The species in the world! | Bhishma-Parva-Section-004 | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 4)
பதிவின் சுருக்கம் : குருஜாங்கலத்தில் கூடியிருக்கும் மன்னர்களின் நாடுகள் மற்றும் நகரங்களின் துல்லியமான விபரங்களைச் சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; சஞ்சயன் முதலில் பூமியின் சிறப்புகளைச் சொல்வது; பூமியில் வாழும் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் குறித்த குறிப்புகளைச் சொல்வது; அசைவன மற்றும் அசையாதனவற்றில் உள்ள வகைகளைச் சொன்னது; பூமிக்காக மன்னர்கள் அனைவரும் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொள்ளும் காரணத்தைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொன்ன வியாசர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} இப்படிச் சிந்தித்த அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினான். விரைவில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, புகழத்தக்க ஆன்மாவைக் கொண்ட சஞ்சயனிடம், "ஓ! சஞ்சயா, இந்த மன்னர்கள், இந்தப் பூமியின் தலைவர்கள், இவ்வளவு வீரமிக்கவர்கள், போரில் மகிழ்ந்து, பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, பூமியின் நிமித்தமாகத் தங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கிறார்களே. தடுக்கப்பட முடியாத அவர்கள், உண்மையில், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, யமனின் ஆட்சிப்பகுதியில் இருப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகின்றனர்.
பூமியை உடைமையாகக் கொள்வது சம்பந்தமான செழிப்பை அவர்கள் விரும்புவதால், ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளாதிருக்கிறார்கள். எனவே, பூமி பல பண்புகளைக் {குணங்களைக்} கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. வீரர்கள், பல ஆயிரங்களிலும், பத்து லட்சங்களிலும், கோடிகளிலும், ஆயிரம் கோடிகளிலும் ஒன்றுசேர்ந்து குருஜாங்கலத்திற்கு வந்திருக்கிறார்கள். ஓ! சஞ்சயா, இவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த நாடுகள் மற்றும் நகரங்களின் பரிமாணங்களையும், அவற்றின் நிலைமைகளையும் துல்லியமான விபரங்களுடன் நான் கேட்க விரும்புகிறேன். அளவிடமுடியா சக்தி படைத்த அந்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர் வியாசரின் ஆற்றலால், தெய்வீக உணர்வு என்ற விளக்கின் ஒளியையும், அறிவுக்கண்ணையும் பெற்றவனாக நீ இருக்கிறாய்" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் அறிவு கொண்டவரே {திருதராஷ்டிரரே}, நான் எனது அறிவின்படி பூமியின் சிறப்புகளை உமக்கு எடுத்துரைப்பேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் உம்மை வணங்குகிறேன். இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், அசைவன {ஜங்கமங்கள்} மற்றும் அசையாதன {ஸ்தாவரங்கள்} என்று இருவகைகளில் உள்ளன. அசையும் உயிரினங்கள், முட்டையிடுதல் {Oviparous}, ஈன்றெடுத்தல் {Viviparous}, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் {புழுக்கத்தால் உண்டாகும் வேர்வையில்} உண்டாகுதல் [*] என்று மூன்று வகையில் தங்கள் பிறப்பை அடைகின்றன.
[*] உதாரணம்: ஈறு, பேன், நாய்குடை, காளான்...
அசையும் உயிரினங்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஈன்றெடுப்பவையே {Viviparous} {ஜராயுஜங்களே} நிச்சயம் முதன்மையானவையாக இருக்கின்றன. ஈன்றெடுக்கும் உயிரினங்களில் மனிதர்களும் விலங்குகளுமே முதன்மையானவையாக இருக்கின்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வடிவங்களில் இருக்கும் விலங்குகளின் இனவகைகள் பதினான்காக {14} இருக்கின்றன. அவற்றில் ஏழு{7} இனங்கள் காடுகளில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருக்கின்றன {ஆரண்யவாசிகளாக இருக்கின்றன}. ஏழு{7} இனங்கள் வீட்டில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருக்கின்றன {கிராமவாசிகளாக இருக்கின்றன}. சிங்கங்கள், புலிகள், பன்றிகள், எருமைகள், யானைகள், கரடிகள் மற்றும் குரங்குகள் ஆகியன, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வனவிலங்குகளாகக் கருதப்படுகின்றன. பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், மனிதர்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகிய இந்த ஏழும் வீட்டுவிலங்குகளாகக் கற்றோரால் கருத்தப்படுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பதினான்கே {14} வீட்டு மற்றும் வன விலங்குகளின் முழு எண்ணிக்கையாக வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றையே வேள்விகளும் சார்ந்திருக்கின்றன. வீட்டு உயிரினங்களில் மனிதனே முதன்மையானவன், அதே போல வன உயிரினங்களில் சிங்கமே முதன்மையானதாகும். அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன.
