Sunday, May 17, 2015

தம்போத்பவன் மற்றும் நரன் நாராயணன்! - உத்யோக பர்வம் பகுதி 96

Dambhodbhava and Nara Narayana! | Udyoga Parva - Section 96 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –25)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குத் தம்போத்பவனின் கதையைப் பரசுராமர் சொல்வது; உலகை ஒரே குடையின் கீழ் ஆண்ட தம்போத்பவன் தனக்கு நிகர் எவனும் இல்லை என்ற அகந்தையுடன் அனைவரிடமும் பேசுவது; தொடர்ச்சியாக இந்தப் பேச்சைக் கேட்கும் அந்தணர்களில் சிலர், நரன் மற்றும் நாராயணனைக் குறித்துத் தம்போத்பவனுக்குச் சொன்னது; அவர்களுடன் போரிட்ட தம்போத்பவன் அகந்தை அழிந்து, அறவழி திரும்பியது; அந்த நரனும் நாராயணனும் தான் இப்போது அர்ஜுனனும் கிருஷ்ணனுமாக அவதரித்திருக்கிறார்கள் என்று பரசுராமர் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சபையில் அமர்ந்திருந்த நபர்கள் அனைவரும் உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மயிர்ச்சிலிர்த்தபடி அமைதியாக நீடித்தனர். அந்த மன்னர்கள் அனைவரும் தங்களுக்குள், 'இந்தப் பேச்சுக்கு மறுமொழி சொல்ல, துணிவு கொண்ட மனிதன் எவனும் இல்லை' என்று நினைத்தனர்.

மன்னர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதைக் கண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அந்தக் குருக்களின் சபையில் (துரியோதனனிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். அவர் {பரசுராமர் துரியோதனனிடம்}, "ஓர் உதாரணம் மூலம் தெளிவை உண்டாக்கும், எனது வார்த்தைகளை நம்பிக்கையோடு கேட்டு, எனது பேச்சு உனக்கு நன்மையைச் செய்யுமென்றால், உன் நன்மையை நாடுவாயாக.


பழங்காலத்தில் பூமியின் தலைவனாக {சார்வபௌமனாக} தம்போத்பவன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவனது அரசுரிமை உலகம் முழுவதும் பரந்திருந்தது {ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டான்} என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பலமிக்கத் தேர்வீரன், தினமும் காலையில் எழுந்ததும், அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும் தன்னிடம் அழைத்து, "சூத்திரனிலோ, வைசியனிலோ, க்ஷத்திரியனிலோ, அல்லது அந்தணரிலோகூடப் போரில் எனக்கு மேன்மையாகவோ, இணையாகவோ எவனாவது இருக்கிறானா?" என்று எப்போதும் கேட்பான். இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே அந்த மன்னன், செருக்கால் போதையுண்டு, வேறு எதையும் நினைக்காமல் உலகம் எங்கும் திரிந்து கொண்டிருந்தான்.

இப்படியிருக்கையில், உயர் ஆன்மா கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பூமியில் எதற்கும் அஞ்சாதவர்களுமான சில அந்தணர்கள், திரும்பத் திரும்பத் தனது ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசும் அவனது செருக்குக்குக் கடிவாளம் இடும்படி, அந்த மன்னனிடம் ஆலோசித்தனர். அவ்வாறு தற்பெருமை பேச வேண்டாம் என அந்த அந்தணர்களால் தடுக்கப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} அவர்களிடம் தினம் தினம் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தான். பெரும் தவத் தகுதியையும், வேதங்களால் அளிக்கப்படும் ஆதாரங்களையும் அறிந்த சில உயர் ஆன்ம அந்தணர்கள் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தச் செருக்கு நிறைந்தவனும், தற்பெருமை மிக்கவனும், செழிப்பால் போதையுண்டிருந்தவனுமான அந்த மன்னனிடம் {தம்போத்பவனிடம்}, "மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாக இரு நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் போரில் வெற்றிபெற்றே வருகின்றனர். ஓ! மன்னா {தம்போத்பவா}, அவர்களில் ஒருவருடன் மோத முயன்றால், நீ அவர்களுக்கு நிகராக இருக்கமாட்டாய்" என்றனர்.

இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்தணர்களிடம், "அந்த வீரர்கள் இருவரும் எங்குக் காணப்படுவார்கள்? அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்திருக்கிறார்கள்? அவர்களது சாதனைகள் என்ன? அவர்கள் யார்?" என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்கள், "அந்த இரு நபர்களும் நரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கப்படும் இரு தவசிகளாவர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த இருவரும் மனித குலத்திலேயே தங்கள் பிறப்பை அடைந்திருக்கின்றனர். ஓ! மன்னா {தம்போத்பவா}, நீ அவர்களிடம் சென்று போரிடுவாயாக. அந்த ஒப்பற்ற இணையான நரனும் நாராணயனனும், கந்தமாதன மலைகளின் மறைவான பகுதியில் இப்போதும் கடும் தவத்தைப் பயின்று கொண்டிருக்கிறார்கள்" என்றனர்.

அந்த அந்தணர்களின் வார்த்தைகளைக் கேட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களது பெருமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாமல், ஆறு அங்கங்களோடு [1] கூடிய தன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, வீழாத அந்தத் தவசிகள் இருந்த இடத்திற்கு அணிவகுத்து சென்று, மேடு பள்ளம் நிறைந்த பயங்கரமான கந்தமாதன மலைகளை அடைந்தான். அந்த முனிவர்களைத் தேடத் தொடங்கிய அவன் {தம்போத்பவன்}, மறைக்கப்பட்டிருந்த ஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தான். பசி மற்றும் தாகத்தால் மெலிந்து, தங்கள் தடித்த நரம்புகள் தெரிய, குளிர், காற்று, சூரியனின் வெப்பக் கதிர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த இருவரையும் கண்டு, அவர்களது பாதங்களைத் தொட்டு, அவர்களது நலத்தை விசாரித்தான்.

[1] தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்களல்லாத வேறு வாகனங்களின் படை, ஒட்டகங்களின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களைக் கொண்ட படை என ஆறு அங்கங்கள் கொண்டது ஒரு படை என்கிறார் கங்குலி.

அந்த முனிவர்கள் இருவரும், கனிகள், கிழங்குகள், இருக்கை மற்றும் நீர் கொடுத்து விருந்தோம்பலுடன் அம்மன்னனை {தம்போத்பவனை} வரவேற்றார்கள். பிறகு, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிய அவர்கள், அம்மன்னனின் தொழில் குறித்து விசாரித்தனர். {அவன் வந்த நோக்கம் குறித்து விசாரித்தனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களிடம், தான் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பழக்கப்பட்ட அதே வார்த்தைகளைச் சொன்னான். பிறகு அவன், "எனது கரங்களின் பலத்தால் முழு உலகமும் வெல்லப்பட்டது. எனது எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உங்கள் இருவருடன் போரிட விரும்பியே நான் இந்த மலைக்கு வந்திருக்கிறேன். இந்த விருந்தோம்பலை எனக்கு அளியுங்கள். இஃது எனது நெடுநாளைய விருப்பமாகும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட நரனும் நாராயணனும், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே {தம்போத்பவா}, இந்தப் பின்வாங்கலில் {எங்கள் தவ வாழ்வில்} கோபத்திற்கும், பொருளாசைக்கும் இடம் கிடையாது. எனவே, இங்கே போர் எப்படிச் சாத்தியமாகும்? இங்கே ஆயுதங்களோ, அநீதியோ, தீமையோ ஏதுமில்லை. போரை வேறெங்காவது தேடு. பூமியில் பல க்ஷத்திரியர்கள் இருக்கிறார்கள்" என்றனர் {நரனும் நாராயணனும்}.

ராமர் {பரசுராமர்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} போருக்காக மேலும் அழுத்தம் கொடுத்தான். எனினும், அந்த முனிவர்கள் தொடர்ச்சியாக அவனைத் தணித்து, அவனது தொந்தரவைச் சகித்தனர். போரில் விருப்பமுடைய மன்னன் தம்போத்பவனோ அந்த முனிவர்களை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகப் போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.

