Thursday, May 07, 2015

"உம்மால் முடியும்!" என்ற நகுலன்! - உத்யோக பர்வம் பகுதி 80

"Thou can!" said Nakula! | Udyoga Parva - Section 80 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –9)

பதிவின் சுருக்கம் : காலத்திற்கு ஏற்ப கருத்துகள் மாறுகின்றன எனவும்; சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செயல்படும்போதே வெற்றி கிடைக்கிறது எனவும்; முதலில் துரியோதனனிடம் மென்மையாகவும், பின்பு வன்மையாகவும் பேச வேண்டும் எனவும்; பாண்டவர்களோடு நிற்கும் தலைவர்களிடம் எந்த மனிதனால் மோத முடியும் எனவும்; கிருஷ்ணன் சொல்லும் ஞானமொழிகளைக் கேட்டு கௌரவ அவையின் முதிர்ந்தவர்களும் மதிப்புமிக்கவர்களும் திருதராஷ்டிரருக்கு அறிவுரை கூறுவார்கள் எனவும் கிருஷ்ணனிடம் நகுலன் பேசியது...

நகுலன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! மாதவா {கிருஷ்ணரே}, அறநெறிகள் அறிந்தவரும், ஈகை குணம் கொண்டவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரரால் நிறையச் சொல்லப்பட்டது. பல்குனர் {அர்ஜுனர்} என்ன சொன்னார் என்பதை நீர் கேட்டீர். ஓ! வீரரே {கிருஷ்ணரே}, என் கருத்தை நீரே பலமுறை வெளிப்படுத்திவிட்டீர். இவை யாவற்றையும் அலட்சியம் செய்து, எதிரியின் விருப்பங்களை முதலில் கேட்டு, சந்தர்ப்பத்திற்கு எது தகுந்ததென நீர் கருதுகிறீரோ அதைச் செய்யும்.


ஓ! கேசவரே {கிருஷ்ணரே}, பல்வேறு விவகாரங்களுக்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் பல்வேறு வகையிலேயே இருக்கின்றன. எனினும், ஓ !எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு ஒரு மனிதன் செயல்படும்போதே, வெற்றி வெல்லப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பொருள் ஒரு வகையில் தீர்க்கப்பட்டால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது தகாததாகி வேறுபடுகிறது.

எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, இவ்வுலகத்தின் மனிதர்கள் எவரும் ஒரே கருத்துடன் தொடர்ந்து இருக்க முடியாது. நாங்கள் காட்டில் வாழ்ந்த போது, எங்கள் இதயங்கள் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்ய விரும்பியது. நாங்கள் தலைமறைவாக இருந்த போதோ, அது {வேறு} ஒரு வகையில் இருந்தது. இப்போதோ, ஓ! கிருஷ்ணரே, இனியும் தலைமறைவு வாழ்வு தேவைப்படாதபோது, எங்கள் விருப்பங்கள் வேறுவிதமாக மாறியிருக்கின்றன.

ஓ! விருஷ்ணி குலத்தவரே {கிருஷ்ணரே}, நாங்கள் காட்டில் உலவி கொண்டிருந்த போது, நாட்டின் மீதான பற்று எங்களுக்கு இப்போதைய அளவுக்குப் பெரியதாக இல்லை. ஓ! வீரரே {கிருஷ்ணரே} எங்கள் வனவாச காலம் முடிந்து திரும்பிவிட்டோம் என்பதைக் கேட்டதும், ஓ! ஜனார்த்தரரே {கிருஷ்ணரே}, உமது அருளால் இங்கே ஏழு {7} அக்ஷொஹிணிகள் எண்ணிக்கையில் படை திரண்டுள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவு வலிமையும் ஆற்றலும் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக நிற்பதைக் காணும் எந்த மனிதன் தான் அச்சத்தால் பீடிக்கப்பட மாட்டான்? எனவே, குருக்கள் மத்தியில் சென்றதும், முதலில் மென்மை நிறைந்த வார்த்தைகளையும், பிறகு அச்சுறுத்துவனவற்றையும் பேசி அந்தத் தீய துரியோதனனை அச்சத்தால் நீர் பதைபதைக்க வைப்பீராக.

ஓ! கேசவரே {கிருஷ்ணரே}, யுதிஷ்டிரர், பீமசேனர், ஒப்பற்ற பீபத்சு, சகாதேவன், நான், நீர், ராமர் {பலராமர்}, பெரும் வலிமையும் சக்தியும் கொண்ட சாத்யகி, தனது மகன்களோடு கூடிய விராடர், தனது கூட்டாளிகள் மற்றும் திருஷ்டத்யும்னனோடு கூடிய துருபதர், பெரும் ஆற்றல்படைத்த காசியின் ஆட்சியாளர், சேதிகளின் தலைவனான திருஷ்டகேது ஆகியோரோடு சதையும், இரத்தமும் கொண்ட எந்த மனிதனால் போரில் மோத முடியும்?

ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {கிருஷ்ணரே}, நீர் அங்குச் சென்றதுமே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் விரும்பிய நோக்கத்தைச் சாதிப்பீர், என்பதில் ஐயமில்லை. ஓ! பாவமற்றவரே {கிருஷ்ணரே}, விதுரர், பீஷ்மர், துரோணர், பாஹ்லீகர் ஆகியோர் நீர் சொல்லும் ஞானமொழிகளைப் புரிந்து கொள்வர். அந்த அறிவுரைக்கேற்ப நடக்குமாறு மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரரையும், பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனான சுயோதனனையும் {துரியோதனனையும்} அவர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, நீர் பேச்சாளராகவும், விதுரர் கேட்பவராகவும் இருக்கும்போது, மென்மையாகவும், சாதாரணமாகவும் எந்தக் காரியத்தைத்தான் விளக்க முடியாது?" என்றான் {நகுலன்}.