Thursday, August 06, 2015

பதிமூன்று நாட்களைக் கொண்ட பக்ஷங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 003அ

Fortnights with Thirteen days! | Bhishma-Parva-Section-003a | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)

பதிவின் சுருக்கம் : கண்கூடாகத் தெரியும் துர்நிமித்தங்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் பேசிய வியாசர்; பயங்கரப் பிறவிகள்; விலங்குகள் மற்றும் பறவைகளின் இயல்புக்கு மிக்க நடத்தைகள், வானத்தில் ஏற்படும் மாற்றங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சேர்கைகள், வழக்கத்திற்கு மாறான, இயல்புக்கு மிக்கப் பக்ஷங்கள் பற்றிய குறிப்பு ...

வியாசர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், "பசுக்களிடம் கழுதைகள் பிறக்கின்றன. தாய்மாருடன் சிலர் பாலுறவு இன்பம் கொள்கிறார்கள். காடுகளில் உள்ள மரங்கள் மலர்களையும் கனிகளையும் பருவகாலம் தவறி {அல்லது பருவகாலத்திற்கு முன்பே} காட்டுகின்றன. விரைவில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் {கர்ப்பிணிகளும்}, அப்படியில்லாதவர்கள் கூடப் பயங்கரர்களை {monsters} ஈன்றெடுக்கிறார்கள். ஊனுண்ணும் விலங்குகள் {நாய்கள் போன்ற விலங்குகள்}, (ஊனுண்ணும்) பறவைகளுடன் சேர்ந்து ஒன்றாக உண்கின்றன. மூன்று கொம்புகளைக் கொண்ட சிலவும், நான்கு கண்களைக் கொண்ட சிலவும், ஐந்து கால்களைக் கொண்ட சிலவும், இரண்டு பாலுறுப்புகளை {ஆண்குறிகளைக்} கொண்ட சிலவும், இரு தலைகளுடன் சிலவும், இரு வால்களுடன் சிலவும், கோரப் பற்களைக் கொண்டவையாகச் சிலவும், எனத் தங்கள் வாய்களை அகல விரித்து மங்கலமற்ற வகையில் கதறும் மங்கலமற்ற {தீய சகுனங்களை வெளிப்படுத்தும்} விலங்குகள் பிறக்கின்றன.


முகடுகளைக் கொண்டவையும், மூன்று கால்கள், நான்கு பற்கள், கொம்புகள் ஆகியவற்றைக் கொண்டவையுமான குதிரைகளும் பிறக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது நகரத்தில் கூடப் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் மனைவியர், கருடர்களையும், மயில்களையும் ஈன்றெடுக்கிறார்கள். பெண் குதிரை பசுக்கன்றை ஈன்றெடுக்கிறது. பெண் நாய், நரிகளை ஈன்றெடுக்கிறது. கோழிகளும், மான்களும், கிளிகளும், மங்கலமற்ற வகையில் கதறுகின்றன.

சில பெண்கள், நான்கு அல்லது ஐந்து மகள்களை (ஒரே நேரத்தில்) ஈன்றெடுக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் அவர்கள், தாங்கள் பிறந்த உடனேயே, ஆடவும், பாடவும், சிரிக்கவும் செய்கிறார்கள். இழிந்த வகைகளின் உறுப்பினர்கள் {நீசர்கள்} சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படியே அச்சந்தரும் விளைவுகளை இவை சுட்டிக்காட்டுகின்றன. மரணத்தால் {காலனால்} உந்தப்பட்டவர்களைப் போலக் குழந்தைகளும், ஆயுதம் தாங்கிய உருவங்களை வரைகிறார்கள். அவர்கள் {குழந்தைகள்}, போரிடும் விருப்பத்தால், கதாயுதங்களைத் தரித்துக் கொண்டு ஒருவருக்கு எதிராக ஒருவர் விரைந்து, (விளையாட்டாகத் தாங்கள் கட்டிய) நகரங்களை இடிக்கிறார்கள் [1]. பல வகையான தாமரைகளும், ஆம்பல்களும் மரங்களில் வளர்கின்றன. பலமான காற்றுக் கடுமையாக வீசுகிறது, புழுதியும் அடங்கவில்லை.

[1] இந்த இடத்தில் வேறு பதிப்புகளில், "ஆயுதங்களோடு கூடிய பிரதிமைகளும் {உருவங்களும்}, காலத்தினால் தூண்டப்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொள்கின்றன. பாலர்கள் தடிகளைக் கையில் கொண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்தோடுகிறார்கள். போரிடும் எண்ணங்கொண்டு, விளையாட்டுக்காக நகரங்களை ஏற்படுத்தி, அவற்றில் ஒருவர் மற்றவருடைய நகரத்தை இடிக்கிறார்கள்." என்று இருக்கிறது.

