயே தங்கி எப்போதும் சேவை செய்யத் தயாராக இருந்தான். அந்த வீட்டிற்காக வெயில், குளிர், பசி, தாகம் என அனைத்தையும் முணுமுணுப்பின்றித் தாங்கி, ஓர் எருதைப் போல உழைத்தான். அவனது ஆசானும் {அயோதா தௌம்யரும்} விரைவில் மனநிறைவு கொண்டார்.(79) அந்த மனநிறைவின் விளைவாக வேதா நற்பேற்றையும், உலகளாவிய அறிவையும் பெற்றான். இதுவே வேதாவின் சோதனை.(80)

"வேதா, தனது ஆசானிடம் அனுமதி பெற்று, தனது கல்வியனைத்தையும் முடித்து அங்கிருந்து விடைபெற்று, இல்லற வாழ்வுமுறைக்குள் நுழைந்தார்.(81) அவர் {வேதாவின்} தன் வீட்டில் வாழ்ந்து வந்தபோது, மூன்று சீடர்களை அடைந்தார். தன் ஆசானின் குடும்பத்தில் வசித்துவந்தபோது, அதிகத் துன்பத்தைத் தானே அடைந்திருந்ததால், அவர்களை {தன் சீடர்களை} எந்த வேலை செய்யவோ, lன் சொந்த வேலைகளுக்குக் கீழ்ப்படியவோ சொல்லாத அவர், அவர்களைக் கடுமையாக நடத்த விரும்பவில்லை.(82,83) ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு க்ஷத்திரிய வகையைச் சேர்ந்தோரான ஜனமேஜயன் மற்றும் பௌஸ்யன் ஆகிய இருவரும், அவரது வசிப்பிடத்திற்கு வந்து, பிராமணரான வேதாவைத் தங்கள் ஆன்ம வழிகாட்டியாக (உபாத்யாயராக) நியமித்துக் கொண்டனர்.(84) ஒரு நாள் வேள்வி சம்பந்தமான ஏதோ ஒரு காரியத்திற்காகப் புறப்படும்போது, தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவதற்குத் தன் சீடர்களில் ஒருவனான உதங்கனை நியமித்தார்.(85) அவர், “உதங்கா, வீட்டில் எவையெல்லாம் நடக்க வேண்டுமோ அவையெல்லாம் புறக்கணிக்கப்படாமல் உன்னால் செய்யப்பட வேண்டும்" என்று சொன்னார். உதங்கனுக்கு இந்த உத்தரவுகளைக் கொடுத்துவிட்டு பயணிக்கலானார்.(86)

"தன் ஆசான் சொன்னவற்றை எப்போதும் மனத்தில் நிறுத்திய உதங்கன், பின்னவரின் இல்லத்திலேயே வசித்தான். உதங்கன் அங்கே வசித்து வந்தபோது, தன் ஆசானின் இல்லத்தில் இருந்த பெண்கள் கூடி அவனிடம் பேசினர், "ஓ உதங்கா,(87) உனது குருவின் மனைவி தாம்பத்யத் தொடர்பு கனி கொடுக்கும் காலத்தில் {ருது ஸ்நானம் செய்து} இருக்கிறாள். உனது ஆசானும் {வேதாவும்} இல்லை; எனவே, அவரது இடத்தில் நீ இருந்து, தேவையானதைச் செய்வாயாக" என்றனர்.(88) இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், அந்தப் பெண்களிடம் "பெண்களின் உத்தரவின் பேரில் நான் இதைச் செய்வது முறையாகாது. முறையற்றதைச் செய்ய நான் என் ஆசானால் பணிக்கப்படவில்லை" என்றான்.(89)

