A cat story told by Duryodhana! | Udyoga Parva - Section 161a | Mahabharata In Tamil
(உலூகதூதாகமன பர்வம் – 1)
பதிவின் சுருக்கம் : கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோருடன் ஆலோசித்த துரியோதனன், சூதாடியின் மகனான உலூகனை வரவழைத்து, பாண்டவர்களிடம் செல்லுமாறு அவனைப் பணித்தது; யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியசவற்றை உலூகனிடம் துரியோதனன் சொன்னது; யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு ஒரு பூனைக் கதையை உலூகனிடம் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹிரண்யவதியின் {ஆற்றின்} அருகில் உயர் ஆன்ம பாண்டவர்கள் முகாமிட்டதும், கௌரவர்களும் தங்கள் முகாம்களை நிறுவிக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், தனது துருப்புகளைப் பலமாக நிறுத்தினான். (தன் தரப்பில் இருந்த) மன்னர்கள் அனைவருக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்தினான். போர் வீரர்களின் பாதுகாப்புக்காகக் காவல் படைகளையும், சோதனைச் சாவடிகளையும் அமைத்தான். பிறகு, மனிதர்களின் ஆட்சியாளர்களான கர்ணன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோரை அங்கே வரவழைத்து, அவர்களுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (முதலில்) கர்ணனிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (அடுத்ததாக) கர்ணனுடன் சேர்த்து, தனது தம்பி துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடனும் கூட்டாக ஆலோசித்தான். பிறகு, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உலூகனைத் தனது முன்னிலையில் தனிமையில் அழைத்து அவனிடம் {உலூகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன் உலூகனிடம்}, "ஓ! உலூகா, சூதாடியின் மகனே {கைதவ்யா} {உலூகா}, பாண்டவர்களிடமும், சோமகர்களிடமும் நீ செல்வாயாக. அங்கே சென்று, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், (யுதிஷ்டிரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக.
{யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன்} "குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்தப் பயங்கரப் போர், இறுதியில் வந்தேவிட்டது. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உனது தம்பிகளுடன் கூடிய நீ ஆழ்ந்த கர்ஜனையுடன் உச்சரித்தவையும் {சொன்னவையும்}, குருக்களுக்கு மத்தியில் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தவையுமான அந்தச் செருக்கு நிறைந்த வார்த்தைகளுக்கு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நல்லது செய்யும் நேரம் இறுதியாக வந்தேவிட்டது. எனவே, நீங்கள் அனைவரும் சாதிக்கப்போவதாக உறுதியேற்ற அனைத்தையும் சாதிப்பீராக", என்று சொல்.
குந்தியின் மூத்த மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, எனது வார்த்தைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்வாயாக. "அறம்சார்ந்தவனான நீ, உனது தம்பிகளுடனும், சோமகர்களுடனும், கேகயர்களுடனும் சேர்ந்து எப்படி உனது இதயத்தை அநீதியில் நிலைநிறுத்தலாம்? அனைத்து உயிர்களின் அச்சங்களையும் விலக்கவல்லவனாக நீ இருக்க வேண்டும் என நான் நினைக்கையில், அண்டத்தையே அழிக்க நீ எப்படி விரும்பலாம்? ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், தேவர்கள் பிரகலாதனின் அரசை அவனிடம் {பிரகலாதனிடம்} இருந்து பறித்த போது, அவன் {பிரகலாதன் தேவர்களிடம்}, "தேவர்களே, எவனுடைய நீதியின் கொடிக்கம்பம் {தர்மத்துவஜம்} எப்போதும் {வெளிப்படையாக} உயர்ந்து, அவனது பாவங்கள் எப்போதும் மறைந்திருக்கிறதோ, அவன், (கதைகளில் சொல்லப்படும்) பூனையின் நடத்தையைக் கொண்டவனாவான்", என்ற {பொருள்படும்} செய்யுளைப் {சுலோகத்தைப்} பாடியதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எனது தந்தைக்கு {திருதராஷ்டிரருக்கு} நாரதர் உரைத்த இந்த அற்புதக் கதையை நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில், ஒரு பொல்லாத பூனை, தன் வேலைகளை அனைத்தையும் கைவிட்டு, (பக்தன் ஒருவனின் முறைமையின்படி), தனது கரங்களை உயர்த்திக் கொண்டு, கங்கைக்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது. தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டதைப் போல நடித்து, அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறும்படி அவற்றிடம் "நான் இப்போது அறம் பயில்கிறேன்" என்று சொன்னது {சொல்லி வந்தது அந்தப் பூனை}.ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட காலத்திற்குப் பிறகு, பறவைகள் அனைத்தும் அதனிடம் {பூனையிடம்} நம்பிக்கை வைத்தன. ஒன்றாகச் சென்ற அவை {பறவைகள்}, அந்தப் பூனையைப் பாராட்டின. பறவைகளை உண்ணும் அது {அந்தப் பூனை}, அவை {பறவைகள்} அனைத்தாலும் வழிபடப்பட்டு, தன் காரியம் நிறைவேறியதாகவும், தனது தவத்தின் பயன் தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் கருதியது. மேலும் சில காலத்திற்குப் பிறகு, எலிகள் அந்த இடத்திற்குச் சென்றன. பெருஞ்செயலில் பெருமையுடன் உழைத்து, நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் ஓர் அறம் சார்ந்த உயிரினமாகவே அவை அனைத்தும் {எலிகளனைத்தும்} அதைக் {பூனையைக்} கண்டன.
அந்தத் தீர்மானமான நம்பிக்கை அடைந்த அவை {எலிகள்}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, "நமக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். எனவே, இவர் {இந்தப் பூனை} நமது தாய்மாமனாகட்டும். மேலும் இவர் நமது குலத்தின் முதியவர்களையும் சிறுவர்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும்" என்று விரும்பின. இறுதியாக அந்தப் பூனையிடம் சென்ற அவை {எலிகள்} அனைத்தும், "உமது அருளால், நாங்கள் இன்பமாகத் திரிய விரும்புகிறோம். எங்களது அருள்நிறைந்த புகலிடம் நீரே, எங்களது பெரும் நண்பர் நீரே. இதன் காரணமாக, நாங்கள் எங்கள் அனைவரையும் உமது பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நீர், அறத்தை ஈட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுபவர் நீர். எனவே, ஓ! பெரும் அறிவாளியே {பூனையாரே}, தேவர்களைக் காக்கும் இடிதாங்கியைப் {இந்திரனைப்} போல எங்களைப் பாதுகாப்பீராக" என்றன {எலிகள்}.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைத்து எலிகளாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பூனை, அவற்றிடம் {அந்த எலிகளிடம்}, "துறவை தொடர்வது, (நான் அருள வேண்டும் என்று அழைக்கப்பட்டு) பாதுகாப்பு தருவது ஆகிய இவை இரண்டும் ஒன்றாக நிலைத்திருப்பதை நான் காணவில்லை. எனினும், உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்புடைய வகையில் உங்களுக்கு நன்மை செய்வதை என்னால் தவிர்க்க முடியாது. அதே வேளையில், நீங்கள் அனைவரும் எப்போதும் எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கடும் நோன்மை நோற்பதில் நிலைத்திருக்கும் நான், எனது தவப்பயிற்சிகளால் பலவீனமாக இருக்கிறேன். எனவே, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் வழியை என்னால் காண முடியவில்லை. எனவே, நீங்கள் அனைவரும் தினமும் என்னை ஆற்றங்கரைக்குச் சுமந்து செல்ல வேண்டும்" என்றது {பூனை}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன எலிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தங்களில் முதியவை மற்றும் இளையவை ஆகியவற்றை அந்தப் பூனையிடம் ஒப்புவித்தன.
தீய ஆன்மா கொண்டதும், பாவியுமான அது {அந்தப் பூனை}, எலிகளை உண்டு, படிப்படியாகப் பருக்கவும், நல்ல நிறம் அடையவும், வலுவான உடல் உறுப்புகளைப் பெறவும் செய்தது. இப்படியே, எலிகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்த வேளையில், அந்தப்பூனை, ஆற்றலிலும் பலத்திலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. பிறகு, எலிகளனைத்தும் கூடி, தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும், "நமது மாமன் {பூனையார்}, தினமும் தடித்து வளர்கிறார். நாமோ தினமும் (எண்ணிக்கையில்) குறைந்து வருகிறோம்" என்று பேசிக்கொண்டன.