அடிக்கடி பூமி நடுங்குகிறது. ராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையே முன்னறிவிக்கின்றன.

வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும் அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும் கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச் சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2].

[2] இதே பத்தி வேறு பதிப்புகளில் "கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது" என்று இருக்கிறது.

நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான்.

குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகைப் பயிர்களை விளைவிக்கும் பூமி, இப்போது அனைத்து காலங்களிலும் விளையும் பயிர்களால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு வாற்கோதுமை {யவதானியக்} கதிரும் ஐந்து காதுகளுடனும் {ஐந்து தலைகளுடனும்}, {செந்நெற்கதிர்கள்} நெற்கதிர்கள் ஒவ்வொன்றும் நூறுடனும் {நூறு தலைகளுடனும்} அருளப்பட்டிருக்கின்றன. உலகங்களில் சிறந்தவையும், இந்த அண்டமே நம்பியிருக்கும் உயிரினங்களுமான பசுக்கள், கன்றுகளுக்குப் பாலூட்டிய பிறகு, வெறும் இரத்தத்தை மட்டுமே தருகின்றன. கதிர்வீச்சுக் கொண்ட ஒளிக்கதிர்கள் விற்களில் இருந்து வெளிவருகின்றன. வாட்கள் பிரகாசத்தில் சுடர்விடுகின்றன. ஆயுதங்கள், (தங்கள் முன்னே) போர் ஏற்கனவே வந்து விட்டதைப் போலக் காண்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயுதங்கள், நீர், கவசங்கள், கொடிக்கம்பங்கள் ஆகியன நெருப்பைப் போன்ற நிறத்தில் இருக்கின்றன. ஒரு பெரும் படுகொலை நடக்கப் போகிறது.

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பாண்டவர்களுடன் குருக்கள் மோதும் இந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, பூமியானது (வீரர்களின்) கொடிக்கம்பங்களைப் படகுகளாகக் கொண்ட இரத்த ஆறாகும். அனைத்துப் புறங்களிலும் உள்ள விலங்குகளும், பறவைகளும், தீ போன்று சுடர்விடும் வாய்களுடன், கடுமையாகக் கதறி, பயங்கர விளைவுகளை முன்னறிவிக்கும் வகையில் இந்தத் தீய சகுனங்களைக் காட்டுகின்றன. ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் ஆகியவற்றைக் கொண்ட (உக்கிரமான) ஒரு பறவை, இரவு நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டு, கேட்பவர்களை இரத்தம் கக்க வைப்பது போலப் கோபத்தில் பயங்கரமாக அலறுகிறது [3]. ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரா}, ஆயுதங்கள் அனைத்தும் இப்போது கதிர்வீச்சுடன் சுடர்விடுவதாகத் தெரிகிறது.

[3] "இது மூலத்தில் "Conitam cchardayanniva" என்று இருக்கிறது. நான் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியிருக்கிறேன். இங்கே "கேட்பவர்கள்" என்பதற்குப் பதிலாக "ஆயுதங்கள்" என்றே பர்தவான் பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியாயின், "அந்தப் பறவை இரத்தம் கக்குபவைப் போலப் பயங்கரமாக அலறியது" என்று பொருள்படும். "cchardayan" என்ற காரண வினை இந்த விளக்கத்திற்கு எதிராகவே உள்ளது. எனினும், மகாபாரதத்தில், காரணப் பொருள் இல்லாமலேயே காரண வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏழு உயர் ஆன்ம முனிவர்களின் பெயரால் அறியப்படும் நட்சத்திரக் கூட்டத்தின் பிரகாசம் மங்கியிருக்கிறது. சுடர்விடும் கோள்களான பிருஹஸ்பதியும் {வியாழனும்}, சனியும், விசாகம் என்று அழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தை அணுகி, ஒரு வருடம் முழுவதும் அங்கேயே நிலைத்திருக்கிறது.

