Wednesday, May 20, 2015

பறவைகளின் மாகாணம்! - உத்யோக பர்வம் பகுதி 101

The province of birds! | Udyoga Parva - Section 101 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –30)

பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் பறவைகளின் இடத்தைச் சுற்றிக் காட்டி விளக்கியது; கருடனின் பெருமை, விஷ்ணு அந்தக் குலத்திற்குக் கொடுத்திருக்கும் அங்கீகாரம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி மாதலிக்கு நாரதர் விளக்கியது; கருட பரம்பரையில் வந்த தலைவர்களின் பெயர்களை நாரதர் சொன்னது...

நாரதர் {மாதலியிடம்} தொடர்ந்தார், "இந்த இடம் அற்புத இறகுகள் படைத்த பறவைகளுக்குச் சொந்தமானது. இவர்கள் {இந்தப் பறவைகள்} அனைவரும் பாம்புகளை உண்டு வாழ்கின்றனர். தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தவதிலோ, பயணங்கள் மேற்கொள்வதிலோ, சுமைகளைச் சுமப்பதிலோ இவர்கள் {பறவைகள்} எந்தக் களைப்பையும் அறிவதில்லை. ஓ! தேரோட்டி {மாதலி}, இந்தக் குலம் கருடனின் ஆறு மகன்களில் இருந்து பெருகியது. அவர்கள் சுமுகன், சுனாமா, சுனேத்திரன், சுவர்ச்சஸ், சௌஞ்சன் {சுருக்} மற்றும் பறவைகளின் இளவரசனான சுபலன் ஆகியோர் ஆவர்.

காசியபர் வம்சாவளியில் பிறந்து, வினதையின் குலப்பெருமையை உயர்த்தியவர்களும், தங்கள் வகையில் முதன்மையானவர்களுமான இந்தச் சிறகு படைத்த பறவைகளில் பலர், பிள்ளைகளைப் பெற்று, ஆயிரக்கணக்கான அரசமரபுகளைத் தோற்றுவித்துப் பெருகினர். இந்தப் பறவைகள் அனைவரும் உன்னத இரத்தம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த உயிரினங்கள் அனைவரும் பெரும் செழிப்புடனும், ஸ்ரீவத்சம் என்று அழைக்கப்படும் மங்கலச் சுழியடனும், பெரும் செல்வத்துடனும், பெரும் வலிமையுடனும் இருக்கின்றனர்.


செயல்களால் இவர்கள் க்ஷத்திரிய வகையினராக இருந்தாலும், பாம்புகளை உண்டு வாழ்வதால், இவர்கள் அனைவரும் இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள். தங்கள் உறவினர்களையே உண்பதன் விளைவாக இவர்கள் ஆன்ம ஞானத்தை {முக்தியை} அடைவதே இல்லை. ஓ! மாதலி, இவர்களின் தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்கிறேன் கேள். விஷ்ணு இந்தக் குலத்தை அங்கீகரித்ததன் விளைவாக இந்தக் குலம் பெரும் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. விஷ்ணு இவர்கள் அனைவரின் இதயங்களிலும் எப்போதும் வசிக்கிறான். அந்த விஷ்ணுவே இவர்களின் பெரும் புகலிடமும் ஆவான்.

சுவர்ணசூடன், நாகாசின், தாருணன், சண்டதுண்டகன், அநலன், விசாலாக்ஷன், குண்டலின், பங்கஜித், வஜ்ரவிஷ்கம்பன், வைநத்தேயன், வாமனன், வாதவேகன், திசாசக்ஷு, நிமேஷன், அநிமிஷன், திரிராவன், சப்தராவன், வால்மீகி, தீபகன், தைத்யத்வீபன், சரிதவீபன், சாரஸன், பத்மகேதனன், சுமுகன், சித்ரகேது, சித்ரபரன், அநகன், மேஷஹிருத், குமுதன், தக்ஷன், சர்ப்பாந்தன், சோமபோஜனன், குருபாரன், கபோதன், சூர்யநேத்திரன், சிராந்தகன், விஷ்ணுதர்மன், குமாரன், பரிபர்ஹன், ஹரி, சுஸ்வரன், மதுபர்க்கன், ஹேமவர்ணன், மால்யன், மாத்ரிஸ்வான், நிசாகரன், திவாகரன் ஆகியவையே அவர்களது பெயர்கள்.

நான் பெயர்களைச் சொன்ன கருடனின் இந்த மகன்கள் அனைவரும் இந்தப் பகுதியில் இருக்கும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்களே. பலம், புகழ், சாதனைகள் ஆகியவற்றைத் தனித்தன்மையுடன் வென்றவர்களை மட்டுமே நான் இப்போது குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே இருப்பவர்களில் யாரையும் நீ விருப்பமில்லையென்றால், ஓ! மாதலி, நான் உன்னை வேறு பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே நீ உனது மகளுக்கு {குணகேசிக்குத்} தகுந்த கணவனைக் காண நேரலாம்" என்றார் {நாரதர்}.