Saturday, June 06, 2015

கடனைத் தீர்த்த காலவர்! - உத்யோக பர்வம் பகுதி 119

Galava payed his debt! | Udyoga Parva - Section 119 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –48)

பதிவின் சுருக்கம் : காலவரைக் கண்ட கருடன், மேலும் இருநூறு குதிரைகளை அடைய முயற்சிக்க வேண்டாம் என்று தடுத்தது; குதிரைகள் ஏன் கிடைக்காது என்பதற்கு ஒரு பழங்காலக் கதையைக் கருடன் சொன்னது; காலவர் மாதவியை விஸ்வாமித்ரருக்கு அளிப்பது; விஸ்வாமித்ரர் மாதவியிடம் அஷ்டகனைப் பெறுவது; கடன் தீர்ந்த காலவர் மாதவியை அவளது தந்தையிடம் திரும்ப ஒப்படைப்பது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "காலவரைக் கண்ட வினதையின் மகன் {கருடன்} புன்னகையுடன் அவரிடம் {காலவரிடம்}, "ஓ! அந்தணா, நற்பேறாலேயே, நான் உன்னை வெற்றிகரமானவனாகக் காண்கிறேன்" என்றான். எனினும், கருடன் பேசிய வார்த்தைகளைக் கேட்ட காலவர், காரியத்தின் நான்காவது பகுதி இன்னும் நிறைவேறாமல் இருப்பதை அவனுக்கு {கருடனுகுச்} சுட்டிக் காட்டினார்.

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான கருடன், காலவரிடம், "(மீதம் உள்ள இருநூறு குதிரைகளை அடைய) எந்த முயற்சியும் செய்யாதே. ஏனெனில் அதில் நீ வெல்ல மாட்டாய். பழங்காலத்தில், கான்யகுப்ஜ நாட்டில் காதியின் மகளாகிய சத்தியவதியைத் தனது மனைவியாக்கிக் கொள்ள {விரும்பிய} ரிசீகர் {தனது விருப்பத்தைக் காதியிடம்} கேட்டார். ஓ! காலவா, அதன் பேரில், காதி அந்த முனிவரிடம் {ரிசீகரிடம்}, "ஓ! புனிதமானவரே {ரிசீகரே}, சந்திரப் பிரகாசம் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஆயிரம் குதிரைகள் எனக்கு {சுல்கமாக} வழங்கப்படட்டும்" என்று கேட்டான் {காதி}. இப்படிக் கேட்கப்பட்ட ரிசீகர் {காதியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். பிறகு வருணனின் உறைவிடத்தில் உள்ள மாபெரும் குதிரைகள் அங்காடிக்குச் (அஸ்வதீர்த்தத்திற்குச்) சென்ற அந்த முனிவர் {ரிசீகர்}, அவன் {காதி} கேட்டதை அடைந்து, அவற்றை அந்த மன்னனிடம் {காதியிடம்} கொடுத்தார்.



புண்டரீகம் என்ற பெயர் கொண்ட வேள்வி ஒன்றை நடத்திய அந்த ஏகாதிபதி {காதி}, அக்குதிரைகளை (தக்ஷிணையாக) அந்தணர்களுக்குக் கொடுத்துவிட்டான். நீ ஏற்கனவே கோரிக்கை வைத்த அந்த மூன்று மன்னர்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு இருநூறு {200} குதிரைகளை அந்த அந்தணர்களிடம் இருந்து கொள்முதல் செய்தார்கள். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, மீதம் நானூறும் {400-நானூறு குதிரைகளும்}, ஆற்றைக் கடக்கும்போது விதஸ்தையால் [1] எடுத்துக் கொள்ளப்பட்டன.

[1] //இந்தச் சுலோகத்தின் பிற்பாதி பலவாறாகப் படிக்கப்படுகிறது. "நியாமனனி சந்தரே ஹ்ருதன்யாசன் விதஸ்தயா {Niyamanani Santare Hritanyasan Vitastaya}" என்பதே சரியான உரை என எனக்குத் தோன்றுகிறது. "கடந்து சென்ற போது, விதஸ்தை (நதியால்) இழுத்துக் கொள்ளப்பட்டன" என்பதே அதன் பொருளாகும். விதஸ்தை, பஞ்சாபின் ஐந்து நதிகளில் ஒன்றாகும்.// என்கிறார் கங்குலி.

எனவே, ஓ! காலவா, பெறமுடியாத ஒன்றை, உன்னால் பெற முடியாது. ஓ! அறம்சார்ந்தவனே {காலவா}, நீ ஏற்கனவே அடைந்திருக்கும் அறுநூறு {600} குதிரைகளையும், மேலும், இருநூறு {200} குதிரைகளுக்கு இணையாக இந்தக் கன்னிகையையும் விஸ்வாமித்ரருக்குக் கொடுத்துவிடு. ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, பிறகு நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு வெற்றியால் மகுடம் சூட்டப்படுவாய்" என்றான் {கருடன்}.

