Thursday, May 14, 2015

"உணவை ஏன் மறுக்கிறாய்!" துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 91

"Why dost thou refuse food!" said Duryodhana! | Udyoga Parva - Section 91 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –20)

பதிவின் சுருக்கம் : குந்தியிடம் விடைபெற்றுச் சென்ற கிருஷ்ணன் துரியோதனனை அடைந்தது; துரியோதனன் கொடுக்க முன்வந்த உணவைக் கிருஷ்ணன் மறுத்தது; மறுத்ததற்கான காரணத்தைத் துரியோதனன் கேட்க, அதைக் கிருஷ்ணன் சொன்னது; கிருஷ்ணன் விதுரனின் இல்லத்தை அடைந்து அங்கே குந்தியின் கைகளால் உண்டது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிருதையிடம் {குந்தியிடம்} விடைபெற்றுக் கொண்டு, அவளை வலம் வந்தவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், சௌரி என்றும் அழைக்கப்பட்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, புரந்தரனின் {இந்திரனின்} வசிப்பிடத்தைப் போன்றதும், அழகிய இருக்கைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் செல்வம் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றான். வாயில் காப்போரால் தடுக்கப்படாத அந்தப் பெரும் புகழ் கொண்ட வீரன் {கிருஷ்ணன்}, தொடர்ச்சியாக மூன்று கட்டுகளைக் கடந்து, சுடர்விட்டுப் பிரகாசிப்பதும், மலையின் சிகரத்தைப் போன்று உயர்ந்ததும், மேகத்திரள் போன்று தெரிவதுமான அந்த மாளிகைக்குள் நுழைந்தான் {உப்பரிகையில் ஏறினான்}.

அங்கே, குருக்கள் அனைவராலும் சூழப்பட்டு, ஆயிரம் {1000} மன்னர்களுக்கு மத்தியில் தனது அரியணையில் அமர்ந்திருந்த வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} கண்டான். மேலும், அங்கே, துச்சாசனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் தங்களுக்குரிய இருக்கைகளில் துரியோதனனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பதையும் கண்டான். அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சபைக்குள் நுழைந்ததும், அமைச்சர்களுடன் கூடியவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்த மதுசூதனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாகத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தான்.

பிறகு, கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரர் மகன்களையும், அவனது ஆலோசகர்கள் அனைவரையும், அங்கே இருந்த மன்னர்கள் அனைவரையும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி நலம் விசாரித்தான். பிறகு, அந்த விருஷ்ணி குலத்து அச்யுதன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலானதும், தங்க வேலைப்பாடுகள் கொண்டதுமான அழகிய இருக்கை ஒன்றில் அமர்ந்தான். குரு {கௌரவ} மன்னன் {துரியோதனன்}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஒரு மாட்டையும், தயிர்க்கடைசலையும், நீரையும் காணிக்கையாக்கி, தனது அரண்மனைகள், மாளிகைகள் மற்றும் முழு நாட்டையும், அவனது {கிருஷ்ணனின்} பயன்பாட்டுக்காக வைத்தான். பிறகு அங்கிருந்த மன்னர்கள் அனைவருடன் கூடிய கௌரவர்கள், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் தனது இருக்கையில் இருந்த கோவிந்தனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.

