Sunday, July 26, 2015

பாதிவுடல் நதியான அம்பை! - உத்யோக பர்வம் பகுதி 189

Amva's half of the body became a river! | Udyoga Parva - Section 189 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் :  பீஷ்மரைப் போரில் தன்னால் வீழ்த்த இயவில்லை என்றும், பீஷ்மரையே புகலிடமாகக் கொள்ளுமாறு அம்பைக்கு அறிவுறுத்திய பரசுராமர்; பரசுராமரின் கடும் முயற்சியை அங்கீகரித்த அம்பை, பீஷ்மரைக் கொல்ல தவமியற்றப் போவதாகச் சொல்லி காட்டுக்குச் சென்றது; அம்பையின் நிலை குறித்து வருந்திய பீஷ்மர்; காடுகளிலும், பல புண்ணிய இடங்களிலும் பனிரெண்டு {12} வருடங்கள் கடுந்தவம் இருந்தது; அம்பை சென்ற இடங்களின் பட்டியல்; அம்பையின் நிலை குறித்துக் கங்கை வினவியது; அம்பையை எச்சரித்த கங்கை; கங்கை எச்சரித்தது போலவே அம்பை வத்ஸ்பூமியில் ஒரு வறண்ட நதியானது...

ராமர் {பரசுராமர் அம்பையிடம்}, "ஓ! காரிகையே {அம்பையே}, இவர்கள் அனைவரின் {தேவர்கள், பித்ருக்கள் மற்றும் அந்தணர்கள்} பார்வையிலேயே, எனது ஆற்றலை வெளிப்படுத்தி, எனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி நான் போரிட்டேன்! எனது ஆயுதங்களில் மிகச் சிறந்தவற்றைப் பயன்படுத்தியும், ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான பீஷ்மனை என்னால் விஞ்ச இயலவில்லை. எனது பலத்திலும், சக்தியிலும் சிறந்ததைக் கொண்டு நான் இப்போது முயற்சித்து விட்டேன். ஓ! அழகிய பெண்ணே {அம்பையே}, நீ உனது விருப்பப்படி செல்வாயாக! உனது காரியமாக வேறு எதை நான் சாதிக்க முடியும்? பீஷ்மனின் பாதுகாப்பையே நீ நாடுவாயாக! உனக்கு இப்போது வேறு புகலிடம் கிடையாது! வலிமைமிக்க ஆயுதங்களை அடித்து, பீஷ்மன் என்னை வீழ்த்திவிட்டான்!" என்றார் {பரசுராமர்}.


இதைச் சொன்ன அந்த உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} பெருமூச்சுவிட்டபடி அமைதியாக இருந்தார். பிறகு அந்தக் கன்னிகை {அம்பை} அவரிடம் {பரசுராமரிடம்}, "ஓ! புனிதமானவரே {பரசுராமரே}, புனிதமான நீர் சொன்னது போலத்தான் இஃது இருக்கிறது! பெரும் புத்திக்கூர்மை கொண்ட இந்தப் பீஷ்மன், போரில் தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவனாக இருக்கிறான். உமது சக்தி மற்றும் முயற்சி ஆகியவற்றில் சிறந்ததைப் பயன்படுத்தி எனது காரியத்தில் நீர் ஈடுபட்டீர். நீர் இந்தப் போரில் கலங்கடிக்கப்பட முடியா சக்தியையும், பல்வேறு வகையான ஆயுதங்களையும் வெளிப்படுத்தினீர். இருப்பினும் இந்தப் போரில் உம்மால் பீஷ்மனை விஞ்ச இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் பீஷ்மனிடம் இரண்டாம் முறை செல்ல மாட்டேன். எனினும், ஓ! பிருகு குலத்தைத் தழைக்க வைப்பவரே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {பரசுராமரே}, பீஷ்மனைப் போரில் நானே கொல்லும் (வழிமுறைகளை அடையும்) இடம் எதுவோ, அங்கே நான் செல்வேன்" என்றாள் {அம்பை}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கன்னிகை {அம்பை}, கோபத்தால் கலங்கிய விழிகளுடன், தவத்துக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தீர்மானித்து, எனது மரணத்தை நிச்சயிக்க நினைத்தபடியே அங்கிருந்து சென்றாள். பிறகு பிருகு குலத்தின் முதன்மையானவர் {பரசுராமர்}, அந்தத் தவசிகளோடு சேர்ந்து என்னிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, ஓ! பாரதா {துரியோதனா}, தான் எங்கிருந்து வந்தாரோ அந்த மலைகளுக்கே {மகேந்திர மலைக்கே} சென்றார். எனது தேரில் ஏறிய நான், அந்தணர்களால் புகழப்பட்டு, நமது நகரத்திற்குள் நுழைந்து, எனது தாயான சத்தியவதியிடம், நடந்த மாற்றங்கள் அனைத்தையும் சொன்னேன். ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அவளும் எனக்கு ஆசிகளைக் கூறினாள்.

பிறகு நான், அந்தக் கன்னிகையின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளப் புத்திக்கூர்மையுடையோரை நியமித்தேன். எனது நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களும் தங்கள் நலனை விரும்புபவர்களுமான அந்த எனது ஒற்றர்கள் {உளவாளிகள்}, {எனக்குப்} பெரும் பயன்பாட்டுடன், அவளின் {அம்பையின்} போக்குகள், அவளின் வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை நாளுக்கு நாள் என்னிடம் கொண்டு வந்தார்கள். அந்தக் கன்னிகை {அம்பை} காட்டுக்குச் சென்று தவமியற்ற தீர்மானித்தபோது, நானே கூடத் துக்கமடைந்து, வலியால் துடித்து, எனது இதய ஒலியை இழந்தேன் {மனம் நொந்துப் போனேன்}.

பிரம்மத்தை அறிந்து, நோன்புகளை நோற்று, தாங்கள் ஈடுபடும் துறவுகளில் புகழ்மிக்கவர்களைத் தவிர, எந்த க்ஷத்திரியனும் தனது ஆற்றலால், போரில் என்னை எப்போதும் வீழ்த்தியதில்லை {வீழ்த்தமுடியாது}. பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, அந்தக் கன்னிகை {அம்பை} செய்த அனைத்தையும் நாரதர் மற்றும் வியாசரிடம் தாழ்மையுடன் தெரிவித்தேன். அவர்கள் இருவரும் என்னிடம், "ஓ! பீஷ்மா, காசி மகளின் {அம்பையின்} நிமித்தமாக நீ துக்கத்திற்கு வழி கொடாதே. தனிப்பட்ட உழைப்பின் மூலம் விதியைக் கலங்கடிக்க எவன் துணிவான்?" என்று கேட்டனர்.

இதற்கிடையில், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அந்தக் கன்னிகை {அம்பை}, {யமுனைக்கரையில் உள்ள} ஆசிரமங்களின் மண்டலத்தில் நுழைந்து, (சகிப்புத் தன்மையால், பொறுமையால்} மனித சக்திக்கு அப்பாற்பட்ட தவங்களைப் பயின்றாள். உணவற்று மெலிந்து போய், உலர்ந்து போய், சடா முடி தரித்துக் கொண்டு, அழுக்கடைந்த மேனியுடன் ஆறு மாதங்கள் காற்றால் மட்டுமே {காற்றை மட்டுமே உண்டு} வாழ்ந்து, தெருக்கம்பம் {மரக்கட்டையைப்} போல அசையாது நின்றிருந்தாள். தவத்தைச் செல்வமாக உடைய அந்தப் பெண் {அம்பை}, தான் நோற்ற நோன்பின் விளைவாக உணவனைத்தையும் கைவிட்ட அவள் {அந்த அம்பை}, இதன் பின்பு யமுனையின் நீரில் ஒரு வருடம் முழுவதும் நின்றிருந்தாள். பெரும் கோபமுடைய அவள், (மரத்தில் இருந்து) விழுந்த ஒரே ஓர் இலையை மட்டும் உண்டுவிட்டு, அடுத்த வருடம் முழுவதையும், தனது கால்கட்டை விரல்களின் நுனியில் நின்று கழித்தாள். இப்படியே பனிரெண்டு {12} வருடங்கள் தவமிருந்த அவள் {அம்பை}, தனது தவத்தால் சொர்க்கங்களை வெப்பமடையச் செய்தாள் {அவற்றைச் சுட்டாள்}.

