Amva entered the funeral pyre! | Udyoga Parva - Section 190 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 17)
பதிவின் சுருக்கம் : வத்ஸபூமியில் வசிக்கும் தவசிகள் அம்பையின் காரியம் குறித்து அவளிடம் விசாரிப்பது; தனது நோக்கம் குறித்து அம்பை அவர்களுக்குச் சொன்னது; அம்பையுடைய தவத்தின் விளைவால் சிவன் அம்பைக்குக் காட்சி அளிப்பது; பீஷ்மனை வீழ்த்தும் வரத்தை அம்பை சிவனிடம் வேண்டுவது; சிவன் வரமளிப்பது; யமுனைக் கரையில் பெரும் சிதையைச் செய்த அம்பை அந்த அந்தணர்களின் முன்னிலையிலேயே நெருப்புக்குள் நுழைவது...
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார் "பிறகு (வத்ஸபூமியில்) வசிக்கும் அந்தத் தவசிகள் அனைவரும், தவத்துறவுகளில் தீர்மானமாக இருக்கும் காசியின் இளவரசியைக் {அம்பையைக்} கண்டு, அவளுக்கு அறிவுரை கூறி, "உனது காரியம் என்ன?" என்று அவளை விசாரித்தனர். இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {அம்பை}, தவத்துறவுகளில் முதிர்ந்த அந்தத் தவசிகளுக்குப் பதிலளிக்கும் வகையில், "பீஷ்மனால் வெளியேற்றப்பட்ட நான், ஒரு கணவனோடு வாழ வேண்டிய எனது அறத்தில் இருந்து அவனால் {பீஷ்மனால்} தடுக்கப்பட்டேன். தவத்தைச் செல்வமாகக் கொண்டோரே, எனது நோன்பு நோற்றல் அவனது {பீஷ்மனது} அழிவுக்காகவே செய்யப்படுகிறது; அருள் நிறைந்த உலகங்களுக்காக அல்ல! பீஷ்மனின் மரணத்தை நிச்சயித்துவிட்டால், அமைதி எனதாகும் {நான் அமைதியடைவேன்}. இதுவே எனது தீர்மானமாகும்.
தவத்தைச் செல்வமாகக் கொண்டோரே, இந்தத் தொடர் துயர் நிலை எனக்கு எவனால் ஏற்பட்டதோ, ஒரு கணவனைப் பெற்றிருந்தால் அடையும் பகுதியை எவனால் நான் இழந்தேனோ, பெண்ணாகவும், ஆணாகவும் இல்லாத நிலையை எவனால் நான் அடைந்தேனோ, அந்தக் கங்கையின் மகனைப் {பீஷ்மனைப்} போரில் கொல்லாமல் நான் {இக்காரியத்தில் இருந்து} விலக மாட்டேன். இதுவே நான் சொன்னதும், எனது இதயத்தில் இருப்பதுமான நோக்கமாகும். ஒரு பெண்ணாக, இனியும் எனக்கு எந்த ஆசையும் இல்லை. எனினும், நான் பீஷ்மனை பழிதீர்க்க வேண்டும் என்பதால், ஆண் தன்மையை அடைய நான் தீர்மானித்திருக்கிறேன். எனவே, நான் உங்களால் தடுக்கத்தகுந்தவள் அல்ல" என்றாள் {அம்பை}. {கேட்கப்படும் போதெல்லாம்} அவர்களிடம் இந்த வார்த்தைகளையே அவள் {அம்பை} திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
