Tuesday, July 21, 2015

அம்பையை மடியிலேற்றிய ஹோத்திரவாஹனர்! - உத்யோக பர்வம் பகுதி 178

Hotravahana caused Amva to sit on his lap! | Udyoga Parva - Section 178 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 5)

பதிவின் சுருக்கம் : அம்பையை என்ன செய்வது என்று துறவிகள் அனைவரும் ஆலோசித்தது; அம்பையை அவளது தந்தையிடமே செல்லுமாறு அந்தத் துறவிகள் சொன்னது; அதற்கு அம்பை மறுத்தது; அரசமுனியான ஹோத்திரவாஹனர் அங்கே அந்தக் காட்டுக்கு வந்தது; அம்பையைத் தனது மகளின் மகள் என்று அறிந்து கொண்ட ஹோத்திரவாஹனர், அவளைப் பரசுராமரிடம் செல்லுமாறு சொன்னது; பரசுராமரின் உயிர்த்தோழரான அகிருதவரணர் அவ்விடத்தில் தோன்றியது; அம்பையைக் குறித்து அகிருதவரணர் விசாரித்தது; ஹோத்திரவாஹனர், அவரிடம் அம்பையின் கதையைச் சொன்னது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "அறம்சார்ந்த அந்தத் துறவிகள், தங்களைத் தங்கள் வழக்கமான தொழில்களில் ஈடுபடுத்திக் கொண்டாலும், அந்தக் கன்னிகைக்கு {அம்பைக்கு} தாங்கள் என்ன செய்வது என்பதையே எந்நேரமும் நினைத்து வந்தனர். அவர்களில் சிலர், "இவள், தனது தந்தையின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்படட்டும்" என்றனர். அவர்களில் மேலும் சிலர், {ஓ! துரியோதனா, கௌர்வர்களாகிய} நம்மை நிந்திப்பதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர். சிலர், சால்வர்களின் ஆட்சியாளனிடம் {சால்வனிடம்} சென்று, அந்தக் கன்னிகையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட வேண்டும் என்று நினைத்தனர். சிலரோ, "இல்லை. அவள் {அம்பை}, அவனால் {சால்வனால்} நிராகரிக்கப்பட்டதால், அது செய்யப்படக்கூடாது" என்றனர்.


இப்படியே சில காலம் கழிந்ததும், கடும் நோன்புகளைக் கொண்ட அந்தத் தவசிகள் அவளிடம் {அம்பையிடம்} மீண்டும் ஒருமுறை, "ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, புலன்களை அடக்கிய தவசிகளால் என்ன செய்ய முடியும்? உலகை வெறுத்து, வனவாழ்வுக்கு உன்னை அர்ப்பணிக்காதே! ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, உனக்கு நன்மையான வார்த்தைகளைக் கேட்பாயாக! இங்கிருந்து புறப்பட்டு உனது தந்தையின் மாளிகையை அடைந்து அருளப்பட்டிருப்பாயாக! அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டுமோ, அதை உனது தந்தையான மன்னன் செய்வார். ஓ! மங்கலகரமானவளே {அம்பையே}, அனைத்து வசதிகளாலும் சூழப்பட்ட நீ, அங்கே மகிழ்ச்சியாக வாழ்வாயாக! நீ ஒரு பெண். எனவே, ஓ! அருளப்பட்டவளே {அம்பையே}, நீ தற்சமயம் உனது தந்தையைத் தவிர வேறு பாதுகாவலனற்று இருக்கிறாய். ஓ! அழகிய நிறம் கொண்டவளே {அம்பையே}, பெண்ணாகப்பட்டவள், தனது பாதுகாவலனாக அவளது தந்தையோ, அவளது கணவனையோ கொண்டிருக்கிறாள். அவள் வசதியான சூழ்நிலையில் இருக்கும்போது அவளது கணவனே அவளது பாதுகாவலன், ஆனால் துயரத்தில் மூழ்கியிருக்கும்போது, அவள் தனது தந்தையையே தனது பாதுகாவலனாகக் அடைகிறாள்.

