Garuda described the south! | Udyoga Parva - Section 109 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –38)
பதிவின் சுருக்கம் : தெற்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...
கருடன் {முனிவர் காலவரிடம்}தொடர்ந்தான், "பழங்காலத்தில், ஒரு வேள்வியைச் செய்த விவஸ்வான் {சூரியன்}, இந்தத் திசையைத் {தெற்கு திசையைத்} தனது ஆசானுக்குக் கொடையாக (தக்ஷிணையாகக்) கொடுத்தான், இதன் காரணமாகவே, இந்தத் திசை தக்ஷிணம் (தெற்கு) என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மூவுலகங்களின் பித்ருக்களும் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டுள்ளனர்.
ஓ! அந்தணா {காலவா}, இங்கே புகையை மட்டுமே உண்டு வாழும் தேவர்களில் ஒரு வர்க்கத்தினர் {ஊஷ்மபர் என்ற தேவர்கள்} வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அனைத்து உலகங்களிலும் வேள்விகளில் வழிபடப்படும் இவர்கள் பித்ருக்களுடன் சமமான பாகத்தை அடைகிறார்கள். இந்தத் திசை யமனின் இரண்டாவது வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கேதான், மனிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தின் கணக்கானது திருதியாகவும் லவகமாகவும் கணக்கிடப்படுகிறது. [1]
[1] காலத்தின் சிறு பிரிவுகள்
இந்தப் பகுதியில்தான் தெய்வீக முனிவர்களும், பித்ருலோக முனிவர்களும், அரசமுனிகளும் பெரும் மகிழ்ச்சியுடன் வசிக்கின்றனர். அறமும், உண்மையும் {சத்தியமும்} இங்கேதான் இருக்கின்றன. (மனிதர்களின்) செயல்களுக்கான கனிகள் இங்கேதான் வெளிப்படுகின்றன. ஓ! இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, இறந்தோரின் செயல்களுக்கான இலக்காக இந்தப் பகுதி இருகிறது. {இறந்தோரின் இருவினைப் பயனை அனுபவிக்கக்கூடிய இடமாக இஃது இருக்கிறது}. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {காலவா}, இதுவே அனைவரும் {இறுதியில்} அடைய வேண்டிய திசையாகும். எனவே, அனைத்து உயிரினங்களும் இருளில் {அஞ்ஞானத்தால் [மூடத்தனத்தால்]} மூழ்கியிருப்பதால், அருளுடன் அவைகளால் இந்த இடத்திற்கு வரமுடியாது. ஓ! மறுபிறப்பாளர்களில் காளையே {காலவா}, பாவிகளால் காணப்பட வேண்டிய தீய ராட்சசர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு இருக்கின்றனர்.
ஓ! அந்தணா, இங்கே மந்தர மலையில் உள்ள புதர்களிலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களின் இல்லங்களிலும், இதயத்தையும் புத்தியையும் கொள்ளைகொள்ளும் பாடல்கள் கந்தர்வர்களால் பாடப்படுகின்றன.. இங்கேதான், இனிமையான குரலில் சாம {வேத} பாடல்கள் பாடப்படுவதைக் கேட்டு {கதைகளுடன் பாடப்பட்ட பாடல்களைக் கேட்டு}, தனது மனைவி, நண்பர்கள் மற்றும் நாட்டையும் விட்டு ரைவதன் (என்கிற தைத்தியன்} காட்டுக்கு ஓய்ந்து போனான்.
ஓ! அந்தணா {காலவா}, மனுவும் {சாவாணிமனுவும்}, யவக்ரீதருடைய மகனும் சேர்ந்து சூரியன் தாண்டிச்செல்லாதவாறு ஓர் எல்லையை இந்தப் பகுதியில்தான் வகுத்தனர். இங்கேதான், புலஸ்தியரின் ஒப்பற்ற வழித்தோன்றலான ராட்சசர்களின் மன்னன் ராவணன், கடும்தவத்தில் ஈடுபட்டு, தேவர்களிடம் இருந்து இறவாத் தன்மையை யாசித்தான் (வரமாகக் கேட்டான்).
இங்கேதான் {அசுரன்) விருத்திரன், தன் தீய நடத்தையின் விளைவால் சக்ரனுடன் {இந்திரனுடன்} பகைமை பாராட்டினான். இந்தப் பகுதியில்தான் பல்வேறு உருவங்களில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வந்து, (தங்களுக்குள் உள்ளடங்கிய} ஐம்பூதங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்கின்றன. ஓ! காலவா, இந்தப் பகுதியில்தான், தீச்செயல்கள் செய்யும் மனிதர்கள் (சித்திரவதைகளால்) வாட்டப்படுகின்றனர். நரகத்திற்குச் செல்ல நிந்திக்கப்பட்ட மனிதர்களின் உடல்கள் நிறைந்த வைதரணீ நதி இங்கேதான் ஓடுகிறது.
இங்கே வரும் மனிதர்கள் ஆதீத மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அடைகின்றனர். இந்தப் பகுதியை அடையும் சூரியன் இனிய நீரைப் பொழிகிறான், பிறகு வசிஷ்டரின் பெயரால் அழைக்கப்படும் திசைக்குச் {வடதிசைக்குச்} செல்லும் அவன் {சூரியன்} பனியைப் பொழிகிறான். இங்கேதான், ஒரு முறை, போராடிக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய யானையையும், ஒரு மகத்தான ஆமையையும் (உணவுக்காக) நான் அடைந்தேன். இங்கேதான் பெருமுனிவரான சக்ரதனு, சூரியனிடமிருந்து தனது பிறப்பை அடைந்தார். பிறகு அந்தத் தெய்வீக முனிவர் கபிலர் என்ற பெயரால் அறியப்பட்டார். அவராலேயே சகரனின் (அறுபதாயிரம்) மகன்களும் பாதிக்கப்பட்டனர்.
இங்கேதான் அந்தணர்களில் ஒரு வர்க்கத்தினரும் வேதங்களில் முழு நிபுணத்துவம் கொண்டவர்களுமான சிவர்கள் என்ற பெயர் கொண்ட அந்தணர்கள் (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர். வேதங்கள் அனைத்தையும் கற்ற பிறகு அவர்கள் முக்தியை அடைந்தனர்.
வாசுகி, நாகன் தக்ஷகன் மற்றும் ஐராவதன் ஆகியோரால் ஆளப்பட்டதும், போகவதி என்று அழைக்கப்படுவதுமான ஒரு நகரம் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. (மரணத்திற்குப் பிறகு) தங்கள் பயணத்தை மேற்கொள்வோர்கள் இங்கே அடர்த்தியான இருளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சூரியனாலோ, அக்னியாலோ ஊடுருவ இயலாதபடி அந்த இருள் மிகுந்த அடர்த்தியாக இருக்கும். வழிபடத்தகுந்தவனான நீயும் இந்தச் சாலையைக் கடக்க வேண்டியிருக்கும். {தெற்கு திசையாகிய} இந்தத் திசையை நோக்கி நீ செல்ல வேண்டுமா என்பதை எனக்குச் சொல். அல்லது மேற்கு திசை குறித்து நான் விவரிப்பதைக் கேள்" என்றான் {கருடன்}.