Tuesday, August 18, 2015

பிதாமகர் பீஷ்மர் கொல்லப்பட்டார்! - பீஷ்ம பர்வம் பகுதி - 013

Grandsire Bhishma slained! | Bhishma-Parva-Section-013 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் வீழ்த்தப்பட்ட செய்தியைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொல்வது; பீஷ்மரின் சாதனைகளைச் சொன்ன சஞ்சயன், அவரது வீழ்ச்சிக்கு, திருதராஷ்டிரனின் தீய ஆலோசனைகள்தான் காரணம் என்று சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கடந்தகால, நிகழ்கால, எதிர்கால அறிவைக் கொண்டவனும் {நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஆகியவற்றை அறிந்தவனும்}, தனது கண்களுக்கு முன்னிலையில் இருப்பது போலவே அனைத்துக் காரியங்களையும் பார்ப்பவனும், கல்விமானுமான கவல்கணன் மகன் {சஞ்சயன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் இருந்து துயரத்துடன் அவசரமாக விரைந்து வந்து, (சபைக்குள் நுழைந்து), சிந்தனையில் மூழ்கியிருந்த திருதராஷ்டிரனிடம், பாரதர்களின் பாட்டனான பீஷ்மர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் உம்மை வணங்குகிறேன். சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமான பீஷ்மர் கொல்லப்பட்டார். போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான பாரதர்களின் பாட்டன் கொல்லப்பட்டார். போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், அனைத்து வில்லாளிகளின் சக்தி வடிவிலானவருமான அந்தக் குருக்களின் பாட்டன் இன்று அம்புப் படுக்கையில் கிடக்கிறார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருடைய சக்தியை நம்பி உமது மகன் {துரியோதனன்} பகடையாட்டத்தில் ஈடுபட்டானோ, அந்தப் பீஷ்மர், சிகண்டியால் கொல்லப்பட்டு, இப்போது போர்க்களத்தில் கிடக்கிறார்.

பெரும் மோதலில் ஒன்று திரண்டிருந்த பூமியின் மன்னர்கள் அனைவரையும், காசி நகரத்தில் ஒரு தேரை மட்டுமே கொண்டு வீழ்த்தியவரும், ஜமதக்னியின் மகனான ராமருடன் {பரசுராமருடன்} அச்சமற்ற வகையில் போரிட்டவரும், ஜமதக்னியின் மகனாலேயே {பரசுராமராலேயே} கொல்லப்பட இயலாதவருமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, ஓ!, இன்று சிகண்டியினால் கொல்லப்பட்டார்.

வீரத்தில் பெரும் இந்திரனையும் {மகேந்திரனையும்}, உறுதியில் இமயத்தையும் ஒத்திருந்து, ஈர்ப்பில் {கம்பீரத்தில்} கடலைப் போலவும், பொறுமையில் பூமியைப் போலவும் இருந்த அந்த ஒப்பற்ற வீரர் {பீஷ்மர்}, கணைகளைப் பற்களாகவும், வில்லை வாயாகவும், வாளை நாக்காகவும் கொண்ட அந்த மனிதர்களில் சிங்கம் {பீஷ்மர்}, பாஞ்சால இளவரசனால் {சிகண்டியால்} இன்று கொல்லப்பட்டார்.

சிங்கத்தைக் கண்டு நடுங்கும் பசுக்கூட்டத்தைப் போல, போரில் ஈடுபடும் தன்னைக் கண்ட பாண்டவர்களின் படையை நடுங்கச் செய்த அந்த வீரர்களைக் கொல்பவர் {பீஷ்மர்}, ஐயோ, (உமது) படையைப் பத்து {10} நாட்கள் காத்து, அடைவதற்கு அரிதான மிகக் கடுமையான சாதனைகளைச் செய்து சூரியனைப் போல மறைந்து போனார்.

சக்ரனைப் {இந்திரனைப்} போலவே ஆயிரக்கணக்கான கணைகளை மிகுந்த மனவலிமையுடன் அடித்து, பத்து நாட்களில் தினமும் பத்தாயிரம் {10000} வீரர்களைக் கொன்றவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய ஆலோசனைகளாலே, தானே (எதிரியால்) கொல்லப்பட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இதற்கெல்லாம் தகுந்தவர் இல்லையென்றாலும், காற்றின் விளைவால் முறிந்து கிடக்கும் (பெரும் வலிமைமிக்க) மரத்தைப் போல, வெறும் தரையில் கிடக்கிறார்" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English