Friday, June 26, 2015

"அர்ஜுனனைத் தவிர நால்வரை கொல்லேன்!" என்ற கர்ணன் - உத்யோக பர்வம் பகுதி 146

Except Arjuna, four will not be slained by me!" said Karna| Udyoga Parva - Section 146 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –75)

பதிவின் சுருக்கம் : குந்தி சொன்ன கதை உண்மையே எனச் சூரியன் கர்ணனுக்கு உறுதி அளித்தது; குந்தியை நிந்தித்த கர்ணன், அவள் செய்த குற்றங்களையும், தான் இழந்த சுகங்களையும் சுட்டிக் காட்டியது; துரியோதனானால் விரும்பிய அனைத்தையும் அடைந்த தான் உரிய நேரத்தில் அவனைக் கைவிட முடியாது என்று கர்ணன் சொன்னது; அர்ஜுனனைத் தவிரக் குந்தியின் மற்ற நான்கு மகன்களைக் கொல்ல மாட்டேன் எனக் குந்தியிடம் உறுதியளித்த கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குந்தி இப்படிச் சொன்னதும்) சூரிய வட்டிலில் இருந்து வெளிவந்ததும், பாசம் மிகுந்ததுமான ஒரு குரலைக் கர்ணன் கேட்டான். வெகு தூரத்தில் இருந்து வந்த அந்தக் குரல், தந்தையின் பாசத்துடன் சூரியனால் பேசப்பட்டதாகும். (அது {அந்தக் குரல்}), "பிருதை {குந்தி} சொன்ன வார்த்தைகள் உண்மையே. ஓ! கர்ணா, உனது தாயின் {குந்தியின்} வார்த்தைகளின்படி நீ செயல்படுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, அந்த வார்த்தைகளை நீ முழுமையாகப் பின்பற்றினால், பெரும் நன்மை உனக்கு விளையும்" என்றது {சூரியனின் குரல்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தனது தாயாலும், தனது தந்தையான சூரியனாலேயும் கூட இப்படிச் சொல்லப்பட்டும், கர்ணனின் இதயம் தடுமாற்றமடையவில்லை. அவன் {கர்ணன்} உண்மைக்கு {சத்தியத்துக்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தான்.

அவன் {கர்ணன் குந்தியிடம்}, "ஓ! க்ஷத்திரியப் பெண்மணியே, உனது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதே கடமைகளில் உயர்ந்தது என்று, (என் காரியத்தில்) நீ சொன்னதை என்னால் ஏற்க முடியாது.

ஓ! தாயே, நான் பிறந்த உடனேயே, உன்னால் நான் கைவிடப்பட்டேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, எனக்கு நீ செய்த இந்தப் பெருந்தீங்குதான், எனது சாதனைகளுக்கும், புகழுக்கும் அழிவைச் செய்து வந்திருக்கிறது. உண்மையில், நான் க்ஷத்திரியனே என்றாலும், க்ஷத்திரியனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் நான் உன்னால் இழந்தேன். இதைவிடப் பெரிய தீங்கை, வேறு எந்த எதிரியால் எனக்கு இழைத்துவிட முடியும்? இரக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் எனக்கு இரக்கம் காட்டாத நீ, (நான் பிறந்த {க்ஷத்திரிய} வகைக்குண்டான கட்டாயச்) சடங்குகள் மற்றும் எனக்குச் செய்யப்பட வேண்டிய அனைத்திலும் இருந்து என்னை விலக்கி வைத்த நீ, இன்று எனக்கு உன் கட்டளைகளை இடுகின்றாய். {க்ஷத்திரியன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை உரிய காலத்தில் செய்ய எனக்குக் கருணை காட்டாமல், நன்மைகள் அற்றுப் போன என்னிடம் இன்று நீ கட்டளை இடுகின்றாயா?}

ஒரு தாயைப் போல, எனது நன்மைக்காக இதற்கு முன் நீ எப்போதும் முற்பட்டதில்லை. எனினும், உனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பியே நீ இன்று என்னிடம் பேசுகிறாய். கிருஷ்ணனைத் (தனது தேரோட்டியாகத்) தன்னுடன் கொண்டிருக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எவன்தான் அஞ்சமாட்டான்? இன்று நான் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றால், நான் அச்சத்தாலேயே அப்படிச் செய்கிறேன் என்று எவன்தான் கருதமாட்டான்? இதுவரை, அவர்களது {பாண்டவர்களின்} அண்ணனாக என்னை யாரும் அறியமாட்டார்கள். போர் நெருங்கும் சமயத்தில், நான் பாண்டவர்களின் அண்ணன் என்று சொல்லி, அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டால், க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன சொல்வார்கள்? விரும்பிய பொருட்கள் அனைத்தும் அளித்து, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால், எப்போதும் வணங்கப்பட்டு வரும் நான், அவர்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட நட்பை எப்படி முழுமையாகப் பயனற்றதாக்க முடியும்? மற்றவர்களுடன் பகைமையால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனிடம் {இந்திரனிடம்} தலைவணங்கும் வசுக்களைப் போல எப்போதும் என்னை வணங்கி, எனக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள் {பணிவிடை செய்கிறார்கள்}. எனது பலத்தின் துணையால், எதிரிகளுடன் மோதும் திறனைப் பெற்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பேணப்பட்ட அவர்களது நம்பிக்கையை எப்படி நான் கெடுப்பேன்? என்னைத் தங்கள் படகாகக் கொண்டு, போர் எனும் கடக்க முடியாத கடலைக் கடக்க அவர்கள் விரும்புகிறார்கள். வேறு எந்தப் படகுகளும் அற்ற கடலைக் கடக்க விரும்பும் அவர்களை நான் எப்படிக் கைவிட முடியும்?

