Saturday, May 16, 2015

கிருஷ்ணனின் உரை ! - உத்யோக பர்வம் பகுதி 95

The speech of Krishna! | Udyoga Parva - Section 95 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –24)

பதிவின் சுருக்கம் : கௌரவச் சபையை அடைந்த கிருஷ்ணன், திருதராஷ்டிரனிடம் பாண்டவர் தரப்பு நியாயங்களையும், கௌரவர்கள் அவர்களுக்குச் செய்த தீங்குகளையும், திருதராஷ்டிரனிடம் யுதிஷ்டிரன் வெளிப்படுத்தும் கீழ்ப்படிந்த நடத்தையையும் எடுத்துரைத்து, பாண்டவர்களுக்கு அவர்களது நாட்டைத் திரும்பக் கொடுப்பதே கௌரவர்களுக்குத் தகும் என்று சொன்னது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னர்கள் அனைவரும் அமர்ந்து, முற்றான அமைதி நிலவியபோது, அழகிய பற்களைக் கொண்ட கிருஷ்ணன், துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான். மாதவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனிடம் பேசினாலும், மழைக்காலத்தில் மேகங்கள் உருள்வது போன்ற ஆழ்ந்த குரலில் முழுச் சபையும் கேட்கும் வண்ணம் பேசினான். அவன் {கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீரர்கள் எவரும் கொல்லப்படாதிருக்கக் குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானத்தை நிறுவுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இதுதவிர, ஓ! மன்னா, வேறு எந்த நன்மையான வார்த்தைகளும் என்னிடம் இல்லை. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் கற்கப்பட வேண்டியவை அனைத்தையும் நீர் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்’.


இந்த உமது {கௌரவ} குலம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் கல்விக்காகவும், அதன் நடத்தைக்காகவும், சாதித்த அனைத்திற்காகப் புகழப்படுவதாலும், எல்லா அரச குலங்களுக்கு மத்தியிலும் மிகவும் சிறப்புமிக்கதாய் இருக்கிறது. பிறரின் மகிழ்ச்சியில் இன்பம், பிற மனிதர்களின் துயரில் துன்பம், {பிறர்} துயரை நீக்க விருப்பம், ஊறிழையாமை, நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை ஆகியவை குருக்களிடம் {கௌரவர்களிடம்} இருக்கின்றன. அப்படியிருக்கையில், உமது குலம் உன்னதமானதே. எனவே, அதற்குச் சொந்தமான யாருக்கும் முறையற்றது செய்யப்படுமானால் அது பரிதாபத்திற்குரியதாகும். அதுவும் உம்மால் அது செய்யப்படுமானால் அது மேலும் பரிதாபத்திற்குரியதாகும்.

ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்நியர்களிடம், அல்லது அவர்களோடு கூடியவர்களிடம் குருக்கள் ஏமாற்றுகரமாக நடந்து கொண்டால், அவர்களை {கௌரவர்களைத்} தடுப்பவர்களில் நீரே முதல் நபராக இருக்க வேண்டும். ஓ! குரு குலத்தவரே, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது தீய மகன்கள், அறம், பொருள் ஆகியவற்றைக் கைவிட்டு, அறநெறியை அலட்சியப்படுத்தி, பேராசையால் மதியிழந்து, தங்கள் உறவினர்களில் முதன்மையானோரிடமே மிகவும் நீதியற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிவீராக. (அனைவரையும் அச்சுறுத்தும்) அந்தப் பயங்கர ஆபத்து, குருக்களின் நடத்தையிலேயே தனது ஊற்றுக்கண்ணைக் கொண்டுள்ளது. நீர் அதை அலட்சியப்படுத்தினால், உலகளாவிய படுகொலைக்கு அது வழிவகுக்கும்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் விரும்பினால், இப்போது கூட உம்மால் அந்த ஆபத்தை விலக்க முடியும். ஏனெனில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சமாதானம் என்பது அடைவதற்கரிதானது அல்ல. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சமாதானத்தை நிறுவதல் என்பது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மையும் என்னையும் சார்ந்தே இருக்கிறது. ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களை நீர் நேராக்கும் {அடக்கும்}, நான் பாண்டவர்களை நேராக்குவேன் {தணிப்பேன்}. உமது கட்டளை எதுவாக இருப்பினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களும், அவர்தம் தொண்டர்களும் அதற்குக் கீழ்ப்படிவதே தகும். அவர்களால் உமக்குக் கீழ்ப்படிந்து வாழ முடியுமென்றால், அதுவே அவர்களுக்கு மிகச் சிறந்ததும் ஆகும். உமது மகன்களை அடக்கி, நீர் சமாதானத்திற்கு முயன்றால், அஃது உமக்கும் நன்மை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும் அது நன்மையைத் தரும். கவனமாகச் சிந்தித்த பிறகு, ஓ! மன்னா, செயல்படுவீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பரதனின் அந்த மகன்கள் (பாண்டவர்கள்) உமது கூட்டாளிகளாகட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களால் ஆதரிக்கப்பட்டு, அறம், பொருள் ஆகிய இரண்டையும் பெற முயல்வீராக. உமது சக்திக்குத் தக்க அனைத்து முயற்சியாலும் முயன்றாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களைப் போன்ற கூட்டாளிகள் கிடைக்க மாட்டார்கள்.

