Saturday, July 04, 2015

பலராமனின் தீர்த்தயாத்திரை! - உத்யோக பர்வம் பகுதி 158

The Pilgrimage of Balarama! | Udyoga Parva - Section 158 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 87) {சைனியநிர்யாண பர்வம் - 8}

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தனது படைகளுக்கு ஏழு தலைவர்களை நியமிப்பது; அந்த எழுவருக்கும் தலைவனாகத் திருஷ்டத்யும்னனை நியமிப்பது; அனைவருக்கும் தலைவனாக அர்ஜுனனை நியமிப்பது; பாண்டவர்களின் முகாமுக்கு பலராமன் வந்தது; பாண்டவர்களையும், கௌரவர்களையும் சமமாகவே தான் கருதுவதாகவும், கௌரவர்களின் அழிவைத் தன்னால் பார்க்க முடியாததால் சரஸ்வதி தீர்த்தத்திற்குப் புனித யாத்திரை செய்யப் போவதாகச் சொல்லிவிட்டுப் பாண்டவர்களிடம் விடைபெற்றுச் செல்வது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "கங்கையின் உயர் ஆன்ம மகனும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவரும், பாரதர்களின் பாட்டனும், மன்னர்கள் அனைவருக்கும் தலைவரும், புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதிக்குப் போட்டியாளரும், ஈர்ப்பு விசையில் கடலைப் போன்றவரும், அமைதியில் இமயத்தைப் போன்றவரும், உன்னதத் தன்மையில் படைப்பாளனைப் {பிரம்மனைப்} போன்றவரும், சக்தியில் சூரியனைப் போன்றவரும், தன் கணைகளை மழையாகப் பொழிந்து எதிரிப் படைகளைக் கொல்வதில், பெரும் இந்திரனைப் போன்றவருமான பீஷ்மர், பார்ப்பதற்குப் பயங்கரமானதும், நினைக்கும்போதே ஒருவரை மயிர்ச்சிலிர்க்கச் செய்வதுமான போர் எனும் பெரும் வேள்வியின் நெருக்கத்தில், குரு {கௌரவப்} படையின் அதிகாரியாக {படைத்தலைவராக} நிறுவப்பட்ட செய்தியை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனும், ஆயுதம் தாங்குவோரில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன் கேட்ட போது, அது குறித்து என்ன சொன்னான்? பீமனும், அர்ஜுனனும் என்ன சொன்னார்கள்? மேலும் கிருஷ்ணன் என்ன சொன்னான்?" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "செய்தியை அடைந்த போது, பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனும், ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் மற்றும் நித்தியமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்) தனது முன்னிலைக்கு அழைத்தான். பேசுபவர்களில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, பிறகு, மென்மையான குரலில், "படைவீரர்களுக்கு மத்தியில் சுற்றி, கவசம் பூண்டு பாதுகாப்பாக இருப்பீர்களாக. நமது முதல் மோதல் நமது பாட்டனுடன் {பீஷ்மருடன்} இருக்கப் போகிறது. எனது துருப்புகளின் ஏழு {7} அக்ஷௌஹிணிகளின் (ஏழு) தலைவர்களைப் பார்ப்பீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.

கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே} இது போன்ற பயனுள்ள வார்த்தைகளையே இத்தகு சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். உண்மையில் நீர் அதையே சொல்லியிருக்கிறீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நானும் இதையே விரும்புகிறேன். எனவே, அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது செய்யப்படட்டும். உண்மையில், உமது படையின் ஏழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படட்டும்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "போர் செய்ய ஆவலோடு இருந்த வீரர்களான துருபதன், விராடன், சினி குலத்துக் காளை {சாத்யகி}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், மன்னன் திருஷ்டகேது, பாஞ்சாலத்தைச் சேர்ந்த இளவரசன் சிகண்டி, மகத ஆட்சியாளன் சகாதேவன் ஆகியோரை அழைத்த யுதிஷ்டிரன், அவர்களை முறையே தனது ஏழு பிரிவுகளுக்குத் தலைவர்களாக நியமித்தான் [1]. அவர்களுக்கெல்லாம் மேலாகத் துருப்புகள் அனைத்துக்கும் தலைவனாக, சுடர்விட்டெரியும் (வேள்வி) நெருப்பில், துரோணரின் அழிவுக்காக உதித்த திருஷ்டத்யுமனன் நியமிக்கப்பட்டான். சுருள் முடி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம தலைவர்கள் அனைவருக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். பெரும் புத்திக்கூர்மையுடையவனும், சங்கர்ஷணனுக்குத் {பலராமனுக்குத்} தம்பியுமான அழகிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுக்கு வழிகாட்டியாகவும், அவனது {அர்ஜுனனின்} குதிரைகளைச் செலுத்துபவனாகவும் {குதிரையோட்டி [அ] தேரோட்டியாக} நியமிக்கப்பட்டான்.

[1] குருக்ஷேத்திரத்திற்குப் புறப்படும்போது //துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பீமசேனன் ஆகியோரே துருப்புகள் தலைவர்கள் See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section151.html// என்று ஏழு தலைவர்களை அறிவிக்கிறான் யுதிஷ்டிரன். இங்கே மீண்டும் துருபதன், விராடன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், திருஷ்டகேது, சிகண்டி, சகாதேவன் எனப் புதிய பட்டியலைத் தருகிறான். ஒருவேளை முன்னவர்கள் அக்ஷௌஹிணிகளுக்குத் தலைவர்களும், பின்னவர்கள், ஏழு படைப்பிரிவுகளுக்கு தலைவர்களாகவும் இருப்பார்களோ என நினைக்கிறேன்.

