Sunday, July 12, 2015

உலூகன் தூது! - உத்யோக பர்வம் பகுதி 162

Uluka's emissary! | Udyoga Parva - Section 162 | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடம் தூது சென்ற உலூகன்; துரியோதனனின் பேச்சுச் சொல்லப் போகும் தன்னிடம் கோபமடைய வேண்டாம் என்று யுதிஷ்டிரனிடம் உலூகன் வேண்டுவது; யுதிஷ்டிரன் உலூகனுக்குத் துணிவூட்டுவது; துரியோதனன் சொன்ன யாவையும் உலூகன் யுதிஷ்டிரனிடமும், அர்ஜுனனிடமும் சொல்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டவ முகாமை அடைந்த அந்தச் சூதாடியின் மகன் (உலூகன்), பாண்டவர்கள் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டு, யுதிஷ்டிரனிடம், "தூதர்கள் சொல்வதை நீர் அறிவீர்! எனவே, நான் என்ன சொல்ல வேண்டும் என்று துரியோதனர் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறாரோ, அவ்வார்த்தைகளை மீண்டும் நான் சொல்லும்போது என்னிடம் கோபம் கொள்வது உமக்குத் தகாது" என்றான்.

இதைக் கேட்ட யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, "ஓ! உலூகா அஞ்சாதே! வரையறுக்கப்பட்ட {தொலைநோக்கற்ற} பார்வை கொண்டவனும், பேராசைக்காரனுமான துரியோதனனின் கருத்துகள் என்ன என்பதை எந்தக் கவலையும் இல்லாமல் எங்களுக்குச் சொல்வாயாக!" என்றான். பிறகு, ஒப்பற்றவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், பெரும்புகழ் கொண்ட கிருஷ்ணன், தனது மகன்களோடு இருந்த துருபதன், விராடன் மற்றும் ஏகாதிபதிகள் அனைவருக்கும் மத்தியில் உலூகன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.


உலூகன் {யுதிஷ்டிரனிடம்}, "குரு வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், உயர் ஆன்மா கொண்ட மன்னர் துரியோதனர் உங்களுக்குச் சொல்லி அனுப்பியது இதுவே. ஓ! யுதிஷ்டிரரே அந்த வார்த்தைகளைக் கேளும்!"

"{துரியோதனர் சொன்னார்}, பகடையில் நீ வீழ்த்தப்பட்டாய். கிருஷ்ணையும் சபைக்குக் கொண்டு வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒருவன் இதற்குக் கோபப்படுவதே நியாயம். பனிரெண்டு {12} வருடங்களாக நீங்கள் வீட்டைவிட்டுக் காட்டுக்குத் துரத்தப்பட்டிருந்தீர்கள். முழுமையாக ஒரு வருடம் விராடனுக்குச் சேவை செய்தே நீங்கள் வாழ்ந்தீர்கள். கோபத்துக்குக் காரணமாக இருக்கும் வனவாசம் மற்றும் கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகியவற்றை நினைவுகூர்ந்து, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ஆண்மையுடன் இருப்பாயாக!

ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பலவீனனாக இருப்பினும் பீமன் ஒரு உறுதிமொழியை ஏற்றான்! அவனால் {பீமனால்} முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கட்டும்! உனது ஆயுதங்கள் முறையாக வழிபடப்பட்டு, அதன் தலைமை தெய்வங்கள் {மானசீகமாக} எழுப்பப்பட்டுவிட்டன! குருக்ஷேத்திரக் களமோ புழுதியற்று இருக்கிறது. சாலைகள் சமமாக இருக்கின்றன. உனது குதிரைகள் நன்கு ஊட்டப்பட்டிருக்கின்றன. எனவே, கேசவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்டு நாளை போரில் ஈடுபடுவாயாக!

பீஷ்மரைப் போரில் இன்னும் அணுகாமல், தற்புகழ்ச்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? கந்தமாதன மலைகளில் தான் ஏறப்போவதைக் குறித்துத் தற்புகழ்ச்சி பேசும் ஒரு மூடனைப் போல, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஒப்பற்றவனான சூத மகனையோ (கர்ணனையோ), வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} இணையாக இருப்பவரையோ {துரோணரையோ} போரில் வீழ்த்தாமல், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஆட்சியை ஏன் நீ விரும்புகிறாய்?