சிறிது காலத்திற்குப் பிறகு அவனது ஆசான் வேதா தனது பயணத்திலிருந்து திரும்பினார். அவனது ஆசான் அங்கு நடந்தது அத்தனையும் அறிந்து, மிகவும் மகிழ்ந்து,(90) உதங்கனிடம், "உதங்கா, என் மகனே, உனக்கு என்ன உதவியை நான் அளிப்பது? உன் கடமை உணர்ச்சியால் நான் நன்றாகத் தொண்டாற்றப்பட்டேன்; எனவே நம்மில் ஒருவருக்கொருவர் நட்பு பெருகிற்று. எனவே, நீ விடைபெற்றுச் செல்ல நான் அனுமதியளிக்கிறேன். செல்; உனது ஆசைகளனைத்தும் நிறைவேறட்டும்" என்றார்.(91)

இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், மறுமொழியாக, "நீர் விரும்பியதை நான் செய்வதற்கு எனக்கு உத்தரவு அளிப்பீராக. பயன்பாட்டுக்கு {வழக்கத்துக்கு} முரணாகக் கல்வியை அளிப்பவன், பயன்பாட்டுக்கு முரணாக அதைப் பெறுபவன் ஆகிய அந்த இருவரில் ஒருவர் இறப்பர் என்றும், {அல்லது} அந்த இருவருக்குள் பகை ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.(93) எனவே, உம்மிடம் விடை கிடைத்தாலும், ஆசானுக்குரிய ஏதாவது வெகுமானத்தை உமக்குக் கொண்டு வர நான் விரும்புகிறேன்" என்றான். இதைக்கேட்ட அவனது ஆசான் {வேதா}, "உதங்கா, என் மகனே, சிறிது காலம் பொறுத்திரு" என்றார்.(94)

சிறிது காலம் கழித்து, உதங்கன் மறுபடியும் தன் ஆசானிடம், "நீர் விரும்பும் வெகுமானத்தைக் கொண்டு வர எனக்கு உத்தரவளிப்பீராக" என்றான். அதற்கு அவனது ஆசான் {வேதா}, "எனதன்பு உதங்கா, நீ பெற்ற கல்விக்கான காணிக்கையாக ஏதாவது பெறும்படி நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாய். எனவே, உள்ளே சென்று உனது குருவின் மனைவியிடம் என்ன கொண்டு வர வேண்டுமென்று கேட்பாயாக. அவள் கேட்பதைக் கொண்டு வருவாயாக" என்றார். இவ்வாறு தன் ஆசானால் வழிநடத்தப்பட்ட உதங்கன் தன் ஆசானின் மனைவியிடம், "அம்மா, நான் வீடு செல்வதற்கு ஆசானின் அனுமதியைப் பெற்றேன். ஒரு கடனாளியாக நான் செல்லாதிருப்பதற்காக, நான் பெற்ற கல்விக்கு ஈடாக உங்களுக்கு ஏற்புடைய எதையாவது வெகுமானமாகக் கொண்டு வர விரும்புகிறேன். எனவே, நான் என்ன கொண்டு வர வேண்டும் என் ஆணையிடுவாயாக" என்றான் {உதங்கன்}.(96)

இவ்வாறு சொல்லப்பட்ட அவனது ஆசானின் மனைவி, "மன்னன் பௌசியனிடம் சென்று, அவனது ராணி அணிந்திருக்கும் ஒரு ஜோடி கம்மலை பிச்சையாக அவனிடம் கேட்டு,(97) அதை இங்குக் கொண்டு வா. இன்றிலிருந்து நான்காவது நாள் புனிதமான நாளாகும். அன்று (என் வீட்டில் விருந்துண்ண வரும்) பிராமணர்கள் முன்னிலையில் அந்தக் குண்டலங்களுடன் காட்சியளிக்க விரும்புகிறேன். ஓ உதங்கா, இதை நிறைவேற்றுவாயாக. நீ இதில் வெற்றிக் கொண்டால் நற்பேறு உன்னைத் தேடி வரும்; தோல்வியுற்றால் நீ என்ன எதிர்பார்க்க முடியும்?" என்றாள்.(98)