பாண்டுவின் ஒப்பற்ற மகன்களால் பாதுகாக்கப்பட்டால், இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட உம்மை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கும்போது வெறும் பூவுலக மன்னர்களால் உமது ஆற்றலை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் விவிம்சதி, அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், சிந்துக்களின் தலைவன் {ஜெயத்ரதன்}, கலிங்கர்களின் ஆட்சியாளன், கம்போஜர்களின் மன்னன் சுதக்ஷிணன் ஆகியோரோடு யுதிஷ்டிரன், பீமசேனன், சவ்யசச்சின் {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, பெரும் சச்தி படைத்த சாத்யகி, பெரும் பலமிக்கத் தேர்வீரனான யுயுத்சு ஆகியோரும் இருந்தால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, புத்திகெட்ட எவன்தான் அவர்களோடு போரிட வருவான்?

ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, உமக்குப் பின்னால் குருக்களையும் {கௌரவர்களையும்}, பாண்டவர்களையும் கொண்டிருந்தால், முழு உலகத்தின் ஆட்சியுரிமையும், எதிரிகள் அனைவருக்கும் எதிரான ஒப்பற்ற தன்மையும் உமதாகும். உமக்கு நிகராகவோ, மேன்மையாக இருக்கும் உலகத்தின் ஆட்சியாளர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்முடனான கூட்டணிக்கு முயற்சிப்பார்கள். மகன்கள், பேரன்கள், தந்தையர், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரால் அனைத்துப் புறத்தில் பாதுகாக்கப்படும் போது, மிகுந்த மகிழ்ச்சியோடு நீர் வாழத் தகுந்தவராவீர். இவற்றை உமது முன்பு வைத்து, பழங்காலத்தைப் போல அவர்களை அன்பாக நடத்தினால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த முழு உலகத்தின் அரசுரிமையையும் நீர் அனுபவிப்பீர்.

இந்த உமது ஆதரவாளர்களோடு, பாண்டுவின் மகன்களையும் உமது ஆதரவாளர்களாகக் கொண்டால், ஓ! பாரதரே {திருதராஷ்டரரே}, நீர் உமது எதிரிகள் அனைவரையும் வெல்ல முடியும். இதுவே உமக்குச் சாதகமானவற்றில் சிறந்ததாகும். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நீர் உமது மகன்கள், உறவினர்கள் மற்றும் ஆலோசகர்களோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்களால் வெல்லப்படும் முழு உலகத்தின் ஆட்சி உரிமையை நீர் அனுபவிப்பீர். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, போரென்றாலோ, மொத்த அழிவைத் தவிர வேறு எதுவும் காட்சியில் தெரியவில்லை. உண்மையில், இரு தரப்பின் அழிவிலும் என்ன தகுதியை {புண்ணியத்தை} நீர் காண்பீர்? போர்க்களத்தில் பாண்டவர்கள் கொல்லப்பட்டாலோ, பலமிக்க உமது மகன்கள் வீழ்ந்தாலோ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதில் என்ன இன்பத்தை நீர் அனுபவிக்க முடியும்? எனக்குச் சொல்வீராக.

அவர்களில் அனைவரும் வீரமிக்கவர்களாகவும், ஆயுதங்களில் திறம்படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அவர்கள் அனைவரும் போருக்கு விரும்புகிறார்கள். ஓ!, அவர்களை அச்சுறுத்தும் இந்தப் பயங்கர ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பீராக. போருக்குப் பிறகு நீர் குருக்களில் அனைவரையும், பாண்டவர்களில் அனைவரையும் காணமாட்டீர். தேர்வீரர்களால் தேர்வீரர்கள் கொல்லப்பட்டு, இரு தரப்பின் வீரர்களும் எண்ணிக்கையிலும், பலத்திலும் குறைந்திருப்பதை நீர் காண்பீர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் அவர்கள், நிச்சயம் உலகத்தின் மக்கள் தொகையை அழிப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலகைக் காப்பீராக. உலகத்தின் மக்கள் தொகை அழியாதிருக்கட்டும்.

ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது இயல்பான மனநிலையை நீர் மீண்டும் பெற்றால், இந்தப் பூமி இப்போது போலவே மக்களுடன் இருக்கும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூட்டணி அல்லது உறவுமுறையால் ஒருவருடன் ஒருவர் பிணைந்திருப்பவர்களும், பக்தி, தயாளம், பணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும், தூய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுமான இந்த ஏகாதிபதிகளை அச்சுறுத்தி வரும் பயங்கர ஆபத்தில் இருந்து இவர்களைக் காப்பீராக. கோபம் மற்றும் பகையைக் கைவிட்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, இந்த மன்னர்கள் அனைவரும் அமைதியுடன் ஒருவரை ஒருவர் தழுவி, ஒன்றாக உண்டு, குடித்து, அற்புத ஆடைகளாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி, தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லட்டும்.

பாண்டவர்களிடம் நீர் கொண்ட பாசம் உமது இதயத்தில் புத்துயிரூட்டட்டும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதுவே சமாதானத்தை நிறுவ வழிவகுக்கட்டும். குழந்தைப்பருவத்தில் அவர்கள் தங்கள் தந்தையை இழந்திருந்தபோது, நீரே அவர்களை வளர்த்தீர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது சொந்த மகன்களைப் போல நீர் அவர்களைப் பேணிக் காப்பீராக. அவர்களைக் காப்பது உமது கடமையே. அதிலும் குறிப்பாக, அவர்கள் துயரத்தில் இருக்கும் போது காப்பது உமது கடமையே.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்காதிருப்பீராக. உம்மை வணங்கி, அருள் கோரும் பாண்டவர்கள், "உமது கட்டளையின் பேரில், நாங்கள் எங்கள் தொண்டர்களுடன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறோம். பனிரெண்டு {12} வருடங்கள் காட்டில் வாழ்ந்திருக்கிறோம். பதிமூன்றாவது {13} வருடத்தை உலகத்தில் இதுவரை வசித்திராத பகுதியில் தலைமறைவாக வாழ்ந்திருக்கிறோம். எங்கள் தந்தையும் {தந்தையான திருதராஷ்டிரரும்} அவர் பங்குக்கு மீற மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில், நாங்கள் எங்கள் உறுதிமொழியை மீறவில்லை. எங்கள் வார்த்தைகளை நாங்கள் மீறவில்லை என்பது எங்களுடன் இருந்த அந்தணர்களுக்குத் தெரியும். ஓ! பாரதக் குலத்துக் காளையே {திருதராஷ்டிரரே}, நாங்கள் எங்கள் உறுதி மொழிக்கேற்றவாறு நடந்து கொண்டதால், நீரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்வீராக. நீண்ட காலம் பெரும் துன்பத்தை அனுபவித்துவிட்டோம். இப்போதாவது, எங்களுக்குரிய பங்கான நாட்டை நாங்கள் பெறச்செய்வீராக.

அறம், பொருள் ஆகியவற்றை முழுதாக அறிந்தவரான உமக்கு எங்களைக் காப்பதே தகும். உமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அமைதியாகப் பெரும் துன்பத்தை அனுபவித்தோம். எனவே, எங்களிடம் ஒரு தகப்பனாகவோ, சகோதரனாகவோ நடந்து கொள்ளும். ஓர் ஆசான், தன் சீடர்களிடம் ஓர் ஆசானைப் போல நடந்து கொள்ள வேண்டும், சீடர்களாக நாங்களும், உம்மிடம் ஆசானிடம் நடந்து கொள்வது போல நடந்து கொள்கிறோம். எனவே, எங்களிடம் நீர் எங்கள் ஆசானாக நடந்து கொள்ளும். நாங்கள் தவறிழைத்தால், எங்களை நேராக்குவது எங்களது தந்தையான உமது கடமை. எனவே, {வழிதவறி இருக்கும்} எங்களைப் வழியில் நிறுத்தி, நேர்மையெனும் அற்புதப் பாதையில் நடந்து செல்வீராக" என்று உம்மிடம் {என் மூலமாகச்} சொல்கிறார்கள் {பாண்டவர்கள்}.

அந்த உமது மகன்கள் {பாண்டவர்கள்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சபையில் கூடியிருக்கும் இந்த மன்னர்களுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள் {பாண்டவர்கள் சபையோரிடம்}, "ஒரு சபையின் உறுப்பினர்கள் அறநெறி அறிந்தவர்களாக இருப்பின், முறையற்றது எதையும் நடக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு சபையில், அறம் சார்ந்த உறுப்பினர்கள் இருந்தும், நீதியை அநீதியும், உண்மையைப் பொய்மையும் வென்றால், அந்த உறுப்பினர்களே வீழ்த்தப்பட்டவர்களும் கொல்லப்பட்டவர்களும் ஆவர். அநீதியால் {அநீதியெனும் கணையால்} துளைக்கப்படும் நீதி, ஒரு சபையின் பாதுகாப்பை நாடினால், அந்தக் கணை எடுக்கப்படாதிருக்குமேயானால், அந்தச் சபையின் உறுப்பினர்களே அந்தக் கணையால் துளைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். உண்மையில், அவ்வழக்கில், கரையில் நிற்கும் மரங்களின் வேர்களை ஓர் ஆறு தின்றுவிடுவதைப் போல, அந்தச் சபையின் உறுப்பினர்களை நீதியே கொன்றுவிடும்" என்று {பாண்டவர்கள்} சொன்னார்கள்.

