Saturday, May 02, 2015

"நாங்கள் பணிவோம்" என்றான் பீமன்! - உத்யோக பர்வம் பகுதி 74

"We would be submissive" said Bhima! | Udyoga Parva - Section 74 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –3)

பதிவின் சுருக்கம் : கடுமையுடன் எப்போதும் பேசக்கூடிய பீமன் வழக்கத்திற்கு மாறாகத் துரியோதனனிடம் மென்மையாகப் பேசுமாறு கிருஷ்ணனை வேண்டுவது; துரியோதனன் பிடிவாதம் கொண்டவன் என்றும், தான் கொண்ட கருத்துக்காக உயிரையே கூட  விடுவான் என்றும் சொல்வது; துரியோதனன் பாரதக் குலத்தை அழிக்கவே பிறந்திருக்கிறான் என்று சொல்வது; பாரதர்கள் அனைவரையும் அழிக்காமல் இருப்பதற்காகத் தாங்கள் துரியோதனனுக்குப் பணிந்து போவது கூட நன்மையே என்று சொல்வது; பீஷ்மரிடம் துரியோதனன் சினத்தைத் தணிக்கச் சொல்லுமாறு வேண்டுவது; யுதிஷ்டிரனுக்கும், அர்ஜுனனுக்கும் கூட போரில் விருப்பம் இல்லை என்றும் பீமன் கிருஷ்ணனிடம் சொல்வது...

பீமன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, குருக்களிடம் அமைதியை ஏற்படுத்தும் அழுத்தத்துடன் பேசுவாயாக. போரைக் காட்டி அவர்களை அச்சுறுத்த வேண்டாம். தனது சொந்த நன்மைக்கு எதிராகவும், திமிருடனும், கோபத்தால் தூண்டப்பட்டும் அனைத்திலும் கோபம் காட்டும் துரியோதனனிடம் கடுமையாகப் பேச வேண்டாம். அவனிடம் நீ மென்மையாக நடந்து கொள்வாயாக. செழுமையின் செருக்கால் போதையுண்டிருக்கும் துரியோதனன், ஒரு திருடனைப் போல, இயல்பிலேயே பாவம் நிறைந்த இதயம் படைத்தவனும், பாண்டவர்களிடம் பகை கொண்டிருப்பவனும் ஆவான். தொலைநோக்குப் பார்வையின்றி, கொடும்பேச்சும், எப்போதும் பிறரை நிந்திக்கும் மனநிலையும், தீய ஆற்றலும், எளிதில் தணிக்கமுடியாத கோபமும் கொண்டவனாக, எளிதில் கற்பிக்கப்பட இயலாதவனாக, தீய ஆன்மாவும், ஏமாற்றுகர நடத்தையும் கொண்டவனாவான். அவன் {துரியோதனன்}, தனது கருத்தைக் கைவிடவோ, உடைக்கவோ விடாமல், அதற்காகத் {பிடிவாதமாக} தனது உயிரையே விடக்கூடியவனாவான்.


ஓ! கிருஷ்ணா, அப்படிப்பட்ட ஒருவனிடம் சமாதானம் பேசுவது மிகக் கடினமானது என நான் கருதுகிறேன். அவனின் {துரியோதனனின்} நலன்விரும்பிகளின் வார்த்தைகளைக்கூட மதிக்காமல், அறமற்று, பொய்மையை விரும்பும் அவன் {துரியோதனன்}, தனது ஆலோசகர்களின் வார்த்தைகளுக்கு எதிராகவே எப்போதும் செயல்பட்டு, அவர்களது இதயங்களைக் காயப்படுத்தி வருகிறான். புற்களுக்குள் மறைந்திருக்கும் பாம்பைப் போல, தனது சொந்த மனநிலையை ஒட்டியும், கோபத்தின் உந்துவிசைக்குக் கீழ்ப்படிந்தும், இயல்பாகவே பாவம்நிறைந்த செயல்களையே அவன் {துரியோதனன்} செய்கிறான். துரியோதனன் என்ன படையைக் கொண்டிருக்கிறான்? அவனது நடத்தை என்ன? அவனது இயல்பு என்ன? அவனது வலிமை என்ன? அவனது ஆற்றல் என்ன? ஆகிய அனைத்தையும் நீ நன்கு அறிவாய்.