காய்கறிகளே {Vegetables} {உத்பிஜ்ஜங்களே} அசையாதனவாகச் {ஸ்தாவரங்களாகச்} சொல்லப்படுகின்றன. அவற்றில் நான்கு வகைகளாக மரங்கள், புதர்ச்செடி [1], கொடிகள் [2], படர்ந்து வளரும் செடிகள் [3] என்று இருக்கின்றன. புல்வகையைச் சார்ந்த தண்டற்ற செடிவகைகள் [4] ஐந்தாவதாக வகையாக இருக்கின்றன [5].
[1] குல்மங்கள் = நாணல் போன்றவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.[2] லதைகள் = மரங்களில் ஏறிப் படர்பவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.[3] வல்லிகள் = தரையில் படரும் பறங்கி, பூசணி முதலியவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.[4] திருணங்கள் = மூங்கில் முதலியவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.[5] இங்கே கங்குலி, "இந்த ஐந்து இனவகைகளை நீலகண்டர் இவ்வாறு விளக்குகிறார்: அரசமரத்தைப் {Peepul} போன்ற மரங்கள்; குசப் அடர்த்தியான மரங்கள் மற்றும் செடிகளுக்கு அடியில் வளரும் பற்களைப் போன்ற குல்மங்கள் {Gulma} (புதர்); செடிகள் அனைத்தையும் போலவே மண்மீது வளர்ந்து, சுற்றிக் கொள்வதற்கு ஓர் ஆதரவு தேவைப்படும் கொடிகள் {லதைகள்}; ஓர் ஆண்டு மட்டுமே வாழ்ந்து பூமியில் படரும் பூசணி, சுரைக்காய் போன்ற வள்ளிகள்; இறுதியாக, பட்டைகள் மற்றும் இலைகளை மட்டுமே கொண்டு தண்டற்று வாழும் புல் போன்ற தாவரங்களான திருணங்கள்" என்கிறார்.
அசையும் {மனிதன், விலங்கு} மற்றும் அசையாத {தாவர} உயிரினங்களில் இப்படியே பத்தொன்பது {19} வகை இருக்கின்றன. அவற்றின் உலகளாவிய தொகுதிகளைப் {பூதங்களைப்} பொறுத்தவரை அவை ஐந்தாக {பஞ்சபூதங்களாக} உள்ளன. இப்படியே மொத்தமாக இருபத்துநான்கான {2} இவை அனைவராலும் நன்கு அறியப்பட்டபடி காயத்ரி (பிரம்மம்) என்று விளக்கப்படுகின்றன [6].
[6] "காயத்ரியோ, பிரம்மமோ, அண்டமோ குறிப்பிடப்படும்போது இந்த இருபத்து நான்கும் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் ஐந்து சுயமாக நிலைத்திருக்கின்றன. எஞ்சிய பத்தொன்பதும் அந்த ஐந்தும் பல்வேறு விகிதாச்சாரங்களில் கலந்தவையாக இருக்கின்றன" என்கிறார் கங்குலி.
ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதையே அனைத்து அறங்களையும் கொண்ட புனிதமான காயத்ரியாக உண்மையாக அறிந்து கொள்பவன், உலக அழிவுக்குக் காரணமாக மாட்டான். அனைத்தும் பூமியில் இருந்தே எழுகின்றன {பூமியிலேயே உற்பத்தியாகின்றன}. அழிவடையும்போது அனைத்தும் பூமியிலேயே கலந்து விடுகின்றன. இந்தப் பூமி அனைத்து உயிரினங்களுக்குமான வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருக்கிறது. பூமி நித்தியமானது. எவன் பூமியைக் கொண்டிருக்கிறானோ, அவன் அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட முழு அண்டத்தையும் கொண்டிருக்கிறான். இதன் காரணமாகவே பூமிக்காக (அதை உடைமையாக அடைய) காத்திருக்கும் மன்னர்கள் ஒருவரை ஒருவர் கொல்கின்றனர்" என்றான் {சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |