Monday, July 27, 2015

சிகண்டியின் திருமணம்! - உத்யோக பர்வம் பகுதி 192

Sikhandin's Marriage! | Udyoga Parva - Section 192 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 19)

பதிவின் சுருக்கம் : சிகண்டி தொடர்பான அனைத்திலும் துருபதன் பெரும் கவனம் செலுத்தியது; சிகண்டி துரோணரின் சீடனானது; மனைவியின் வற்புறுத்தலால் துருபதன் சிகண்டிக்குப் பெண் பார்த்தது; தசார்ணகர்களின் மன்னன் ஹிரண்யவர்மனின் மகளைச் சிகண்டிக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தது; சிகண்டியின் திருமணம் முடிந்து சில நாட்களில் ஹிரண்யவர்மன் மகள் தனது கணவன் ஆணில்லை என்பதைக் காண்பது; இதை அறிந்த ஹிரண்யவர்மன், பெருங்கோபத்துடன் துருபதனிடம் தூதனை அனுப்பியது; தூதன் தான் கொண்டு வந்த செய்தியைத் துருபதனிடம் தெரிவித்தது...

1962ல் வெளிவந்த "பீஷ்மா" என்ற
தெலுங்கு திரைப்படத்தில்
சிகண்டியாக நடிகை அஞ்சலிதேவி
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, எழுத்தறிவித்தல், ஓவியம் மற்றும் பிற கலைகள் அனைத்திலும், தனது மகள் {சிகண்டி} தொடர்பான அனைத்திலும் துருபதன் பெரும் கவனம் செலுத்தினான். கணைகளிலும், ஆயுதங்களிலும் அந்தப் பிள்ளை துரோணரின் சீடனாக ஆனாள். மேன்மையான நிறம் கொண்ட அந்தப் பிள்ளையின் தாய், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவளை {சிகண்டியை} மகனாகவே கருதி, (தனது கணவனான) மன்னனிடம் {துருபதனிடம்}, அவளுக்கு மனைவியைத் தேட வற்புறுத்தினாள். பிறகு தனது மகள் {சிகண்டி} முழுமையாக இளமையை அடைந்திருப்பதைக் கண்டு, அவளது {சிகண்டியின்} பாலினத்தையும் உறுதி செய்து கொண்ட பிருஷதன் {துருபதன்} தனது ராணியுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.


துருபதன் {தன் மனைவியிடம்}, "எனது துன்பத்தை அதிகரிக்கும் இந்த எனது மகள் {சிகண்டி}, தனது இளமையை அடைந்திருக்கிறாள். திரிசூலம் தரித்த தெய்வத்தின் {சிவனின்} வார்த்தைகளின் படியே என்னால் அவள் {சிகண்டி} இதுவரை மறைக்கப்பட்டாள்" என்றான். அதற்கு அந்த ராணி {துருபதனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துருபதரே}, அது பொய்யாக முடியாது! உண்மையில், நிகழ முடியாத ஒன்றை மூவுலகங்களின் தலைவன் {சிவன்} எப்படிச் சொல்வான்? ஓ! மன்னா {துருபதரே}, நீர் விரும்பினால் நான் பேசுவேன். எனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, ஓ! பிருஷத குலத்தவரே {துருபதரே}, உமக்குத் தோன்றுவதைச் செய்யும். ஒரு மனைவியுடனான இந்தப் பிள்ளையின் {சிகண்டியின்} திருமணம் மிகக் கவனமாகச் செய்யப்படட்டும். அந்தத் தேவனின் {சிவனின்} வார்த்தைகள் உண்மையாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கையாகும்" என்றாள் {ராணி}.

பிறகு அந்த அரச தம்பதியினர், அக்காரியம் குறித்துத் தாங்கள் ஒரு தீர்மானத்தை அடைந்து, தசார்ணகர்களின் மன்னனுடைய மகளைத் தங்கள் மகனின் மனைவியாகத் தேர்ந்தெடுத்தனர். அதன் பிறகு, மன்னர்களில் சிங்கமான அரசன் துருபதன், பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிடமும் அக்குலத்தின் தூய்மையைக் குறித்து விசாரித்து, அந்தத் தசார்ணகர்கள் மன்னனின் மகளைச் சிகண்டிக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தான். தசார்ணகர்களின் மன்னனாக அழைக்கப்பட்டவன் ஹிரண்யவர்மன் என்ற பெயரைக் கொண்டவனாவான்; அவன் தனது மகளைச் சிகண்டிக்குக் கொடுத்தான்.