வனவாழ்வு என்பது ஒருவருக்கு, அதிலும் குறிப்பாக மென்மையானவர்களுக்கு மிகுந்த வலிநிறைந்ததாகும்! பிறப்பால் நீ ஓர் இளவரசியாவாய்; ஓ! அழகிய காரிகையே {அம்பையே}, அதன் காரணமாக நீ அதிக மென்மையானவளாக இருக்கிறாய். ஓ! அருளப்பட்ட மங்கையே, (வனத்தில் உள்ள) துறவில்லங்களோடு இணைந்த வசதி குறைபாடுகளும், சிரமங்களும் எண்ணிலடங்காதவை. ஓ அழகிய நிறம் கொண்டவளே, அவற்றில் எதையும், உனது தந்தையின் இல்லத்தில் நீ தாங்க வேண்டியிருக்காது" என்றனர் {அந்தத் தவசிகள்}. ஆதரவற்ற அந்தப் பெண்ணைக் கண்ட பிற தவசிகள், அவளிடம் {அம்பையிடம்}, "ஆழ்ந்த வனமான தனிமையான கானகத்தில் உன்னைத் தனியாகக் காணும் மன்னர்கள் உன்னை வேண்டுவார்கள்! எனவே, இத்தகு வழியில் உனது இதயத்தைச் செலுத்தாதே!" என்றனர்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்பை, "எனது உறவினர்கள் அனைவராலும் நான் அவமதிக்கப்படுவேன் என்பதில் ஐயமில்லாததால், காசி நகரத்தில் இருக்கும் எனது தந்தையின் இல்லத்திற்குத் திரும்பிப்போக இயலாதவளாக நான் இருக்கிறேன். தவசிகளே, குழந்தை பருவத்தில் அங்கே நான் எனது தந்தையின் இல்லத்தில் வாழ்ந்தேன். எனினும், எனது தந்தை எங்கிருக்கிறாரோ அங்கே இப்போது என்னால் செல்ல முடியாது. தவசிகளால் பாதுகாக்கப்பட்டு, தவத்துறவுகள் பயில நான் விரும்புகிறேன். அதனால், எனது எதிர்கால வாழ்க்கையிலாவது {அடுத்த பிறவியிலாவது} இது போன்ற கடுந்துன்பங்கள் எனதாகாதிருக்கும். எனவே, தவசிகளில் சிறந்தோரே, தவத்துறவுகளைப் பயில்வதே எனது விருப்பமாகும்" என்றாள் {அம்பை}."

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "அவளை {அம்பையைக்} குறித்து அந்த அந்தணர்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில், தவசிகளில் சிறந்தவரான அரசமுனி ஹோத்திரவாஹனர் அந்தக் காட்டுக்கு வந்தார். பிறகு அந்தத் தவசிகள், வரவேற்பு மற்றும் மரியாதை நிமித்தமான விசாரணைகளைச் செய்து, ஓர் ஆசனமும் நீரும் கொடுத்து, வழிபாட்டால் அந்த மன்னனுக்கு {ஹோத்திரவாஹனருக்கு} மரியாதை செய்தனர். அவர் அமர்ந்து, சற்று ஓய்வெடுத்த பிறகு, அந்த அரசமுனி {ஹோத்திரவாஹனர்} கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கன்னிகையிடம் {அம்பையிடம்} மீண்டும் ஒருமுறை பேசினர்.

பெரும் சக்தி கொண்ட அந்த அரசமுனி {ஹோத்திரவாஹனர்}, அம்பை மற்றும் காசி மன்னனின் கதையைக் கேட்டுத் தனது இதயத்தில் மிகவும் கவலை கொண்டார். இவ்விதமாக அவள் பேசுவதைக் கேட்டும், (துயருற்றிருக்கும்) அவளைக் கண்டும், கடும் துறவுகளைக் கொண்ட அரசமுனியான அந்த உயர் ஆன்ம ஹோத்திரவாஹனர் இரக்கத்தால் நிறைந்திருந்தார்.

பிறகு, ஓ! தலைவா {துரியோதனா}, அவளின் {அம்பையின்}  தாய்வழிப் பாட்டனான {மாதாமஹர்} அவர் {ஹோத்திரவாஹனர்}, நடுங்கும் உடலோடு எழுந்திருந்து, அந்தக் கன்னிகையைத் தனது மடியில் அமர்த்திக் கொண்டு, அவளுக்கு ஆறுதல் அளிக்கத் தொடங்கினார். பிறகு அவர், ஆரம்பத்தில் இருந்து அவளது துயரங்களைக் குறித்த விபரங்களை அவளிடம் {அம்பையிடம்} இருந்து பெற்றார். அதன் பேரில், அவள் {அம்பை}, நடந்தது அனைத்தையும் நுட்பமாகச் சொன்னாள். அவள் {அம்பை} சொன்னது அனைத்தையும் கேட்ட அந்த அரச முனி {ஹோத்திரவாகனர்}, இரக்கத்தாலும், துயராலும் நிறைந்தார். மேலும், அந்தப் பெரும் முனிவர் {ஹோத்திரவாகனர்}, அவள் என்ன செய்யலாம் என்பதைக் குறித்துத் தனது மனதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.

