The creatures sprung from five elements! | Bhishma-Parva-Section-005 | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 5)
பதிவின் சுருக்கம் : சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குப் பஞ்சபூதங்களின் தன்மைகளையும் அவை ஒவ்வொன்றின் பண்புகளையும் விளக்குவது; ஒரு பூதம் மற்றொன்றோடு கலக்கும் போதே உயிர்கள் தோன்றுகின்றன பூதங்கள் அழிகின்றன என்று சொல்வது; அண்டம் ஒரே சீர்மையுடன் ஒரே பெருந்திரளாக இருந்தபோது அவை ஒவ்வொன்றும் தனித்துச் சார்பற்று இருந்தன என்று சொல்வது; பஞ்சபூதங்களின் கலவை உயிரினங்களில் எவ்வளவு இருக்கிறது என்பதை அளக்க முடியாது, அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது; சுதர்சனத் தீவைக் குறித்துத் திருதராஷ்டிரனுக்குச் சஞ்சயன் சொல்வது....
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, நதிகள் மற்றும் மலைகளின் பெயர்கள், மாகாணங்களின் பெயர்கள், மேலும் பூமியில் இருக்கும் பிற பொருட்கள் அனைத்தையும், அதன் பரிணாமங்களையும் குறித்தும், காடுகளோடு கூடிய மொத்த உலகத்தில் முழுமையாக உள்ள பொருட்களை அறிந்தவனான நீ, ஓ சஞ்சயா எனக்கு விபரமாக எடுத்துரைப்பாயாக."
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அண்டத்தின் பொருட்கள் அனைத்தும், (அவையவற்றில் உள்ள) ஐந்து தனிமங்களுடைய {பஞ்சபூதங்களுடைய} இருப்பின் விளைவால் சமமானவையாகவே இருக்கின்றன என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது. வெளி {ஆகாயம்}, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்பதே அந்தத் தனிமங்களாகும் {பூதங்களாகும்}. ஒலி, தொடுதல், பார்வை, சுவை, மற்றும் நறுமணம் ஆகியவை அவற்றுடைய (தனிப்பட்ட) பண்புகள் {குணங்கள்} ஆகும். இந்தத் தனிமங்கள் {ஐம்பூதங்கள்} ஒவ்வொன்றும் (தனது சொந்த பண்புகளுக்குக் கூடுதலாக) தனக்கு முன் வருவது அல்லது வருவனவற்றின் பண்பு அல்லது பண்புகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே, உண்மையை அறிந்த முனிவர்களுடைய வாக்கின்படி, {ஒரு பூதம்} தனது சிறப்புப் பண்புடன் சேர்த்து, மற்ற நான்கின் {நான்கு பூதங்களின்} பண்புகள் {ஒலி, தொடுதல், பார்வை, சுவை ஆகிய} அனைத்தையும் கொண்டிருக்கலாம். {ஐந்து பூதங்களில் ஒன்றான} நிலமானது இவை {பூதங்கள்} அனைத்திலும் முதன்மையானதாகும்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீரில் நான்கு பண்புகள் {ஒலி, தொடுதல், பார்வை, சுவை ஆகியன} இருக்கின்றன. அதில் மணம் இல்லை. நெருப்பானது ஒலி, தொடுதல், பார்வை ஆகிய மூன்று பண்புகளை கொண்டிருக்கிறது. காற்றுக்கு ஒலி மற்றும் தொடுதல் சொந்தமாக இருக்கிறது. அதே வேளையில் வெளியில் {ஆகாயத்தில்} ஒலி மட்டுமே இருக்கிறது. இந்த ஐந்து பண்புகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வழியிலேயே), எந்த உயிரினங்கள் எல்லாம் அண்டத்தில் நிலைத்திருக்கின்றன என்பதைச் சார்ந்து இந்த ஐந்து அடிப்படை தனிமங்களிலும் {பூதங்களிலும்} நிலைத்திருக்கிறது. இந்த அண்டத்தில் சமச்சீர்மை எப்போது இருக்கிறதோ, அப்போது, அவை {அந்தப் பண்புகள்} தனித்தனியாகவும், சார்பற்றும் நிலைத்திருக்கின்றன [1].
[1] "இங்கே மூலத்தில் உள்ள Samyam என்பது சமச்சீர்மையாகும். படைப்பிற்கு முன்பு, ஒரேவிதமான ஒரே திரள் அல்லது பிரம்மத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத போது, அண்டம் இருந்த நிலையின் உருவகமாகும் அது {Samyam}. இரண்டாவது வரியின் முதல் சேர்மம் {கலவை} வேறுவிதமாகப் படிக்கப்படுகிறது. பர்த்வான் பண்டிதர்களும், பம்பாய் பதிப்பும் (வேறுபடும் வகையில்) anyonyam என்று உரைக்கிறது. வங்க உரைகளில் பல (காரணத்துடன்) anyonyena என்று உரைக்கின்றன. இந்த வேறுபட்ட வாசிப்புகளால் பொருள் அரிதாகவே பாதிப்படைகிறது" என்கிறார் கங்குலி.
எனினும், இவை தங்கள் இயல்பான நிலையில் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று கலந்தால், உடல்களுடன் கூடிய உயிரினங்கள் உயிருடன் எழுகின்றன. இஃது எப்போதும் வேறுவிதமாக இருப்பதில்லை. ஒன்றினுக்குள் ஒன்று ஒன்றிணைந்து, ஒன்று வெல்லும் வரிசையில் அந்தத் தனிமங்கள் அழிவடைகின்றன; மேலும், தன் முன்பு இருக்கும் ஒன்றிலிருந்து எழும் அவை இருப்பிலும் உதிக்கின்றன {தோற்றமும் கொள்கின்றன} [2].