பெரும் அழிவை உண்டாக்கப்போகும் போர் நெருங்கி வருவதைக் கண்டு, ஓ! மன்னா {ஜனமேஜா}, பாண்டவ முகாமுக்கு, அக்ரூரர், கதன், சாம்பன், உத்தவர், ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்|, ஆகுகனுடைய மகன்கள், சாருதேஷ்ணன் ஆகியோருடனும், பிறருடனும் ஹாலாயுதன் {பலராமன்} அங்கே வந்தான். வலிமைமிக்கப் புலிகளின் கூட்டம் போன்ற அந்த விருஷ்ணி குலத்தின் முதன்மையான போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டும், சூழப்பட்டும், மருத்தர்களின் மத்தியில் உள்ள வாசவனைப் {இந்திரனைப்} போலவும், கைலாய மலையின் சிகரத்தைப் போலவும் இருந்த அழகிய ராமன் {பலராமன்}, நீலப்பட்டாடை உடுத்தி, சிங்கத்தின் விளையாட்டு நடையுடனும், குடியால் சிவந்த கடைவிழிகளுடனும் அங்கே (அத்தகு நேரத்தில்) வந்தான்.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் பிரகாசம் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பயங்கரச் செயல்களைப் புரியும் பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்}, காண்டீவதாரி {அர்ஜுனன்} மற்றும் அங்கிருந்த பிற மன்னர்கள் அனைவரும் அவனைக் {பலராமனைக்} கண்டு, தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஹாலாயுதன் {பலராமன்} அந்த இடத்திற்கு வந்த போது அவர்கள் அனைவரும் தங்கள் வழிபாட்டைக் காணிக்கையாக்கினர். பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனின் {பலராமனின்} கரங்களைத் தனது கரங்களால் தொட்டான். எதிரிகளைத் தண்டிப்பவனான ஹாலாயுதனும் {பலராமனும்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையில் இருந்த அவர்கள் அனைவரையும் அணுகி, பதிலுக்கு அவர்களை வழிபட்டு, வயதால் மூத்த விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் (மரியாதையாக) வணங்கி, யுதிஷ்டிரனுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

மன்னர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் தன் பார்வையைச் செலுத்தியபடி பேச ஆரம்பித்தான். அவன் {பலராமன்}, இந்தக் கடுமையான, கொடூரமான படுகொலை தவிர்க்க முடியாததாகும். விதியின் கட்டளை இஃது என்பதில் ஐயமில்லை. மேலும் இது தவிர்க்கப்பட முடியாததே எனவும் நான் நினைக்கிறேன். எனினும், உங்கள் நண்பர்களுடன் கூடிய நீங்கள் அனைவரும், நல்ல உடல்களுடனும், முற்றான நலத்துடனும், இந்தக் கலவரத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வருவீர்கள் என நம்புகிறேன். ஒன்றாகக் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவருக்கும், அவர்களது நேரம் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இரத்தம் மற்றும் சதையினாலான சேற்றில் மூழ்கிய ஒரு கடுமையான கைக்கலப்பு நேரப்போவது உறுதியாகிவிட்டது.

தனிமையில் நான் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நம்மிடம் சமமான உறவுமுறை கொண்டோரிடம் {நமது சம்பந்திகளுடன்}, சமமான நடத்தையை நோற்பாயாக. பாண்டவர்கள் நமக்கு எப்படியோ, அப்படியே மன்னன் துரியோதனனுமாவான். எனவே, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அதே உதவியைக் கொடுப்பாயாக. உண்மையில் அவன் {துரியோதனன்} திரும்பத் திரும்ப வேண்டினான்" எனச் சொன்னேன். எனினும், உங்களுக்காக மதுசூதனன் {கிருஷ்ணன்} எனது வார்த்தைகளை அலட்சியம் செய்தான். தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்த அவன் {கிருஷ்ணன்}, தனது முழு இதயத்துடன், உங்கள் காரியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.

பாண்டவர்களின் வெற்றி என்பது உறுதியானது என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} விருப்பமும் அதுவே ஆகும். என்னைப் பொறுத்தவரை, கிருஷ்ணன் (என் அருகில்) இல்லாத உலகத்தில் எனது கண்களைச் செலுத்த நான் துணிய மாட்டேன். இதற்காகவே, கிருஷ்ணன் அடைய முயற்சிப்பது எதுவாக இருப்பினும், அதையே நானும் பின்பற்றுகிறேன். கதாயுதப் போரில் நல்ல திறம் வாய்ந்த இந்த வீரர்கள் இருவரும் {பீமனும், துரியோதனனும்} எனது சீடர்களாவர். எனவே, எனது அன்பு, பீமனுக்கு இணையாக மன்னன் துரியோதனனிடமும் உண்டு. இந்தக் காரணங்களுக்காக, *நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன். ஏனெனில், கௌரவர்களின் அழிவை என்னால் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்றான் {பலராமன்}.

இப்படிச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட ராமன் {பலராமன்}, பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, (மேலும் மேலும் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த) மதுசூதனனைத் {கிருஷ்ணனை} தடுத்து, புனித நீர்நிலைகளுக்கான தனது பயணத்திற்குப் புறப்பட்டான்."
*******************************************************************************
*நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன்...

முந்தைய பகுதிகளில் கிருஷ்ணனிடம், துரியோதனனுக்காக பரிந்து பேசும் பலராமன், துரியோதனன் சார்பாக குருஷேத்திரப் போரில் ஈடுபட நாட்டமில்லாமலும், போரில் பங்கு கொள்ளாமலும் தீர்த்த யாத்திரை செல்கிறான்.

திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அரசியல்/ அதிகாரம்: தெரிந்துசெயல்வகை// குறள்:464

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:
தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.