Tuesday, July 28, 2015

மனைவியோடு ஆலோசித்த துருபதன்! - உத்யோக பர்வம் பகுதி 193

Drupada took counsel with his wife! | Udyoga Parva - Section 193 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 20)

பதிவின் சுருக்கம் : ஹிரண்யவர்மனின் கோபத்தை அறிந்த துருபதன், இனிய சொல்லுடைய தூதர்களை அவனிடம் அனுப்பியது; சிகண்டி பெண்தான் என்பதை மீண்டும் உறுதி செய்து கொண்ட ஹிரண்யவர்மன், துருபதனுக்கு எதிராகப் படைகளைத் திரட்டியது; சிகண்டி பெண்ணாக இருந்தால் துருபதனையும் அவனது அந்தப் பெண்ணையும் சேர்த்து கொல்வது என ஹிரண்யவர்மனின் ஆலோசகர்கள் தீர்மானித்தது; தனது அறியாமையை வெளிப்படுத்த பிறர் முன்னிலையில் தனது மனைவியுடன் ஆலோசித்த துருபதன்...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, அந்தத் தூதனால் இப்படிச் சொல்லப்பட்டதும், (திருடும் போது) அகப்பட்ட கள்வனைப் போல, மன்னன் துருபதனால் {ஒன்றும்} பேசமுடியவில்லை. அவன் {துருபதன்}, இனிமையான பேச்சுடைய தூதர்களை அனுப்பி, அவர்கள் மூலமாக "அப்படியில்லை" என்ற தனது செய்தியையும் அனுப்பி, தனது சம்பந்தியைச் [1] {ஹிரண்யவர்மனைச்} சமாதானம் செய்யத் தீவிரமாக முயற்சி செய்தான். எனினும், மன்னன் ஹிரண்யவர்மன், பாஞ்சாலர்களின் மன்னனுடைய பிள்ளை {சிகண்டி/ சிகண்டினி} உண்மையில் அவனது {துருபதனின்} பெண்ணே என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொண்டு, மேலும் நேரத்தைக் கடத்தாமல் தனது நகரத்தை விட்டுப் புறப்பட்டான். பிறகு அவன் {ஹிரண்யவர்மன்}, தனது மகள் வஞ்சிக்கப்பட்டாள் என்று தனது செவிலிகள் மூலம் கேள்விப்பட்ட செய்திகளை வலிமைமிக்கத் தனது நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பினான்.


[1] இங்குக் கங்குலி brother என்ற வார்த்தையைக் கையாள்கிறார். வேறு பதிப்புகளில் சம்பந்தி என்ற வார்த்தை இருக்கிறது. நாம் சம்பந்தி என்ற வார்த்தையையே கைக்கொள்கிறோம்.

பிறகு, அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஹிரண்யவர்மன்}, பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, ஓ! பாரதா {துரியோதனா}, துருபதனுக்கு எதிராக அணிவகுக்கத் தீர்மானித்தான். பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மன்னன் ஹிரண்யவர்மன் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைக்} குறித்துத் தனது அமைச்சர்களுடன் ஓர் ஆலோசனையை நடத்தினான். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிகண்டி உண்மையிலேயே பெண்ணாக இருந்தால், நகரத்தில் {தலைநகரம் காம்பில்யத்தில்} இருந்து பாஞ்சாலர்களின் ஆட்சியாளனைக் {துருபதனைக்} கட்டி  இழுத்து வந்து, பாஞ்சாலர்களுக்கு வேறு ஒரு மன்னனை நிறுவி, சிகண்டியோடு சேர்த்துத் துருபதனைக் கொல்ல வேண்டும் என்று அந்த உயர் ஆன்ம மன்னர்களுக்கு மத்தியில் தீர்மானம் ஏற்பட்டது. (தான் அழைத்த அனைவரும் தீர்மானித்த) அதையே உறுதியான தீர்மானமாகக் கொண்ட மன்னன் ஹிரண்யவர்மன், "நான் உன்னைக் கொல்வேன், அமைதியாயிரு" என்று பிருஷதனின் வழித்தோன்றலுக்கு {துருபதனுக்கு} மீண்டும் ஒருமுறை தூதனுப்பினான்.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "மன்னன் துருபதன் இயல்பாகவே வீரமிக்கவனல்ல. மேலும், தனது குற்றத்தின் விளைவால் அவன் {துருபதன்} அச்சத்தில் நிறைந்திருந்தான். தசார்ணகர்களின் ஆட்சியாளனிடம் {ஹிரண்யவர்மனிடம்}, மீண்டும் தூதுவர்களை அனுப்பிய மன்னன் துருபதன், துக்கத்தால் பீடிக்கப்பட்டு, தனது மனைவியை அணுகி, அவளது ஆலோசனையைக் கேட்டான்.