பிறகு காலவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, குதிரைகளையும், அந்தக் கன்னிகையையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கருடனையும் தனது துணைக்கு அழைத்துக் கொண்டு விஸ்வாமித்ரரிடம் சென்றார். அவரது {விஸ்வாமித்ரரின்} முன்னிலைக்கு வந்த காலவர், "நீர் கோரிய வகையில் அறுநூறு {600} குதிரைகள் இங்கு இருக்கின்றன. மீதம் உள்ள இருநூறுக்காக {200} இந்தக் கன்னிகையை நான் காணிக்கையாக்குகிறேன். இவை அனைத்தும் உம்மால் ஏற்கப்படட்டும். இந்தக் கன்னிகையிடம் மூன்று அரச முனிகள் அறம்சார்ந்த மகன்கள் மூவரைப் பெற்றிருக்கிறார்கள். நான்காவதும், அனைவருக்கும் முதன்மையானவனுமான மகனை நீர் இவளிடம் பெறுவீராக. இப்படியே எண்ணூறு {800} குதிரைகள் என்ற எண்ணிக்கை நிறைவடைந்ததாக உம்மால் கருதப்படட்டும். நானும் கடனில் இருந்து விடுபட்டு, நான் விரும்பும் தவ நோன்புகளைப் பயிலச் செல்ல அனுமதிப்பீராக" என்றார் {காலவர்}.

அந்தப் பறவை {கருடன்} மற்றும் உயர்ந்த அழகுடைய கன்னிகை {மாதவி} ஆகியோரின் துணையுடன் இருக்கும் காலவரைக் கண்ட விஸ்வாமித்ரர், "ஓ! காலவா, நீ ஏன் முன்பே இந்த மங்கையை எனக்குக் கொடுக்கவில்லை? எனது குலத்தை விருத்திச் செய்யும் நான்கு மகன்கள் எனக்கு மட்டுமே இருந்திருப்பார்களே. இவளிடம் ஒரு மகனைப் பெறுவதற்காக நான் இந்த உனது கன்னிகையை {மாதவியை} ஏற்கிறேன். குதிரைகளைப் பொறுத்தவரை, அவற்றை எனது துறவில்லத்தில் {ஆசிரமத்தில்} மேய விடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இதைச் சொன்ன பெரும் காந்திபடைத்த விஸ்வாமித்ரர் அவளுடன் {மாதவியுடன்} தனது நேரத்தை இன்பமாகக் கழிக்கத் தொடங்கினார். மாதவி, அஷ்டகன் என்ற பெயரில் அவருக்கு {விஸ்வாமித்திரருக்கு} ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். அந்த மகன் பிறந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்ரர் அறம் பொருள் ஆகிய இரண்டையும் உரைத்து, அறுநூறு {600} குதிரைகளையும் அவனிடமே {அஷ்டகனிடமே} கொடுத்தார்.

பிறகு, சோமனின் {சந்திரனின்} நகரத்தைப் போன்ற பிரகாசமிக்க நகரத்திற்கு அஷ்டகன் சென்றான். குசிகரின் மகனான விஸ்வாமித்ரர் அந்தக் காரிகையைத் {மாதவியைத்} தனது சீடனிடம் {காலவரிடம்} ஒப்படைத்துவிட்டு, காட்டுக்குச் சென்றுவிட்டார். தனது ஆசான் கோரிய கட்டணத்தைக் கொடுப்பதில் வென்ற காலவரும், அவரது நண்பனான சுபர்ணனுடன் {கருடனுடன்} சேர்ந்து மகிழ்ச்சிகரமான இதயத்துடன் அந்தக் கன்னிகையிடம் {மாதவியிடம்}, "மிகுந்த ஈகை குணம் உள்ள ஒருவனையும், மிகுந்த வீரம் கொண்டவன் ஒருவனையும், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒருவனையும், பெரும் வேள்விகளைச் செய்யும் ஒருவனையும் நீ மகன்களாகப் பெற்றாய். ஓ! அழகிய கன்னிகையே {மாதவி}, நீ இந்த மகன்களால், உனது தந்தையை மட்டுமல்ல, நான்கு மன்னர்களையும், என்னையும் காத்திருக்கிறாய். ஓ! கொடியிடையாளே, இப்போது நீ செல்லலாம்" என்றார். இதைச் சொன்ன காலவர், பாம்புகளை உண்ணும் கருடனுக்கு விடைகொடுத்தனுப்பி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவளது தந்தையிடம் {யயாதியிடம்} ஒப்படைத்துவிட்டு காட்டுச் சென்றுவிட்டார்" என்றார் {நாரதர்}.