Thursday, July 02, 2015

யுதிஷ்டிரனின் தயக்கம்! - உத்யோக பர்வம் பகுதி 155

The hesitation of Yudhishthira! | Udyoga Parva - Section 155 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 84) {சைனியநிர்யாண பர்வம் -5}

பதிவின் சுருக்கம் : துரியோதனனின் சொல்லைப் பொறுக்காத யுதிஷ்டிரன், அதை மீண்டும் கிருஷ்ணனிடம் கேட்பது; இனி அது குறித்துப் பேசிப் பயனில்லை, போரே ஒரே வழி என்று கிருஷ்ணன் சொன்னது; தன் கூட்டணியில் இருந்த மன்னர்களைப் போருக்குத் தயாராகும்படி சொன்ன யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், பெரியோர்களை எதிர்த்து அவர்கள் எப்படிப் போரிடப் போகிறார்கள் என்பதைக் குறித்து வினவுவது; போரைத் தவிர்க்க முடியாது என யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்த யுதிஷ்டிரன், மீண்டும் ஒரு முறை அந்த விருஷ்ணி குலக்கொழுந்திடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, தீயவனான துரியோதனனால் எப்படி இதைச் சொல்ல முடியும்? ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, வந்திருக்கும் சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வழியில் செயல்படுவதால், நாங்கள் எங்கள் கடமையின் பாதையில் செல்ல முடியும்? {எந்நோன்பிருந்தால் நாம் நமது அறத்திலிருந்து நழுவாதிருப்போம்?}


ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் நோக்கங்களை நீ நன்கு அறிந்தவனாவாய். என்னாலும், எனது தம்பிகளாலும் எத்தகு நோக்கங்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றன என்பதையும் நீ அறிவாய். விதுரர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவரும் உதிர்த்த வார்த்தைகளையும் நீ கேட்டிருக்கிறாய்.. ஓ! பெரு அறிவு கொண்டவனே {கிருஷ்ணா}, குந்தியால் பேசப்பட்ட அறிவுச் சொற்களையும் முழுமையாக நீ கேட்டிருக்கிறாய். இவை அனைத்தையும் கடந்து, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நன்கு ஆலோசித்த பிறகு, எங்களக்கு நன்மை எது என்பதைத் தயக்கமில்லாமல் எங்களுக்குக் கூறுவாயாக", என்றான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன், மேகங்கள் மற்றும் துந்துபியின் ஆழ்ந்த குரலுடன் {யுதிஷ்டிரனிடம்}, "துரியோதனனுக்குச் சாதகமானவையும், அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் இசைவானவையும், குருக்களின் சபையில் என்னால் சொல்லப்பட்டவையுமான அந்த வார்த்தைகளுக்கு, அறிவு இருக்க வேண்டிய இடத்தில் வஞ்சகத்தைக் கொண்டிருக்கும் குரு இளவரசனான துரியோதனிடம் எந்தப் பதிலையும் காண முடியவில்லை {அடைய முடியவில்லை}. {அந்த வார்த்தைகள் துரியோதனனிடம் நிலைபெறவில்லை}. தீய புரிதல் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்}, பீஷ்மர், விதுரர், நான் ஆகியோர் சொன்ன ஆலோசனைகளைச் சிறிதும் கேட்கவில்லை {எங்கள் ஆலோசனைகளில் ஒன்றையும் கேட்கவில்லை}. அவன் {துரியோதனன்} அனைவரையும் மீறுகிறான். அவன் {துரியோதனன்} அறம் ஈட்டவும் விரும்பவில்லை, அதே போல புகழையும் அவன் {துரியோதனன்} விரும்பவில்லை.