பெரும் அச்சத்தைக் கொண்டவனும், துயரால் இதயம் பீடிக்கப்பட்டவனுமான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, சிகண்டியின் தாயான தனது அன்பிற்குரிய மனைவியிடம், "வலிமைநிறைந்த எனது சம்பந்தியான மன்னன் ஹிரண்யவர்மன், பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, கோபத்துடன் என்னை நோக்கி வருகிறான். இந்த நமது பெண்ணின் {சிகண்டினியின்} காரியமாக மூடர்களாகிய நாம் இருவரும், இப்போது என்ன செய்யப் போகிறோம்? உனது மகன் சிகண்டி, மகளே என்பதாகச் சந்தேகிக்கப்படுகிறான். இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில், தனது கூட்டாளிகளுடன் கூடிய ஹிரண்யவர்மனும், அவனைத் தொடர்ந்து வரும் படையினரும், அவன் {ஹிரண்யவர்மன்} என்னால் வஞ்சிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு என்னைக் கொல்ல விரும்புகின்றனர்.

ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, ஓ! அழகிய பெண்ணே, இதில் எது உண்மை அல்லது எது பொய் என்பதை இப்போது எங்களுக்குச் சொல்வாயாக. ஓ! அருளப்பட்ட மங்கையே, முதலில் உன்னிடம் இருந்து கேட்ட பிறகே, எப்படிச் செயல்படுவது என்பதை நான் தீர்மானிப்பேன். நானும், இந்தப் பிள்ளை சிகண்டியும் சமமான ஆபத்தில் இருக்கிறோம். உண்மையில், ஓ! ராணி, ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, நீயும் ஆபத்தின் அச்சுறுத்தலிலேயே இருக்கிறாய். அனைவரின் நிவாரணத்திற்காகவும், உன்னிடம் கேட்கும் என்னிடம், உண்மை எது என்பதைச் சொல்வாயாக. ஓ! அழகிய இடையும், இனிய புன்னகையும் கொண்டவளே, நீ என்ன சொல்கிறாய் என்பதைக் கேட்டுவிட்டு, அதற்குத் தகுந்தாற்போலவே நான் செயல்படுவேன். ஒரு மகனுக்கு ஆற்ற வேண்டிய கடைமைகளில் உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டிருந்தாலும் கூட. ஓ! அழகிய பெண்ணே, கருணையால் நான் உங்கள் இருவருக்கும் தகுந்தபடி நடந்து கொள்வேன். எனவே, அச்சப்படாதே, இந்த உனது மகளும் எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மையில், நான் தான் தசார்ணகர்களின் மன்னனை {ஹிரண்யவர்மனை} வஞ்சித்துவிட்டேன். ஓ! உயர்ந்த அருள் கொண்ட பெண்ணே, அனைத்தும் நன்மையாக மாற, நான் அவனிடம் {ஹிரண்யவர்மனிடம்} எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வாயாக" என்றான் {துருபதன்}.

உண்மையில், அந்த மன்னன் {துருபதன்} அனைத்தையும் அறிந்திருந்தாலும், மற்றவர்களுக்குத் தனது அறியாமையை அறிவிப்பதற்காக, பிறருக்கு முன்னிலையில் இவ்வழியிலேயே தன் மனைவியிடம் பேசினான். பிறகு, அவனது ராணி பின் வரும் வார்த்தைகளால் அவனுக்குப் பதிலளித்தாள்" என்றார் {பீஷ்மர்}.