Thursday, May 21, 2015

காலவரின் பிடிவாதம்! - உத்யோக பர்வம் பகுதி 106

Galava's obstinacy! | Udyoga Parva - Section 106 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –35)

பதிவின் சுருக்கம் : நாரதர் துரியோதனனுக்குக் காலவர் மற்றும் விஸ்வாமித்ரரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தது; தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரருக்கு பணிவிடை செய்த காலவர்; காலவரின் சேவையால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், காலவரை சீடன் நிலையில் இருந்து விடுவித்தது; குருதட்சணை கொடுக்காமல் தான் போகக்கூடாது எனக் காலவர் பிடிவாதம் பிடிப்பது; விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணை...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "ஓயாமல் தீமைகளில் ஈடுபட்டு, பேராசையில் குருடாகி, தீய வழிகளுக்கு அடிமையாகி, தனக்குத் தானே அழிவைத் தீர்மானித்து, உறவினர்களின் இதயங்களில் துன்பத்தை எழுப்பி, நண்பர்களின் துயரங்களை மேம்படுத்தி, தனது நலன் விரும்பிகள் அனைவரையும் வேதனைப்படுத்தி, எதிரிகளின் மகிழ்ச்சியை அதிகரித்து, தவறான வழியில் நடந்து கொண்டிருந்த அவனை {துரியோதனனை}, அவனது நண்பர்கள் ஏன் தடுக்கவில்லை? அமைதியான ஆன்மாக் கொண்டவனும், (குரு குலத்தின்) பெரும் நண்பனுமான அந்தப் புனிதமானவனோ {கிருஷ்ணனோ}, பெரும்பாட்டனோ {பீஷ்மரோ}, பாசத்தினால் அவனிடம் {துரியோதனனிடம்} ஏன் ஏதும் கூறவில்லை?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆம். அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பேசினான். எது நன்மையோ அதைப் பீஷ்மரும் பேசினார். நாரதரும் இன்னும் அதிகம் சொன்னார். இவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்பாயாக"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நாரதர் {துரியோதனனிடம்}, "நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் நபர்கள் அரிது. நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பதும் அரிது. (ஆலோசனை தேவைப்படும்) நண்பன் இருக்கும் இடத்தில் (ஆலோசனை கொடுக்கக்கூடிய) நண்பன் இருப்பதில்லை. ஓ! குரு குல மகனே {துரியோதனா}, நண்பர்களின் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிடிவாதம் தவிர்க்கப்பட வேண்டும்; ஏனெனில், அது தீமைகள் நிறைந்ததாக இருக்கிறது. இது தொடர்பாக, பழங்காலத்தில், தனது பிடிவாதத்தால் அவமானத்தைச் சந்தித்த காலவரின் கதை மேற்கோளாகச் சொல்லப்படுகிறது.

பழங்காலத்தில், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரைச் சோதிப்பதற்காக, வசிஷ்ட முனிவரின் உருவத்தைத் தாங்கி தர்மனே {தர்ம தேவனான யமனே} அவரிடம் {விஸ்வாமித்திரரிடம்} நேரடியாக வந்தான். ஏழு முனிவர்களில் {சப்தரிஷிகளில்} ஒருவரின் {வசிஷ்டரின்} உருவத்தைத் தரித்த அவன் {தர்மன்}, ஓ! மன்னா {துரியோதனா}, போலியாக, தான் பசித்திருப்பது போலவும், உண்ண விரும்பி தான் வந்திருப்பது போலவும்  கௌசிகரின் {விஸ்வாமித்ரரின்} ஆசிரமத்தை அடைந்தான். இதன்காரணமாக, பரபரப்படைந்த விஸ்வாமித்ரர், {பரமான்னத்தின்} (அரிசியும் பாலும் கலந்து தயாரிக்கப்படும்) சருவைச் சமைக்க ஆரம்பித்தார்.