ஓ! பாரதா {துரியோதனா}, பிறகு, நரன், தன் கைநிறைய புற்குச்சிகளை {சீழ்கம்புல் ஈர்க்குகளை} எடுத்து, "ஓ! க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு! உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்" என்றார். அதற்குத் தம்போத்பவன், "ஓ! தவசியே, எங்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு இந்த உமது ஆயுதம் தகுந்ததென்று நீர் நினைக்கிறீர். போரில் விருப்பம் கொண்டு நான் இங்கு வந்திருப்பதால், அவ்வாயுதத்தையே நீர் பயன்படுத்தினாலும், நான் உம்மிடம் போரிடுவேன்" என்றான். இதைச் சொன்ன தம்போத்பவன், தனது துருப்புகளை அனைத்தையும் கொண்டு, அந்தத்தவசியைக் {நரனைக்} கொல்ல விரும்பி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மறைத்தான்.

எனினும், அந்தத் தவசி {நரன்}, அந்தக் குச்சிகளால், பகைவீரர்களின் உடலைச் சிதைக்கவல்ல அந்த மன்னனின் பயங்கரக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். அந்த ஒப்பற்ற முனிவர் {நரன்}, பதில்தொடுக்க முடியாததும் குச்சிகளால் ஆனதுமான ஒரு பயங்கர ஆயுதத்தை அந்த மன்னனை {தம்போத்பவனை} நோக்கிச் செலுத்தினார். அங்கே அப்போது நடந்தது, மிகுந்து அற்புதம் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில், இலக்குத் தவறாதவரான அந்தத் தவசி {நரன்}, தனது மாய சக்தியின் உதவியால், தனது குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி, பகைவீரர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்குகளைத் துளைக்கவும் அறுக்கவும் செய்தார்.

அந்தக் குச்சிகளால் வெண்ணிறமடைந்த முழு வானத்தையும் கண்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த முனிவரின் {நரனின்} பாதத்தில் விழுந்து, "என்னை அருளப்பட்டவனாக இருக்கச் செய்யும்" என்று கேட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, "அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் புலியே {தம்போத்பவா}, பகை நகரங்களையும் வெல்பவனும் மனம் நிறையத் தன் கடமைகளைக் கொண்டுள்ள ஒரு க்ஷத்திரியனுமான மனிதன் ஒருவன், நீ இப்போது இருப்பதைப் போல இருக்கக்கூடாது. உனக்குத் தாழ்ந்தோ, உயர்ந்தோ இருப்பவர்களை, உனது செருக்கின் நிறைவால் எச்சந்தர்ப்பத்திலும் அவமதிக்காதே. அத்தகு நடத்தையே உனக்குத் தகும்.

ஓ! மன்னா {தம்போத்பவா}, அறிவை அடைந்து, பேராசையையும், செருக்கையும் கைவிட்டு, உனது ஆன்மாவை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் பணிவைப் பயின்று, இனிமையானவனாகி, உனது குடிமக்களைப் பேணிக் காப்பாயாக. மனிதர்களின் பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்து கொள்ளாமல், எத்தகு சூழ்நிலையிலும் யாரையும் அவமதிக்காதே. நீ அருளப்பட்டிருப்பாயாக! எனவே நீ சென்று, மீண்டும் இந்த வழியில் எப்போதும் நடக்காதே. எங்கள் உத்தரவின் பேரில், எப்போதும் உனக்கு நன்மையானவற்றையே அந்தணர்களிடம் விசாரிப்பாயாக" என்றார் {நரன்}.

அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த ஒப்பற்ற முனிவர்கள் இருவரின் பாதங்களையும் வழிபட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான். அக்காலத்தில் இருந்து அவன் நீதிபயிலத் தொடங்கினான். உண்மையில், பழங்காலத்தில் நரனால் அடையப்பட்ட சாதனை பெரிதே. மேலும், இன்னும் பல குணங்களின் விளைவாக நரனுக்கு நாராயணன் மேன்மையானவரானார்.

எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, உனது செருக்கையெல்லாம் அகற்றிவிட்டு, காகுதிகம், சுகம், நாகம், அக்ஷிசந்தர்ஜனம், சந்தானம், நர்த்தனம், கோரம் மற்றும் அசியமோதகம் [2] ஆகிய ஆயுதங்களைத் தவிர, இன்னும் பல ஆயுதங்களை விற்களில் சிறந்ததான காண்டீவத்தில் பொருத்தும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} செல்வாயாக. இந்த ஆயுதங்களால் அடிக்கப்பட்டால், மனிதர்கள் எப்போதும் தங்களது உயிரை விட்டுவிடுவார்கள். உண்மையில் இந்த ஆயுதங்கள் அனைத்தும் {எட்டும்}, காமம், கோபம், பொருளாசை, மாயை, செருக்கு, தற்பெருமை, அகந்தை, தன்னலம் ஆகிய எட்டு உணர்வுகளுடன் பிற வழிகளில் தொடர்புடையவையாகும். இவற்றின் தாக்கத்தில் உள்ள மனிதர்கள் எப்போதும் அதிகளவு உறக்கம், துள்ளுதல், கக்குதல் {வாந்தி எடுத்தல்}, சிறுநீர் மற்றும் மலங்கழித்தல், அழுதுபுலம்புதல், தொடர்ச்சியாகச் சிரித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

[2] காகுதிகாஸ்திரம் = இந்த ஆயுதத்தை வில்லில் பொருத்தி இழுத்தாலே யானை, குதிரை ஆகியவற்றை இது தூங்கச் செய்துவிடும். இதற்குப் பிரஸ்வாபம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.

சுகாஸ்திரம் = பீரங்கி போன்ற ஒலியால், கூட்டில் பதுங்கும் கிளி போலத் தேர்களில் பதுங்கச் செய்யும் ஆயுதம். இதற்கு மோஹனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

நாகாஸ்திரம் = சொர்க்கத்தைக் கண்ணில் காட்டுவதாகும். நிச்சயம் உயிரைக் கொல்வதாகும். இதற்கு உன்மாதனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

அக்ஷிசந்தர்ஜனாஸ்திரம் = அடித்தவுடன் அடிக்கப்பட்டவர் மேல் மலஜலங்களைப் பொழியும் ஆயுதம். இதற்குத் தராசனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

சந்தானாஸ்திரம் = இடைவிடாமல் ஆயுதங்களைப் பொழியும் ஆயுதம்.

நர்த்தகாஸ்திரம் = அடிக்கப்பட்டவரை நாட்டியமாடச் செய்யும். இதற்குப் பைசாசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

கோராஸ்திரம் = அழிவை உண்டாக்கும் ஆயுதம். இதற்கு ராக்ஷசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

அசியமோதகாஸ்திரம் = உலோகங்களை வாயில் போட்டுக் கொண்டு இறக்கச் செய்யும் ஆயுதம். இதற்கு யாமயம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.

படைப்பாளனும், உலகங்கள் அனைத்தின் தலைவனும், அனைத்தின் போக்கையும் முழுமையாக அறிந்தவனுமான நாராயணனைத் தனது நண்பனாகக் கொண்டிருப்பவனுமான அந்த அர்ஜுனன், உண்மையில், போரில் வெல்லப்படமுடியாதவன் ஆவான். ஓ! பாரதா {துரியோதனா}, போரில் இணையற்றவனும், குரங்கு {அனுமன்} கொடியைக் கொண்ட வீரனுமான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} வெல்ல மூவுலகிலும் எவன் இருக்கிறான்? பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} குடிகொண்டுள்ள அறங்கள் எண்ண முடியாதவையாகும். மேலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவனிலும் சிறந்தவனாவான். குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} நீயே கூட நன்கறிந்தவனாகவே இருக்கிறாய்.

பழங்காலத்தில் நரனும், நாராயணனுமாக இருந்தவர்கள், இப்போது அர்ஜுனனும் கேசவனுமாக {கிருஷ்ணனுமாக} இருக்கிறார்கள். ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரமிக்கவர்களுமான அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வாயாக. என்னிடம் நம்பிக்கையேற்பட்டு, இதை நீ நம்பினால், நல்ல ஒரு தீர்மானத்தை அடைந்து, பாண்டுவின் மகன்களிடம் சமாதானம் செய்து கொள்வாயாக. உனது குடும்பத்தில் `ஒற்றுமையின்மை கூடாது’ என்ற இதுவே உனது நன்மை என நீ கருதினால், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாமல், சமாதானம் கொள்வாயாக. குரு பரம்பரையில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ சார்ந்திருக்கும் குலம் உலகத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த மதிப்பு அப்படியே தொடரும்படி செய்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக. உனக்கான நலனை எது விளைவிக்கும் என்பதைச் சிந்திப்பாயாக" என்றார் {பரசுராமர்}.