Monday, May 04, 2015

போரின் சுமை உமதே பீமரே! - உத்யோக பர்வம் பகுதி 77

O Bhima, the burthen of the war restest on thee! | Udyoga Parva - Section 77 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –6)

பதிவின் சுருக்கம் : பீமனின் மனதை அறியவே தான் அப்படிக் கடுமையாகப் பேசியதாகக் கிருஷ்ணன் சொன்னது; செயல்களில் மனித சக்திக்கு உட்பட்ட செயல்கள் மற்றும் தெய்வாதீனமான செயல்கள் குறித்துச் சொன்னது; ஒருவனுடைய காரியம்,  விதி மற்றும் முயற்சி ஆகியவற்றின் கலவையால் ஏற்படும் என்றும்; அதை அறிந்த மனிதன் வெற்றி தோல்வி குறித்துக் கவலைப்பட மாட்டான் என்றும் சொன்னது; போர் நடந்தால், அதன் பாரம் முழுவதையும் தங்கள் தரப்பில் இருந்து பீமனும், அர்ஜுனனும் மட்டுமே தாங்க வேண்டியிருக்கும் என்றும் பீமனிடம் கிருஷ்ணன் சொன்னது...



அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் பீமனிடம்} சொன்னான், "கல்வியின் செருக்காலோ, கோபத்தாலோ, ஓர் உரை நிகழ்த்தும் விருப்பத்தாலோ, உம்மை நிந்திக்கும் விருப்பத்தாலோ இல்லாமல், உமது மனதை அறிய விரும்பி ஒரு பற்றின் காரணமாகவே நான் இவை யாவையும் சொன்னேன். உமது ஆன்மாவின் பெருந்தன்மையையும், உமது பலத்தையும், உமது செய்கைகளையும் நான் அறிவேன். அந்தக் காரணத்திற்காக நான் உம்மை நிந்திக்கவில்லை.


ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, நீர் எவ்வளவு செய்ய முடியும் என்று எண்ணியிருக்கிறீரோ, அதைவிட ஆயிரம் மடங்கு பெரிதான செயல்களை உம்மால் பாண்டவக் காரணத்திற்காகச் செய்ய முடியும். ஓ! பீமரே, நீரும், உமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகிய ஒவ்வொருவரும், உலகத்தின் மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் உமது குடும்பத்தைப் போன்ற குடும்பங்களில் சரியாகவே பிறப்பை எடுத்திருக்கிறீர்கள். எனினும், அறம், மறம், மற்றும் மனிதர்களின் பலம் மற்றும் பலவீனங்களின் விளைவுகளைச் {இது தெய்வாதீனமா, மனித செயலா என்ற} சந்தேகத்ததின் காரணமாக விசாரிப்பவர்களால் உண்மையை அடைய முடிவதில்லை. ஏனெனில், ஒரு மனிதனின் வெற்றிக்கு எது {எந்த அறம்} காரணமாக இருக்கிறதோ, அதுவே அவனது நிர்மூலத்திற்கும் காரணமாக அமைவதை நாம் காண்கிறோம்.

எனவே, மனித செயல்களின் விளைவுகள் சந்தேகத்திற்குரியவையே. தீய செயல்களைத் தீர்மானிக்க இயன்ற கற்றோர், ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றத் தகுந்தது எனச் சொல்கின்றனர். எனினும், அந்த விளைவுகள், தொலைநோக்குடன் காணப்பட்டதற்கு நேர் எதிராகக் காற்றின் வழியைப் போலவே {வேறு விதமாக அல்லது தெய்வாதீனமாக} அமைகிறது. உண்மையில், ஆழ்ந்த சிந்தனை மற்றும் நன்கு வழிநடத்தப்பட்ட கொள்கை {நியாயத்தின் உதவி} ஆகியவற்றின் விளைவுகளால் ஏற்படும் மனிதர்களின் செயல்களும், பொருத்தமுடைமைகளின் கருத்துகளுக்கு இசைவான செயல்களும் கூடத் தெய்வாதீனமானவற்றை வகுக்கையில் குழம்பிப் போகின்றன.