அவளது {அம்பையின்} உறவினர்களால் அறிவுறுத்தப்பட்டாலும், எவ்வகையிலும் அவள் (தனது நடவடிக்கைகளின் போக்கை) நிறுத்தவில்லை. பிறகு அவள் {அம்பை} சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்ததும், பக்திச் செயல்களைச் செய்யும் உயர் ஆன்ம தவசிகளின் ஆசிரமங்கள் நிறைந்திருந்ததுமான வத்ஸபூமிக்குச் சென்றாள். அந்த இடத்தின் புனித தீர்த்தங்களில் தொடர்ச்சியாக நீராடிய அந்தக் காசியின் இளவரசி {அம்பை}, தன் விருப்பபடியே அங்கே திரிந்து வந்தாள்.

பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, (ஒன்றன் பின் ஒன்றாக) அடுத்தது நாரதரின் ஆசிரமம் [1], மங்கலகரமான உலூகரின் ஆசிரமம், சியவனரின் ஆசிரமம், அந்தணர்களின் புனிதமான இடம், தேவர்களின் வேள்விப்பீடமான பிரயாகை, தேவர்களின் புனிதமான காடு, போகவதி, குசிகரின் மகனுடைய (விஸ்வாமித்ரரின்) ஆசிரமம், மாண்டவ்யரின் ஆசிரமம், திலீபரின் ஆசிரமம், ராமஹரதம், கர்கரின் ஆசிரமம் [2] ஆகியவற்றுக்குச் சென்ற அந்தக் காசியின் இளவரசி {அம்பை}, ஓ! மன்னா {துரியோதனா}, அவை {அந்த இடங்கள்} அனைத்தின் புனிதமான நீர்களிலும் நீராடி, நாளெல்லாம் மிகக் கடினமான நோன்புகளை நோற்று வந்தாள்.

[1] வேறு பதிப்புகளில் நந்தரின் ஆசிரமம் என்று இருக்கிறது

[2] பைலகர்கர் ஆசிரமம் என்கிறது வேறு ஒரு பதிப்பு.

ஓ! கௌரவ்யா {துரியோதனா}, ஒரு நாள், நீரிலிருந்தபடியே எனது தாய் {கங்கை},  அவளிடம் {அம்பையிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே, எதற்காக நீ உன்னை இப்படித் துன்புறுத்திக் கொள்கிறாய்? உண்மையைச் சொல்?" என்று கேட்டாள். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் களங்கமற்ற காரிகை {அம்பை}, கூப்பிய கரங்களுடன் பதிலளிக்கும் வகையில், "ஓ! அழகிய கண்களைக் கொண்டவளே, போரில் ராமர் {பரசுராமர்} பீஷ்மரால் வீழ்த்தப்பட்டார். ஆயுதங்களுடன் தயாராக இருக்கும் அவனை {பீஷ்மனை} வீழ்த்த வேறு எந்த (க்ஷத்திரிய) மன்னன் துணிவான்? என்னைப் பொறுத்தவரை, பீஷ்மனின் அழிவுக்காகவே நான் கடுமையிலும் கடுமையான தவங்களைப் பயில்கிறேன். ஓ! தேவி {கங்கையே}, அந்த மன்னனைக் {பீஷ்மனைக்} கொல்லவே நான் பூமியெங்கும் திரிகிறேன். ஓ! தேவி, நான் செய்யும் அனைத்திலும், எனது பெரும் நோன்புகளிலும் இதுவே நான் பலனாகக் கருதுகிறேன்" என்றாள் {அம்பை}.

