Monday, May 25, 2015

மேற்கை விவரித்த கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 110

Garuda described the west! | Udyoga Parva - Section 110 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –39)

பதிவின் சுருக்கம் : மேற்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...

கருடன் {முனிவர் காலவரிடம்} தொடர்ந்தான், "இந்தத் திசை {மேற்குத் திசை}, கடலின் ஆட்சியாளனான மன்னன் வருணனுக்குப் பிடித்த திசையாகும். உண்மையில், நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} இங்கேதான் தோன்றினான். இங்கே தான் அவனது ஆட்சியும் நடக்கிறது. நாளின் இறுதியில் (பச்சாத்தில் [paschat) = பகலின் பின்பாகத்தில்} இத்திசையிலிருந்து சூரியன் தனது கதிர்களை வெளியிடுவதால், ஓ! இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, இது மேற்கு (பச்சிமை) என்று அழைக்கப்படுகிறது. நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஆள்வதற்கும், நீர்நிலைகளின் பாதுகாப்புக்காகவும் தெய்வீகமான காசியபர் வருணனை இங்கே {இந்த மேற்கு திசையின் மன்னனாக} நிறுவினார்.


வருணனின் ஆறு சாறுகள் {சுவைகள்} அனைத்தையும் பருகுபவனும் இருளை அகற்றுபவனுமான சந்திரன், முதல் இரு வாரங்களில் {வளர்பிறையில்} அதிக இளமையுடன் வெளியே வருகிறான். ஓ! அந்தணா {காலவா}, இந்தப் பகுதியில் தான் வாயுத் தேவனால் தைத்தியர்கள் நிலைகுலையச் செய்யப்பட்டுக் கட்டப்பட்டனர். பலத்த பெரும் காற்றால் பீடிக்கப்பட்டு, (புறமுதுகிட்டு ஓடியதால்) மூச்சு வாங்கிய அவர்கள் {தைத்தியர்கள்}, இறுதியில் இந்தப் பகுதியில்தான் (விழிப்பை அறியாத தூக்கத்தில்) உறங்கினர்.

இங்கே தான் மாலை நேர சந்திப் பொழுதுக்குக் காரணமாக இருக்கும் அஸ்தம் என்று அழைக்கப்படும் மலை, சூரியனைத் (தினமும்) தன்னை நோக்கி அன்போடு வரவேற்கிறது. இந்தப் பகுதியில்தான் இரவு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டும், நாளின் இறுதியில் வெளிவந்து, வாழும் உயிரினங்களுக்கான வாழ்நாளைத் திருடிக் கொள்வது போல, முழுவதும் பரவி கொள்கின்றன.

இங்கேதான் சக்ரன் {இந்திரன்}, (தனது மாற்றாந்தாயான) திதி தேவி, தனது கர்ப்ப காலத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்தக் கருவை (நாற்பத்தொன்பது துண்டுகளாக) வெட்டிப் போட்டு, அதிலிருந்து (நாற்பத்தொன்பது) மருதர்கள் {மருத்துக்கள்} எழுந்தனர். இந்தத் திசையை நோக்கித் தான் இமயத்தின் வேர்கள் (கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும்) நித்தியமான மந்தரத்தை நோக்கி நீள்கின்றன. ஒருவன் ஆயிரம் வருடங்கள் பயணம் செய்தாலும் இந்த வேர்களின் இறுதியை அடைய முடியாது.

இந்தப் பகுதியில்தான் (பசுக்களின் தாயான) சுரபி {காமதேனு} தங்கத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பரந்த தடாகத்தின் கரைகளுக்குச் சென்று, தனது பாலைப் பொழிகிறாள். இங்கேதான் சூரியன், சந்திரன் ஆகிய இருவரையும் எப்போதும் விழுங்க முனைபவனான ஒப்பற்ற சுவர்ணபானுவின் (ராகுவின்) தலையற்ற உடல் கடலுக்கு மத்தியில் காணப்படுகிறது. இங்கேதான் ஒப்பற்றவரும், அளவிலா சக்தி படைத்தவரும், நிலையான பச்சை நிற மயிர் {நரையில்லாத கறுத்த மயிர்} கொண்டவருமான சுவர்ணசிரர் எனும் முனிவர் பெரிய ஒலியுடன் வேதங்களைப் பாடிக் கொண்டிருப்பது கேட்கப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஹரிமேதஸ் எனும் முனிவருடைய மகள் {தவஜ்வதி}, சூரியனால் "நில்!", "நில்!" என்று கட்டளையிடப்பட்டதன் விளைவால் அந்தரத்திலேயே நின்றாள்.

ஓ! காலவா, இங்கேதான் காற்று, நெருப்பு, பூமி, நீர் ஆகிய அனைத்தும் தங்கள் வலிநிறைந்த உணர்வுகளில் இருந்து பகல் இரவு ஆகிய இரண்டிலும் விடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இருந்துதான் சூரியனின் பாதை நேரான பாதையில் இருந்து விலகுகிறது {குறுக்கே திரும்புகிறது}. இந்தத் திசையில்தான் ஒளியுருவங்கள் அனைத்தும் {all luminous bodies - விண்மீன் கூட்டங்கள்} சூரிய கோளத்திற்குள் {மண்டலத்திற்குள்} நுழைகின்றன. இருபத்தெட்டு இரவுகள் சூரியனோடு சுற்றிவிட்டு, மறுபடியும் சந்திரனுடைய சேர்கையில் இருந்து மீண்டு சூரியனிலிருந்து அவை வெளி வருகின்றன.

இந்தத் {மேற்கு} திசையில்தான் கடலுக்கு உணவூட்டும் ஆறுகள் தங்கள் ஊற்றுக்கண்களைக் கொண்டிருக்கின்றன. இங்கே இருக்கும், வருணனின் இல்லத்தில்தான் மூன்று உலகங்களின் நீர்நிலைகளும் உள்ளன. இந்தப் பகுதியில்தான் பாம்புகளின் இளவரசனான அனந்தனின் இல்லம் அமைந்திருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாத விஷ்ணுவின் ஒப்பற்ற வீடும் இங்கேதான் இருக்கிறது. இந்தப் பகுதியில்தான் மரீசி முனிவரின் மகனான காசியப முனிவரின் இல்லமும் இருக்கிறது. இப்படியே மேற்குப் பகுதியின் பல்வேறு தன்மைகளை உனக்கு உரைத்துள்ளேன். ஓ! காலவா, இப்போது சொல், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, நாம் எந்தப் பக்கத்தை நோக்கிச் செல்லலாம்?" என்றான் {கருடன்}.