[2] "அழிவின் வரிசை என்பது பூமி நீரில் இணைவதும், நீர் நெருப்பில் இணைவதும், நெருப்புக் காற்றில் இணைவதும், காற்று வெளியில் {ஆகாயத்தில்} இணைவதுமாகும். எனவே பிறப்பின் வரிசை என்பது வெளியில் {ஆகாயத்தில்} இருந்து காற்று எழுவதும், காற்றில் இருந்து நெருப்பு எழுவதும், நெருப்பில் இருந்து நீர் எழுவதும், நீரில் இருந்து நிலம் எழுவதுமாகும்" என்கிறார் கங்குலி.
இவை அனைத்தும் அளக்கமுடியாதவை, இவற்றின் வடிவங்கள் பிரம்மமே ஆகும். இந்த அண்டத்தில் ஐந்து தனிமங்களைக் {பஞ்சபூதங்களைக்} கொண்ட உயிரினங்களே காணப்படுகின்றன. அவற்றின் அளவுகளை உறுதிசெய்து கொள்ளவே, மனிதர்கள் தங்கள் அறிவைப் {ஊகத்தைப்} பயன்படுத்தி முயன்று கொண்டிருக்கிறார்கள். எனினும், நினைத்துப் பார்க்க முடியாத அந்தக் காரியங்களை, அறிவால் {ஊகத்தினால்} தீர்த்துவிட முயற்சிக்கக்கூடாது. (மனித) இயல்புக்கு மேலானதாக இருப்பதால், அது நினைத்துக்கூடப் பார்க்க முடியாததற்கான ஓர் அடையாளமாக இருக்கிறது.
ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, எனினும், நான் உமக்குச் சுதர்சனம் என்றழைக்கப்படும் தீவைக் குறித்து விளக்குவேன். இந்தத் தீவு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வட்டமானதும், சக்கரத்தின் வடிவம் கொண்டதுமாகும். நதிகள், பிற நீர்நிலைகள், மேகத் திரள்களைப் போன்ற மலைகள், நகரங்கள் மற்றும் பல இனிய மாகாணங்கள் அதில் நிறைந்திருக்கின்றன. மலர்கள் மற்றும் கனிகளைக் கொண்ட மரங்கள் நிறைந்து, பல்வேறு வகைகளிலான பயிர்கள் மற்றும் பிற செல்வங்களுடன் அஃது {சுதர்சனத் தீவு} இருக்கிறது. மேலும் அஃது அனைத்துப் புறங்களிலும் உப்புக் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒருவன் தனது முகத்தைக் கண்ணாடியில் காண்பதைப் போலவே, சுதர்சனத் தீவையும் சந்திர வட்டிலில் காண முடியும். அதன் இரண்டு பகுதிகள் அரச மரத்தைப் போன்று தெரியும், அதே வேளையில் மற்றும் இரண்டு, பெரிய முயலைப் போலத் தோன்றும். அஃது {சுதர்சனத்தீவு}, இலையுதிர்க்கும் அனைத்து வகைத் தாவரங்களின் நெருக்கத்துடன் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டுள்ளது [3].
[3] வேறு பதிப்பில் இந்தப் பத்தி முற்றிலும் மாறுபடுகிறது. "ஒரு மனிதன் தன் முகத்தை எவ்வாறு கண்ணாடியில் பார்ப்பானோ, அவ்வாறே சுதர்சனத் தீவு சந்திர மண்டலத்தில் காணப்படுகிறது. அந்தத் சுதர்சனத் தீவினைக் காட்டிலும் ப்லக்ஷத்தீவு இரண்டு மடங்கும் பெரியதாகும். சால்மலித்தீவு அதைவிட இரண்டு மடங்கும் பெரியதாகும். பிப்பலத்தீவு அதைக்காட்டிலும் இரண்டு மடங்கும் பெரியதாகும். அனைத்துவிதமான மூலிகைகள் நிறைந்த மலைகளால் நாற்புறங்களிலும் சூழப்பட்ட குசத்தீவும் அதைவிட இரண்டு மடங்கும் பெரியதாகும்" என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளைத் தவிர எஞ்சிய அனைத்தும் நீரேயாகும். இன்னும் என்ன மீதியிருக்கிறது என்பதை விரைவில் நான் விவரிப்பேன். எஞ்சியதை நான் பிறகு சொல்கிறேன். இப்போது சுருக்கமாக நான் விவரிப்பதைக் கேட்பீராக [4]" என்றான் {சஞ்சயன்}.
[4] "கடைசி ஆறு சுலோகங்களை நீலகண்டர் ஆச்சரியத்திற்குரிய பொருளுடன் {எளிதில் புரியாத மறை பொருளுடன்} விளக்குகிறார். சுதர்சனத்தின் மூலம் அவர் மனதைப் புரிந்து கொள்கிறார். எஞ்சியவையும் அப்படியே தொடர்ந்து விளக்கப்படுகிறது. எனினும், பொருளற்றவற்றில் பொருள் கொள்ள முயன்று விளக்கமளிப்பது {திரிப்பது} வர்ணனையாளர்கள் {விளக்கவுரை அளிப்பவர்கள்} மத்தியில் அரிதானது அல்ல" என்கிறார் கங்குலி. அதனால் அதைக் கங்குலி விட்டிருப்பார் என்றும் அதுவே ஏற்கனவே மேலே [3] ல் கண்டவை என்றும் நினைக்கிறேன்.
ஆங்கிலத்தில் | In English |