Wednesday, May 20, 2015

குணகேசியை மணந்த சுமுகன்! - உத்யோக பர்வம் பகுதி 104

Sumukha married Gunakesi! | Udyoga Parva - Section 104 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –33)

பதிவின் சுருக்கம் : ஆர்யகனிடம் நாரதர் மாதலியை அறிமுகப்படுத்தியது; மாதலி தன் மகள் குணகேசியை ஆர்யகனின் பேரன் சுமுகனுக்கு மணமுடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்வது; கருடன் மீது கொண்ட அச்சத்தால் ஆர்யகன் தயங்கியது; மாதலி சுமுகனையும், ஆர்யகனையும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றது; அங்கே இந்திரனுடன் விஷ்ணுவையும் காண்பது; இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுளை வழங்குவது; சுமுகன் குணகேசி திருமணம் நடந்தேறுவது...

பிறகு நாரதர் {ஆர்யகனிடம்} சொன்னார், "இவன் மாதலி என்ற பெயரையுடைய தேரோட்டியாவான். அது தவிர, இவன் {மாதலி} சக்ரனின் {இந்திரனின்} அன்புக்குரிய நண்பனாவான். தூய்மையான நடத்தை கொண்ட இவன் {மாதலி} அற்புதமான மனநிலையையும், எண்ணற்ற நற்பண்புகளையும் கொண்டிருக்கிறான். மனோபலமும், பெரும் சக்தியும் பலமும் கொண்டவன் இவன். இவன் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நண்பனும், ஆலோசகனும், தேரோட்டியுமாவான். அனைத்துப் போர்களிலும் இவனுக்கும் வாசவனுக்கு {இந்திரனுக்கும்}, ஆற்றல் மற்றும் பலத்தைப் பொறுத்தவரையில் சிறு வித்தியாசமே காணப்பட்டிருக்கிறது.


தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும், ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படுவதும், எப்போதும் வெற்றிகரமானதுமான இந்திரனின் தேரை, தனது மனதை மட்டுமே கொண்டு, மாதலியே இயக்கி வருகிறான். இவனது குதிரைகளை ஓட்டும் திறனால், வாசவன் {இந்திரன்} தேவர்களின் பகைவர்களை அடக்கியிருக்கிறான். ஏற்கனவே மாதலியிடம் தோல்வியுற்ற அசுரர்கள், அதன் தொடர்ச்சியாக இந்திரனால் கொல்லப்பட்டார்கள்.

உலகில் ஒப்பற்ற அழகுடன் கூடிய அற்புத மகள் ஒருத்தியை மாதலி கொண்டிருக்கிறான். உண்மைநிறைந்தவளும், அனைத்து குணங்களும் நிரம்பியவளுமான அவள், குணகேசி என்ற பெயரால் அறியப்படுகிறாள். இவன் {மாதலி} தகுந்த மணமகனுக்காக மூவுலகங்களிலும் தேடிக் கொண்டிருந்தான். ஓ! தெய்வீக காந்தியைக் கொண்டவனே {ஆர்யகா}, உனது பேரனான சுமுகன் இவனது {மாதலியின்} மகளுக்கு {குணகேசிக்குத்} தகுந்த கணவனாக இருப்பான்.

ஓ! பாம்புகளில் சிறந்தவனே {ஆர்யகா}, இந்த முன்மொழிவு உனக்கு ஏற்புடையதாக இருப்பின், ஓ! ஆர்யகா, உனது பேரனுக்குரிய பரிசாக இவனது மகளைப் பெற, விரைந்து முடிவெடுப்பாயாக. விஷ்ணுவின் இல்லத்தில் இருக்கும் லட்சுமியைப் போல, அல்லது அக்னியின் இல்லத்தில் உள்ள சுவாகாவைப் போல, கொடியிடை கொண்ட குணகேசி உனது குலத்தில் ஒரு மனைவியாக இருக்கட்டும். எனவே, சச்சியைப் பெறத் தகுந்த வாசவனைப் {இந்திரனைப்} போல இருக்கும் உனது பேரன் {சுமுகன்} குணகேசியை ஏற்கட்டும். இந்த இளைஞன் தனது தந்தையை இழந்திருப்பினும், இவனது நற்குணங்கள், ஐராவதன் மற்றும் உன் மேல் கொண்ட மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே நாங்கள் இவனைத் தேர்ந்தெடுத்தோம்.

உண்மையில், சுமுகனின் சிறப்புகள் {புண்ணியங்கள்}, அவனது மனநிலை, தூய்மை, தன்னடக்கம் மற்றும் பிற தகுதிகளின் விளைவாக, மாதலி தனது மகளை அவனுக்குக் கொடுக்க விரும்புகிறான். எனவே, நீ மாதலியைப் பெருமைப்படுத்துவதே தகும்" என்றார் {நாரதர்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட ஆர்யகன், தனது பேரன் {சுமுகன்} மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டு, தனது மகனின் மரணத்தையும் நினைத்து, ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் நிறைந்தான். அவன் {ஆர்யகன்} நாரதரிடம், "ஓ! தெய்வீக முனிவரே {நாரதரே}, குணகேசியை மருமகளாக்கிக் கொள்ள நான் எப்படி விரும்ப முடியும்? ஓ! பெரும் முனிவரே, இதனால், உமது வார்த்தைகளை நான் உயர்வாக மதிக்கவில்லை என்றாகாது. ஏனெனில், இந்திரனின் நண்பனுடன் {மாதலியுடன்} சம்பந்தம் வைத்துக் கொள்ள எவன்தான் விரும்பமாட்டான்?