வேதங்கள், வில், ஆகிய இரண்டிலும் ஆசானாக இருப்பவர் {துரோணர்}, கல்வியில் அந்த இரு கிளைகளின் எல்லைகளை அடைந்தவராவார். படைகளின் தலைவரும், கலங்கடிக்கப்பட முடியாதவரும், படையின் முன்னணியில் இருந்து போரிடுபவரும், பலத்தில் எந்தக் குறைவையும் அடையாதவருமான ஒப்பற்ற துரோணரை வீழ்த்த நீ வீணாக விரும்புகிறாய்.

காற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை! எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையில் நடைபெற்றால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தலைகீழாகும். உயிரை விரும்பும் எவனும், யானையின் முதுகிலோ, குதிரையிலோ, தேரிலோ இருந்து அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவரிடம் {துரோணரிடம்} போரிட்டால் (பாதுகாப்பாகவும், உடல்நலத்துடனும்) அவன் {எதிர்ப்பவன்} வீடு திரும்ப முடியுமா? தன் கால்களால் பூமியில் நடக்கும் எந்த உயிரினம்தான் தான், துரோணர் மற்றும் பீஷ்மரால் தாக்கப்பட்டும், அவர்களின் கணைகளால் துளைக்கப்பட்டும், போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்?

தேவர்களின் படைகளைப் போன்று இருப்பதும், தேவர்களால் காக்கப்படும் சொர்க்கத்தைப் போல, இந்த மன்னர்களால் காக்கப்படுவதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களால் காக்கப்படுவதும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்}, மற்றும் உண்மையில் போருக்குத் தயாராக இருக்கும் பல நாட்டவரால் நிரம்பியிருப்பதும், பெருகி வரும் அலை நிறைந்த கங்கையைப் போலக் கடக்க முடியாததும், கூடியிருக்கும் ஏகாதிபதிகளுக்குச் சொந்தமானதுமான இந்தப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்? ஓ! சிறுமதி படைத்த மூடா {யுதிஷ்டிரா}, எனது யானைப் படைக்கு மத்தியில் நிலைத்திருக்கும் என்னிடம் நீ எப்படிப் போரிடப் போகிறாய்?" என்று {துரியோதனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம்} சொன்னான் {உலூகன்}.

தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன உலூகன், ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நோக்கித் தனது முகத்தைத் திருப்பி, அவனிடம் {உலூகன் அர்ஜுனனிடம்}, "ஓ! அர்ஜுனா, தற்பெருமை பேசாமால் {பிதற்றாமல்} போரிடுவாயாக! நீ ஏன் இவ்வளவு தற்பெருமை பேசுகிறாய்? செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமே வெற்றி விளையும். பிதற்றலால் ஒரு போர் வெல்லப்படுவதில்லை. கொக்கரிப்புகளின் விளைவால், இவ்வுலகில் செயல்கள் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான்? நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதையும் நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்னும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.

பரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும். இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பகடையில் வெல்லப்பட்டு நீ அடிமையானபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று? ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று?

கதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால் விடுதலை} அடைந்தீர்கள். அடிமைத்தழையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் நான் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே. ஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போது பார்த்தன் (சில காலத்திற்கு) {கூந்தலில்} பின்னலைத் தரிக்கவில்லையா? விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே)!

பின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைப் பின்னலாகக் கட்டிக் கொண்ட நீ {அர்ஜுனா} பெண்களுக்கு ஆடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா? க்ஷத்திரியர்கள் எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனையை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னிடம் அச்சங்கொண்டோ, ஓ! பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன்.

கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக! வஞ்சகமோ, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.வீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் துளைப்பதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.

என் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனைப் {கிருபரைப்} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் சிறு மீனாகவும், பிருகத்பலனை அதன் அலைகளாகவும், சோமதத்தனை அதன் திமிங்கலமாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட பலமாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், ஜெயத்ரதனை (நீருக்கடியில் உள்ள) அதன் பாறையாகவும் {மலையாகவும்}, புருமித்ரனை அதன் ஆழமாகவும், துர்மார்ஷணனை அதன் நீராகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.

ஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கப் போகும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, உனது இதயத்தை வருத்தம் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது" என்றான் {என்று துரியோதனன் சொன்னதாக அர்ஜுனனிடம் உலூகன் சொன்னான்}.