Sunday, May 03, 2015

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! - உத்யோக பர்வம் பகுதி 76

"Not from fear, only from compassion" said Bhima! | Udyoga Parva - Section 76 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –5)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்ள இயலாத பீமன், தனது ஆற்றல் குறித்தும், தன்னிடம் சிக்கியவர்கள் தப்ப முடியாது என்றும், தான் சொல்லிக் கொண்டதைவிடத் தனது ஆற்றல் பெரிது என்றும், இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை என்றும் பீமன் கிருஷ்ணனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எப்போதும் கோபம் நிறைந்த பீமன், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ள இயலாமல், உயர்ந்த பொருளாலான குதிரையைப் [1] போல உடனே விழித்தெழுந்து, ஒரு நொடியும் தாமதிக்காமல், "ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட ஒரு வழியில் நான் செயல்பட விரும்புகிறேன்; எனினும், நீ என்னை வேறு வெளிச்சத்தில் காண்கிறாய். நான் போரில் பெரும் மகிழ்வடைகிறேன் என்றும், எனது ஆற்றல் கலங்கடிக்கப்பட இயலாதது என்றும், ஓ! கிருஷ்ணா, எங்களோடு வெகு காலம் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் நீ நன்கு அறிந்திருப்பாய். அல்லது தடாகத்தின் ஆழம் தெரியாமல் அதில் நீந்திக் கொண்டிருப்பவனைப் போல, நீ என்னை அறியாதிருந்திருக்கலாம்.

[1] உயர்ந்த அழகுடைய குதிரை என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் a steed of high metal என்று இருக்கிறது. metal என்பதற்குத் தமிழில் உலோகம் என்றும், மாழை என்றும் பொருள் உண்டு. மாழை  என்பது இளமை, அழகு என்ற பொருள்களைத் தரும்.

இதன்காரணமாகவே, நீ தகாத வார்த்தைகளால் என்னைக் கடிந்து கொள்கிறாய். ஓ! மாதவா? நான் பீமசேனன் என்று அறிந்தும் இத்தகு தகாத வார்த்தைகளை என்னிடம் யாரால் பேச முடியும்? எனவே {கேட்டது நீ என்பதால்}, ஓ! விருஷ்ணிகளுக்கு மகிழ்ச்சியூட்டுபவனே {கிருஷ்ணா}, எனது ஆற்றல் மற்றும் ஒப்பற்ற வலிமை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன். ஒருவன், தனது சொந்த ஆற்றல் குறித்துப் பேசுவது எப்போதும் இழிவான செயலே என்றாலும், அன்பற்ற உனது கண்டனங்களால் துளைக்கப்பட்டிருக்கும் நான் எனது சொந்த வலிமையைக் குறித்துப் பேசுகிறேன்.

ஓ! கிருஷ்ணா, அசைக்க இயலாதவையும், மகத்தானவையும், எல்லையற்றவையும், பிறப்பெடுத்த எண்ணற்ற உயிரினங்களுக்கு அடைக்கலமாக இருப்பவையுமான வானத்தையும், பூமியையும் பார். கோபத்தால் இவை இரு மலைகளைப் போல ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக் கொண்டால், அவற்றில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றோடு கூடிய அவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க எனது கரங்களால் முடியும் [2]. கரங்களைப் போல இருக்கும் எனது கதாயுதத்தின் இணைப்புகளைப் பார். அவற்றின் பிடியில் ஒருமுறை சிக்கி, தப்பிக்க இயன்றவனை நான் காணவில்லை.

இமயம், பெருங்கடல், வலனைக் கொன்றவனான வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} ஆகிய மூவராலும் கூட, என்னால் தாக்கப்பட்டவனைத் தங்கள் பலத்தால் தப்புவிக்க முடியாது. போர்க்களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக வரக்கூடிய க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் எனது பாதத்தைக் கொண்டு எளிதாகத் தரையில் நசுக்கிவிடுவேன்.

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, என்ன ஆற்றலுடன் நான் பூமியில் உள்ள மன்னர்களை வீழ்த்தி அடக்கினேன் என்பது நீ அறியாததல்ல. உண்மையில், கடும் சக்தியுடன் இருக்கும் மதிய வேளை சூரியனைப் போன்ற எனது ஆற்றலை நீ அறியவல்லையெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் நடக்கும் கடும் கைக்கலப்பில் அதை அறிந்து கொள்வாய். நாற்றமிகுந்த கட்டியை உடைத்தால் ஏற்படும் வலியைப் போன்ற வலியைக் கொடுக்கும் வகையில் உனது கொடுஞ்சொற்களால் நீ என்னைக் காயப்படுத்துகிறாய்.

ஆனால், நான் சுயமாக என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டதைவிட வலியவனாக என்னை அறிவாயாக. அழிவையும், சீர்குலைவையும் தரும் உக்கிரமான போர் தொடங்கும் போது, நான், யானைகளையும், தேர்வீரர்களையும், குதிரைகளில் இருந்து போரிடுவோரையும், யானைகளில் இருப்போரையும் வீழ்த்தி, க்ஷத்திரிய வீரர்களில் முதன்மையானவர்களைக் கொல்வதையும் நீ காண்பாய்.

இவை யாவையும், போராளிகளில் முதன்மையானவர்களை நான் கலங்கடித்து வீழ்த்துவதையும் நீயும் பிறரும் காண்பீர்கள். எனது எலும்புகளின் மச்சை இன்னும் அழியவில்லை, எனது இதயமும் நடுங்கவில்லை. இவ்வுலகமே என்னை நோக்கிக் கோபத்துடன் விரைந்து வந்தாலும், நான் அச்சத்தை உணர மாட்டேன் [2]. ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, கருணையின் காரணமாகவே, நான் எதிரியிடம் நல்லெண்ணத்ததை வெளிப்படுத்துகிறேன். பாரதக் குலம் அழிவடையாதிருக்கவே, நான் காயங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன்.


[2] அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பாரதியின் மேற்கண்ட "பண்டாரப்பாட்டு" பீமனின் உள்ளநிலையை நன்கு பிரதிபலிப்பதாக உணர்கிறேன். மேற்சொன்ன அனைத்தும் பீமனுக்கு நேர்ந்த அனுபவமாகவோ, அவனது சொல்லாகவோ மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கின்றன.