பிறகு, மேலும், மனித செயல்களின் விளைவுகளால் உண்டாகாமல், தெய்வாதீனமாக வகுக்கப்படும், வெப்பம், குளுமை, மழை, பசி, தாகம் ஆகியவை மனித முயற்சியால் கலங்கடிக்கப்படும். பிறகு, மேலும், ஒரு மனிதன் செய்வதற்கு (கடந்த பிறவிகளின் செய்த செயல்களின் விளைவுகளால்} முன்பே விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர, {மனிதன் தானே செய்த} மற்ற செயல்கள் அனைத்தையும், ஸ்ம்ருதிகள் மற்றும் சுருதிகள் ஆகிய இரண்டின் சான்றுகளின் படி, ஒருவன் தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எப்போதும் கைவிடலாம்.

எனவே, ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, இவ்வுலகில் ஒரு மனிதன் செயல்படாமல் இருக்க முடியாது. ஆகவே, ஒருவனுடைய காரியம் விதி மற்றும் முயற்சி ஆகிய இரண்டின் கலவையால் சாதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து வேலையில் ஈடுபட வேண்டும். இந்த நம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் ஒருவன் தோல்வியுறும்போது துன்புறவோ, வெற்றியடையும்போது மகிழவோ மாட்டான். ஓ! பீமசேனரே, இதுவே எனது பேச்சின் நோக்கமாகும். எதிரியுடன் ஏற்படும் மோதலில் வெற்றி உறுதி என்பதை நான் நோக்கமாகக் கொள்ளவில்லை.

ஒருவன், மனவருத்தத்தில் இருக்கும்போது உற்சாகத்தை இழக்கக்கூடாது. எந்தத் தளர்வுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடாது. இதற்காகவே நான் இப்படிப் பேசினேன். ஓ! பாண்டவரே {பீமரே}, நாளை விடிந்ததும், நான் திருதராஷ்டிரரின் முன்னிலைக்குச் செல்வேன். உங்களது விருப்பங்களைத் {பயன்களைத்} தியாகம் செய்யாமல் அமைதியை ஏற்படுத்த முயல்வேன். கௌரவர்கள் சமாதானத்துக்கு உடன்பட்டால், எல்லையில்லா புகழ் எனதாகும். உங்கள் {பாண்டவர்களின்} நோக்கங்களும் அடையப்படும், அவர்களும் {கௌரவர்கும்} பெரும் நன்மையை அறுவடைசெய்வார்கள்.

இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேளாமால், அவர்களது கருத்தையே தக்க வைத்துக் கொள்ளக் கௌரவர்கள் தீர்மானித்தால், பிறகு, போர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தவிர்க்க முடியாததாகும். ஓ! பீமசேனரே, இந்தப் போரில் சுமைகள் உம்மீதே குடிகொள்ளும். அந்தச் சுமையை அர்ஜுனனும் தாங்குவான், அதே வேளையில், மற்ற வீரர்கள் அனைவரையும், நீங்கள் இருவரே வழிநடத்த வேண்டும்.

போர் நிகழ்ந்தால், நான் நிச்சயம் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரோட்டியாக இருப்பேன். ஏனெனில், உண்மையில், அது தனஞ்சயனின் {அர்ஜுனனின்} விருப்பமேயன்றி, நான் போரிட விரும்பவில்லை என்பதில்லை. ஓ! விருகோதரரே {பீமரே}, உமது நோக்கத்தை நீர் சொன்னதைக் கேட்டதாலேயே, {சந்தேகத்தின் அடிப்படையிலேயே} நான் உமது சக்தியை மீண்டும் தூண்டிவிட்டேன்" என்றான் {கிருஷ்ணன்}.