அவளது {அம்பையின்} வார்த்தைகளைக் கேட்டவளும், கடலுக்குச் செல்பவளுமான அவள் {நதியான கங்கை}, அவளிடம் மறுமொழியாக, "ஓ! மங்கையே {அம்பையே}, நீ கோணலாக {தவறாக} நடந்து கொள்கிறாய்! ஓ! பலமற்ற பெண்ணே, ஓ! களங்கமற்றவளே {அம்பையே}, இந்த உனது ஆசையை உன்னால் அடைய முடியாது. ஓ! காசியின் இளவரசியே {அம்பையே}, பீஷ்மனின் அழிவுக்காக இந்நோன்புகளை நீ நோற்கிறாய் என்றால், அவற்றை நோற்கும்போதே உனது உடலை நீ விட்டாலும் {உயிரைவிட்டாலும்}, (உனது அடுத்தப் பிறவியில்) நடை கோணலானவளும், மழைக்காலங்களில் மட்டுமே நீரைக் கொண்டவளுமான ஒரு நதியாக நீ ஆவாய். நீ செல்லும் வழியில் உள்ள நீராடும் இடங்கள் அனைத்தும் அடைவதற்கு அரிதானதாகவும், மழையின் போது மட்டுமே நிறைவனவாகவும் இருக்கும். (ஒரு வருடத்தில்) எட்டு {8} மாதங்கள் வறட்சியாக நீ இருப்பாய். பயங்கரமான முதலைகள் மற்றும் அச்சந்தரும் முகம் கொண்ட உயிரினங்களால் நிறைந்த நீ, அனைத்து உயிர்களையும் அச்சுறுத்திக் கொண்டிருப்பாய்" என்றாள் {கங்கை}.

ஓ! மன்னா {துரியோதனா}, அவளிடம் {அம்பையிடம்} இப்படிச் சொன்னவளும் உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணுமான எனது தாய் {கங்கை}, புன்னகையுடன் காசியின் இளவரசிக்கு {அம்பைக்கு} விடை கொடுத்தாள். மிகவும் அழகான அந்தக் காரிகை {அம்பை}, உணவனைத்தையும் கைவிட்டு மீண்டும் நோன்புகளைப் பயிலத் தொடங்கினாள். பின்பும், சில வேளைகளில் எட்டு மாதங்களும், சில வேளைகளில் பத்து மாதங்களும் தண்ணீரைக் கூட அருந்தாமல் நோன்புகளை நோற்றாள். மேலும் அந்தக் காசி மன்னனின் மகள் {அம்பை}, தீர்த்தங்களின் மீது கொண்ட ஆசையின் காரணமாக அங்கும் இங்கும் திரிந்து, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, மீண்டும் ஒருமுறை வத்ஸபூமிக்குத் திரும்பி வந்தாள். அங்கே தான் {அந்த வத்ஸபூமியில்தான்}, ஓ! பாரதா {துரியோதனா}, அவள் {அந்த அம்பை}, மழைக்காலங்களில் மட்டுமே நிறைபவளும், முதலைகள் பெருகினவளும், கோணலான பாதையைக் கொண்டவளும், தனது நீரை எளிதாக அணுக முடியாதவளுமான நதியாக மாறினாள் என்று அறியப்படுகிறது. ஓ! மன்னா {துரியோதனா}, தனது தவத்தகுதியின் விளைவால் அவளது {அம்பையின்} பாதி உடல் மட்டுமே வத்ஸபூமியில் {அம்பை என்ற பெயர் கொண்ட [3] } நதியானது, அதே வேளையில் மறுபாதியில் {மீதி உடலில்} அவள் முன்பைப் போலவே கன்னிகையாகவே நீடித்தாள்!" என்றார் {பீஷ்மர்}.

[3] "ஓ! பாரதா, அந்தக் கன்னிகை {அம்பை}, வத்ஸபூமியில், மாரிக்காலத்திலுள்ளதும், முதலைகள் உள்ளதும், கெட்ட நீரையுடையதும், வீணாகச் செல்வதும், அம்பை என்ற பெயர் கொண்டதுமான நதியாகப் புகழ்பெற்றாள். அவர் அந்தத் தவத்தால் பாதி உடலால் வத்ஸபூமியின் நதியாகவும் (மற்ற பாதி உடலால்) பெண்ணாகவும் ஆனாள்." என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.