Vyasa's advice to Dhritarashtra! | Bhishma-Parva-Section-003b | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)
பதிவின் சுருக்கம் : கோள்களின் நிலைகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்பாடுகள், இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய வியாசர்; நடைபெற இருக்கும் போரில் இறப்பவர்கள் நல்லுலகையே அடைவார்கள் என்று திருதராஷ்டிரன் வியாசரிடம் சொன்னது; திருதராஷ்டிரனைக் கண்டித்து, அறிவுரை கூறிய வியாசர் ...
{வியாசர் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "எனவே, வழக்கத்திற்கு மாறான நாட்களில் கிரகணங்களுக்கு உட்படும் [1] சூரியனும் சந்திரனும், பூமியில் உள்ள உயிரினங்களின் பேரழிவுக்குக் காரணம் ஆவார்கள். உண்மையில், {மேற்கண்ட தேய்பிறை சதுர்த்தசி திதியில்} வாய் நிறைய இரத்தத்தைப் பருகும் ராட்சசர்களும் அதனால் தணிவடையமாட்டார்கள் {நிறைவடையமாட்டார்கள்}. பெரும் நதிகள் எதிர்த்திசையில் பாய்ந்தோடுகின்றன. நதிகளின் நீர் இரத்தமாக மாறிவிட்டது. கிணறுகள், நுரைகளை வெளியிட்ட படி, காளைகளைப் போல முழங்குகின்றன [2]. இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்க விண்கற்கள் {கொள்ளிகள்} உரத்த சீற்றத்துடன் கீழே விழுகின்றன [3]. இந்த இரவு கடந்ததும், தீய விளைவுகள் உன்னை ஆக்கிரமிக்கும். ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காகத் தங்கள் வீடுகளில் இருந்து பந்தங்களுடன் வெளியே வரும் மக்கள், சுற்றிலும், மேலும் அதிகமான அடர்ந்த இருளையே எதிர்கொள்வார்கள் [4]. இது போன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்ட பெரும் முனிவர்கள், ஆயிரக்கணக்கான மன்னர்களின் இரத்தத்தைப் பூமி குடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
[1] "மூலத்தில் Aparvani என்று இருக்கிறது. அதாவது, பர்வ {Parva} நாட்களிலோ அல்லது பௌர்ணமி, அமாவாசை ஆகிய சாதாரண நாட்களிலோ அல்ல என்பது இங்கே பொருள். பம்பாய்ப் பதிப்பில் Aparvani க்குப் பிறகு grahenau tau என்று இருக்கிறது. ஆனாலும், வங்காள உரைகள் பலவற்றில் உள்ளதைப் போல grastavetau என்பதே நல்ல வாசிப்பு என்பது கேள்விக்கு இடமற்றதாகும்" என்கிறார் கங்குலி.[2] "மூலத்தில் Pratisrotas என்று இருக்கிறது, இங்கே pratisrotasas என்பதே தேவைப்படும் கடும் இலக்கணமாகும். கிழக்கிலோடியவை இப்போது மேற்கிலும், மேற்கிலோடியவை கிழக்கிலும் பாயும் {ஒரு திசையில் பாய்பவை எதிர் திசையில் பாய்கின்றன} என்பதே இங்கே பொருள். kurddanti என்பது சில உரைகளில் narddanti என்றிருக்கிறது. எனினும், பிந்தையதே {narddanti} நிச்சயம் சிறப்பு. kurddanti என்பது விளையாடுதல் அல்லது விளையாட்டு என்ற பொருளைத் தரும். அப்படியென்றால் {kurddanti என்று கொண்டால்} "காளைகளைப் போல விளையாடும் கிணறுகள்" என்று அந்த வாக்கியம் பொருளற்றதாகிவிடும். இங்கே "விளையாட்டு" என்பதை விட "முழக்கம்" என்பதே சரியானதாக இருக்கும்" என்கிறார் கங்குலி.[3] "sakrasani என்பதை suskasani என்றே பரத்வான் பண்டிதர்கள் படிக்கிறார்கள். எனினும், sakrasani என்பதே உண்மையான உரையாகும்" என்கிறார் கங்குலி.[4] இதே இடத்தில் வேறு ஒரு (1) பதிப்பில், "மகாமுனிவர்கள், அனைத்துத் திசைகளிலும் இருளடர்ந்திருக்கிற (இராக்காலத்தில் தீபமில்லாமையால்) பெரிய பந்தங்களுடன் வீட்டிலிருந்து வெளிவந்து, (அவ்விதமான உத்பாதங்களைக் கண்டு), அந்தச் சமயத்தில், "பூமியானது ஆயிரக்கணக்கான அரசர்களுடைய ரத்தத்தைக் குடிக்கப் போகிறது" என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்" என்று இருக்கிறது............ மற்றொரு (2) பதிப்பிலோ, "அடர்ந்த இருளில் அனைத்துத் திசைகளிலும் ஒன்றோடொன்று நெருங்கின பெரிய விண்வீழ்கொள்ளிகள் {உற்கைகள்} புறப்பட்டால் அப்பொழுது பூமியானது ஆயிரக்கணக்கான அரசர்களின் ரத்தத்தைக் குடிக்கும் என்று பெரும் முனிவர்களால் சொல்லப்பட்டுள்ளது என்றும் கொள்ளலாம்" என்று இருக்கிறது. இங்கே பந்தம் என்ற சொல் கையாளப்படவில்லை........... ஆனால் கங்குலி இங்கே வேறொன்றைச் சொல்கிறார். அவர், "இங்கே மூலம் மிகவும் தெளிவற்ற வகையில் உள்ளது. Uluka என்பது நீலகண்டரால் (விளக்கிற்காகப் {வெளிச்சத்திற்காகப்} பயன்படுத்தப்படும்) பந்தம் என்று விளக்கப்படுகிறது. எனினும் இவ்வரி நீள்வளையமாக {நீளமாக, சுற்றி வளைக்கும் வகையிலேயே} இருக்கிறது. இதில் பரத்வான் பண்டிதர்களோ முற்றிலும் புதிதான வரியை அறிமுகப்படுத்துகிறார்கள்" என்கிறார் கங்குலி. மேற்கண்டவைதான் {(1)&(2)} பரத்வான் பண்டிதர்களின் புதிய வரிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கைலாசம், மந்தரம், இமயம் ஆகிய மலைகளில் ஆயிரக்கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்கின்றன; ஆயிரக்கணக்கான சிகரங்களும் பெயர்ந்து விழுகின்றன. பூமி நடுங்குவதன் விளைவால் பெரிதும் பொங்கும் நான்கு கடல்களும், பூமியைத் துன்புறுத்த அதன் கண்டங்களைத் {கரைகளைத்} தாண்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது [5].
[5] "Mahabhuta பெரிதும் பெருகுகிறது" என்பது மூலம் என்கிறார் கங்குலி.
கூரான கூழாங்கற்கள் {பருக்கைக் கற்கள்} நிரம்பிய கடுங்காற்று, வலிமைமிக்க மரங்களைச் சாய்த்தபடி வீசிக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள சாதாரண மரங்களும், புனிதமான மரங்களும், பலத்தக் காற்றால் நசுக்கப்பட்டும், மின்னலால் தாக்கப்பட்டும் சரிந்தவண்ணம் உள்ளன. (வேள்வித்) தீயில், அந்தணர்களால் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படும் போது, அது {நெருப்பு}, நீலமாகவோ, சிவப்பாகவோ, மஞ்சளாகவோ மாறுகிறது. அதன் சுடர்கள் உரத்த ஒலியுடன் இடதுபுறமாகச் சாய்ந்து {சுழன்று}, கெட்ட நாற்றத்தைக் கொடுக்கிறது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, தொடுதல், நுகர்தல், சுவை ஆகியன முன்பு இல்லாததைப் போல ஆகிவிட்டன. (போராளிகளின்) கொடிக்கம்பங்கள், தொடர்ச்சியாக நடுங்கியவண்ணம் புகையைக் கக்குகின்றன.
துந்துபிகளும், பேரிகைகளும், கரித்தூசி மழையை வீசியெறிகின்றன {தணலைப் பொழிகின்றன}. உயர்ந்த மரங்களின் உச்சிகள் அனைத்திலும், இடமாகச் {இடதுபுறமாகச்} சுற்றும் காகங்கள் உக்கிரமாகக் கத்துகின்றன. மேலும் அவை அனைத்தும், "பக்வா, பக்வா" [6] என்று உக்கிரமாகக் கத்தியபடி, மன்னர்களின் அழிவுக்காக {அவர்களின்} கொடிக்கம்பங்களின் நுனிகளில் வந்து அமர்கின்றன. தீய யானைகள், முழுவதும் நடுங்கியபடி, அங்குமிங்கும் ஓடி, சிறுநீரையும் மலத்தையும் கழிக்கின்றன. குதிரைகள் அனைத்தும் துக்கத்துடன் இருக்கின்றன. அதே வேளையில் யானைகள் தண்ணீரில் இறங்குகின்றன. இவையனைத்தையும் கேட்டு, ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, உலகம் அழிவுக்குள்ளாகாத வகையில், தகுந்தது எதுவோ அதைச் செய்வாயாக" என்றார் {வியாசர்}.
