Friday, July 03, 2015

துரியோதனனின் படைப்பிரிவுகள் - உத்யோக பர்வம் பகுதி 156

Divisions of Duyodhana's army! | Udyoga Parva - Section 156 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 85) {சைனியநிர்யாண பர்வம் - 6}

பதிவின் சுருக்கம் : தனது படையில், திறன்மிக்கவர்களையும், நடுத்தரமானவர்களையும், தாழ்ந்தவர்களையும் பிரித்த துரியோதனன்; துரியோதனன் படையின் தளவாடங்களைக் குறித்த வைசம்பாயனரின் வர்ணனை; படைப்பிரிவுகள் மற்றும் அதன் வகைகள் குறித்த வர்ணனை; தனது பதினோரு அக்ஷௌஹிணி படைகளுக்கும் பதினோரு தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துரியோதனன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இரவு கடந்ததும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் கொண்ட தனது துருப்புகளைப் (முறையான வரிசையில்) பிரித்தான். *மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.


போரின் அழுத்தத்தைத் தாக்குப்பிடித்துச் சேதமடையும் தேர்களைச் சீரமைப்பதற்கு மரங்கள் மற்றும் பலகைகளோடும், பெரும் அம்பறாத்தூணிகளைத் தாங்கிய தேர்களோடும், புலித்தோலாலும் பிற உறுதியான தோல்களாலும் மூடப்பட்ட பக்கங்கள் கொண்ட தேர்களோடும், கையால் வீசப்படும் முள் ஈட்டிகளோடும் {முள் தோமரங்களோடும்}, குதிரைகளாலும், யானைகளாலும் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், நீண்ட கைப்பிடி கொண்ட இரும்பு ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் ஏவுகணைகளோடும், கனமான மரங்களைக் கொண்டு காலாட்படை வீரர்களால் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், கொடிக் கம்பங்கள் மற்றும் கொடிகளோடும், வில்லில் இருந்து அடிக்கப்படும் நீண்ட கனமான கணைகளோடும் {தோமரங்களோடும்}, {அருகில் இருப்பவர்களைக் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க} பல்வேறு விதமான சுருக்குக்கயிறுகள் மற்றும் சாட்டைகளோடும், பல்வேறு விதமான கவசங்களோடும், கூரிய முனை கொண்ட மரத்தாலான பரிகங்களோடும், {காய்ச்சப்பட்ட [அ] வேகவைக்கப்பட்ட} எண்ணெய், பாகு, மணல் ஆகியவற்றோடும், நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த மண்குடங்களோடும், {எளிதில் தீப்பற்றக்கூடிய} தூளாக்கப்பட்ட அரக்கு மற்றும் எரியும் தன்மையுள்ள பிற பொருட்களோடும், கிண்கிணி மணிகள் பொருத்தப்பட்ட குறு ஈட்டிகளோடும், சூடான பாகு, நீர் மற்றும் கற்களை வீசுவதற்கான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு இரும்பு ஆயுதங்களோடும், ஒலியெழுப்பும் மரத்தாலான ஆயுதங்களோடும் {பிண்டிபாலங்களோடும்}, மெழுகு மற்றும் கனரக உலக்கைகளோடும், இரும்பு முட்களைக் கொண்ட கழிகளோடும், கலப்பைகள் மற்றும் நஞ்சு பூசப்பட்ட தோமரங்களோடும், சூடான பாகை ஊற்றவல்ல செலுத்திகளோடும் {ஊசிகளோடும் = Syringes} [1], பிரம்பு பலகைகளோடும் {பெட்டிகளோடும்}, போர்க்கோடரிகள் மற்றும் வளைந்த முனை கொண்ட ஈட்டிகளோடும் {இலந்தை முள் போன்ற முள் உடைய அங்குச தோமரங்களோடும்}, முள் பொருந்திய கையுறைகோடும் {கீல்கவசங்களோடும்}, கோடரிகள் {வாய்ச்சிகள்} மற்றும் கூரிய முனை கொண்ட இரும்பு முட்களோடும் {உளி ஆகிவற்றோடும்}, புலி மற்றும் சிறுத்தைகளின் தோல் போர்த்திய தேர்களோடும், கூரிய முனை கொண்ட வட்ட வடிவ மரப் பலகைகளோடும் {தடிக்கழிகளோடும்}, கொம்புகள், ஈட்டிகள் மற்றும் தாக்குதலுக்குண்டான பல்வேறு பிற ஆயுதங்களோடும், குதராவகைக் கோடரிகள் {குந்தாலி} மற்றும் மண்வெட்டிகளோடும், எண்ணெய் மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றில் தோய்க்கப்பட்ட {நனைக்கப்பட்ட} துணிகளோடும், தங்க சித்திர வேலைப்பாடுகள் கொண்ட பளபளக்கும் ஆடைகளோடும், இருந்த துரியோதனனின் படை வீரர்கள், ரத்தினங்கள் கற்கள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி அழகாகப் பிரகாசித்தனர்.