இவ்வாறு ஆணையிடப்பட்ட உதங்கன், அங்கிருந்து புறப்பட்டான். அப்படியே வீதியோரமாக நடந்து செல்கையில் இயல்புக்குமிக்கப் பெரிய தோற்றத்தில் ஒரு காளையும், அதன்மீது அசாதாரண உடலமைப்பைக் கொண்ட மனிதன் ஒருவன் அமர்ந்திருப்பதையும் பார்த்தான். அந்த மனிதன் உதங்கனைப் பார்த்து,(99) "இந்தக் காளையின் சாணத்தை உண்பாயாக" என்றான். {இதற்கு} உதங்கன் உடன்பட விரும்பவில்லை.(100)

அந்த மனிதன் மறுபடியும், "ஓ உதங்கா, ஆராயாமல் உண்பாயாக. உனது ஆசானும் {வேதாவும்} இதற்கு முன் இதை உண்டிருக்கிறார்" என்றான்.(101) உதங்கன் சம்மதித்து, அந்தச் சாணத்தை உண்டு, அந்தக் காளையின் சிறுநீரைக் குடித்து, மரியாதையுடன் எழுந்து, தன் கைகளையும் வாயையும் தூய்மைப்படுத்திக் கொண்டு மரியாதையாக எழுந்து மன்னன் பௌசியன் இருக்குமிடம் சென்றான்.(102)

அரண்மனையை அடைந்து, மன்னன் பௌசியன் (தனது அரியாசனத்தில்) அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனை {மன்னன் பௌசியனை} அணுகிய உதங்கன், தனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு,(103) "நான் உன்னிடம் ஒரு விண்ணப்பதாரனாக வந்தேன்" என்றான். மன்னனும் பதில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு, "ஐயா, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(104) உதங்கன் "ஒரு ஜோடி காதுகுண்டலங்களை என் ஆசானுக்குப் பரிசளிப்பதற்காக உன்னிடம் பிச்சை கேட்டு நான் வந்தேன். ராணி அணிந்திருக்கும் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பதே உனக்குத் தகும்" என்றான்.(105)

மன்னன் {பௌசியன்}, "உள்ளே இராணி இருக்கும் பெண்கள் அறைகளுக்குச் {அந்தப்புரத்திற்கு} சென்று அவளிடம் கேட்பீராக" என்றான். உதங்கனும் அந்தப்புரத்திற்குள் சென்றான். ஆனால் அவனால் இராணியைக் காண முடியவில்லை,(106) எனவே மீண்டும் மன்னனிடம் அவன், "நான் உன்னால் வஞ்சிக்கப்படுவது முறையாகாது. என்னால் உன் இராணியைக் காணமுடியவில்லை, அவள் அந்தப்புரத்திற்குள் இல்லை" என்றான்.(107) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சற்று நேரம் சிந்தித்த பின் மறுமொழி கூறினான், "ஐயா, அசுத்தங்கள் எதனுடனாவது ஏற்பட்ட தொடர்பால் நீர் மாசடையவில்லை என்பது உறுதிதானா என்பதைச் சற்றுக் கவனத்துடன் நினைவுப்படுத்திப் பாரும். கற்புடைய மனைவியான என் ராணி, உணவின் எச்சங்களால் தூய்மையற்றிருப்பவர்கள் எவராலும் காணப்பட முடியாதவள் ஆவாள். அதே போல, மாசுடனிருப்பவர்கள் முன் அவள் தோன்றுவதுமில்லை" என்றான்.(108)

இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, "ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். அவசரமாக வந்ததால், (உணவருந்தி்விட்டு {சாணமாக இருக்க வேண்டும்} நின்ற நிலையிலேயே தூய்மைச் சடங்கைச் {நீராடலை} செய்தேன்" என்றான். அப்போது, மன்னன் பௌசியன் "இதுதான் வரம்பை மீறிய குற்றம். நின்றபடி சடங்கைச் செய்தல் சுத்திகரிப்பு ஆகாது. அதுவும் பயணம் மேற்கொள்ளும்போது அப்படிச் செய்தல் கூடாது" என்றான்.(109)