இதுவரை திருதராஷ்டிரர் மகன்களால் தாங்கப்பட்டு வந்த யாவரும், தங்கள் தலைவர்களுக்கு {எஜமானர்களுக்கு} உதவ வேண்டிய நேரம் இதுவே. எனது உயிரையும் துச்சமாக நினைத்து, நிச்சயம் நான் அவர்களுக்காகவே {கௌரவர்களுக்காகவே} செயல்படுவேன். தங்கள் தலைவர்களால் நன்கு ஊட்டப்பட்டு, (தேவையான அனைத்தும்) நன்கு அளிக்கப்பட்டும், உரிய நேரத்தில் தக்க உதவியைச் செய்யாத உறுதியற்ற இதயம் படைத்த, பாவம் நிறைந்த மனிதர்கள், தங்கள் தலைவனின் {சோறிடுபவனின்} சோற்றைத் திருடுவதால், அவர்களுக்கு இம்மையும் இல்லை; மறுமையும் கிடையாது. நான் உன்னிடம் வஞ்சகமாக {ஏமாற்றுகரமாகப்} பேச மாட்டேன். {நான் உன்னை ஏமாற்ற மாட்டேன்}. திருதராஷ்டிரர் மகனுக்காக {துரியோதனனுக்காக}, என் சக்தியிலும், பலத்திலும் சிறந்ததைக் கொண்டு உனது மகன்களுடன் நான் போரிடுவேன். எனினும், நான் அன்பையும், நன்னடத்தையையும் கைவிட மாட்டேன். எனவே, உனது வார்த்தைகள் என்னதான் எனக்கு நன்மையை அளித்தாலும், இப்போது என்னால் அதற்குக் கீழ்ப்படிய முடியாது. எனினும் இந்த உனது வேண்டுதல்கள் பலனற்றதாகாது.

அர்ஜுனனைத் தவிர, உனது மற்ற மகன்களான யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைப் போரில் தாக்குப்பிடித்து, என்னால் அவர்களைக் கொல்ல முடியும் என்றாலும், அவர்கள் என்னால் கொல்லப்பட மாட்டார்கள். யுதிஷ்டிரனின் போராளிகள் அனைவரிலும் நான் அர்ஜுனனிடம் மட்டுமே போரிடுவேன். *போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன். ஓ! புகழ்பெற்ற பெண்மணியே {குந்தியே}, உனது மகன்களின் எண்ணிக்கை எப்போதும் ஐந்துக்குக் குறையாது. {அர்ஜுனன் கொல்லப்பட்டால்} என்னுடனாவது, அல்லது நான் கொல்லப்பட்டால் அர்ஜுனனுடனாவது சேர்த்து, அது {உனது மகன்களின் எண்ணிக்கை} எப்போதும் ஐந்தாகவே இருக்கும்" என்றான் {கர்ணன்}.

கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, துயரில் நடுங்கிய குந்தி, மனோபலத்தின் விளைவால் அதிராமல் இருந்த தனது மகனை {கர்ணனை} அணைத்துக் கொண்டாள். அவள் {குந்தி கர்ணனிடம்}, "உண்மையில், ஓ! கர்ணா, நீ சொல்வது சாத்தியமாகத் தோன்றினாலும், கௌரவர்கள் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். அனைத்தும் விதியே. எனினும், ஓ! எதிரிகளை வாட்டுபவனே {கர்ணா}, உனது தம்பிகள் நால்வருக்கு, பாதுகாப்புக்கான உறுதியை நீ வழங்கியிருக்கிறாய். போரில் நீ ஆயுதங்களை அடிக்கும் நேரத்தில், இந்த உறுதிமொழியை நினைவில் தாங்குவாயாக" என்றாள். இவை அனைத்தையும் சொன்ன பிருதை {குந்தி}, மேலும் கர்ணனிடம், "நீ அருளப்பட்டிருப்பாயாக. உடல்நலம் {ஆரோக்கியம்} உனதாகட்டும்" என்றாள். கர்ணன் அவளிடம் {குந்தியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான். பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெவ்வேறு திசைகளில் சென்றனர்."



*போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன்...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:779.

இழைத்தது        இகவாமைச்     சாவாரை            யாரே        
பிழைத்தது        ஒறுக்கிற்            பவர்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா :
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?