அந்த அற்புத உணவைத் தயாரிக்கக் கவனம் எடுத்துக் கொண்டதன் விளைவாக, அவரால் தனது விருந்தினருக்குச் {வசிஷ்டரின் உருவத்தில் வந்திருந்த தர்மனுக்குச்} சரியான முறையில் பணிவிடை செய்ய முடியவில்லை. அந்த விருந்தினர் {தர்மன்}, மற்ற தவசிகளால் கொடுக்கப்பட்ட உணவை உண்ட பிறகே, விஸ்வாமித்ரர், தான் சமைத்த ஆவி பறக்கும் உணவுடன் அவனை {தர்மனை} அணுகினார். அந்தப் புனிதமானவனோ {தர்மனோ} "நான் ஏற்கனவே உண்டுவிட்டேன். இங்கேயே காத்திரு" என்றான். இப்படிச் சொன்ன அந்தப் புனிதமானவன் தான் வந்த வழியே சென்றுவிட்டான்.

இதனால், ஓ! மன்னா {துரியோதனா}, ஒப்பற்றவரான அந்த விஸ்வாமித்ரர் அங்கேயே காத்திருந்தார். அந்த உணவைத் தனது தலையில் வைத்து, தன் கரங்களால் அதைத் தாங்கிப் பிடித்தவாறே, காற்றை மட்டுமே உண்டு வந்த அந்தக் கடும் நோன்பு கொண்ட தவசி {விஸ்வாமித்ரர்}, கட்டையைப் போலத் தனது ஆசிரமத்திலேயே நின்றார். அப்படி அவர் {விஸ்வாமித்திரர்} அங்கே நின்று கொண்டிருந்தபோது, மரியாதை, பெரும் மதிப்பு, பாசம் மற்றும் இனியன செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட காலவர் என்ற பெயருடைய தவசி, அவருக்கு {விஸ்வாமித்ரருக்குப்} பணிவிடை செய்ய ஆரம்பித்தார்.

இப்படியே நூறு {100} வருடம் கடந்ததும், மீண்டும் வசிஷ்டரின் உருவை ஏற்ற தர்மன், உண்ணும் விருப்பத்துடன் கௌசிகரிடம் {விஸ்வாமித்ரரிடம்} வந்தான். அவ்வளவு நாளும் காற்றை மட்டுமே உண்டு, தலையில் உணவுடன் நின்று கொண்டிருந்தவரும், பெரும் ஞானம் கொண்டப் பெரும் முனிவருமான விஸ்வாமித்ரரைக் கண்ட தர்மன், இன்னும் சூடாகவும், புதியதாகவும் இருந்த அந்த உணவை ஏற்றான். அந்த உணவை உண்ட அந்தத் தேவன் {தர்மன் - விஸ்வாமித்திரரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே {O regenerate rishi}, நான் மனநிறைவு கொண்டேன்" என்று சொல்லிச் சென்றுவிட்டான். தர்மனின் அந்த வார்த்தைகளால், க்ஷத்திரியத் தன்மையை விட்டு நீங்கி, அந்தண நிலையை அடைந்ததன் காரணமாக விஸ்வாமித்ரர் மகிழ்ச்சியில் நிறைந்தார். [1]