இதற்கு முன்பு, கௌரவர்கள் தங்கள் மகனுடன் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினார்கள். நாங்களும், எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இந்திரனின் தம்பி {விஷ்ணு}, இந்திரனோடு மகிழ்ந்திருந்ததைப் போன்று இருந்தோம். ஐயோ, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பனிக்காலத்தின் இறுதியில் நெருப்பால் எரிக்கப்படும் காடு போல, துரியோதனனின் கோபத்தால், பாரதர்கள் அனைவரும் எரிக்கப்படுவார்களே. உறவினர்களையும், நண்பர்களையும், சொந்தங்களையும் அழித்த பதினெட்டு மன்னர்களும் நன்கு அறியப்பட்டவர்களே ஆவர்.

தர்மம் {அறம்} அரிதானபோது, செழுமையில் பிரகாசித்து, சக்தியில் சுடர்விட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் குலத்தில் கலி பிறந்ததைப் போலவே, ஹைஹயர்களில் உதாவர்தனும், நீபர்களில் ஜனமேஜயனும், தாலஜங்களர்களில் பஹூளனும், கிரிமிகளில் செருக்கு நிறைந்த வசுவும், சூவீரர்களில் அஜபிந்துவும், சூராஷ்டிரர்களில் ருஷர்ததிகனும், பலீஹர்களில் அர்க்கஜனும், சீனர்களில் தௌதமூலகனும், விதேகர்களில் ஹயக்ரீவனும், மஹௌஜஸாக்களில் வரயுவும், சுந்தரர்களில் பாஹுவும், தீப்தாக்ஷர்களில் புரூரவனும், சேதி மற்றும் மத்ஸ்யர்களில் ஸஹஜனும், பிரவீரர்களில் விருஷத்வஜனும், சந்திர-வத்ஸ்யர்களில் தாரணனும், முகுடர்களில் வீகாஹனனும், நந்திவேகர்களில் சமனும் பிறந்தார்கள்.

ஓ! கிருஷ்ணா, இந்தத் தீய நபர்கள் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் தங்களுக்குரிய குலங்களில், தங்கள் உறவினர்களின் அழிவுக்காகவே பிறக்கிறார்கள். அதே போலவே, பாவத்தின் உருவமும், தனது குலத்தின் அவமானமுமான துரியோதனன், யுகத்தின் முடிவில் குருக்களான எங்கள் மத்தியில் பிறந்திருக்கிறான்.

எனவே, ஓ! கடும் ஆற்றல் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ அவனிடம் மெதுவாகவும், மென்மையாகவும் பேசுவாயாக. அறமும் பொருளும் நிறைந்த கசப்பில்லாத இனிய வார்த்தைகளால், அவனது இதயத்தைக் கவரும் வகையில் பேசுவாயாக. ஓ! கிருஷ்ணா, அவமதிக்கப்பட்டவர்களாகி, பணிந்த நிலையில் நாங்கள் துரியோதனனைப் பின்பற்றியே கூட நடந்து கொள்கிறோம், ஆனால் பாரதர்கள் அழிக்கப்பட வேண்டாமே.

ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, நாங்கள் குருக்களுக்கு அந்நியர்களாகவே வாழ நேர்ந்தாலும் கூட, முழுக் குலத்தையும் அழித்த பாவம் அவர்களைத் {கௌரவர்களைத்} தொடாதிருக்கட்டும். ஓ! கிருஷ்ணா, சகோதரர்களுக்கிடையில் சகோதர உணர்வுகளைக் கொண்டு வரவும், திருதராஷ்டிரர் மகனைத் {துரியோதனனை} தணிக்கவும் முதியவரான பாட்டனும் {பீஷ்மரும்}, குருக்களின் {கௌரவர்களின்} பிற ஆலோசகர்களும் கேட்டுக்கொள்ளப்படட்டும். இதுவே நான் சொல்வதாகும். மன்னன் யுதிஷ்டிரரும் இதை அங்கீகரிக்கிறார், அர்ஜுனனுன் போருக்கு எதிராகவே இருக்கிறான். ஏனெனில் அவனிடம் பெரும் கருணை இருக்கிறது" என்றான் {பீமன்}.