ஓ! பாரத் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இப்போது நியாயம் தீர்ப்பீராக. நீதியின் கண் இருக்கும் பாண்டவர்கள் அனைத்தையும் சிந்தித்து, அமைதியான அணுகுமுறையுடன் இருக்கிறார்கள். அவர் என்ன சொன்னார்களோ, அஃது, உண்மை, அறம் மற்றும் நீதிக்கு இசைவானதாக இருக்கிறது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர் என்பதைத் தவிர நீர் அவர்களுக்கு வேறு எதைச் சொல்ல முடியும்?

இங்கே அமர்ந்திருக்கும் இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் (என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதைச்} சொல்லட்டும்! அறத்திற்கு உண்மையாக இருக்கும்படி நன்கு ஆலோசித்த பிறகு இவை என்னால் சொல்லப்பட்டது என்று உமக்குத் தோன்றினால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் மரணத்தின் வலைகளில் இருந்து காப்பீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} சமாதானத்திற்கு உடன்படுவீராக. கோபத்திற்கு வசப்படாதீர். நீதியின் படி அவர்களது தந்தை வழி பங்கான நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுத்து, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உனது மகன்களுடன், மகிழ்ச்சியாகவும், ஆடம்பரமாகவும், உமது விருப்பங்கள் எல்லாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டும் இன்புற்றிருப்பீராக.

நீதிமிக்கவர்கள் நடந்த பாதையிலேயே எப்போதும் யுதிஷ்டிரர் நடக்கிறார் என்பதை அறிவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மிடமும், உமது மகன்களிடமும் யுதிஷ்டிரர் எப்படி நடந்து கொண்டார் என்பதை நீர் அறிவீர். நீங்கள் அவரை {யுதிஷ்டிரரை- பாண்டவர்களை} உயிரோடு எரிக்க முற்பட்டீர்கள், மனித வசிப்பிடங்களில் இருந்து அவரைத் துரத்தினீர்கள். இருப்பினும், உம்மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் அவர் உம்மிடம் வந்தார். அதன்பிறகும், இந்த உமது மகன்களோடு கூடிய நீர் அவரை இந்திரப்பிரஸ்தத்துக்குத் துரத்தினீர்? அங்கே இருந்தபோது, அவர் பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தார். இருப்பினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மை அலட்சியம் செய்யத் துணியாத அவர் உம்மையே நாடி நின்றார். என்னதான் அவர் உம்மிடம் இவ்வழியில் நடந்து கொண்டாலும், அவரது {யுதிஷ்டிரனது} ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும், உடைமைகளையும் திருட விரும்பிய சுபலனின் மகன் {சகுனி}, {உங்களுக்கு} மிகவும் பயன் அளிக்கக்கூடிய பகடை வழியைத் தேர்ந்தெடுத்தான். அந்நிலைக்குத் தாழ்த்தப்பட்டும், சபையில் கிருஷ்ணை {திரௌபதி} இழுத்துவரப்படுவதைக் கண்டும், அளவிலா ஆன்மாகக் கொண்ட யுதிஷ்டிரர், தனது க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து சற்றும் நிலைதடுமாறவில்லை.

என்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது நன்மையையும், அதே அளவுக்கு அவர்களது நன்மையையும் நான் விரும்புகிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றுக்காகச் சமாதானத்துக்கு உடன்படுவீராக. தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் கருதி, பூமியின் மக்கள் படுகொலைக்குள்ளாவதை அனுமதியாதிருப்பீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பேராசையின் காரணமாக வெகுதூரம் சென்று விட்ட உமது மகன்களைத் தடுப்பீராக. பிருதையின் {குந்தியின்} மகன்களைப் பொறுத்தவரை, கடமைநிறைந்த சேவையுணர்வுடன் உமக்குக் காத்திருக்கவோ, போரிடவோ இரண்டுக்கும் சமமாகத் தயார் நிலையிலும் இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமக்கு எது நன்மை என்று படுகிறதோ, அதைப் பின்பற்றுவீராக!" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைத் தங்கள் இதயத்துக்குள் உயர்வாகப் புகழ்ந்தனர். ஆனால் எவரும், துரியோதனனின் முன்னிலையில் எதையும் சொல்லத் துணியவில்லை" என்றார் {வைசம்பாயனர்}.