கலக்கத்தால் நடுங்கிய அவர் {ஹோத்திரவாஹனர்}, கவலையில் மூழ்கி துன்புற்றிருந்த அந்தக் கன்னிகையிடம் {அம்பையிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, நீ உனது தந்தையின் வசிப்பிடத்திற்குத் திரும்ப வேண்டாம். நான் உனது தாயின் தந்தையாவேன். நான் உனது துயரை அகற்றுவேன். ஓ! மகளே {அம்பையே}, என்னை நம்புவாயாக! நீ இப்படி மெலிந்திருப்பதால், உண்மையில், நீ அடைந்த துன்பம் பெரியதானதுதான். எனது ஆலோசனையின் படி, நீ ஜமதக்னியின் மகனான தவசி ராமரிடம் {பரசுராமரிடம்} செல்வாயாக. ராமர் {பரசுராமர்}, இந்தப் பெரும் துன்பத்தையும், உனது துயரத்தையும் அகற்றுவார். பீஷ்மன், அவரது கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லையென்றால், அவர் {பரசுராமர்} அவனை {பீஷ்மனைக்} கொல்வார். எனவே, யுகநெருப்பின் சக்தியைக் கொண்டவரும், பிருகு குலத்தில் முதன்மையானவருமான அவரிடம் {பரசுராமரிடம்} செல்வாயாக. அந்தப் பெரும் தவசி {பரசுராமர்}, மீண்டும் உன்னைச் சரியான பாதையில் நிறுத்துவார்" என்றார் {ஹோத்திரவாகனர்}.

எப்போதும் கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்த அந்தக் கன்னிகை {அம்பை}, இதைக் கேட்டு தனது தாய்வழிப் பாட்டனான ஹோத்திரவாஹனரைத் தனது சிரம் தாழ்த்தி வணங்கி, "உனது உத்தரவின் பேரில் நான் செல்வேன்! ஆனால், உலகத்தால் கொண்டாடப்படும் அந்த மதிப்புமிக்க ஐயாவின் {பரசுராமரின்} காட்சியைப் பெறுவதில் நான் வெல்வேனா? வருத்தம் தரக்கூடிய எனது இந்தத் துயரத்தை அவர் எப்படி அகற்றுவார்? அந்தப் பிருகுவின் வழித்தோன்றலிடம் {பரசுராமரிடம்} நான் எப்படிச் செல்ல வேண்டும்? ஆகிய அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்" என்றாள் {அம்பை}.

ஹோத்திரவாஹனர் {அம்பையிடம்}, "ஓ! அருளப்பட்ட கன்னிகையே {அம்பையே}, பெருங்காட்டில் தவத்துறவுகளில் ஈடுபடுபவரும், பெரும் பலமிக்கவரும், உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவரும், ஜமதக்னியின் மகனுமான ராமரை {பரசுராமரை} நீ காண்பாய். மலைகளில் முதன்மையான மகேந்திர மலையிலேயே ராமர் {பரசுராமர்} எப்போதும் இருப்பார். வேதங்களைக் கற்ற பல முனிவர்களும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் பலரும் அங்கே வசிக்கின்றனர். செல்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக. பெரும் தவத்தகுதியும், கடும் நோன்புகளும் கொண்ட அந்தத் தவசியைச் சிரம் தாழ்த்தி வணங்கிய பிறகு, {அவரிடம்} எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. ஓ! அருளப்பட்ட பெண்ணே {அம்பையே}, நீ வேண்டுவது அனைத்தையும் அவரிடம் சொல்வாயாக. நீ எனது பெயரைக் குறிப்பிட்டால், ராமர் {பரசுராமர்} உனக்கு அனைத்தையும் செய்வார். ஏனெனில், ஜமதக்னியின் வீர மகனும், ஆயுதந்தரித்திருப்பவர்கள் அனைவரில் முதன்மையானவருமான அவர் {பரசுராமர்}, என்னிடம் மிகவும் மனநிறைவு கொண்டவரும், எனக்கு எப்போதும் நன்மையை விரும்புபவருமான என் நண்பராவார்" என்றார் {ஹோத்திரவாகனர்}.