[6] இவை பறவைகள் கத்தும் ஒலிக்குறிப்பாகும்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தன் தந்தையின் {தந்தை வியாசரின்} வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "இவையாவும், பழங்காலத்திலேயே விதிக்கப்பட்டுவிட்டது என்றே நான் நினைக்கிறேன். மனிதர்களின் பேரழிவு நேரத்தான் போகிறது. க்ஷத்திரிய வகையினரின் கடமைகளை நோற்று மன்னர்கள் போரில் இறந்தால், வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள், மகிழ்ச்சியை மட்டுமே அடைவார்கள். இந்த மனிதர்களில் புலிகள், தங்கள் உயிரைப் பெரும்போரில் துறந்து, இங்கே புகழையும், அடுத்த உலகத்தில் என்றென்றைக்கும் நிலைத்த பேரின்பத்தையும் அடைவார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, தன் மகன் திருதராஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், கவிஞர்களில் இளவரசருமான அந்த முனிவர் (வியாசர்), உச்சநிலை யோகத்தில் தன் மனதைக் குவித்தார். குறுகிய காலமே {ஒரு முகூர்த்த காலம்} அப்படிச் சிந்தித்த நிலையில் இருந்த அவர் {வியாசர்}, மீண்டும் ஒருமுறை, "ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, காலமே அண்டத்தை அழிக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தக் காலமே உலகங்களைப் படைக்கவும் செய்யும். இங்கே {இவ்வுலகில்} எதுவும் நித்தியமானது கிடையாது. குருக்கள், உனது சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு {அறம் நழுவாத} நீதியின் பாதையைக் காட்டுவாயாக. நீயே அவர்களைத் தடுக்கும் திறமையுடையவன் ஆவாய்.
சொந்தங்களின் படுகொலை பாவம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது. எனக்கு ஏற்பில்லாதாதை நீ செய்யாதிருப்பாயாக. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மரணமே {காலனே} உனது மகனின் {துரியோதனனின்} வடிவில் பிறந்திருக்கிறான். வேதங்களில் எப்போதும் படுகொலை மெச்சப்படுவதில்லை. அஃது ஒருபோதும் நன்மையைச் செய்யாது. ஒருவனுடைய குலத்தின் பழக்க வழக்கங்கள் அவனது சொந்த உடலே ஆகும். அந்தப் பழக்கவழக்கங்களை அழிப்பவனை, அதுவே கொன்றுவிடும் [7]. (நீதியின் பாதையில் நடக்க) உன்னால் இயலும் என்றாலும், இந்தக் குலத்தின் அழிவுக்காகவும், இந்தப் பூமியில் உள்ள அந்த மன்னர்களின் அழிவுக்காகவும், துயரத்தில் இருக்கும் ஒருவனைப் போல, உன்னைக் காலமே தவறான பாதையில் திசை திரும்பச் செய்கிறது.
[7] இந்த இடத்தில் வேறு பதிப்பில், "எவன் குல அறத்தையும், தன் உடலையும் அழிப்பானோ, அவனை அந்த அறமே அழிக்கும்" என்று இருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது நாட்டின் வடிவில் பேரிடர் உன்னிடம் வந்திருக்கிறது. உனது அறம் மிகப்பெரிய அழிவில் நிலைநிற்கிறது. நீதி {அறம் [அ] தர்மம்} என்பது என்ன என்பதை உனது மகன்களுக்குக் காட்டுவாயாக. ஓ! வெல்லப்பட முடியாதவனே {திருதராஷ்டிரா}, உனக்குப் பாவத்தைக் கொண்டு வரும் நாடு உனக்கு எப்படி மதிப்புடையதாகும்? {பாவத்தை அடைவதற்குக் காரணமான நாட்டினால் உனக்கு என்ன பயன்?}. உனது நற்பெயர், உனது அறம் மற்றும் உனது புகழைக் கவனிப்பாயாக {பாதுகாப்பாயாக}. பிறகு, நீ சொர்க்கத்தை வெல்வாய். பாண்டவர்கள் தங்கள் நாட்டைப் பெற்றுக் கொள்ளட்டும், கௌரவர்கள் அமைதியை அடையட்டும்" என்றார் {வியாசர்}.
ஆங்கிலத்தில் | In English |