Wednesday, May 06, 2015

"என்னை அஞ்சாதே, நம்பு!" என்ற கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 79

"Don't entertain apprehension of myself, Believe me!" said Krishna! | Udyoga Parva - Section 79 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –8)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய இரு தரப்பின் நன்மையையும் தான் விரும்புவதாக அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொன்னது; மனிதர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், தெய்வச்செயலும் அவசியம் என்று சொன்னது; ஏற்கனவே தீயவனான துரியோதனன், சகுனி, கர்ணன் மற்றும் துச்சாசனனின் ஆலோசனைகளைக் கேட்டு மேலும் பாவச் செயல்களைச் செய்வதாகச் சொன்னது; துரியோதனன் சிறு இடத்தையும் கொடுக்கமாட்டான், அதனால் சமாதானத்தை எட்டுவது மிகவும் கடினம் என்று சொன்னது; தூது செல்லும் முன் துரியோதனன் குறித்துத் தான் சிறிது சிந்திக்க வேண்டும் என்று அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொன்னது...

கிருஷ்ணன் வேடத்தில்
என்.டி.ராமாராவ்

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} சொன்னான், "ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {அர்ஜுனா}, ஓ!பாண்டவர்களே, நீங்கள் சொல்வது போலவே ஆகும். நான் பாண்டவர்கள் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} ஆகிய இருவருக்குமான நன்மையை அடையவே முயல்வேன். போர் மற்றும் அமைதி ஆகிய இருவித செயல்களில், ஓ! பீபத்சு {அர்ஜுனா}, பின்னது {அமைதி} ஒருவேளை எனது சக்திக்குட்பட்டதாக இருக்கலாம்.

மனித உழைப்பால் களைகள் அகற்றப்பட்டு நீர் தெளித்து ஈரப்படுத்தப்பட்டிருக்கும் மண்ணைப் பார். எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மழையற்றுப் போனால் பயிர் விளையாது. உண்மையில், மழையில்லாமல் போனால், செயற்கை பாசனத்தை வெற்றியடையும் ஒரு வழிமுறையாகக் கொள்வது குறித்துச் சிலர் பேசுகிறார்கள். ஆனால், அப்படிச் செய்யினும், தெய்வாதீனமாக ஏற்படும் வறட்சியின் விளைவால் செயற்கையாகப் பாய்ச்சப்படும் நீர் காய்ந்து போவதையும் நாம் பார்க்கிறோம்.


இவற்றையெல்லாம் கண்ட பழங்கால ஞானிகள், தெய்வாதீன மற்றும் மனித தகுமுறைகள் இரண்டின் ஒத்துழைப்பினாலேயே மனித விவகாரங்கள் நடக்கும் என்று சொல்லியிருக்கின்றனர். மனித முயற்சியால் செய்யக்கூடிய அனைத்தையும் நான் சிறப்பாகச் செய்வேன். ஆனால், தெய்வாதீனமான எதையும் என்னால் எந்த வழிகளிலும் கட்டுப்படுத்த இயலாது.

தீய ஆன்மா கொண்ட துரியோதனன் அறம் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் புறக்கணிக்கும் வகையிலேயே செயல்படுகிறான். இவ்வழியில் செயல்படுவதன் விளைவாக அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. மேலும், சகுனி, கர்ணன் மற்றும் அவனது தம்பி துச்சாசனன் ஆகிய அவனது ஆலோசகர்களும் அவனது பாவ புத்தியையே வளர்க்கின்றனர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தனது உறவினர்களோடு சேர்த்து நமது கைகளால் மொத்தமாக அழிவடையாமல், சுயோதனன் {துரியோதனன்} நாட்டைக் கொடுத்துச் சமாதானம் பெறவே மாட்டான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரும் {துரியோதனனுக்குப்} பணிந்து நாட்டை விட்டுவிட விரும்பவில்லை.

தீய மனம் கொண்ட துரியோதனன், நமது கோரிக்கையால் நாட்டைக் கொடுக்கமாட்டான். எனவே, யுதிஷ்டிரரின் செய்தியை அவனுக்குச் சொல்வது முறையல்ல என்றே நான் நினைக்கிறேன். குருகுலத்தின் பாவம் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதா {அர்ஜுனா}, யுதிஷ்டிரர் பேசும் பொருள்களைச் {தனக்கு வேண்டும் என்று கேட்டவற்றைச்} செய்ய மாட்டான். இணங்க மறுத்தாலோ, அவன் {துரியோதனன்} அனைவரின் கைகளாலும் மரணம் அடையத் தகுந்தவனாவான். ஓ! பாரதா {அர்ஜுனா}, குழந்தை பருவத்தில் இருந்தே உங்கள் அனைவரையும் அவன் {துரியோதனன்} துன்புறுத்தியிருக்கிறான் என்பதாலும், யுதிஷ்டிரரின் செழிப்பைக் கண்டு பொறாத தீயவனான அந்தப் பாவம் நிறைந்த இழிந்தவன் {துரியோதனன்}, உங்கள் நாட்டைத் திருடிக் கொண்டதாலும், அனைவரையும் போலவே அவன் {துரியோதனன்} என் கையாலும் கொல்லப்படத்தக்கவனே.

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பல நேரங்களில் அவன் {துரியோதனன்} உன்னை என்னிடம் இருந்து பிரிக்க முயன்றிருக்கிறான். ஆனால் அவனது அந்தத் தீய முயற்சிகளை நான் எண்ணிப்பார்த்ததில்லை {கண்டுகொண்டதில்லை}. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனனின் நோக்கங்கள் என்ன என்பதை நீ அறிவாய். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் நலத்தை நான் விரும்புகிறேன் என்பதையும் நீ அறிவாய். துரியோதனனின் இதயத்தையும், எனது விருப்பங்களையும் அறிந்திருந்தும், ஓ! அர்ஜுனா, எதையும் அறியாதவனைப் போல, என்னைக் குறித்த இத்தகு அச்ச உணர்வுகளை நீ ஏன் ஊக்கப்படுத்துகிறாய்?

சொர்க்கத்தில் விதிக்கப்பட்ட அந்தப் பயங்கரச் செயலை நீ அறிவாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிறகு எப்படி எதிரியுடன் சமாதானம் ஏற்படும்? எனினும், ஓ! பாண்டவர்களே, பேச்சு, செயல் ஆகிய இரண்டினால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அத்தனையும் என்னால் செய்யப்படும். எனினும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, எதிரியுடன் சமாதானம் சாத்தியம் என்று எதிர்பாராதே. ஒரு வருடத்திற்கு முன்னால், விராடனின் பசுக்களைத் தாக்கிய சந்தர்ப்பத்தில், {தோல்வியுற்று} அவர்கள் {கௌரவர்கள்} திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த அமைதியே அனைவருக்கும் நன்மையைத் தரும் என்று துரியோதனனிடம், பீஷ்மர் சொல்லவில்லையா?

அவர்கள் தோற்பார்கள் என்று நீ தீர்மானித்தபோதே அவர்கள் தோற்றுவிட்டார்கள். என்னை நம்பு. உண்மையில், நாட்டில் உள்ளதிலேயே சிறுபகுதியையேனும் மிகக் குறுகிய காலத்திற்குக் கூடப் பிரிய சுயோதனன் {துரியோதனன்} சம்மதிக்கமாட்டான். என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரரின் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனே. எனவே, அந்தத் தீய இழிந்தவனின் {பொல்லாத பாதகனான துரியோதனனின்} பாவச் செயல்களை, மீண்டும் என் மனதில் சுழலச்செய்யவேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}.