மன்னன் ஹோத்திரவாஹனர் இவை யாவையும் அந்தக் கன்னிகையிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, அங்கே ராமரின் {பரசுராமரின்} உயிர்த்தோழரான அகிருதவரணர் தோன்றினார். அவரது வருகையால், அந்த நூற்றுக்கணக்கான முனிவர்கள் மற்றும் வயதால் முதிர்ந்த சிருஞ்சய மன்னன் [1] ஹோத்திரவாஹனர் ஆகிய அனைவரும் எழுந்து நின்றனர். அந்தக் கானக வாசிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அவருக்கான விருந்தோம்பல் சடங்குகளைச் செய்தனர். அவரைச் சுற்றியிருந்த இருக்கைகளில் அவர்கள் அனைவரும் அமர்ந்தனர். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மனநிறைவாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்த அவர்கள், மகிழ்ச்சிகரமான, பாராட்டத்தக்க, அழகான தலைப்புகளில் உரையாடத் தொடங்கினர்.

[1] சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்களுடன் தொடர்புடைய குலத்தவராவர். சிருஞ்சயரான ஹோத்திரவாகனர் பாஞ்சால மன்னன் துருபதனுக்குத் தந்தை முறை உறவினராக இருந்திருக்கக்கூடும். வனபர்வத்தின் பகுதி 26ல் யுதிஷ்டிரனைக் கொண்டாடிய ஹோத்திரவாஹனரும் இவராகவே இருக்கக்கூடும். அம்பையின் தாய், உறவுமுறையில் துருபதனின் சகோதரியாக இருந்திருக்க வேண்டும். அடுத்தப் பிறவியில் அம்பை துருபதனின் மகளாகப் பிறக்கிறாள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த உரையாடல்களின் முடிவில் அரச முனியான, உயர் ஆன்ம ஹோத்திரவாஹனர், பெரும் தவசிகளில் முதன்மையான ராமரைக் {பரசுராமரைக்} குறித்து அகிருதவரணரிடம் விசாரிக்கும் வகையில், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! அகிருதவரணரே, வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவரும், பெரும் ஆற்றல் கொண்டவருமான ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} எங்குக் காணலாம்?" என்று கேட்டார். அதற்கு அகிருதவரணர் அவரிடம் {ஹோத்திரவாஹனரிடம்}, "ஓ! தலைவா, ராமர் {பரசுராமர்}, "சிருஞ்சயர்களின் அரச முனி {ஹோத்திரவாகனர்} எனது உயிர் நண்பராவார்" என்று, ஓ! மன்னா {ஹோத்திரவாகனரே} எப்போதும் உம்மைக் குறித்துப் பேசுவார். நாளை காலை ராமர் இங்கிருப்பார் என நான் நம்புகிறேன் {நினைக்கிறேன்}. உம்மைக் காண அவர் {பரசுராமர்} வரும்போது, இங்கேயே அவரை {பரசுராமரை} நீர் காண்பீர். ஓ! அரச முனியே {ஹோத்திரவாகனரே}, இந்தக் கன்னிகை எதற்காக வனத்திற்கு வந்தாள்? இவள் யாருடையவள்? உமக்கு இவள் என்ன வேண்டும்? இவை அனைத்தையும் அறிய நான் விரும்புகிறேன்" என்றார் {அகிருதவரணர்}.

அதற்கு ஹோத்திரவாஹனர் {அகிருதவரணரிடம்}, "காசியின் ஆட்சியாளனுக்குப் பிடித்தமான மகளான இவள், ஓ! தலைவா {அகிருதவரணரே}, எனது மகளின் குழந்தையாவாள். காசி மன்னனின் மூத்த மகளான இவள், அம்பை என்ற பெயரால் அறியப்படுகிறாள். ஓ! பாவமற்றவரே {அகிருதவரணரே}, சுயம்வர விழாவுக்கு மத்தியில், தனது தங்கைகள் இருவருடன் இவள் இருந்தாள். ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {அகிருதவரணரே}, அம்பிகை, அம்பாலிகை ஆகியன இவளது தங்கைகளின் பெயர்களாகும். பூமியின் க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரும் அங்கே காசி நகரத்தில் கூடியிருந்தனர்.