[1] விஸ்வாமித்ரர் அந்தண நிலைக்கு உயர்ந்த கதை தனிச்சிறப்புடையதாகும். (குசிகனின் மகனான) க்ஷத்திரிய மன்னன் விஸ்வாமித்ரர், அந்தண முனிவரான வசிஷ்டரிடம் சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு கசந்த அனுபவத்தைப் பெற்றார். அந்தண சக்தியின் முன்பு ஆயுதங்களின் அறிவியலால் தாங்கப்பட்ட க்ஷத்திரிய சக்தியும் பலமும் பலனளிக்கவில்லை. தனது தவசக்திகளால் வசிஷ்டர் ஆயிரமாயிரம் துருப்புகளை உண்டாக்கி அந்த க்ஷத்திரிய மன்னனை {விஸ்வாமித்ரரை} வீழ்த்தினார். இப்படிக் கலங்கடிக்கப்பட்ட விஸ்வாமித்ரர், இமயத்திற்குச் சென்று சிவனைத் துதித்தார். அந்தப் பெருந்தேவன் {சிவன்} அங்கே தோன்றினான். விஸ்வாமித்ரர் அவனிடம் {சிவனிடம்} ஆயுதங்களின் முழு அறிவியலில் தனக்குத் திறனேற்பட வேண்டும் என இரந்து கேட்டார். விஸ்வாமித்ரரின் வேண்டுதலுக்கு அந்தத் தேவன் {சிவன்} செவிசாய்த்தான். பிறகு திரும்பி வந்த விஸ்வாமித்ரர், வசிஷ்டரிடம் மோத முயன்றார். ஆனால் வசிஷ்டரோ, தனது தண்டத்தை மட்டுமே கொண்டு விஸ்வாமித்ரரின் கடும் ஆயுதங்கள் அனைத்தையும், ஏன் தெய்வீக ஆயுதங்களைக் கூடக் கலங்கடித்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் ஏமாற்றத்தால், விஸ்வாமித்ரர் அந்தணராவதில் தனது இதயத்தை நிலைக்க வைத்தார். தனது நாட்டைத் துறந்து, தனது ராணியுடன் காட்டுக்குள் சென்று கடும் தவங்களை இயற்றினார். பத்தாயிரம் {10000} வருடங்கள் கடந்ததும், படைப்பாளனான பிரம்மா அவர் முன் தோன்றி, அவரை அரசமுனி {ராஜரிஷி} என்று அழைதார். இதனால் மனமுடைந்த அவர், மேலும் கடுமையான தவங்களை அர்ப்பணிப்புடன் செய்தார். இறுதியாக, (மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில்) தர்மனின் உத்தரவால் அந்தப் பெரும் க்ஷத்திரிய மன்னன் {விஸ்வாமித்ரர்} அந்தணரானார். இந்து சாத்திரங்களில், தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன் கடுந்தவங்களால் அந்தணனாவதாகச் சொல்லப்படும் ஒரே நிகழ்வு இதுவே என்கிறார் கங்குலி.

தனது சீடனான தவசி காலவரின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், அவரிடம் {காலவரிடம்}, "ஓ! காலவா, நான் உனக்கு விடைகொடுக்கிறேன். நீ விரும்பிய இடத்திற்குச் செல்" என்றார். இப்படித் தனது ஆசானால் கட்டளையிடப்பட்ட காலவர், மிகவும் மகிழ்ந்து, பெரும் பிரகாசம் கொண்ட விஸ்வாமித்ரரிடம் இனிமையான குரலில், "ஆசானாக இருந்த உமது சேவைக்கு நான் இறுதிக்கொடையாக {தக்ஷிணையாக} என்ன கொடுக்க வேண்டும்? ஓ! மதிப்பை அளிப்பவரே {விஸ்வாமித்ரரே}, இந்த இறுதிக் கொடையின் {தக்ஷிணையின்} விளைவாலேயே ஒரு வேள்விகள் வெற்றியடையும். இது போன்று கொடையளிப்பவன் முக்தியை அடைகிறான். உண்மையில், இந்தக் கொடைகளே (ஒருவன் சொர்க்கத்தில் அனுபவிக்கும்) கனிகளாகும் {பலன்களாகும்}. அமைதி குடிகொண்டவனாக அவன் கருதப்படுவான். எனவே, நான் எனது ஆசானுக்கு என்ன கொண்டு வரவேண்டும்? ஓ, அதைச் சொல்லும்" என்று கேட்டார்.

தனது சேவைகளின் மூலமாகக் காலவர் ஏற்கனவே தன்னை வென்றுவிட்டதாக அறிந்த ஒப்பற்ற விஸ்வாமித்ரர் {காலவரிடம்}, "போ, போ" என மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனால், விஸ்வாமித்ரரால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டும், காலவர் மீண்டும் அவரிடம், "நான் என்ன கொடுக்கட்டும்" என்று கேட்டார். காலவர் தரப்பில் இருக்கும் பிடிவாதத்தைக் கண்ட விஸ்வாமித்ரர் சற்றே கோபமடைந்து, இறுதியில், "எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. அவை ஒவ்வொன்றும் சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையாக இருக்க வேண்டும். மேலும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு காது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஓ! காலவா, தாமதிக்காதே, போ" என்றார் {விஸ்வாமித்திரர்}.