தீய ஆன்மா கொண்ட அவன் {துரியோதனன்}, கர்ணனை நம்பி, அனைத்தும் ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டதாகக் கருதுகிறான். உண்மையில், தீய இதயம் படைத்தவனும், பாவம் நிறைந்த தீர்மானங்கள் கொண்டவனுமான சுயோதனன், **என்னைச் சிறையிலடைக்கவும் உத்தரவிட்டான். இருப்பினும், அவனது {துரியோதனனின்} அந்த ஆசை வெற்றிபெறவில்லை. பீஷ்மரோ, துரோணரோ இது குறித்து எதுவும் சொல்லவில்லை.** உண்மையில் விதுரரைத் தவிர அவர்கள் அனைவரும் துரியோதனனையே பின்பற்றினார்கள். ஓ! மங்காப் புகழ் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மூடனும், பழியுணர்ச்சி கொண்டவனுமான துரியோதனனிடம், சுபலனின் மகன் சகுனி, கர்ணன், துச்சாசனன் ஆகிய மூடர்கள் உம்மைக் குறித்துத் தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். உண்மையில், அந்தக் குரு இளவரசன் சொன்னதையெல்லாம் உம்மிடம் மீண்டும் கூறுவதால் என்ன பயன்?

சுருங்கச் சொல்லின், அந்தத் தீய ஆன்மா படைத்தவன் உம்மிடம் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. உம்முடைய படையில் இருக்கும் மன்னர்கள் அனைவரிடமும் நல்லெண்ணம் கொள்ளாத அளவுக்கு, துரியோதனனுக்குள் மட்டும் இவ்வளவு பாவமும், தீமையும் நிரம்பி வசிக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நமது உடைமையைக் கைவிட்டுக் கௌரவர்களுடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் விரும்பவில்லை. எனவே, இப்போது நடைபெற வேண்டியது போரே" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "வாசுதேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, எதையும் சொல்லாமல் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஏகாதிபதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையரோடு {நகுலன் மற்றும் சகாதேவனோடு} சேர்ந்து, "துருப்புகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யுங்கள்" என்றான்.

அந்தக் கட்டளைச் சொல்லைக் கடந்ததும், பாண்டவப் படையில் பெரும் ஆரவாரக் குரல்கள் கேட்டன. படைவீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனர். எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கொல்லப்படத் தகாதவர்களின் (வரப்போகும்) படுகொலையைக் கண்டு பெருமூச்சு விடத் தொடங்கி, பீமனிடமும் விஜயனிடமும் {அர்ஜுனனிடமும்}, "எதற்காக வனவாசத்தை ஏற்று, இவ்வளவு துன்பத்தையும் அனுபவித்தோமோ, அந்தப் பேரிடர் நிலைத்த நோக்கத்தோடு நம்மைப் பின்தொடர்கிறது. எதற்காக இவ்வளவு முயன்றோமோ, அது நாம் முயலாதது போலவே நம்மை விட்டுச் செல்கிறது. மறுபுறம், நாம் அழைக்காமலே நம்மைப் பெருந்துயரம் பின்தொடர்ந்து வருகிறது. எக்காரணம் கொண்டும் நம்மால் கொல்லமுடியாத (நமது) மரியாதைக்குரிய பெரியோர்களிடம் நாம் எப்படிப் போரிடப் போகிறோம்? வயது முதிர்ந்த நமது ஆசான்களைக் கொன்று நம்மால் அடையப்படும் வெற்றி எந்த வகையானது?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்} வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். மீண்டும் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்த அர்ஜுனன், "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவகி மகனால் {கிருஷ்ணனால்} திரும்பச் சொல்லப்பட்ட குந்தி மற்றும் விதுரரின் வார்த்தைகள் அனைத்தையும் நீர் நிச்சயம் புரிந்திருப்பீர். விதுரரோ, குந்தியோ, இவர்களில் எவரும் பாவம் நிறைந்த எதையும் சொல்லமாட்டார்கள் என்பதை நான் நிச்சயம் அறிவேன். இஃது ஒரு புறமிருக்க, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில் ஈடுபடாமல் நம்மால் விலக முடியாது" என்றான் {அர்ஜுனன்}.

சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} உரையைக் கேட்ட வாசுதேவனும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "அது (நீ சொல்வது) சரிதான்." என்றான். "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா} பிறகு, பாண்டுவின் மகன்கள் தங்கள் மனங்களைப் போருக்குத் தயார் செய்து, தங்கள் படைவீரர்களுடன் அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தார்கள்."


** இது உத்யோக பர்வம் பகுதி 130-ல் {கிருஷ்ணனையா பிடிப்பாய்?} வருகிறது.

திருக்குறள்/ பொருட்பால்/ தூது/ குறள்:690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.