மூன்று சந்திர மாதங்கள், இரண்டு முறை அதன்போக்கில் ஒரே சந்திர பிறைநாட்களில் {ஒரே சந்திர பட்சத்தில்}, ஒன்று கூடியிருக்கின்றன [4]. எனவே, முதல் மாதத்தில் இருந்து, பதிமூன்றாவது {13} நாளில் எனும்படி அது பௌர்ணமி அல்லது அமாவாசை நாளன்று சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர் ராகுவினால் பீடிக்கப்பட்டார்கள். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இத்தகைய இரு விசித்திரமான கிரகணங்கள் பெரும் படுகொலையையே முன்னறிவிக்கின்றன [5]. பூமியின் திக்குகள் அனைத்தும், புழுதி மழையால் மூடப்பட்டு மங்கலமற்றுக் காணப்பட்டன. வருங்கால ஊகமாக ஆபத்தை முன்னறிவிக்கும்படி, கடும் மேகங்கள் இரவு நேரத்தில் இரத்த மாரி பொழிகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, கடுஞ்செயல்களைப் புரியும் ராகுவும், கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்திருக்கிறான். கடும் ஆபத்தை முன்னறிவிக்கும் கடுங்காற்றுத் தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கிறது. இவையனைத்தும், பல சோக சம்பவங்களை வகைப்படுத்தும் ஒரு போரையே தரும்.

[4] "நிச்சயமாக இஃது உண்மையானதாக இருந்தாலும், பல பதிப்புகளில் இந்தச் சுலோகம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இஃது அறிவுசார்ந்ததாக இருக்காது என்பதால், நான் மிகவும் சுதந்திரமாக இதை வழங்கியிருக்கிறேன். உண்மையென்னவெனில், ஒரு பக்ஷத்தில் {தேய்பிறை [கிருஷ்ண பக்ஷம்] / வளர்பிறை [சுக்ல பக்ஷம்} மூன்று மாதங்கள் இருமுறை ஒன்றாக இணைவது அரிதிலும் அரிதாகும். இங்கே, இதனால், பிறைநாட்கள் (அதாவது பக்ஷங்கள்), இரண்டு நாட்கள் குறைக்கப்படுவதால், பௌர்ணமியோ, அமாவாசையோ, வழக்கம் போல முதல் மாதத்தில் இருந்து பதினைந்தாம் நாளில் வராமல் பதிமூன்றாம் {13} நாளில் வருகிறது. சந்திர கிரகணங்கள் எப்போதும் பௌர்ணமி நாட்களிலேயே ஏற்படும். அதே போலச் சூரிய கிரகணங்கள் எப்போதும் அமாவாசைகளிலேயே ஏற்படும். எனவே, இத்தகைய கிரகணங்கள், (வழக்கம்போல) பதினைந்து நாட்களில் வருவதற்குப் பதிலாக, முதல் மாதத்தின் நாட்கள் கழிக்கப்பட்டுப் பதிமூன்று நாட்களில் வருவது மிகவும் அசாதாரண நிகழ்வுகளாகும்." என்கிறார் கங்குலி. இதுவே வேறு பதிப்பில், "சந்திர சூரியர் இருவரும் இரண்டு திதி {இரண்டு நாள்} க்ஷயத்தினால் {இழப்பினால்} பதிமூன்றாவது நாளில் சம்பவித்திருக்கிற தரிசத்தில் ராகுவினால் ஒரு தினத்தில் விழுங்கப்பட்டார்கள்" என்று இருக்கிறது.

[5] Vishamam என்பது போராகும். akranda என்பது அழுகை அல்லது துன்பத்தை விளைவித்தல் என்று பொருள்படும். பிந்தைய வார்த்தை "கடும்போர்" என்றும் பொருள்படும். இந்தப் பொருளிலேயே புரிந்து கொள்ளப்பட்டால் akranda என்பது பகையையோ, அமைதியின்மையையோ குறிப்பதாகிவிடும்.

நட்சத்திரக் கூட்டங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் [6]. ஒவ்வொரு வகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண்ட ஒரு கிரகம் தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளை முன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக) பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பதினாறு நாட்களையோ கொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன் ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்து பதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன" என்றார் {வியாசர்}.

[6] "பின்வரும் பொருள் ஒரு நீண்ட குறிப்பைத் தரும் என்று சொல்லி நீலகண்டர் விளக்குகிறார். மன்னர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, யானைகளுக்குச் சொந்தக்காரர்கள் (கஜபதிகள்), குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் (அஸ்வபதி), மனிதர்களுக்குச் சொந்தக்காரர்கள் (நரபதி) என்பதே ஆகும். தீய சகுனத்தைச் சொல்லும் கிரகம் (பாப கிரகம்), அஸ்வினி முதலான ஒன்பது நட்சத்திரங்களைப் பீடித்தால், அஃது அஸ்வபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மகம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது கஜபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மூலம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது நலபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும். எனவே, வேறு பாபக் கிரகங்களும் மூன்று வகை நட்சத்திரக்கூட்டங்களையும் பீடித்தால், அஃது அனைத்து வகை மன்னர்களுக்கும் ஏற்படும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன என்றே வியாசர் இங்கே குறிப்பிடுகிறார்." என்கிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English