Akritavrana urged Amva! | Udyoga Parva - Section 179 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 6)
பதிவின் சுருக்கம் : சால்வனை மணந்து கொள்ளச் செய்வது, அல்லது பீஷ்மரைக் கொல்வது ஆகிய இரண்டில் ஒரு தீர்வைச் சொல்லுமாறு அகிருதவரணர் அம்பையிடம் கேட்பது; பீஷ்மரின் அறியாமையை அகிருதவரணரிடம் தெரிவித்த அம்பை, இரண்டில் எது அறிவுக்கு இசைவானதோ அதைச் செய்யுமாறு சொல்வது; பீஷ்மரே அம்பையின் துக்கத்திற்குக் காரணம் என்று அகிருதவரணர் அம்பையைத் தூண்டுவது; அடுத்த நாள் அங்கே பரசுராமர் வருவது; அவரிடம் தனது நிலையை அம்பை விளக்குவது; பீஷ்மரைத் தண்டிக்கப் பரசுராமரை அம்பை தூண்டுவது...
அகிருதரவரணர் {அம்பையிடம்}, "உனது இந்தத் துன்பங்கள் இரண்டில், ஓ! அருளப்பட்ட மங்கையே {அம்பையே}, நீ எதற்குத் தீர்வைப் பெற விரும்புகிறாய்? இதை எனக்குச் சொல்வாயாக. சௌபத்தின் தலைவன் {சால்வன்} உன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பது உனது விருப்பமாக இருந்தால், உனக்கு நன்மையைச் செய்ய விரும்பும் உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} நிச்சயம் அவனை {சால்வனைத்} தூண்டுவார்? அல்லது கங்கையின் மைந்தனான பீஷ்மன் ராமரால் {பரசுராமரால்} போரில் வீழ்த்தப்படுவதை நீ காண வேண்டும் என்றாலும், பார்கவர் {பரசுராமர்} அந்த உனது விருப்பதையும் நிறைவேற்றுவார். சிருஞ்சயர் {ஹோத்திரவாஹனர்} என்ன சொல்லப் போகிறார், நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதைக் கேட்ட பிறகு, எது செய்யப்பட வேண்டும் என்பது இன்றே தீர்மானிக்கப்படட்டும்" என்றார் {அகிருதவரணர்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட அம்பை {அகிருதவரணரிடம்}, "ஓ! புனிதமானவரே {அகிருதவரணரே}, {என் நிலையை அறியாமல்} அறியாமையில் செயல்பட்ட பீஷ்மனால் நான் அபகரிக்கப்பட்டேன். ஏனெனில், ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, எனது இதயத்தை நான் சால்வனுக்குக் கொடுத்திருந்தேன் என்பது பீஷ்மனுக்குத் தெரியாது. இதை உமது மனதில் நினைத்து, நீதிக்கு இசைவானது எதுவோ, அஃது உம்மால் தீர்மானிக்கப்படட்டும்; அந்தத் தீர்மானத்தைச் சாதிக்க வேண்டிய நடைமுறைகளும் மேற்கொள்ளப்படட்டும். ஓ! அந்தணரே {அகிருதவரணரே}, குருக்களில் புலியான பீஷ்மனிடத்திலோ, சால்வர்களின் ஆட்சியாளனிடத்திலோ, அல்லது அந்த இருவரிடத்திலும் எது முறையாகச் செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்வீராக. நான் எனது துயரத்தின் வேர் குறித்து உம்மிடம் சொல்லிவிட்டேன். ஓ! புனிதமானவரே {அகிருதவரணரே}, அறிவுக்கு இசைவானது எதுவோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்" என்றாள் {அம்பை}.
அகிருதவரணர் {அம்பையிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! அழகிய நிறம் கொண்டவளே {அம்பையே}, அறத்தில் நிலைத்த கண்களைக் கொண்டு உன்னால் சொல்லப்படும் இஃது, உண்மையில் உனக்குத் தகுந்ததே. எனினும், நான் சொல்வதைக் கேட்பாயாக! யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குக் {ஹஸ்தினாபுரத்திற்குக்} கங்கையின் மைந்தன் {பீஷ்மன்} உன்னைத் தூக்கிச் சொல்லவில்லையெனில், ஓ! மருட்சியுடைய பெண்ணே {அம்பையே}, ராமரின் {பரசுராமரின்} உத்தரவின் பேரில் சால்வன் உன்னைத் தலையில் தூக்கி வைத்திருப்பான். ஓ! கொடியிடையாளே {அம்பையே}, பீஷ்மன் உன்னைக் கடத்திச் சென்றதாலேயே மன்னன் சால்வனுக்கு உன்னைக் குறித்துச் சந்தேகங்கள் எழுந்தன. பீஷ்மன் தனது ஆண்மையில் செருக்குக் கொண்டு, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறான். எனவே, நீ உனது பழியுணர்வை (வேறு யார் மீதும் விழச்செய்யாமல்) பீஷ்மன் மீதே விழச் செய்ய வேண்டும்" என்றார் {அகிருதவரணர்}.