தசார்ணகர்களின் மன்னனான ஹிரண்யவர்மன் ஒரு வலிமைமிக்க ஏகாதிபதியாகவும், எளிதில் வீழ்த்தப்பட இயலாதவனாகவும் இருந்தான். தடுக்க இயலாதவனான அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {ஹிரண்யவர்மன்} ஒரு பெரும்படையைக் கொண்டிருந்தான். திருமணம் முடிந்து சில காலத்திற்குப் பிறகு, ஹிரண்யவர்மனின் மகள், ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, தனது இளமையை அடைந்தாள்; அதே வேளையில் துருபதனின் மகளும் {சிகண்டினியும்} தனது இளமையை அடைந்தாள். திருமணத்திற்குப் பிறகு சிகண்டி {தன் பாஞ்சால நாட்டின் தலைநகரான} காம்பில்யத்திற்குத் திரும்பி வந்தான். முன்னவளோ {ஹிரண்யவர்மனின் மகளோ}, பின்னவள் {துருபதன் மகளான சிகண்டினியை} தன்னைப் போன்ற ஒரு பெண்ணே என்பதை விரைவில் அறிந்தாள். மேலும் அந்த ஹிரண்யவர்மன் மகள், சிகண்டி உண்மையிலேயே ஒரு பெண்தான் என்பதை உறுதி செய்து கொண்டு, அந்தப் பாஞ்சாலர்களின் மன்னனுடைய மகனாக {சிகண்டியாக} அழைக்கப்பட்டவளைக் {அழைக்கப்பட்ட சிகண்டினியைக்} குறித்த அனைத்தையும் தனது செவிலிகளிடமும், தோழிகளிடமும் நாணத்துடன் தெரிவித்தாள்.

பிறகு, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, தசார்ணகர்கள் நாட்டைச் சேர்ந்த அந்தச் செவிலிகள் பெருந்துன்பத்தை அடைந்து, தங்கள் மன்னனிடம் {ஹிரண்யவர்மனிடம்} தாதிகளை அனுப்பினார்கள். அந்தத் தாதிகள், தசார்ணகர்களின் மன்னனிடம் நடந்த வஞ்சனைகள் அனைத்தையும் தெரிவித்தார்கள். அதன் பேரில், தசார்ணகர்களின் மன்னன் கோபத்தால் நிறைந்தான். [1] உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சில நாட்கள் கழித்தே இச்செய்தியை அறிந்த ஹிரண்யவர்மன் கோபத்தால் மிகவும் துன்புற்றான்.

[1] இந்த இடத்தில் முந்தைய வரிக்கும், பிந்தைய வரிக்கும் இடையில் இடைவெளியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடத்தில் வேறு ஒரு பதிப்பில் இன்னும் ஒரு செய்தி இருக்கிறது. அது பின்வருமாறு: அப்பொழுது, அரண்மனையில் இருந்த சிகண்டி, பெண் தன்மையில் சிறிதும் விருப்பம் இல்லாமலே ஆண்மகனைப் போலவே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். சில நாட்கள் கழித்து இதைக் கேட்ட ஹிரண்யவர்மன் கோபத்தால் வருத்தமடைந்தான் என்ற இச்செய்தி கங்குலியின் பதிப்பில் இல்லை.

கடுங்கோபத்தில் நிறைந்த தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} துருபதனின் இல்லத்திற்குத்  தனது தூதன் ஒருவனை அனுப்பினான். மன்னன் ஹிரண்யவர்மனின் அந்தத் தூதன், தனியாகத் துருபதனை அணுகி, அவனை ஒரு புறமாக அழைத்துச் சென்று, அவனிடம் {துருபதனிடம்} தனிமையில், "ஓ! ஏகாதிபதி, ஓ! பாவமற்றவரே {துருபதரே}, தசார்ணகர்களின் மன்னன், {ஹிரண்யவர்மன்} உம்மால் ஏமாற்றப்பட்டு, அவமதிக்கப்பட்ட கோபத்துடன், {உமக்கான செய்தியாக} "நீ என்னை அவமதித்துவிட்டாய்! உனது செயல் அறிவற்றதே என்பதில் ஐயமில்லை! மூடத்தனத்தால், நீ உன் மகளுக்காக எனது மகளைக் கேட்டிருக்கிறாய்! ஓ தீயவனே, அந்த வஞ்சகச் செயலின் விளைவை நீ அறுவடை செய்வாய்! உறவினர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருடனும் கூடிய உன்னை இதோ நான் கொல்வேன். சற்றே காத்திரு! [2]" என்ற இவ்வார்த்தைகளை உமக்குச் சொல்லி அனுப்பினார்" என்றான் {தூதன்}."

[2] வேறொரு பதிப்பில், அந்தச் செய்தி இந்த இடத்தில் நிறைவடையவில்லை. இன்னும் தொடர்கிறது. அது பின்வருமாறு: என்னுடைய வீரத்தையும், குலத்தையும், நல்ல நடத்தையையும் அவமதிக்கும் வகையில், இதுவரை மனிதர்கள் எவரும் செய்திராத வஞ்சனையை நீ எனக்குச் செய்திருக்கிறாய். காரியங்கள் அனைத்தையும் செய்து கொள். சிறந்த இன்பங்களை அனுபவித்துக் கொள். உனது சுற்றத்துடன் உன்னைக் கொல்வதற்காக விரைவில் நான் படையெடுக்கப் போகிறேன்" என்று அந்தத் தூதன் சொன்ன செய்தி முடிவடைகிறது. இச்செய்தி கங்குலியின் பதிப்பில் இல்லை.