எனினும், ஓ! பெரும் முனிவரே, உறுதியற்ற தன்மையின் விளைவால் அந்தச் சம்பந்தம் வெகுநாளைக்கு நீடிக்காது என்பதாலேயே நான் தயங்குகிறேன். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, இந்த இளைஞனைப் படைத்த எனது மகன் {சிகுரன்}, கருடனால் விழுங்கப்பட்டுவிட்டான். நாங்கள் அதன் காரணமாகத் துயரத்தில் இருக்கிறோம். ஓ! தலைவா {நாரதரே}, ஆனால் அதற்கு மேலும் மோசமான நிலையென்னவென்றால், அந்த வினதையின் மகன் {கருடன்} இந்தப் பகுதியை விட்டுச் செல்லும்போது, "ஒரு மாதத்திற்குப் பிறகு நான் இந்தச் சுமுகனையும் விழுங்குவேன்" என்றான். அவன் {கருடன்} சொன்னது போலவே அது நிச்சயம் நடக்கும். ஏனெனில் நாங்கள் யாரைச் சமாளிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவோம். சுபர்ணனின் {கருடனின்} இவ்வார்த்தைகளால் நாங்கள் மகிழ்ச்சியற்றுப் போனோம்" என்றான் {ஆர்யகன்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "பிறகு மாதலி ஆர்யகனிடம், "நான் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த உனது பேரன் {சுமுகன்}, என்னால் எனது மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். என்னுடனும் நாரதருடனும் இந்த நாகன் {சுமுகன்} சொர்க்கத்தின் தலைவனான தேவர்களின் தலைவனிடம் {இந்திரனிடம்} வரட்டும். பிறகு நான் சுபர்ணனின் {கருடனின்} வழியில் தடைகளை உண்டாக்க முயல்வேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. எனவே, ஓ! நாகா {ஆர்யகா}, தேவர்கள் தலைவனின் முன்னிலைக்குச் சுமுகன் என்னுடன் வரட்டும்" என்றான் {மாதலி}. இதைச் சொன்ன அவர்கள் சுமுகனைத் தங்களோடு அழைத்துச் சென்றனர். பெரும் பிரகாசத்துடன் கூடிய அந்த நால்வரும், விண்ணுலகம் வந்து, பெரும் புகழுடன் அமர்ந்திருந்த தேவர்கள் தலைவனான சக்ரனைக் {இந்திரனைக்} கண்டனர். நான்கு கரங்களைக் கொண்ட ஒப்பற்ற விஷ்ணுவும் அந்த இடத்தில் இருக்கும்படி அப்போது நேர்ந்தது. பிறகு, நாரதர் மாதலியையும் அவனது {மணமகன்} தேர்வையும் குறித்த முழுக் கதையையும் சொன்னார்."

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "நாரதர் சொன்ன அனைத்தையும் கேட்ட விஷ்ணு, அண்டத்தின் தலைவனான புரந்தரனிடம் {இந்திரனிடம்}, "இந்த இளைஞனுக்கு {சுமுகனுக்கு} அமிர்தம் கொடுக்கப்படட்டும், இவனும் தேவர்களைப் போல இறவாதவனாகட்டும். ஓ! வாசவா {இந்திரா}, மாதலி, நாரதர், சுமுகன் ஆகிய அனைவரின் விருப்பமும் உனது அருளால் நிறைவேறட்டும்" என்றான்.

எனினும், வினதை மகனின் {கருடனின்} ஆற்றலை எண்ணிய புரந்தரன் {இந்திரன்}, விஷ்ணுவிடம், "உன்னாலேயே அமிர்தம் அவனுக்கு வழங்கப்படட்டும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விஷ்ணு, "அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்துக்கும் தலைவன் நீ. ஓ தலைவா {இந்திரா}, உன்னால் கொடுக்கப்படும் பரிசை மறுப்பவன் எவன் இருக்கிறான்?" என்றான்.

{விஷ்ணுவின்} இந்த வார்த்தைகளால் சக்ரன் அந்த நாகனுக்கு {சுமுகனுக்கு} நீண்ட ஆயுளைக் கொடுத்தான். வலனையும் விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்}, அவனை {சுமுகனை} அமிர்தத்தைக் குடிக்கச் செய்யவில்லை. {நீண்ட ஆயுளெனும்} அந்த வரத்தைப் பெற்ற சுமுகன், தனது முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகளைப் பரவவிட்டதால், (உண்மையிலேயே) அவன் சுமுகன் [1] ஆனான். மாதலியின் மகளை {குணகேசியைத்} திருமணம் செய்து கொண்ட அவன் {சுமுகன்}, மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினான். தங்கள் நோக்கம் நிறைவேறிய நாரதரும், ஆர்யகனும் மகிழ்ச்சியால் நிறைந்து, பெருமைமிக்கத் தேவர்கள் தலைவனை {இந்திரனை} வழிபட்டுவிட்டுத் தங்கள் வழியே சென்றனர்" என்றார் {கண்வர்}.

[1] அழகிய அற்புதமான முகம் கொண்டவன் என்று பொருள்.