[1] இதை முறம் என்கிறது வேறொரு பதிப்பு.

கவசம் பூண்டவர்களும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களும், குதிரை மரபுகளை நன்கு அறிந்தவர்களுமான நற்குடியில் பிறந்தவர்கள் {துரியோதனனின் படையில்} தேரோட்டிகளாகப் பணியமர்த்தப்பட்டனர். தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான மருந்துகளோடும், தலையில் மணிகள் மற்றும் முத்துகளாலான சரங்கள் பொருத்தப்பட்ட குதிரைகளோடும், கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்களோடும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அருளோடிருந்த கோபுரங்கள் மற்றும் சிறுகோபுரங்களோடும், கேடயங்கள், வாட்கள், வேல்கள், எறிஈட்டிகள் மற்றும் முள்பதித்த கதாயுதங்களோடும் இருந்தன.

அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சாதிக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் {அந்தத் தேர்களில்} ஒவ்வொன்றிலும் நூறு {100} கணைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் ஒவ்வொன்றும், ஒரு தேரோட்டி, முன்னால் கட்டப்பட்ட இரு குதிரைகள், தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டிருந்த இரு குதிரைகளுக்குப் பொறுப்பான இரு தேரோட்டிகள் ஆகியவற்றோடு இருந்தன. குதிரைகளைச் செலுத்தும் தேர்வீரன் {தேரோட்டி} திறன்மிக்கவனாக இருந்தாலும், பின்னர்க் குறிப்பிடப்பட்ட இரு தேரோட்டிகளும் திறன்வாய்ந்த தேர்வீரர்களாகவே இருந்தனர். இப்படி அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேர்களும், அரண்களால் காக்கப்பட்ட நகரங்களைப் போலவும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் நின்று கொண்டிருந்தன.

மணிகள், முத்துச் சரங்கள்,  மற்றும் பல்வேறு விதமான ஆபரணங்களால் யானைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த விலங்குகள் {யானைகள்} ஒவ்வொன்றின் முதுகிலும் ஏழு {7} வீரர்கள் ஏறியிருந்தனர். இப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்த விலங்குகள் {யானைகள்} ரத்தினங்களால் நிறைந்த மலைகளைப் போல இருந்தன. {யானையின் மேலிருந்த} அந்த எழுவரில், இருவர் ஈட்டியைக் கொண்டு போரிடுபவராகவும், இருவர் சிறந்த வில்லாளிகளாகவும், இருவர் முதல் தர வாள் வீரர்களாகவும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் முதுகில் நிறைய ஆயுதங்களையும், கணைகள் நிரம்பிய அம்பறாத்தூணிகளையும் சுமந்து வந்த எண்ணிலடங்கா மதங்கொண்ட யானைகளால் அந்த ஒப்பற்ற குரு மன்னனின் {துரியோதனனின்} படை நிரம்பியிருந்தது.

கொடிகளுடனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த கவசந்தரித்த வீரமிக்கப் போர் வீரர்களால் செலுத்தப்படும் ஆயிரக்கணக்கான குதிரைகளும் அங்கிருந்தன. எண்ணிக்கையில் நூறுகளாகவும், ஆயிரங்களாகவும் {பல லட்சங்களாக} இருந்த அந்தக் குதிரைகள் அனைத்தும், தங்கள் முன்னங்கால்களின் குளம்புகளைக் கொண்டு தரையைச் சிராய்க்கும் பழக்கம் நீங்கியவையாக இருந்தன [2]. {கடிவாளம் பிடித்து இழுக்கப்படாதவையாக அவை இருந்தன}. நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையாகவும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவையாகவும், தங்களைச் செலுத்துபவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையாகவும் அவை {அக்குதிரைகள்} இருந்தன.

