Monday, July 13, 2015

சகுனியின் மகன் உலூகன்! - உத்யோக பர்வம் பகுதி 163

Uluka, the son of Sakuni! | Udyoga Parva - Section 163 | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்னனதைத் திரும்பத் திரும்பச் சொன்ன உலூகன் பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டியது; பீமசேனனன் தனது உறுதிமொழிகளையும் ஆணைகளையும் நினைவூட்டி துரியோதனனுக்கு உலூகன் மூலம் மறுமொழி கூறியது; உலூகனையும், உலூகனின் தந்தை சகுனியையும் தானே கொல்வதாகச் சகாதேவன் சூளுரைப்பது; அர்ஜுனன், யுதிஷ்டிரன், கிருஷ்ணன் ஆகியோர் உலூகன் மூலம் துரியோதனனுக்கு மறுமொழி சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போல இருந்த அர்ஜுனனை தனது சொல்லடிகளால் மேலும் தூண்டும்வகையில், தான் பேசியதை மீண்டும் பேசினான் உலூகன். இதுபோன்று திரும்பத் திரும்பச் சொல்லி போதுமான அளவுக்குச் சினமூட்டப்பட்டிருந்த பாண்டவர்கள், இவ்வார்த்தைகளை (இரண்டாம் முறையாகக்) கேட்டாலும், அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனுடைய [1] {உலூகனுடைய} நிந்தனைகளைக் கேட்டு, தங்கள் பொறுமையை மீறும் வகையில் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் {தங்கள் இருக்கைகளில் இருந்து} எழுந்து, தங்கள் கரங்களை நீட்டினார்கள் {உதறினார்கள்}. கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல இருந்த அவர்கள், தங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் பார்வையை வீசத் தொடங்கினர்.

[1] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.

கீழ்நோக்கித் தனது முகத்தை வைத்திருந்த பீமசேனன், ஒரு பாம்பைப் போல கடுமையாக மூச்சுவிட்டபடி, இரத்தச் சிவப்புடைய தனது கடைவிழிகளால் கேசவனை {கிருஷ்ணனை} நோக்கி, அவனைச் {கிருஷ்ணனைச்} சாய்வாகப் பார்க்க ஆரம்பித்தான். அந்த வாயுத் தேவனின் மகன் {பீமன்} பெரிதும் பாதிக்கப்பட்டு, கோபத்தால் மிகவும் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "நொடியும் தாமதிக்காமல் இங்கிருந்து சென்றுவிடு. ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, "உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன. அதன் பொருளும் உணரப்பட்டது. நீ விரும்பியது நடைபெறட்டும்" என்ற இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.

ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பெரும் அறிவுடைய யுதிஷ்டிரனை மீண்டும் ஒருமுறை பார்த்தான். பிறகு, சிருஞ்சயர்கள், பெரும்புகழுடைய கிருஷ்ணன், தனது மகன்களுடன் கூடிய துருபதன், விராடன் மற்றும் (அங்குக் கூடியிருந்த) மன்னர்கள் அனைவருக்கும் மத்தியிலும், முன்னிலையிலும், கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்பைக் குச்சியால் எரிச்சலூட்டுவது போல, அர்ஜுனனிடம் அதே வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை சொன்ன உலூகன், மீண்டும் அவனை {அர்ஜுனனைத்} தூண்டினான். பிறகு அவன் {உலூகன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் அனைவரிடமும் துரியோதனன் தனக்கு அறிவுறுத்தியபடியே சொன்னான். உலூகனால் உச்சரிக்கப்பட்ட அந்தக் கடுமையான மற்றும் ஏற்கத்தகாத வார்த்தைகளைக் கேட்ட பார்த்தன் {அர்ஜுனன்} மிகவும் கலங்கி, தனது நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} இந்நிலையில் கண்ட அந்த ஏகாதிபதிகளின் சபையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனுக்கும், உயர் ஆன்ம பார்த்தனும் {அர்ஜுனனுக்கும்} நேர்ந்த அவமதிப்பைக் கண்ட பாண்டவர்களின் தேர் வீரர்கள் அனைவரும் பெரிதும் கலங்கினர். அவர்கள் பெரும் மனோ உறுதி கொண்டவர்களாக இருப்பினும், அந்த மனிதர்களில் புலிகள் கோபத்தில் எரியத் {எரிச்சலடையத்} தொடங்கினர். திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, மன்னன் திருஷ்டகேது, பெரும் ஆற்றல் கொண்ட பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து குதித்தெழுந்தனர். கோபத்தால் அவர்களது கண்கள் சிவந்திருந்தன. சிவந்த சந்தனக் குழம்பாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அழகிய கரங்களை அவர்கள் உதறிக் கொண்டார்கள்.

