Wednesday, May 20, 2015

ஹிரண்யபுரம் சென்ற மாதலி! - உத்யோக பர்வம் பகுதி 100

Matali at Hiranyapura! | Udyoga Parva - Section 100 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –29)

பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் தைத்தியர்கள் மற்றும் தானவர்கள் வசித்த பகுதியைச் சுற்றிக் காட்டி விளக்கியது; ஹிரண்யபுரம், காலகஞ்சர்கள், யாதுதானர்கள், நிவாடகவசர்கள், அவர்கள் வசித்த அரண்மனைகள், ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி மாதலிக்கு நாரதர் விளக்கியது...

நாரதர் {மாதலியிடம்} தொடர்ந்தார், "பல்வேறு வகையான நூறு மாயைகளை உள்ளடக்கியதும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களுக்குச் சொந்தமானதும், பரந்திருப்பதும், நகரங்களின் நகரம் என்று புகழ்பெற்றதுமான ஹிரண்யபுரம் என்ற நகரத்தை இதோ பார். பாதாளம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில், மயன் என்ற தானவனால் திட்டமிடப்பட்டுத் தேவதச்சனால் மிகுந்த கவனத்தோடு {இந்நகரம்} கட்டப்பட்டது இது. பழங்காலத்தில் (பிரம்மனிடம்) வரம்பெற்றவர்களும், பெரும் ஆற்றலும், வீரமும் கொண்டவர்களுமான பல தானவர்கள், ஆயிரம் வகைகளிலான தங்கள் வித்தியாசமான மாயைகளை வெளிப்படுத்தியபடி இங்கே வாழ்ந்துவந்தனர். அவர்கள் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமன், வருணன், பொக்கிஷத்தலைவன் {குபேரன்} போன்ற வேறு எந்தத் தேவனாலோ வீழ்த்தப்படமுடியாதவர்களாக இருந்தனர்.


ஓ! மாதலி, விஷ்ணுவில் {பாதத்தில்} இருந்து உதித்த காலகஞ்சர்கள் {நைருதர்களும்} என்ற அசுரர்களும், பிரம்மனின் பாதத்தில் உதித்த யாதுதானர்கள் என்ற ராட்சசர்களும் இங்கே வசிக்கின்றனர். அச்சுறுத்தும் பற்களையும், பயங்கர முகத்தையும், காற்றின் வேகம் மற்றும் ஆற்றலையும், மாயையினால் உண்டாகும் பெரும் சக்தியையும் அவர்கள் அனைவரும் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தவிரத் தானவர்களில் வேறு வர்க்கத்தினரும், போரில் ஒப்பற்றவர்களுமான நிவாதகவசர்களும் தங்கள் வசிப்பிடத்தை இங்கே கொண்டுள்ளனர்.

சக்ரனால் {இந்திரனால்} இவர்களை வீழ்த்த முடியாது என்பது நீ அறிந்ததே. ஓ! மாதலி, உனது மகன் கோமுகனோடு கூடிய நீயும், தனது மகனோடு {ஜயந்தனோடு} கூடியவனும், சச்சியின் கணவனுமான தேவர்கள் தலைவனும் {இந்திரனும்}, அவர்களுக்கு முன்னிலையில் பல முறை தோற்றோடியிருக்கிறீர்கள்.

ஓ! மாதலி, கலையின் {சிற்பக்கலையின்} விதிகளின் படி நன்கு அலங்கரிக்கப்பட்டு வெள்ளியினாலும், தங்கத்தினாலும் ஆன அவர்களது வீடுகளை இதோ பார். வைடூரிய மணிகளாலும், விசித்திரமான பவழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சூரியகாந்தக் கற்கள் {அர்க்கஸ்பதிகம்} மற்றும் வஜ்ரசரம் என்ற ரத்தினம் {வஜ்ரம்} ஆகியவற்றின் காந்தியினால் அவை பிரகாசிக்கின்றன. அவர்கள் வசிப்பதற்கான அந்த அரண்மணைகளில் பல, பத்மராகங்கள் என்றழைக்கப்படும் ரத்தினங்களாலோ, பிரகாசமான பளிங்கினாலோ, அற்புதமான மரங்களினாலோ பிரகாசிக்கச் செய்யப்பட்டவை போலத் தோன்றுகின்றன. மேலும் அவை சூரியன் அல்லது சுடர்விடும் நெருப்பின் ஒளியையும் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகைகள் அனைத்தும், கற்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒன்றுக்கொன்று நெருக்கமாக மிக உயரத்தில் இருக்கின்றன. விசாலமான விகிதாச்சாரத்துடனும், பெரும் கட்டுமான அழகுடனும் இருக்கும் அந்த மாளிகைகள் என்னென்ன பொருளில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதையோ, அந்த அழகின் பாணியையோ விவரிப்பது இயலாதது. உண்மையில், அலங்காரத்தின் விளைவாக அவை மிகுந்த அழகோடு இருக்கின்றன.

Floating mountains _James Cameron's_AVATAR  movie
பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுக்காக அமைந்த தைத்தியர்களின் ஓய்வில்லங்களையும், அவர்கள் உறங்குவதற்கான படுக்கைகளையும், விலைமதிப்பற்ற கற்களால் செய்யப்பட்ட அவர்களது ஆடம்பரப் பாத்திரங்களையும் {utensils}, அவர்களது பயன்பாட்டுக்கான இருக்கைகளையும் இதோ பார். ஒருவன் கேட்கும் மலர்கள் மற்றும் கனிகள் அனைத்தையும் தரவல்லவையும், தங்கள் விருப்பப்படி நகர்ந்து கொண்டிருப்பவையுமான இந்த மரங்களையும், இந்த நீரூற்றுகளையும், மேகங்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் அவர்களது மலைகளையும் இதோ பார். ஓ! மாதலி, இங்கே உனக்கு ஏற்புடைய மணமகன் யாராவது இருக்கிறானா என்று பார். அப்படி யாரையும் காணவில்லையென்றால், நீ விரும்பினால், இங்கிருந்து இந்த உலகத்தின் வேறொரு பகுதிக்குச் செல்வோம்" என்றார் {நாரதர்}.

இப்படிச் சொல்லப்பட்ட மாதலி, நாரதரிடம், "ஓ! தெய்வமுனியே {நாரதரே}, தேவலோக வாசிகளுக்கு ஏற்பில்லாத எதையும் நான் செய்வது எனக்குத் தகாது. தேவர்களும், தானவர்களும் {அசுரர்களும்} சகோதரர்களாக இருப்பினும், அவர்களுக்குள் எப்போதும் பகையே இருக்கிறது. எனவே, எங்கள் எதிரிகளுடன் நான் எவ்வாறு சம்பந்தம் கொள்ள முடியும்? ஆகவே, நாம் வேறு ஏதாவது இடத்திற்குச் செல்வோம். தானவர்களில் தேடுவது எனக்குத் தகாது. உம்மைப் பொறுத்தவரை, உமது இதயம் என்றென்றைக்கும் சண்டைகளைத் தூண்டிவிடுவதிலேயே நிலைத்து நிற்கும் என்பதை நான் அறிவேன்" என்றான் {மாதலி}.