விரைவில், அந்தப் பெருமுனிவர்களுக்கு மத்தியில், உமையின் தெய்வீகத்தலைவனான திரிசூலத்தைத் தரித்தவன் {சிவன்}, தனது சுய உருவை அந்தப் பெண் தவசிக்கு {அம்பைக்கு} வெளிப்படுத்தினான். ஒரு வரத்தை வேண்டும்படி கேட்கப்பட்டபோது, அவள் {அம்பை} எனது {பீஷ்மனான எனது} வீழ்ச்சியை அந்தத் தெய்வத்திடம் {சிவனிடம்} வேண்டி விரும்பிக் கேட்டாள். பெரும் மனோசக்தி கொண்ட அந்தப் பெண்ணை {அம்பையை} நோக்கி, "நீ அவனைக் கொல்வாய்" என்பதே அந்தத் தெய்வம் {சிவன்} சொன்ன வார்த்தைகளாகும். இப்படி உறுதி கூறப்பட்ட பிறகும், அந்தக் கன்னிகை ருத்ரனிடம் {சிவனிடம்}, மீண்டும் ஒரு முறை, "ஓ! தேவா, நான் பெண்ணாக இருப்பினும் என்னால் போரில் வெற்றியடைய இயலும் என்பது எப்படி நடக்கும்? ஓ! உமையின் தலைவா {சிவனே}, ஒரு பெண்ணாக எனது இதயம் முற்றிலும் அசைவற்றதாகவே இருக்கிறது {பெண்மையிலேயே நிலைத்திருக்கிறது}. எனினும், ஓ! உயிரினங்களின் தலைவா {சிவனே}, பீஷ்மனின் தோல்வி குறித்து நீர் எனக்கு வாக்குறுதி அளித்திருக்கிறீர். ஓ! தலைவா, காளையை வாகனமாகக் கொண்டவரே {சிவனே}, உமது வாக்குறுதி உண்மையாகத் தக்க வகையில், போரில் சந்தனுவின் மகனான பீஷ்மனுடன் மோதுகையில், என்னால் அவனைக் கொல்ல இயலும் வகையில் நீர் செயல்படுவீராக" என்றாள் {அம்பை}.
காளையைத் தனது சின்னமாகக் கொண்ட அந்தத் தேவர்களுக்குத் தேவன் {சிவன்}, அந்தக் கன்னிகையிடம் {அம்பையிடம்}, "என்னால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் பொய்யாக முடியாது. ஓ! அருளப்பட்ட மங்கையே, அவை உண்மையாகும். நீ பீஷ்மனைக் கொல்வாய். ஆண்மையையும் அடைவாய். நீ புதிய உடலைப் பெறும்போது, (இந்த வாழ்வின்) நிகழ்வுகள் அனைத்தையும் நீ நினைவில் கொள்வாய். துருபதன் குலத்தில் பிறக்கும் நீ மஹாரதனாவாய். {அடுத்த பிறவியில்} ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகத்தைக் கொண்டு, கடும் வீரனாக இருக்கும் நீ, போரில் நல்ல திறம்படைத்தவனாகவும் இருப்பாய். ஓ! அருளப்பட்ட மங்கையே {கல்யாணி}, நான் சொன்னவை யாவும் உண்மையாகும். (நீ பிறந்ததில் இருந்து) சிறிது காலம் கடந்ததும், நீ ஆணாக மாறுவாய்" என்றான் {சிவன்}.
கபர்த்தின் {கபர்த்தி} [1] என்று அழைக்கப்படும் தேவர்களுக்குத் தேவனும், காளையைத் தனது சின்னமாகக் கொண்டவனுமான அவன் {சிவன்}, அந்த அந்தணர்களின் பார்வைக்கு முன்பே அங்கேயே மறைந்து போனான். இதன் பேரில், அந்தப் பெருமுனிவர்களின் பார்வைக்கு முன்பே, காட்டில் இருந்து விறகுகளைச் சேகரித்தவளும், அழகிய நிறம் படைத்த களங்கமற்ற கன்னிகையுமான காசி மன்னனின் மூத்த மகள் {அம்பை}, யமுனையில் கரையில் மிகப் பெரும் சிதையை வளர்த்து, அதற்குத் தானே நெருப்பும் வைத்து, ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, கோபத்தால் எரியும் இதயத்துடனும், "பீஷ்மனின் அழிவுக்காகவே (இப்படிச் செய்கிறேன்)" என்று சொல்லிக் கொண்டும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்தச் சுடர்மிகும் நெருப்புக்குள் நுழைந்தாள்" என்றார் {பீஷ்மர்}.
[1] கபர்த்தி என்பது சிவனைக் குறிக்கும் பெயராகும். சடாமுடிதரித்தவன் என்பது அதன் பொருள் ஆகும்.