பிறகு, குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்}, அவர்களது உடல் அசைவுகளையும், இதயங்களையும் புரிந்து கொண்டு, தனது இருக்கையில் இருந்து எழும்பினான். தனது பற்களைக் கடித்து, தனது கடைவாயை நாவால் நக்கி, கோபத்தால் எரிந்து, தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, தனது கண்களைக் கடும் சிவப்பாக்கி,  {பீமன்} உலூகனிடம், "அறியா மூடா {உலூகா}, நாங்கள் ஏதோ அறிவாற்றலற்ற பேதையர் கூட்டம் என்று நினைத்து எங்களைத் தூண்டும் நோக்கோடு துரியோதனனால் சொல்லப்பட்ட உனது வார்த்தைகள் அனைத்தும் {எங்களால்} கேட்கப்பட்டன! இப்போது நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, {கௌரவர்களிடம் சென்று}, சூதனின் மகனும் {கர்ணனும்}, தீய இதயம் படைத்த சகுனியும் கேட்டுக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் மத்தியில் அணுக முடியாதபடி இருக்கும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} திரும்பச் {இவ்வார்த்தைகளைச்} சொல்வாயாக.

{பீமன், துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம்} "நாங்கள் எப்போதும் எங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனை} மனநிறைவு கொள்ளச் செய்யவே முயல்கிறோம்! ஓ! தீய நடத்தை கொண்டவனே {துரியோதனா}, இதற்காகவே நாங்கள் உனது செயல்களைப் பொறுத்தோம். இதை உனக்குக் கிடைத்த உயர்ந்த நற்பேறாக நீ கருதவில்லையா? பெரும் புத்திக்கூர்மையுடையவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரர், நமது குலத்தின் நன்மைக்காக மட்டுமே, சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ரிஷிகேசனை {கிருஷ்ணனை} குருக்களிடம் அனுப்பி வைத்தார். விதியால் உந்தப்பட்ட நீயோ யமனுலகு செல்ல விரும்புகிறாய் என்பதில் ஐயமில்லை. வா, எங்களிடம் போரிடுவாயாக. எப்படியிருப்பினும், நாளை அது நிச்சயம் நடக்கும்!

உண்மையில், நான் உனது சகோதரர்களுடன் சேர்த்து உன்னைக் கொல்வதாகவே உறுதியேற்றிருக்கிறேன். ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும்! வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது! யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உறுதி! கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன்! க்ஷத்திரிய சபைக்கு மத்தியில் நான் சொன்னவை நிச்சயம் உண்மையாகும். இஃது என் ஆன்மா மீது ஆணை" என்றான் {பீமன்}.

பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த சகாதேவனும், கோபத்தால் கண்கள் சிவந்து, (கூடியிருந்த) துருப்புகளுக்கு மத்தியில் பெருமை மிக்க வீரனொருவனுக்கு உரித்தான வகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {சகாதேவன் உலூகனிடம்}, "ஓ! பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக! {உனது தந்தையிடம்}, "உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது! பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்" என்று சொல்வாயாக. ஓ! உலூகா, எங்கள் பிறப்பிலிருந்தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன்!" என்றான் {சகாதேவன்}.

பீமன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரின் சொற்களைக் கேட்ட பல்குனன் {அர்ஜுனன்}, புன்னகைத்துக் கொண்டே பீமனிடம், "ஓ! பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது! அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள்! ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீமரே}, உமது கடுமொழிகளுக்கு உலூகன் தகுந்தவனல்ல. தூதர்களிடம் என்ன தவறு இருக்கிறது? (சொல்ல வேண்டும்) என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள்" என்றான் {அர்ஜுனன்}.

பயங்கர ஆற்றல் கொண்ட பீமனிடம் இப்படிப் பேசிய அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பிறகு, வீரமிக்கத் தனது கூட்டாளிகளிடமும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான நலன்விரும்பிகளிடமும், "வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, குறிப்பாக என்னையும் பழித்துத் திருதராஷ்டிரரின் பாவம் நிறைந்த மகன் {துரியோதனன்} சொன்ன வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்! அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால் கோபத்தால் நிறைந்தீர்கள்! ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை! உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} "நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன்! ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள்!" என்றான் {அர்ஜுனன்}.

