Friday, July 03, 2015

படைத்தலைவரானார் பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 157

Bhishma became the Commander! | Udyoga Parva - Section 157 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 86) {சைனியநிர்யாண பர்வம் - 7}

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் தனது படைத்தலைவராகும்படி துரியோதனன் வேண்டல்; ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது தான் போரிடுவதாகப் பீஷ்மர் நிபந்தனை விதிப்பது; பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் போரிடப்போவதில்லை எனக் கர்ணன் சொல்வது; பீஷ்மரைத் துரியோதனன் தனது படையின் தலைவராக நியமிப்பது; அதன் பிறகு நேர்ந்த சில சகுனங்கள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னர்கள் அனைவருடனும் இருந்த திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சந்தனுவின் மகன் பீஷ்மரிடம், கூப்பிய கரங்களோடு, "வலிமைமிக்க ஒரு பெரும்படை கூடப் படைத்தலைவர் இல்லாதிருந்தால், போர்க்களத்தில் எறும்புக்கூட்டம் போல நிர்மூலமாக்கப்படும். இருவரின் அறிவு எப்போதும் ஏற்புடையதாக இருக்காது. மேலும், வேறுபட்ட படைத்தலைவர்கள், தங்கள் ஆற்றலைக் கருதி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் இருப்பார்கள். ஓ! பெரும் அறிவு படைத்தவரே {பீஷ்மரே}, (ஒரு காலத்தில்) குசப் புற்கட்டுகளை {குசத்வஜத்தை} {தங்கள் ஆயுதங்களாக} உயர்த்திப் பிடித்த அந்தணர்கள், அளவிலா சக்தி கொண்டவர்களும், ஹேஹய குலத்தைச் சேர்ந்தவர்களுமான க்ஷத்திரியர்களுடன் போரிட்டனர் என்று (நாம்) கேள்விப்படுகிறோம்.


ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, வைசியர்களும், சூத்திரர்களும் பிராமணர்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்படி மூன்று வகையினர் {வர்ணத்தினர்} ஒருபுறத்திலும், க்ஷத்திரியர்களில் காளையர் தனியாக ஒரு புறத்திலும் இருந்தார்கள். எனினும், நடைபெற்ற அந்தப் போரில், அந்த மூன்று வகையினரும் மீண்டும் மீண்டும் உடைந்து போனதால், க்ஷத்திரியர்கள் தனியர்களாக இருந்தாலும், தங்களை எதிர்த்த அந்தப் பெரிய படையை வீழ்த்தினார்கள். பிறகு, அந்தணர்களில் சிறந்தவர்கள் (அதன் காரணத்தைக்) குறித்து க்ஷத்திரியர்களிடமே விசாரித்தனர்.

ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, க்ஷத்திரியர்களில் அறம்சார்ந்து இருந்தவர்கள், தங்களிடம் விசாரிப்பவர்களிடம் உண்மையான பதிலைச் சொன்னார்கள். அவர்கள், "போரில் நாங்கள், பெரும் அறிவுடைய ஒருவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். நீங்களோ ஒருவருக்குள் ஒருவர் ஒற்றுமையின்றி, ஒவ்வொருவரின் தனிப்புரிதலின் படி செயல்படுகிறீர்கள்" என்றனர். பிறகு அந்த அந்தணர்கள், தங்களில் வீரமானவரும், கொள்கைகளின் {நீதியின்} வழிகளை நன்கு அறிந்தவருமான ஒருவரைப் படைத் தலைவராக நியமித்தனர். பிறகு அவர்கள் {அந்தணர்கள்} க்ஷத்திரியர்களை வீழ்த்துவதில் வென்றனர். தனக்குக் கீழிருக்கும் படைகளின் நன்மையைக் கருதுபவனும், திறன் வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான பாவமற்ற ஒரு படைத்தலைவனை நியமிக்கும் மக்களே போரில் தங்கள் எதிரிகளை வெல்கின்றனர்.

உம்மைப் பொருத்தவரை, நீர் உசனசுக்கு {சுக்கிரனுக்கு} இணையானவரும் எனது நன்மையை எப்போதும் நாடுபவராகவும் இருக்கிறீர். கொல்லப்பட இயலாத நீர் அறத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராகவும் இருக்கிறீர். எனவே, நீரே எங்கள் படைத்தலைவர் ஆவீராக. ஒளிர்வனவற்றுள் சூரியனைப் போலவும், இனிமையான மூலிகைகள் அனைத்திற்கும் சந்திரனைப் போலவும், யக்ஷர்கள் மத்தியில் குபேரனைப் போலவும், தேவர்களுக்கு மத்தியில் வாசவனைப் {இந்திரனைப்} போலவும், மலைகளுக்கு மத்தியில் மேருவைப் போலவும், பறவைகளுக்கு மத்தியில் சுபர்ணனைப் {கருடனைப்} போலவும், தேவர்களுக்கு மத்தியில் குமரனைப் {முருகனைப்} போலவும், வசுக்களுக்கு மத்தியில் ஹவ்யவாகனனைப் {அக்னியைப்} போலவும் எங்களுக்கு மத்தியில் நீரே இருக்கிறீர். சக்ரனால் {இந்திரனால்} பாதுகாக்கப்படும் தேவர்களைப் போலவே, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள், அந்தத் தேவர்களைப் போலவே வெல்லப்பட முடியாதவர்கள் ஆவோம் என்பது நிச்சயம். அக்னியின் மகன் (குமரன்) {முருகன்} தேவர்களுக்குத் தலைமையில் இருப்பதைப் போல, *எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்" என்றான் {துரியோதனன்}.

அதற்குப் பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாரதா {துரியோதனா}, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, (முன்பே) உனக்கு நான் கொடுத்திருக்கும் உறுதிமொழியின்படி, என்னதான் நான் உனக்ககாகப் போரிட்டாலும், நான் அவர்களது நன்மையையும் நிச்சயம் நாட வேண்டும். மனிதர்களில் புலியான குந்தியின் மகன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர, எனக்கு இணையாக இவ்வுலகில் வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. பெரும் அறிவு படைத்த அவன் {அர்ஜுனன்}, எண்ணிலடங்கா தெய்வீக ஆயுதங்களை அறிந்தவன் ஆவான்.

எனினும், பாண்டுவின் அந்த மகன் {அர்ஜுனன்}, வெளிப்படையாக என்னுடன் போரிட மாட்டான். எனது ஆயுதங்களின் சக்தியால், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய இந்த அண்டத்தை ஒரு நொடிப்பொழுதில் என்னால் அழித்துவிட முடியும். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது நான் முதலில் போரிடுகிறேன். அந்தச் சூதமகன் {கர்ணன்}, போரில் தனது ஆற்றலை என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு தற்பெருமையாகப் பேசுகிறான்" என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, "கங்கையின் மகன் {பீஷ்மர்} உயிரோடுள்ளவரை, ஓ! மன்னா {துரியோதனா}, நான் போரிடவே மாட்டேன். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகே, நான் காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவேன்" என்றான்.

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு, அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பெரும் கொடைகளைப் பிரித்தளித்து, பீஷ்மரை முறையாகத் தனது படைகளின் தலைவராக்கினான். அவர் {பீஷ்மர்} அதிகாரத்தில் நிறுவப்பட்டதும், அழகில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ராஜாவின் உத்தரவின் பேரில், இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மகிழ்ச்சியாகப் பேரிகைகளை இசைத்து, சங்குகளை ஊதினர். எண்ணற்ற சிம்ம கர்ஜனைகள் செய்யப்பட்டன, அம்முகாமில் இருந்த விலங்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகக் கூக்குரலிட்டன.

என்னதான் வானம் மேகமற்று இருந்தாலும், இரத்த மழை பொழிந்து, பூமி சேறானது. கடும் சுழற்காற்றும், பூகம்பங்களும், யானைகளின் பிளிறல்களும் வீரர்கள் அனைவரின் இதயத்தையும் உற்சாகமிழக்கச் செய்தன. உருவமற்ற குரல்களும் {அசரீரிகளும்}, எரிகற்களின் மின்னல்கீற்றுகளும் வானத்தில் கேட்கப்படவும், பார்க்கப்படவும் செய்தன. நரிகள் தங்கள் கடும் ஊளையால், வரப்போகும் பெரும் பேரிடரை முன்னறிவித்தன. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {துரியோதனன்}, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது துருப்புகளின் தலைவராக நிறுவிய போது, மேற்கண்ட பயங்கரக் காட்சிகள் தோன்றின.

பகைவர் படையை வாட்டும் பீஷ்மரைப் படைத்தலைவராகச் {சேனாதிபதியாகச்} செய்த போது, பசுக்களையும் தங்கத்தையும் தனக்கு ஆசி கூறிய பிராமணர்களுக்கு அபரிமிதமாக அளித்து, அந்த ஆசிகளால் வளர்ந்து, தனது துருப்புகளால் சூழப்பட்டு, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது படையின் முன்னணியில் கொண்டு, தனது தம்பிகளோடு இருந்த துரியோதனன், குருக்ஷேத்திரத்திற்குத் தனது பெரும்படையுடன் அணிவகுத்தான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கர்ணனுடன் களத்தை {குருக்ஷேத்திரத்தைச்} சுற்றி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சமமான ஒரு பகுதியில் தனது பாசறையை அமைத்தான். இனிமையானதும், வளமானதும், புற்கள் மற்றும் விறகு நிறைந்ததுமான பகுதியில் அமைக்கப்பட்ட அந்தப் பாசறை, ஹஸ்தினாபுரத்தைப் போலவே ஒளிர்ந்தது."
*********************************************************************************
*எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்" என்றான் {துரியோதனன் பீஷ்மரிடம்.}...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:770.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை 
தலைமக்கள் இல்வழி இல்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை: 
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.