இதை ஏற்றுக் கொண்ட உதங்கன், கிழக்கு முகமாக {கிழக்கை நோக்கி} அமர்ந்து, தன் முகம், கைகள் மற்றும் பாதங்களைக் கழுவினான். பிறகு சத்தமிடாமல் மூன்று முறை நுரையும் வெதுவெதுப்புமில்லாத நீர், தனது குடலை அடையும் வரை எச்சில்படாமல் உறிஞ்சினான். தனது முகத்தை இரு முறை துடைத்தான். பிறகு நீரைக் கொண்டு (காது, மூக்கு போன்ற) தனது உறுப்புகளைத் தொட்டான். இவை யாவற்றையும் செய்து, மீண்டும் பெண்களின் அறைகளுக்குள் அவன் நுழைந்தான்[3].(110)

[3] கும்பகோணம் பதிப்பில், "கிழக்கு முகமாக உட்கார்ந்து, கை கால் முகங்களைச் செவ்வையாகக் கழுவிக் கொண்டு, நுரையில்லாமலும், காய்ச்சப்படாமலுமிருந்த தீர்த்தம் உள்ளே போவது மார்பு வரையில் உணரப்படும்படி சப்தமில்லாமல் மூன்று முறை ஆசமனஞ்செய்து இரண்டு முறை கண், காது, மூக்கு முதலி இடங்களை ஜலத்தினால் துடைத்துக் கொண்டு அந்தப்புரத்திற்குப் போனார்" என்றிருக்கிறது.

இம்முறை அவன் ராணியைக் கண்டான். ராணியும் அவனைக் {உதங்கனை} கண்டு, மரியாதையாக வணங்கி, " ஐயா, உமக்கு நல்வரவு. நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டாள்.(111) உதங்கன் அவளிடம், "அந்தக் குண்டலங்களை நீ எனக்குக் கொடுப்பதே தகும். அவற்றை எனது ஆசானுக்குக் {வேதாவுக்குக்} காணிக்கையாகக் கொடுக்க நான் பிச்சை கேட்கிறேன்" என்றான். உதங்கனின் நடத்தையில் மிகவும் மகிழ்ந்த ராணி கொடைக்குத் தகுந்தவனான உதங்கனைக் கடக்க இயலாது என்றெண்ணி, தனது குண்டலங்களைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். மேலும் அவள், "இந்தக் குண்டலங்களைப் பாம்புகளின் மன்னனான தக்ஷகன் விரும்புகிறான். எனவே, இந்தக் குண்டலங்களை மிகவும் கவனமாக நீர் கொண்டு செல்ல வேண்டும்" என்றாள்.(112)

"இப்படிச்சொல்லப்பட்ட உதங்கன், 'பெண்ணே, அச்சங்கொள்ளாதே, பாம்புகளுக்குத் தலைவனா தக்ஷகனால் என்னை விஞ்ச முடியாது" என்றான்.(113) இதைச் சொல்லிவிட்டு ராணியிடம் விடைபெற்றுக் கொண்ட அவன் {உதங்கன்}, பௌசியன் முன்பு வந்து "பௌசியா, நான் மனம் நிறைந்தேன்" என்றான். பௌசியன் உதங்கனிடம், "கொடைக்குத் தகுந்த பொருளை நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகே கொள்ள முடியும். நீர் தகுதியுள்ள விருந்தினர், எனவே, நான் சிராத்தம் செய்ய விரும்புகிறேன். சற்றுப் பொறுப்பீராக" என்றான்.(114,115)