பிறகு, டிண்டிகன் என்ற பெயருடைய ஒரு குறிப்பிட்ட புத்திசாலி எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கூடியிருந்த எலிகளின் பெரும் கூட்டத்திற்கிடையே இந்த வார்த்தைகளைச் சொன்னது. அது {டிண்டிகன் என்ற எலி} "நீங்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு ஒன்றாகச் செல்லுங்கள். நான் நமது மாமனுடன் {பூனையாருடன்} உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன்" என்றது. அதற்கு அவை {அந்த எலிக்கூட்டம்}, "அற்புதம், அற்புதம்" என்று சொல்லி, தங்கள் எண்ணிக்கையில் ஒன்றை {டிண்டிகனைப்} பாராட்டின. டிண்டிகன் குறிப்பிட்டுப் பேசிய பயனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் அவை {அந்த எலிகள்} அப்படியே செய்தன. எனினும், இதை அறியாத அந்தப் பூனை டிண்டிகனை அன்று உண்டது. அதிக நேரத்தைக் கடத்தாத அந்த எலிகள் அனைத்தும், தங்களுக்குள் ஒன்றுக்குள் ஒன்று ஆலோசிக்கத் தொடங்கின.
பிறகு, கிலிகன் {கோலிகன்} என்ற பெயர் கொண்ட ஒரு மிக முதிர்ந்த எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தனது இரத்த உறவுகளின் முன்னிலையில், நீதிமிக்க இவ்வார்த்தைகளைச் சொன்னது. அது {கிலிகன் எலிக் கூட்டத்திடம்}, "நமது அம்மான் {தாய்மாமன்}, அறம் ஈட்டுவதை உண்மையில் விரும்பவில்லை. உண்மையில் அவன் {அந்தப் பூனை} நமது எதிரியாக இருந்தாலும், கபடக்காரனைப் போல நமது நண்பனாக மாறியிருக்கிறான். உண்மையில், பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழும் ஓர் உயிரினத்தின் மலம், மயிருடன் {எலிகளின் முடிகளுடன்} இருக்காது. மேலும், அவனது {பூனையாரின்} உறுப்புகள் வளர்கின்றன. நாமோ எண்ணிக்கையில் நசிந்து வருகிறோம். அது தவிர, இந்த எட்டு நாட்களாக டிண்டிகன் காணப்படவில்லை" என்றது {கிலிகன் என்ற அந்த முதிர்ந்த எலி}. இவ்வார்த்தைகளைக் கேட்ட எலிகள் அனைத்தும் திசைகள் அனைத்திலும் சிதறி ஓடின. தீய ஆன்மா கொண்ட அந்தப் பூனையும், தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்றது" {என்றான் துரியோதனன்}.
*****************************************************************************
*****************************************************************************
நைமிசாரண்யத்தில் சூதரான சௌதி > சௌனகரின் 12 வருட யாகத்தில் பங்கு கொண்ட ஆன்மீகவாதிகளின் முன்னிலையில் இந்த மகாபாரதக் கதையைச் சொல்கிறார்.சூதரான சௌதி இந்த மகாபாரதக் கதையினை இதற்கு முன் மன்னன் ஜனமேஜயன் நடத்திய நாகவேள்வியின் இடையில் வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் மன்னன் ஜனமேஜயனிடம் சொல்லும் போது தான் கேட்டதாகச் சொல்கிறார். {ஜனமேஜயன் அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் பேரனும் பரிட்க்ஷித்தின் மகனும் ஆவார்.} {அர்ஜுனன் > அபிமன்யு > பரீட்க்ஷித் > ஜனமேஜயன்}வைசம்பாயனர் > ஜனமேஜயனிடம் சொல்லும் கதையில்சஞ்சயன் > திருதராஷ்டிரனிடம் சொல்லும் கதைக்குள்துரியோதனன் > உலூகனிடம் சொல்லும் கதைக்குள்நாரதர் > திருதராஷ்டிரனிடம் சொல்லிய பூனைகதைக்குள்பூனை > எலி கூட்டத்திடம் சொன்ன சொல்தான், “ நான் இப்போது அறம் பயில்கிறேன் ” என்பதாகும்.