அந்தத் தவசியின் {அகிருதவரணரின்} வார்த்தைகளைக் கேட்ட அம்பை {அகிருதவரணரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, இந்த விருப்பம் என் இதயத்திலும் உள்ளது. முடிந்தால், போரில் பீஷ்மனைக் கொல்ல என்னால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பீஷ்மனோ, மன்னன் சால்வனோ, அவர்களில் எவரைக் நீர் குற்றவாளியாகக் கருதுகிறீரோ, {அவ்விருவரில்} எவரால் எனக்கு இந்தப் பரிதாபகர நிலை ஏற்பட்டதோ அந்த மனிதனைத் தண்டிப்பீராக", என்றாள் {அம்பை}.
பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதுபோன்ற விவாதத்திலேயே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா} அந்த நாளும் இரவும், குளிரோ வெப்பமோ இல்லாத இனிய தென்றலுடன் கடந்து சென்றது. பிறகு, சக்தியால் பிரகாசித்துக் கொண்டிருந்த ராமர் {பரசுராமர்} அங்கே தோன்றினார். தலையில் சடாமுடி தரித்து, மான் தோலுடுத்தியிருந்த அந்தத் தவசி {பரசுராமர்} தனது சீடர்களால் சூழப்பட்டிருந்தார். பெருந்தன்மைமிக்க ஆன்மா கொண்டவரான அவரது {பரசுராமரின்} கையில் வில் இருந்தது. வாளும், போர்க்கோடரியும் தரித்திருந்த அந்தப் பாவமற்றவர் {பரசுராமர்}, ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, அந்தக் காட்டில் இருந்த சிருஞ்சய மன்னனை (ஹோத்திரவாஹனரை) அணுகினார்.
அங்கே வசித்திருந்த தவசிகள், பெரும் தவத் தகுதியை உடைய அந்த மன்னன் {ஹோத்திரவாகனர்} ஆகிய அனைவரும் அவரைக் கண்டு, எழுந்திருந்து, ஓ! மன்னா {துரியோதனா}, கூப்பிய கரங்களோடு காத்திருந்தனர். அந்த ஆதரவற்ற கன்னிகையும் {அம்பையும்} அதையே செய்தாள். தேன் மற்றும் தயிர்க்கடைசல்களைக் காணிக்கையாக அளித்த அவர்கள் அனைவரும், அந்தப் பார்கவரை {பரசுராமரை} மகிழ்ச்சியுடன் வழிபட்டனர். அவர்களால் முறையாக வழிபடப்பட்ட ராமர் {பரசுராமர்}, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுடன் அமர்ந்தார். ஓ! பாரதா {துரியோதனா}, பிறகு, இப்படி அமர்ந்த ஜமதக்னியின் மகனும் {பரசுராமரும்}, ஹோத்திரவாஹனரும் தங்கள் உரையாடலைத் தொடங்கினர். அவர்களது உரையாடல் முடிந்ததும் கிடைத்த வாய்ப்பில் தவசியான அந்த ஹோத்திரவாஹனர், பிருகு குலத்தின் முதன்மையானவரும், பலமிக்கவருமான ராமரிடம் {பரசுராமரிடம்}, இனிய குரலில் பயனுள்ள வார்த்தைகளைச் சொன்னார்.
அவர் {ஹோத்ததிரவாகனர் பரசுராமரிடம்}, "ஓ! ராமரே {பரசுராமரே}, காசி மன்னனின் மகளான இவள் {அம்பை}, ஓ! தலைவா, எனது மகளின் மகளாவாள் {எனக்குப் பேத்தியாவாள்}. அவளுக்குச் செய்யப்பட வேண்டிய ஒன்று உள்ளது! ஓ! அனைத்துப் பணிகளிலும் திறமிக்கவரே, அவற்றை முறையாகக் கேளும்" என்றார். தனது நண்பரின் {ஹோத்திரவாகனரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ராமர் {பரசுராமர்}, அந்தக் கன்னிகையிடம் {அம்பையிடம்}, "நீ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்வாயாக" என்றார். இந்த வார்த்தைகளால் அம்பை, சுடர்மிகும் நெருப்பென இருந்த அந்த ராமரை {பரசுராமரை} அணுகி, சிரம் தாழ்த்தி, அவரது பாதங்களை வணங்கி, தாமரைமலர்களின் இணையைப் போல இருந்த அவற்றைத் தன்னிரு கைகளாலும் தொட்டு, அவரெதிரில் அமைதியாக நின்றாள். துயரத்தால் நிறைந்த அவள் {அம்பை} உரக்க அழுதாள். அவளது கண்கள் கண்ணீரால் குளித்தன. துயர்மிக்கவர் அனைவருக்கும் புகலிடமான அந்தப் பிருகு வழித்தோன்றலின் {பரசுராமரின்} பாதுகாப்பை அவள் நாடினாள். ராமர் {அம்பையிடம்}, "உனது இதயத்தில் இருக்கும் துயரை என்னிடம் சொல்வாயாக! நான் உனது வார்த்தைகளின் படி செயல்படுவேன்" என்றார். இப்படி உற்சாகமூட்டப்பட்ட அம்பை {பரசுராமரிடம்}, "ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவரே {பரசுராமரை}, இன்று நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்! ஓ! தலைவா, முடிவற்ற இந்தத் துன்பக்கடலில் இருந்து என்னை எழுப்புவீராக {மீட்பீராக}" என்றாள் {அம்பை}.
பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "அவளது {அம்பையின்} அழகையும், இளமை நிறைந்த அவளது உடலையும், அதன் பெரும் நளினத்தையும் கண்ட ராமர் {பரசுராமர் அம்பையிடம்}, "இவள் என்ன சொல்லப் போகிறாள்?" என்று நினைக்கத் தொடங்கினார். பிருகு குலத்தைத் தழைக்கவைப்பவரான அவர் {பரசுராமர்}, தன்னுள்ளேயே இப்படி நினைத்து, இரக்கத்தால் நிறைந்து, அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு அவர் {பரசுராமர்} இனிய புன்னகைகளைக் கொண்ட அந்தக் கன்னிகையிடம் மீண்டும், "நீ சொல்ல வேண்டியதை எங்களிடம் சொல்வாயாக" என்றார். இப்படி உற்சாகப்படுத்தப்பட்ட அந்தக் கன்னிகை {அம்பை}, நடந்த அனைத்தையும் பார்கவரிடம் {பரசுராமரிடம்} தெரிவித்தாள். அந்த இளவரசியின் {அம்பையின்} வார்த்தைகளைக் கேட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் தீர்மானித்துக் கொண்டு அந்த அழகிய நிறம் கொண்ட காரிகையிடம் {அம்பையிடம்}, "ஓ! அழகிய பெண்ணே, குரு குலத்தில் முதன்மையானவனான பீஷ்மனுக்கு நான் சொல்லி அனுப்புகிறேன். எனது உத்தரவு என்ன என்பதைக் கேட்கும் அந்த மன்னன் {பீஷ்மன்}, நிச்சயம் அதற்குக் கீழ்ப்படிவான். எனினும், அந்த ஜானவியின் {கங்கையின்} மைந்தன் {பீஷ்மன்}, எனது வார்த்தைகளின்படி செயல்படவில்லையெனில், ஓ! அருளப்பட்ட பெண்ணே, போரில் நான் அவனை {பீஷ்மனை} அவனது ஆலோசகர்களுடன் சேர்த்து எரித்துவிடுவேன். அல்லது, ஓ! இளவரசி {அம்பையே}, நீ விரும்பினால், சால்வர்களின் வீர ஆட்சியாளனிடம் {சால்வனிடம்} கூட இக்காரியம் குறித்துப் பேசுவேன்" என்றார் {பரசுராமர்}.
ராமரின் {பரசுராமரின்} இவ்வார்த்தைகள் கேட்ட அம்பை {பரசுராமரிடம்}, "எனது இதயம் சால்வர்களின் ஆட்சியாளனிடம் {சால்வனிடம்} முன்பே கொடுக்கப்பட்டது என்பதை அறிந்ததும், ஓ! பிருகுலத்தின் மகனே {பரசுராமரே}, பீஷ்மன் என்னை அனுப்பிவிட்டான். சௌபத்தின் ஆட்சியாளனை அணுகிய நான், சொல்லக்கூடாமுடியாத மொழியில் எல்லாம் அவனிடம் பேசினேன். எனது நடத்தையின் தூய்மையில் சந்தேகங்கொண்ட அவன் {சால்வன்}, என்னை ஏற்க மறுத்துவிட்டான். இவை யாவையும் உமது அறிவின் துணை கொண்டு கருதிப் பார்த்து, ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தச்சூழ்நிலையில் என்ன செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்.
எனினும், பெரும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மனே, எனது துயரின் வேராவான். ஏனெனில், அவனே (தனது தேரில்) என்னைப் பலவந்தமாகத் தூக்கி வந்தான். ஓ! பிருகு குலத்தின் புலியே {பரசுராமரே}, எவனால் நான் இத்தகு துயரத்தில் மூழ்கி இதுபோன்ற கசப்பான இன்னல்களை அனுபவிக்கிறேனோ, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, அந்தப் பீஷ்மனைக் கொல்வீராக! ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, பேராசையும், இழிதன்மையும் கொண்ட பீஷ்மன் தனது வெற்றியால் செருக்கடைந்திருக்கிறான். எனவே, ஓ! பாவமற்றவரே, நீர் அவனுக்குத் {பீஷ்மனுக்குத்} தகுந்ததைக் கொடுக்க வேண்டும். அவனால் {பீஷ்மனால்} நான் கடத்தப்பட்ட போது, ஓ! தலைவா {பரசுராமரே}, பெரும் நோன்புகள் கொண்ட இந்த வீரனைக் கொல்ல நான் காரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது இதயத்தின் விருப்பமாக இருந்தது. எனவே, ஓ! பாவமற்ற ராமரே {பரசுராமரே}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவீராக! ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, விருத்திரனைக் கொன்ற புரந்தரனைப் {இந்திரனைப்} போல, நீர் பீஷ்மனைக் கொல்வீராக!" என்றாள் {அம்பை}.