இதைக்கேட்ட மன்னர்களில் சிறந்தோர் அனைவரும் அந்த மறுமொழியில் உள்ள புத்திக்கூர்மையால் ஆச்சரியப்பட்டுத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பாராட்டினார்கள். பிறகு, அந்த மன்னர்கள் அனைவரிடமும் அவர்களது வயதுக்கும், தகுதிக்கும் ஏற்றபடி மென்மையாகப் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இறுதியாக, துரியோதனனிடம் கொண்டு செல்ல வேண்டிய வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். மேலும் யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, "நல்ல மன்னன் எவனும் அவமதிப்பைப் பொறுக்கலாகாது. இவ்வளவு நீண்ட நேரம் நீ சொன்னதைக் கேட்ட நான், இப்போது எனது மறுமொழி என்ன என்று உன்னிடம் சொல்லப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம், "ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான யுதிஷ்டிரன், கோபத்தால் கண்கள் மிகச் சிவந்து, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, தனது நாவால் தன் கடைவாயை நக்கி, கோபம் பெருகி, தனது கண்களை ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீதும், தனது தம்பிகள் மீதும் செலுத்தியபடி, மென்மை, ஆவேசம் ஆகிய இரண்டும் நிறைந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான்.

தனது பெரும் கரங்களை வீசி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "ஓ! உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. "ஓ! பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய்! ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில், எவன் தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி, தனது ஆற்றலை வெளிப்படுத்தி, தனது எதிரிகளை (போருக்கு) அழைத்து, தனது வார்த்தைகளை நிறைவேற்றுகிறானோ, அவனே ஆண்மையுள்ளவன்! ஓ! பாவம்நிறைந்த இழிந்தவனே, க்ஷத்திரியனாக இருப்பாயாக. எங்களைப் போருக்கு அழைப்பாயாக!

ஓ! உனது குலத்தில் புகழற்றவனே, நாங்கள் மரியாதை வைத்திருக்கும் பிறரை உனக்கு முன்னே விட்டு, போர் செய்யாதே. ஓ! கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக! அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக! பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலியே ஆவான்! எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய்! பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய்? {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}" என்று {உலூகனிடம்} சொன்னான் {யுதிஷ்டிரன்}.

கிருஷ்ணன் {உலூகனிடம்}, "ஓ! சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனது வார்த்தைகளையும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொல்வாயாக. "நாளை விடிந்ததும் போர் நடக்கப் போகிறது. ஓ! தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக! ஓ! மூடா, பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக மட்டுமே செயல்படத் தேர்ந்தெடுத்திருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} போரிட மாட்டான் என்று நினைத்து நீ அச்சமற்று இருக்கிறாய். எனினும், அஃது ஒருக்கணம் கூட நிலைக்காது. எனது கோபம் தூண்டப்பட்டால், வைக்கோலை எரிக்கும் நெருப்பு போல, நான் (உன்னால் கூட்டப்பட்டிருக்கும்) மன்னர்கள் அனைவரையும் எரித்துவிடுவேன்.

எனினும், யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில், புலன்களை முழுமையாக அடக்கியவனும், தனியாகப் போரிடப் போகிறவனுமான உயர் ஆன்ம பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக மட்டும் எனது பணிகளைச் செய்வேன். மூவுலகங்களின் எல்லைகளுக்கு அப்பால் நீ பறந்து சென்றாலும், பூமியின் ஆழங்களுக்குள் நீ மூழ்கிப் போனாலும், அந்த இடங்களில் எல்லாம் நீ அர்ஜுனனின் தேரை நாளை காலையில் காண்பாய். பீமனின் வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டது என்று நீ நினைக்கிறாய். ஆனால் துச்சாசனனின் இரத்தம் ஏற்கனவே குடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவாயாக. என்னதான் நீ குறுக்கான, மாறுபாடான வார்த்தைகளைப் பேசினாலும், பார்த்தனோ {அர்ஜுனனோ}, மன்னன் யுதிஷ்டிரரோ, பீமசேனனோ, இரட்டையர்களோ உன்னைத் துரும்பாகவும் மதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}" என்று {உலூகனிடம்} சொன்னான் {கிருஷ்ணன்}."