வழிபாடுகள் முடிந்ததும், மன்னன் துரியோதனன், வெற்றியாளர்களில் முதன்மையானவனான அந்த விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை}, தனது இல்லத்தில் உண்ண அழைத்தான். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} அந்த அழைப்பை ஏற்கவில்லை. குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} மத்தியில் அமர்ந்திருந்தவனும், குரு {கௌரவ} மன்னனுமான துரியோதனன், மென்மையான குரலில், ஆனால், தனது வார்த்தைகளுக்குப் பின்னால் மறைபொருளுடன் கூடிய ஏமாற்றுத்தனங்களுடன், கர்ணனை {ஓரக்கண்ணால்} பார்த்துக் கொண்டே, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} உரையாடி, பிறகு {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனக்காகத் தயாராக வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான உணவுகளையும் பானங்களையும், ஆடைகளையும், படுக்கைகளையும் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? உனது உதவியை நீ இரு தரப்புக்கும் அளித்திருக்கிறாய்; நீ இரு தரப்புகளின் நன்மையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய். மேலும், நீ திருதராஷ்டிரரின் உறவினர்களில் முதன்மையானவனும், அவரால் மிகவும் விரும்பப்படுபவனும் ஆவாய். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அறம், பொருள் ஆகிய இரண்டையும், அனைத்தின் விபரங்களையும் நீ முழுமையாக அறிவாய். எனவே, ஓ! சக்கரம் மற்றும் கதாயுதம் தாங்குபவனே {கிருஷ்ணா}, உனது மறுப்புக்கான உண்மைக் காரணம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்மா கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தனது வலிய (வலது) கரத்தை உயர்த்தி, அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மறுமொழியாக, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில், காரணங்கள் நிறைந்தவையும், தெளிவானவையும், தனித்துவமானவையும், சரியாக உச்சரிக்கப்பட்டவையும், ஓர் எழுத்தும் விடுபடாதவையுமான அற்புத வார்த்தைகளில், "ஓ! மன்னா {துரியோதனா}, தங்கள் காரியங்கள் வெற்றியடைந்த பிறகு மட்டுமே, தூதர்கள் உண்ணவும், வழிபாட்டை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள். எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, எனது காரியம் வெற்றியடைந்ததும், நீ என்னையும், எனது பணியாட்களையும் உற்சாகப்படுத்தலாம்" என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிப் பதிலுரைக்கப்பட்டதும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, மீண்டும் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ எங்களிடம் இப்படி நடந்து கொள்வது உனக்குத் தகாது. {வந்திருக்கும் காரியத்தில்} நீ வெற்றியடைந்தாலும், வெற்றியடையாவிட்டாலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ எங்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே நாங்கள் உன்னை நிறைவு செய்ய முயல்கிறோம். எனினும், ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, எங்களது அந்த முயற்சியெல்லாம் கனியற்றதாகத் தோன்றுகிறது. அல்லது, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நட்பாலும் அன்பாலும் நாங்கள் வழங்கும் வழிபாட்டை நீ ஏற்காததன் விளைவில் எந்தக் காரணத்தையும் நாங்கள் காணவில்லை. {எங்கள் விருந்தோம்பலை நீ ஏற்காததற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை}. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, எங்களுக்கு உன்னிடம் பகையோ, சண்டையோ கிடையாது. எனவே, சிந்தித்துப் பார்த்தால், இது போன்ற அந்த வார்த்தைகள் உனக்குத் தகாது என்பது உனக்குத் தெரியும்" என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்து ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தனது கண்களைத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} மற்றும் அவனது ஆலோசகர்கள் மீது செலுத்தியபடி {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, "ஆசையாலோ, கோபத்தாலோ, அகந்தையாலோ, பொருளீட்டவோ, வாதத்தின் பொருட்டோ, மயக்கத்தாலோ நான் ஒருபோதும் அறத்தைக் கைவிடமாட்டேன். துயரத்தில் இருக்கும்போது ஒருவன் மற்றொருவரின் உணவைக் கொள்கிறான். எனினும், தற்போதோ, ஓ! மன்னா {துரியோதனா}, உனது எந்தச் செயலாலும் நீ என்னிடம் அன்பை ஈர்க்கவில்லை, அல்லது நானும் துயரில் மூழ்கிவிடவில்லை.

ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்து அறங்களையும் கொண்டவர்களும், அன்பான மற்றும் மென்மையான உனது சகோதரர்களுமான பாண்டவர்களை, அவர்கள் பிறந்ததிலிருந்தே, எக்காரணமும் இன்றி நீ வெறுக்கிறாய். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ கொண்டிருக்கும் நியாயமற்ற வெறுப்பு உனக்குக் கெடுதியையே செய்யும். பாண்டுவின் மகன்கள் அனைவரும் அறத்திற்கு அர்ப்பணிப்போடு இருப்பவர்கள். உண்மையில், எவனால் அவர்களுக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்த முடியும்? அவர்களை வெறுப்பவன், என்னையே வெறுக்கிறான்; அவர்களை விரும்புபவன், என்னையே விரும்புகிறான். அறம்சார்ந்த பாண்டவர்களுக்கும் எனக்கும் பொதுவான  ஆன்மா ஒன்றே {நாங்கள் வேறு வேறு அல்ல} என்பதை அறிந்து கொள்வாயாக.

காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதலைத் தொடர்ந்து, தன் ஆன்மாவின் இருளால், அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவனை வெறுத்து, அவனைக் காயப்படுத்த முயல்பவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தாலும், கோபம் நிறைந்த பாதகன் ஒருவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். கட்டுபாடற்ற ஆன்மா கொண்ட கோபம் நிறைந்த அந்தப் பாதகன், தனது அறியாமையாலும் பேராசையாலும், அனைத்து மங்கலகரமான குணங்களையும் கொண்ட தனது இரத்த உறவினர்களை வெறுத்தால், அவன் தனது செழிப்பில் நீண்ட காலம் இன்புற முடியாது. {அவனால் தனது செழிப்பை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது}. மறுபுறம், தனது நல்ல அலுவல்களால், நற்குணங்கள் கொண்ட மனிதர்களை வென்றெடுக்கும் ஒருவன், தனது இதயத்தில் அவர்கள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தாலும், செழிப்பையும், புகழையும் சதாகாலமும் அவன் அனுபவிப்பான். எனவே, தீமையால் அசுத்தமான இந்த உணவு அனைத்தும், என்னால் உண்ணத்தக்கது அல்ல. விதுரரால் வழங்கப்படும் உணவை மட்டுமே, நான் உண்ணலாம் என நான் நினைக்கிறேன்" என்று மறுமொழி கூறினான் {கிருஷ்ணன்}.

தனது விருப்பங்களுக்கு எதிரான எதையும் எப்போதும் தாங்கிக் கொள்ள இயலாதவனான துரியோதனனிடம் இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} சுடர்மிகும் அரண்மனையில் இருந்து வெளியே வந்தான். உயர்ந்த ஆன்மாவும், வலிய கரங்களையும் கொண்ட அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அம்மாளிகையில் இருந்து வெளியே வந்து, ஒப்பற்ற விதுரனின் இல்லத்தை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இல்லத்தில் தங்கியிருந்த போது, துரோணர், கிருபர், பீஷ்மர், பாஹ்லீகன் மற்றும் பல கௌரவர்கள் அங்கே வந்தனர். அங்கே வந்த அந்தக் கௌரவர்கள் மாதவனிடம், அந்த வீர மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, எங்கள் இல்லங்களையும், அதில் இருக்கும் செல்வங்களையும் நாங்கள் உன் ஆளுகைக்குள் வைக்கிறோம்" என்றனர்.

பெரும் சக்தி கொண்ட அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவர்களிடம், "நீங்கள் செல்லலாம். உங்கள் காணிக்கைகளால் நான் பெருமையடைகிறேன்" என்றான். அந்தக் குருக்கள் அனைவரும் சென்ற பிறகு, விதுரன், அந்தத் தாசார்ஹ குலத்தின் வீழாத வீரனை {கிருஷ்ணனை}, விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களுடன் கவனித்து உற்சாகப்படுத்தினான். அந்த ஒப்பற்ற கேசவனின் {கிருஷ்ணனின்} முன்பு, குந்தி, சுத்தமானதும், சுவை நிறைந்ததுமான உணவைக் அபரிமிதமாக வைத்தாள். அதைக் கொண்டு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, முதலில் அந்தணர்களை நிறைவு செய்தான். உண்மையில், நிறையச் செல்வங்களுடன் சேர்த்து அந்த உணவின் ஒரு பகுதியை வேதமறிந்த பல அந்தணர்களுக்குக் கொடுத்தான். பிறகு, விதுரனால் வழங்கப்பட்ட சுவை நிறைந்த சுத்தமான உணவில் மீந்ததைக் கொண்டு, மருதர்களுக்கு மத்தியில் இருக்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, தனது பணியாட்களுடன் சேர்ந்து அவன் உண்டான்", என்றார் {வைசம்பாயனர்}.