Friday, July 10, 2015

துரியோதனனைக் குற்றஞ்சாட்டாதீர்! - உத்யோக பர்வம் பகுதி 160

Don't impute fault to Duryodhana! | Udyoga Parva - Section 160 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 89) {சைனியநிர்யாண பர்வம் - 10}

பதிவின் சுருக்கம் : கௌரவ மற்றும் பாண்டவப் படைகளைக் குறித்துச் சொல்லும்படி சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் வேண்டிக் கேட்டு, தனது குறையையும் சொல்வது; நேர்ந்து வரும் தீமைக்குத் துரியோதனன் மட்டுமே பொறுப்பாளி அல்ல என்று சஞ்சயன் சொல்வது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "படைவீரர்கள் இப்படிப் போருக்காக (குருக்ஷேத்திரக் களத்தில்) அணிவகுத்த பிறகு, ஓ! அந்தணர்களில் காளையே {வைசம்பாயனரே}, விதியால் உந்தப்பட்ட {காலனால் ஏவப்பட்ட} கௌரவர்கள் என்ன செய்தார்கள்?"


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, படைவீரர்கள் இப்படிப் போருக்காக அணிவகுத்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்."

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வா, ஓ! சஞ்சயா, குரு {கௌரவ} மற்றும் பாண்டவத் துருப்புகளின் முகாம்களில் நடந்த நிகழ்வுகள் அனைத்தின் முழு விபரங்களையும் எனக்குச் சொல்வாயாக. போரின் தீய விளைவுகள் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனினும், *சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன். அனைத்தையும் அறிகிறேன். எனினும், எனது சொந்த நலனைக் கூட இன்னும் என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. ஓ! சூதா {சஞ்சயா}, (நடவடிக்கைகளின்) குறைபாடுகளைக் காணும் திறன் எனது புரிதலுக்கு {அறிவுக்கு} இருக்கிறது. எனினும், நான் துரியோதனனை அணுகும்போது, அந்தப் புரிதல் (சரியான அந்தப் பாதையில்) இருந்து நழுவி விடுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ஓ! சஞ்சயா, எது நடக்க வேண்டுமோ, அதுவே நடக்கும். உண்மையில், போரில் தனது உடலைத் தியாகம் செய்வது, க்ஷத்திரியர் ஒவ்வொருவருக்கும் பாராட்டத்தக்க கடமையே ஆகும்" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்கும் இந்தக் கேள்வி உண்மையில் உமக்குத் தகுந்ததே. எனினும், துரியோதனன் மேல் மட்டுமே முழுத் தவறும் இருப்பதாக நீர் குற்றம் சாட்டுவது உமக்குத் தகாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது குறித்து நான் விரிவாகப் பேசுகையில் என்னைக் {நான் சொல்வதைக்} கேட்பீராக. தனது தன்னடத்தையில் {சுய நடத்தையில்} உள்ள தவறின் விளைவாகத் தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறுக்காக, காலத்தையோ, தேவர்களையோ எப்போதும் குற்றம் சாட்டக்கூடாது.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீய செயல்கள் அனைத்தையும் நிகழ்த்தும் மனிதர்களில் ஒருவன், அச்செயல்களை நிகழ்த்தியதன் விளைவால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். எனினும், பகடை ஆட்டத்தின் விளைவால் தீங்கை அனுபவித்த பாண்டுவின் மகன்கள், அமைதியாக அத்தீங்குகள் அத்தனையையும் தங்கள் ஆலோசகர்கள் அனைவருடனும் தாங்கிக் கொண்டு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடைபெறயிருக்கும் போரில் குதிரைகள், யானைகள், அளவிலா சக்தி கொண்ட மன்னர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து என்னிடம் முழுமையாகக் கேளும். ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே, இப்படிக் {வலிந்து} கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தக் கடும் போரால் ஏற்படப்போகும் உலக அழிவைப் பொறுமையாகக் கேட்ட பிறகு, சரியான அல்லது தவறான தனது செயல்பாடுகளுக்கு மனிதன் ஒருபோதும் பொறுப்பாக முடியாது என்பதைத் தவிர வேறு எதையும் தீர்மானிக்காதிருப்பீராக.

உண்மையில், மரப்பாவை {மரப் பொம்மை} போன்ற மனிதன், (தான் செய்யும் அனைத்துக்கும்) பொறுப்பாளியல்ல. இந்த வகையில், மூன்று கருத்துகள் சொல்லப்படுகிறது; அனைத்தும் கடவுளால் விதிக்கப்படுகிறது என்று சிலர் சொல்கின்றனர்; நமது தன்னிச்சையின் {சுய விருப்பத்தின்} விளைவே நமது செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர்; பிறரோ, நமது கடந்த கால வாழ்வுகளின் {முற்பிறவியில் நாம் செய்த செயல்களின்} விளைவே நமது செயல்கள் என்றும் சொல்கின்றனர். எனவே, நமக்கு நேர்ந்திருக்கும் தீமையைப் பொறுமையாகக் கேட்பீராக" என்றான் {சஞ்சயன்}.

*********பகவத்யாந பர்வம் முற்றும்*********
{*********சைனியநிர்யாண பர்வம் முற்றும்*********}
*சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன்...

திருக்குறள்/ பால்: அறத்துபால்/ இயல்: ஊழியல்/ அதிகாரம்: ஊழ்/ குறள்: 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
தமிழில் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.