உதங்கன், "சரி, நான் பொறுத்திருக்கிறேன். தயாராக வைத்திருக்கும் தூய பொருட்களை விரைவாகக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்" என்றான். இதை ஏற்றுக் கொண்ட மன்னன் {பௌசியன்}, உதங்கனை முறையாக உபசரித்தான்.(116) தனக்கு முன்பாக வைக்கப்பட்ட உணவு, முடியுடன் கூடியதாகவும், குளிர்ந்ததாகவும், தூய்மையற்றதாகவும் இருப்பதை உதங்கன் கண்டான். அவன் பௌசியனிடம், "நீ எனக்குச் தூய்மையற்ற உணவைக் கொடுத்ததால், பார்வையை இழப்பாயாக" என்று சபித்தான்.(117) பதிலுக்குப் பௌசியனும், "தூய்மையான உணவைத் தூய்மையற்றது என்று சொன்னதால் நீர் பிள்ளைப்பேறில்லாமல் போவீராக' என்று சபித்தான்.(118) அதன் பேரில் உதங்கன் மீண்டும், "எனக்குத் தூய்மையற்ற உணவைக் கொடுத்து, பதில் சாபமும் கொடுப்பது உனக்குத் தகாது. கண்ணால் சாட்சி கண்டு உன்னில் நீ மனம் நிறைவாயாக" என்றான்.(119)

உணவு தூய்மையற்றதாகத்தான் இருக்கிறது என்பதைப் பௌசியன், நேரடியாகவே கண்டு கொண்டான். அந்த உணவு உண்மையிலேயே உண்மையிலேயே தூய்மையற்றதாகவும், குளிர்ந்ததாகவும், பின்னலிடாத பெண்ணால் தயாரிக்கப்பட்டு அதில் முடி கலந்திருப்பதையும் உறுதி செய்து கொண்ட பௌசியன் உதங்க முனியை அமைதிப்படுத்த முயலும் வகையில்,(120) "ஐயா, உம் முன்னால் வைத்த உணவு குளிர்ந்ததாகவும், முடியுடனும் இருக்கிறது. சரியான அக்கறையுடன் இந்த உணவு தயாரிக்கப்படவில்லை. ஆகவே என்னை மன்னிப்பீராக. நான் குருடனாக வேண்டாம்" என்றான்.(121) உதங்கன், "நான் சொல்வது நடந்தாக வேண்டும். எனினும், நீ குருடானாலும் மிக விரைவில் பார்வையை அடைவாய். உனது சாபமும் பலனளிக்காமல் போக அருள்வாயாக" என்றான்.(122)

பௌசியன் சொன்னான், "என் கோபம் இன்னும் தணியாதிருப்பதால், எனது சாபத்தைத் திரும்பப்பெற இயலாதவனாக நான் இருக்கிறேன். ஆனால் நீர் இதை அறியாதிருக்கிறீர்.(123) பிராமணனின் வார்த்தைகள் கூர்முனை கொண்ட கத்தியைப் போன்றதாக இருந்தாலும், அவனது இதயம் புதிதாய்க் கடையப்பட்ட வெண்ணையைப் போன்று மென்மையானது. க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரையில் இது வேறு வகையாகும். அவனது வார்த்தைகள் புதிதாய்க் கடையப்பட்ட வெண்ணையைப் போல இருந்தாலும், அவனது இதயம் கூர்முனை கொண்ட கருவியைப் போன்றதாகும்.(124) வழக்கம் இப்படியிருப்பதால், என் இதயத்தின் கடினத்தால் என் சாபத்தை என்னால் தணிக்க முடியவில்லை. எனவே, நீர் உம் வழியில் செல்வீராக" என்றான். அதற்கு உதங்கன், "நீ தூய்மையற்ற உணவினைத்தான் கொடுத்தாய் என்பதை நான் காண்பித்தேன். நீ என்னை அமைதிப்படுத்தினாய்.(125) அஃது ஒருபக்கம் இருந்தாலும், தூய்மையான உணவைத் தூய்மையற்றது என்று நான் சொன்னதாகக் கருதிய நீ, எனக்குப் பிள்ளைப் பேறற்றுப் போகட்டும் என்று சபித்தாய். ஆனால், உணவு தூய்மையற்றதாகவே இருந்தது. எனவே, உனது சாபம் என்னை ஒன்றும் செய்யாது. இதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்" என்று சொன்னான்.(126)


ஆங்கிலத்தில் | In English