Friday, June 05, 2015

மன்னன் சிபியின் பிறப்பு! - உத்யோக பர்வம் பகுதி 118

The Birth of King Sivi! | Udyoga Parva - Section 118 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –47)

பதிவின் சுருக்கம் : போஜர்களின் மன்னனா உசீநரனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு நானூறு குதிரைகளை வரதட்சணையாகத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வன் மற்றும் திவோதாசன் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று உசீநரன் சொல்வது; காலவர் மாதவியை உசீநரனுக்கு அளிப்பது; உசீநரனுக்குச் சிபி என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து உசீநரனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது ...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தனது உறுதிமொழியில் பற்றுறுதியுடன் இருந்த ஒப்பற்ற மாதவி, அந்தச் செழிப்பைக் கைவிட்டு மீண்டும் கன்னித்தன்மையை அடைந்து, அந்தணரான காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். தனது சொந்த காரியத்தைச் சாதிக்க மனதில் உறுதி கொண்ட காலவர், அடுத்து என்ன செய்வது என்பதைச் சிந்தித்து மன்னன் உசீநரனுக்குக் காத்திருப்பதற்காகப் போஜர்களின் நகரத்திற்குச் சென்றான்.


கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட அந்த மன்னனின் {உசீநரனின்} முன்னிலையை அடைந்ததும், காலவர் அவனிடம் {உசிநரனிடம்}, "இந்தக் கன்னிகை உனக்கு அரச மகன்கள் இருவரைப் பெற்றுத் தருவாள். ஓ! மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்களை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவனே, அவளுக்கான {மாதவிக்கான} வரதட்சனையாக {சுல்கமாக}, சந்தோரப் பிரகாசம் கொண்டவையும், கரிய நிறம் கொண்ட ஒரு காதைக் கொண்டவையுமான நானூறு {400} குதிரைகளை நீ தர வேண்டும். குதிரைகளை அடைய வேண்டி நான் செய்யும் இந்த முயற்சியும் எனது ஆசானுக்காகவே {விஸ்வாமித்திரருக்காகவே}, மற்றபடி அவற்றைக் கொண்டு எனக்கு வேறு காரியம் எதுவுமில்லை.

(எனது சொற்களை) நீ ஏற்கமுடியுமென்றால், எந்தத் தயக்கமும் இன்றி நான் உனக்குச் சொல்வதைச் செய்வாயாக. ஓ! அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ! மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ! அரசமுனியே {உசீநரா}, வாரிசுகளின் வடிவில் கனியைப் பெற்ற ஒருவன், சொர்க்கத்தில் இருந்து விழுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், பிள்ளைகள் அற்றவர்கள் செல்லும் அச்சங்கள் நிறைந்த நரகத்திற்குச் செல்லத் தேவையில்லை.

இவற்றையும், காலவர் சொன்ன பிற வார்த்தைகளையும் கேட்ட மன்னன் உசீநரன், அவரிடம் {காலவரிடம்}, "ஓ! காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நீர் குறிப்பட்ட வகையில் என்னிடம் இருநூறு {200} குதிரைகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வகைகளில், என் ஆட்சிப்பகுதியில் உலவும் ஆயிரக்கணக்கானவற்றை {ஆயிரக்கணக்கான குதிரைகளை} நான் பெற்றிருக்கிறேன்.

ஓ! காலவரே, ஹர்யஸ்வன், திவோதாசன் போன்ற பிறர் சொன்னது போன்ற பாதையிலே நடந்து நானும் இவளிடம் {மாதவியிடம்} ஒரு மகனை மட்டுமே பெறுவேன். வரதட்சணை {சுல்கம்} குறித்த இக்காரியத்தில் நானும் அவர்களைப் போலவே செயல்படுவேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, எனது செல்வங்கள் எனது வசதிகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் அல்ல, எனது நகரத்திலும் நாட்டிலும் வசிக்கும் குடிமக்களுக்காகவே இருக்கிறது.

ஓ! அறம்சார்ந்தவரே {காலவரே}, தனது சொந்த இன்பங்களுக்காக, பிறர் செல்வத்தைக் கொடுக்கும் மன்னன் அறத்தையோ, புகழையோ ஈட்டவே முடியாது. தெய்வீகப் பெண் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் இந்தக் கன்னிகை எனக்குக் கொடுக்கப்படட்டும். ஒரு மகனைப் பெறுவதற்காக மட்டுமே நான் இவளை {மாதவியை} ஏற்பேன்" என்றான் {உசீநரன்}.

இவற்றையும், உசீநரன் பேசிய பிற வார்த்தைகளையும் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவரான காலவர், அந்த ஏகாதிபதியை {உசீநரனை} மெச்சியபடி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவனுக்குக் {உசீநரனுக்கு} கொடுத்தான். அந்தக் காரிகையை உசீநரன் ஏற்கும்படி செய்த காலவர் காடுகளுக்குள் சென்றுவிட்டார். (தனது சொந்த செயல்களால் வென்ற) செழிப்பை அனுபவிக்கும் நீதிமிக்க ஒரு மனிதனைப் போல, உசீநரன் மாதவியுடன் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலுள்ள நீரூற்றுகளிலும், நதிகளின் நீர்வீழ்ச்சிகளிலும், மாளிகைகளிலும், இனிமையான அறைகளிலும் பலவண்ண வேறுபாடுகள் கொண்ட தோட்டங்களிலும், காடுகளிலும், இனிமையான இடங்களிலும், வீடுகளின் மேல்தளங்களிலும் அந்தக் காரிகையுடன் விளையாடி இன்புற்றிருந்தான்.

உரிய நேரத்தில், காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அவனுக்கு {உசீநரனுக்கு} ஒரு மகன் பிறந்தான். பின்னாட்களில் அவன் சிபி என்ற பெயரால் சிறந்த மன்னனாகக் கொண்டாடப்பட்டான். ஓ! மன்னா {துரியோதனா}, அந்த மகனின் பிறப்புக்குப் பிறகு, அந்தணரான காலவர் உசீநரனிடம் வந்து, அந்தக் கன்னிகையைத் {மாதவியைத்} திரும்பப் பெற்றுக் கொண்டு, வினதையின் மகனைக் {கருடனைக்} காணச் சென்றார்" என்றார் {நாரதர்}.