Wednesday, July 15, 2015

பீஷ்மரின் முருக வழிபாடு! - உத்யோக பர்வம் பகுதி 166

Kumara worship of Bhishma! | Udyoga Parva - Section 166 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் தனது திறமைகளையும், தான் அறிந்தவற்றையும், துரியோதனனிடம் சொல்வது; தன் தரப்பிலும் பாண்டவர்கள் தரப்பிலும் உள்ள ரதர்கள் மற்றும் அதிரதர்களின் பட்டியலைச் சொல்லுமாறு துரியோதனன் பீஷ்மரிடம் வேண்டுவது; துரியோதனன், கிருதவர்மன், சல்லியன், பூரிஸ்ரவஸ், ஜெயத்ரதன் ஆகியோரது நிலை குறித்துப் பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "போரில் பீஷ்மரைக் கொல்வேன் என்று பல்குனன் {அர்ஜுனன்} சூளுரைத்த பிறகு, துரியோதனன் தலைமையிலான எனது தீய மகன்கள் என்ன செய்தனர்? ஐயோ, வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்டவனும், உறுதியான பிடி கொண்ட வில்லாளியுமான பார்த்தன் {அர்ஜுனன்}, எனது தந்தையான {பெரியப்பாவான}, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} ஏற்கனவே கொன்றுவிட்டதாகவே நான் காண்கிறேன். அளவிலா அறிவுடையவரும், அடிப்பவர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பீஷ்மர், பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு என்ன செய்தார்? அதீத புத்திக்கூர்மை மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டவரும், போர்வீரர்களில் முதன்மையானவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கௌரவர்களின் படைத்தலைமையை ஏற்றுக் கொண்ட பிறகு என்ன செய்தார்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட சஞ்சயன், குருக்களில் மூத்தவரும், அளவிலா சக்தி படைத்தவருமான பீஷ்மர் சொன்னது அனைத்தையும் சொன்னான்"

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தலைமையை ஏற்றுக் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், துரியோதனனிடம் அவனுக்குப் பெரிதும் மகிழ்ச்சியூட்டும்படி இந்த வார்த்தைகளைச் சொன்னார். "தேவர்களின் படைத்தலைவனும், வேலாயுதம் தரித்தவனுமான குமரனை {முருகனை} வழிபட்டு, இன்று உனது படையின் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை. வலிமை சம்பந்தமான அனைத்து விவகாரங்களையும், பல்வேறு விதமான படை அணிவகுப்புகளிலும் நான் நன்கு தேர்ச்சிபெற்றவனாவேன். படைவீரர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அவர்கள் பங்குக்கு முறையாகச் செயல்பட வைப்பதையும் நான் அறிவேன். துருப்புகளை நடத்துதல் மற்றும் அவற்றை அணிவகுக்கச் செய்தல், மோதல்கள், பின்வாங்கல் ஆகிய காரியங்களில், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, (தேவர்களின் ஆசான்) பிருஹஸ்பதி அளவுக்குத் தேர்ச்சி பெற்றவன் நான். தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாகக் காணப்படும் அணிவகுப்பு முறைகள் அனைத்தையும் நான் அறிவேன். இவற்றைக் கொண்டு நான் பாண்டவர்களைக் குழப்புவேன். உனது (இதயத்தின்) நோய் அகலட்டும். (இராணுவ) அறிவியல் விதிகளின் படி நான் உனது படைகளை முறையாகக் காத்து, (உனது எதிரியுடன்) போரிடுவேன். ஓ! மன்னா {துரியோதனா}, உனது இதயதின் நோய் அகலட்டும்" என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வந்தாலும் கூட நான் அஞ்ச மாட்டேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். வெல்லப்பட்ட முடியாத நீர் எனது படைகளின் தலைவராகவும், மனிதர்களில் புலியான துரோணர் போருக்கான விருப்பத்துடன் காத்திருக்கும்போதும், எனது அச்சம் எவ்வளவு சிறியதாக இருக்கக்கூடும். மனிதர்களில் முதன்மையானவர்களான நீங்கள் இருவரும் போரில் எனது பக்கத்தில் இருக்கும்போது, வெற்றி என்ன? தேவர்களின் ஆட்சி கூட என்னால் அடையப்பட முடியாதது அல்ல என்பது நிச்சயம். எனினும், ஓ! கௌரவரே {பீஷ்மரே}, எதிரியின் போர்வீரர்கள் மற்றும் எனது போர்வீரர்கள் அனைவரிலும் எவரெவர் ரதர்கள் என்றும் எவரெவர் அதிரதர்கள் என்றும் அறிய நான் விரும்புகிறேன். ஓ! பாட்டா, எங்களைப் போலவே, பகையணி போராளிகளை (அவர்களின் ஆற்றலை) நீர் நன்கு அறிந்து வைத்திருப்பீர். இந்தப் பூமியின் தலைவர்கள் அனைவருடன் சேர்ந்து இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, கேள். ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, உனது படையில் உள்ள ரதர்களின் கணக்கைக் கேள்! ஓ! மன்னா {துரியோதனா}, எவரெவர் ரதர்கள் என்றும், எவரெவர் அதிரதர்கள் என்றும் கேட்பாயாக. உனது படையில், பல ஆயிரங்களும், பல லட்சங்களும், பல நூறு லட்சங்களுமாக ரதர்கள் இருக்கிறார்கள். எனினும், அவர்களில் முக்கியமானவர்களை நான் பெயரிட்டுச் சொல்கையில் கேட்பாயாக.