[2] இங்கே "அஸ்க்ரஹா" என்பது மூலச்சொல்லென்றும். அதன் பொருள், கனைத்துக் கொண்டே முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் தீய குணத்தில் இருந்து விடுபட்டவை என்றும் வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.

காலாட்படை வீரர்களில், பல்வேறு முகத் தோற்றம் கொண்டவர்களும், பல்வேறு வகையான கவசங்கள் தரித்தவர்களும், வித்தியாசமான வகை ஆயுதங்களைக் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமாக நூறாயிரம் பேர் இருந்தனர்.

ஒவ்வொரு தேருக்கும் பத்து {10} யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் பத்து குதிரைகளும்{10}, ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக் {10} காலாட்படை வீரர்களும் பாதுகாவலர்களாக இருந்தனர். மேலும், அணிவகுப்புச் சிதறுகையில், அதை ஒன்றிணைக்கும் வகையில், {துரியோதனனின்} துருப்புகளில் ஒரு பெரும்பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. {இப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட} இந்த அதிகப்படியான படையில் ஒவ்வொரு தேரிலும் ஐம்பது யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் நூறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் ஏழு காலாட்படை வீரர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஐநூறு {500} தேர்களும், அதற்குத் தக்க {அதே அளவு ஐநூறு} யானைகளும் (ஆயிரத்து ஐநூறு 1500} குதிரைகளும், இரண்டாயிரத்து ஐநூறு {2500} காலாட்படை வீரர்களும்) சேர்ந்து ஒரு சேனையாகும். பத்துச் {10} சேனைகள் சேர்ந்தது ஒரு பிருத்னையாகும். பத்துப் பிருத்னைகள் கொண்டது ஒரு வாஹினியாகும், எனினும் பொதுவான மொழிப்பாணியில் {In common Parlance} சேனை, வாஹினி, பிருத்னை, துவஜினீ, சமூ, அக்ஷௌஹிணி, வரூதினீ என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படியே புத்திமானான அந்தக் கௌரவன் {துரியோதனன்} தனது படையை அணிவகுத்தான். இரு தரப்பும் சேர்த்து எண்ணிக்கையில் மொத்தமாகப் பதினெட்டு {18} அக்ஷௌஹிணிகள் இருந்தன. அதில் பாண்டவப் படை ஏழு {7} அக்ஷெஹிணிகளையும், கௌரவப் படை பதினோரு {11} அக்ஷௌஹிணிகளையும் கொண்டிருந்தன.

ஐம்பதில் ஐந்து மடங்கு {இருநூற்றைம்பது} மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும் {Five times fifty men constitute a Patti.} [3]. மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். (எதிரிகளை) அடிக்கவல்லவர்களும், போருக்காக ஏங்குபவர்களுமான போர்வீரர்கள் அடங்கிய அத்தகு கணங்கள், துரியோதனனின் அந்தப் படையில் ஆயிரக்கணக்கிலும் நூற்றுக் கணக்கிலும் {பதினாயிரக்கணக்கில்} இருந்தன.

[3] ஐம்பத்தைந்து மனிதர்களைக் கொண்டது ஒரு பத்தி என்று ஒரு வேறொரு பதிப்பில் காணப்படுகிறது.

வலிய கரங்களைக் கொண்ட மன்னன் துரியோதனன், வீரர்கள் மற்றும் புத்திசாலிப் போர்வீரர்களில் இருந்து தனது துருப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். மனிதர்களில் சிறந்தோரான கிருபர், துரோணர், சல்லியன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், கிருதவர்மன், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), கர்ணன், பூரிஸ்ரவஸ், சுபலனின் மகன் சகுனி, வலிமைமிக்க மன்னனான பாஹ்லீகர் ஆகியோர் ஒவ்வொருவரின் கீழும் ஓர் அக்ஷௌஹிணி படையை {துரியோதனன்} வைத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தினமும் அவர்களைத் தன்னெதிரே கொண்டு வரச் செய்து, அவர்களிடம் மணிக்கணக்காகப் பேசினான். தன் கண் எதிரிலேயே மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். தங்கள் தொண்டர்கள் அனைவரோடும் இப்படியே நியமிக்கப்பட்ட போர்வீரர்கள் அனைவரும், அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மிகவும் ஏற்புடையதைச் செய்ய வேண்டுமென விரும்பத் தொடங்கினர்.

*********************************************************************************
*மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.

திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைமாட்சி/ குறள்:768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை            
படைத்தகையால் பாடு பெறும்.

தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது {படை} தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.