ஓ! மறுபிறப்பாள முனிவரே {அகிருதவரணரே}, இந்தக் கன்னிகையரின் (சுயம்வரத்தின்) காரணமாக, அங்கே பெரும் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதற்கு மத்தியில் பெரும் வீரம் மிக்கவனான சந்தனுவின் மகன் பீஷ்மன், அந்த மன்னர்கள் அனைவரையும் அவமதித்து, இந்தப் பெண்களைக் கடத்திச் சென்றான். அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் வீழ்த்தியவனும், தூய ஆன்மா கொண்டவனுமான பாரதக் குலத்தின் பீஷ்மன், ஹஸ்தினாபுரத்தை அடைந்து, சத்தியவதியிடம் அனைத்தையும் சொல்லி, தான் கொண்டு சென்ற பெண்களைத் தனது தம்பி விசித்திரவீரியன் திருமணம் செய்யும் வகையில் கட்டளையிட்டான்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததைக் கண்ட இந்தக் கன்னிகை {அம்பை}, ஓ! அந்தணர்களில் காளையே {அகிருதவரணரே}, கங்கையின் மைந்தனிடம் {பீஷ்மனிடம்}, அவனது அமைச்சர்கள் முன்னிலையில், "ஓ! வீரரே {பீஷ்மரே}, எனது இதயத்தினுள் சால்வர்களின் தலைவனை {சால்வனை} எனது கணவனாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். அறநெறி அறிந்த நீர், இதயத்தை வேறு ஒருவருக்குக் கொடுத்திருக்கும் என்னை, உமது தம்பிக்கு அளிக்காதிருப்பதே தகும்" என்றாள்.

இவளின் {அம்பையின்} வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மன், தனது அமைச்சர்களுடன் ஆலோசித்தான். இந்தக் காரியத்தில் ஆழ்ந்து சிந்தித்த அவன் {பீஷ்மன்}, சத்தியவதியின் சம்மதத்துடன் இந்தக் கன்னிகையை அனுப்பி வைத்தான். பீஷ்மனால் இப்படி அனுமதிக்கப்பட்ட இந்தப் பெண், சௌபத்தின் தலைவனான சால்வனிடம் மகிழ்ச்சியாகச் சென்றாள். இவள் {அம்பை}, அவனிடம் {சால்வனிடம்}, "பீஷ்மரால் நான் விடுவிக்கப்பட்டேன். நீதியில் இருந்து வழுவாமல் என்னைப் பார்த்துக் கொள்ளும்! ஓ! மன்னர்களில் காளையே {சால்வரே}, எனது இதயத்தில் உம்மையே நான் கணவராகத் தேர்ந்தெடுத்தேன்" என்றாள் {அம்பை}. எனினும் சால்வனோ, இவளது நடத்தையின் தூய்மையில் ஐயங்கொண்டு இவளை {அம்பையை} நிராகரித்தான். தவத்தின் புனிதத்தைக் கருதி, தவத்துறவுகளில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள மிகுந்த ஊக்கத்துடன் இவள் {அம்பை} காட்டுக்கு வந்துவிட்டாள்! இவளது பெற்றோரைக் குறித்து இவள் {அம்பை} சொன்னபோதுதான் நான் இவளை {எனது பேத்தியாக} அறிந்தேன். இவளது கவலையைப் பொறுத்தவரை, பீஷ்மனே அதன் {தனது கவலையின்} வேர் என்று இவளால் {அம்பையால்} கருதப்படுகிறான்" என்றார் {ஹோத்திரவாகனர்}.

ஹோத்திரவாஹனர் சொல்வதை நிறைத்தியதும், அம்பை {அகிருதவரணரிடம்}, "ஓ! புனிதமானவரே, எனது தாயின் உடலைப் படைத்தவரும், பூமியின் தலைவரும், சிருஞ்சய குலத்தைச் சார்ந்தவருமான இந்த ஹோத்திரவாஹனர் சொன்னபடியே நடந்தன. ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {அகிருதவரணரே}, அவமானத்தின் மீது கொண்ட அச்சம் மற்றும் நாணத்தால், ஓ! பெரும் முனிவரே, நான் எனது நகரத்திற்குத் திரும்ப முயலவில்லை. தற்போது, ஓ! புனிதமானவரே {அகிருதவாகனரே}, புனிதமான ராமர் {பரசுராமர்}, எனது உயர்ந்த கடமை என்று எதை எனக்குச் சுட்டிக் காட்டுவாரோ, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, அதுவே எனது தீர்மானமாக இருக்கும்" என்றாள் {அம்பை}.