முதலாவதாக, துச்சாசனனுடன் கூடிய நூறு சகோதரர்கள் மற்றும் பிறருக்கு மத்தியில், {துரியோதனனான} நீ ரதர்களில் முதன்மையாவனாக இருக்கிறாய்!

நீங்கள் அனைவரும் அடிப்பதில் திறனும், தேர்களைப் பிளப்பதிலும், துளைப்பதிலும் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தேரோட்டியின் பகுதியில் அமர்ந்து தேரை ஓட்டவல்லவர்களும், யானையின் கழுத்தில் அமர்ந்து அவற்றை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். கதாயுதங்கள், இறகுபடைத்த கணைகள், வாள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு அடிப்பதில் நீங்கள் அனைவரும் புத்திசாலிகளாக இருக்கிறீர்கள். பொறுப்புடன் கூடிய சுமைகளைத் தாங்கவல்லவர்களாகவும், ஆயுதங்களில் சாதிப்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் துரோணர் மற்றும் சரத்வானின் மகன் கிருபர் ஆகியோரிடம் கணைகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயின்று அவர்களின் சீடர்களாக இருக்கிறீர்கள். பாண்டுவின் மகன்களால் பாண்டவர்களால் தீங்கிழைக்கப்பட்டவர்களும் [1], சக்தி கொண்டவர்களுமான இந்தத் தார்த்தராஷ்டிரர்கள், பாஞ்சாலர்களுடன் ஏற்படும் தவிர்க்க முடியாத போரில் மோதும் போது அவர்களை நிச்சயம் கொல்வார்கள்.

[1] இங்கே சம்ஸ்க்ருதத்தில் இருக்கும் மூலச் சொல் "பாண்டவேயை" என்பதாகும்; "பாண்டவர்களைச் சேர்ந்தவர்களால்" என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

பிறகு, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது துருப்புகள் அனைத்துக்கும் தலைவனான நான், உனது எதிரிகளை அழித்துப் பாண்டவர்களை வீழ்த்துவேன். எனது சொந்த தகுதிகளை நானே பேசிக் கொள்வது எனக்குத் தகாது. என்னை நீ அறிவாய்.

ஆயுதம் தரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனா போஜன் (போஜர் தலைவன்) கிருதவர்மன் அதிரதனாவான். உனது காரியத்தைப் போரில் அவன் சாதிப்பான் என்பதில் ஐயமில்லை. ஆயுதங்களை அறிந்தோராலும் இழிவு செய்யப்பட முடியாத அவன் {கிருதவர்மன்}, தனது ஆயுதங்களைப் பெருந்தூரத்திற்கு அடிக்கும்போதோ, வீசும்போதோ, தானவர்களை அழிக்கும் பெரும் இந்திரனைப் போலப் பகையணியை அழிப்பான்.

வலிய வில்லாளியான மத்ர ஆட்சியாளன் சல்லியனை, ஓர் அதிரதன் என நான் நினைக்கிறேன். அந்தப் போர்வீரன், (தான் போரிடும்) போர்கள் அனைத்திலும், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையாகத் தன்னைப் புகழ்ந்து கொள்கிறான். தனது சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களை {நகுல சகாதேவர்களைக்} கைவிட்டு வந்திருக்கும் அந்த மன்னர்களில் சிறந்த சல்லியன் உனதாகியிருக்கிறான். போரில், கடல் அலைகள் போன்ற கண்களால் பகைவர் கூட்டத்தை நனையச்செய்தபடி, அவன் {சல்லியன்} பாண்டவர்கள் தரப்பின் மகாரதர்களுடன் மோதுவான்.

ஆயுதங்களை அறிந்தவனும், உனது நல்ல நண்பர்களில் ஒருவனும் சோமதத்தனின் மகனுமான வலிமைமிக்க வில்லாளி பூரிஸ்ரவஸ், தேர்ப்படை பிரிவிகளின் தலைவர்களின் தலைவனாக இருக்கிறான். அவன் {பூரிஸ்ரவஸ்}, நிச்சயமாக, உன்னுடைய எதிரியின் போராளிகளுக்கு மத்தியில் ஒரு பெரிய அழிவை ஏற்படுத்துவான்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, என் தீர்மானத்தின்படி இரு ரதர்களுக்கு இணையானவனாவான். அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவன், போரில் போராடி, பெரும் ஆற்றலை வெளிப்படுத்துவான். ஓ! மன்னா {துரியோதனா}, திரௌபதியைக் கடத்தும்போது பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அந்த அவமதிப்பை மனதில் தாங்கியிருக்கும் அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் (உனக்காகப்) போரிடுவான். ஓ! மன்னா {துரியோதனா}, அதன் பிறகு {பாண்டவர்களிடம் அவமானப்பட்ட பிறகு} கடுந்தவம் பயின்ற அவன் {ஜெயத்ரதன்}, போரில் பாண்டவர்களுடன் போராட, அடைவதற்கு மிகவும் அரிதான ஒரு வரத்தை அடைந்திருக்கிறான். எனவே, தேர்வீரர்களில் புலியான அவன் {ஜெயத்ரதன்}, பழைய பகையை நினைவுக்கூர்ந்து, ஓ! ஐயா {துரியோதனா}, விடுவதற்குக் கடினமான தனது உயிரைத் துச்சமாகக் கருதி, போரில் பாண்டவர்களுடன் போரிடுவான்" என்றார் {பீஷ்மர்}.