Tuesday, August 18, 2015

ஒரே தர்மம் கொண்ட நிலங்கள் ஒரு நாடே! - பீஷ்ம பர்வம் பகுதி - 012

Lands with one religion is one country! | Bhishma-Parva-Section-012 | Mahabharata In Tamil

(பூமி பர்வம் – 2)

பதிவின் சுருக்கம் : குசத்வீபம், சால்மலிகத்வீபம், கிரௌஞ்சத்வீபம், புஷ்கரத்வீபம் ஆகிவற்றையும், அவற்றில் இருக்கும் மலைகள், கண்டங்கள் மற்றும் நாடுகள் குறித்தும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொல்வது; பல நிலங்களில் ஒரே தர்மம் பின்பற்றப் படுமானால் அவை அனைத்தும் சேர்ந்து ஒரு நாடே என்று சொல்லப்படுவதாக அறிவிப்பது; திக் கஜங்கள் குறித்துச் சொல்வது; சூரியன், சந்திரன் மற்றும் ராகுவின் பரிமாணங்களைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; பூமி பர்வத்தைக் கேட்பதால் கிடைக்கும் பலனையும் சொல்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, ஓ! பெரும் மன்னா, வடக்கில் இருக்கும் தீவுகளைக் குறித்துக் கேள்விப்படப்படுவதை நான் உமக்குச் சொல்கிறேன். நான் சொல்வதை இப்போது கேளும்.


(அங்கே வடக்கில்) தெளிந்த நெய்யை நீராகக் கொண்ட கடல் இருக்கிறது. பிறகு தயிரை நீராகக் கொண்ட ஒரு கடல் இருக்கிறது. அடுத்ததாக, மதுவை நீராகக் கொண்ட கடல் இருக்கிறது. அதற்கும் அப்பால், நீரைக் கொண்ட மற்றுமொரு கடல் இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வடக்கே மேலும் செல்லச் செல்ல வரும் மலைகள் யாவும் வரிசையாக ஒன்றைவிட ஒன்று இருமடங்கு பரப்பைக் கொண்டவையாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவை இந்தக் கடல்களாலேயே சூழப்பட்டிருக்கின்றன.

அப்படி அதற்கு மத்தியில் இருக்கும் அந்தத் தீவில், சிவப்பு மனோசிலையால் {Red arsenic} {சிவந்தவரிதாரம்; நாகசிகுவிகை; சிவந்தபாஷாணம்} ஆன கௌரம் என்று அழைக்கப்படும் பெரிய மலை ஒன்றிருக்கிறது. அந்தத் தீவின் மேற்கில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாராயணனுக்குப் பிடித்த (வசிப்பிடமான) கிருஷ்ணமலை இருக்கிறது. அங்கே (அபரிமிதமாக) இருக்கும் தெய்வீக ரத்தினங்களைக் கேசவன் {கிருஷ்ணன்} காக்கிறான். அங்கிருந்தபடியே கருணை புரியும் அவன் {கிருஷ்ணன்} உயிரினங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். அங்கிருக்கும் நாடுகளோடு சேர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குசத்வீபத்தில் உள்ள குச (தெய்வீகமான) குசப் புற்குவியலும், சால்மலிகத் தீவில் உள்ள சால்மலி மரமும் துதிக்கப்படுகிறது.

கிரௌஞ்சத் தீவில் இருப்பதும், அனைத்து வகை ரத்தினச் சுரங்கங்களையும் கொண்டதுமான மகாகிரௌஞ்சம் என்று அழைக்கப்படும் மலை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான்கு வகை மனிதர்கள் அனைவராலும் எப்போதும் துதிக்கப்படுகிறது. (அங்கே), ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரியதும், அனைத்து வகை உலோகங்களைக் கொண்டதும், கோமந்தம் என்று அழைக்கப்படுவதுமான ஒரு மலை இருக்கிறது. அதில், தாமரை மடல் போன்ற கண்களையுடையவனும், செழிப்பைக் கொண்டவனும், முக்தியடைந்தோருடன் கலந்திருப்பவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனான சக்திமிக்க நாராயணன் எப்போதும் வசிக்கிறான்.

குசத்வீபத்தில், ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, பவளப்பாறைகளால் பலவண்ண வேறுபாடுகளுடன் இருப்பதும், அந்தத் தீவின் பெயரையே தானும் கொண்டதுமான மற்றொரு மலையும் இருக்கிறது. அந்த மலை அணுக முடியாததும், தங்கத்தாலானதுமாக இருக்கிறது. ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, பெரும் பிரகாசத்தை உடையதும், சுமிதா என்று அழைக்கப்படுவதுமான மூன்றாவது மலை இருக்கிறது. ஆறாவதாக ஹரிகிரி என்ற அழைக்கப்படும் மலை இருக்கிறது. இவையே அங்கே இருக்கும் ஆறு முக்கிய மலைகளாகும் [1]

[1] இங்கே கங்குலி ஆறு மலைகளையும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வேறு பதிப்பில் அதன் குறிப்புகள் வருகின்றன. அவை பின்வருமாறு. குசத்தீவில் பவளங்களால் நிறைக்கப்பட்ட 1.சுநாமா என்ற மலை இருக்கிறது. பிறரால் ஆக்கிரமிக்கப்பட முடியாததும், இரண்டாவதுமான 2.த்யுதிமான் என்கிற தங்க மலையும், மூன்றவதாகக் 3.குமுதல் என்ற மலையும், நான்காவதாகப் 4.புஷ்பவான் என்ற மலையும், ஐந்தாவதாகக் 5.குசேசயம் என்ற மலையும் ஆறாவதாக 6.ஹரிகிரி என்ற மலையும் இருக்கின்றன. இவ்வாறு இந்த ஆறு சிறந்த மலைகள் அங்கே இருக்கின்றன. இந்த ஆறு மலைகளுக்கு இடையில் உள்ள இடைப்பட்ட வெளிகள் {இடைவெளிகள்} ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் வடக்கு நோக்கி செல்லச்செல்ல அதிகரிக்கின்றன. அவைகளுக்கு மத்தியில் உள்ள பரப்பானது எல்லா இடங்களிலும் இரண்டு மடங்காக அதிகரிக்கின்றன.

முதல் வர்ஷம் {கண்டம்} ஔதிதோ {ஔத்பிதம்} என்று அழைக்கப்படுகிறது; இரண்டாவது வேணுமண்டலம் என்றும்; மூன்றாவது சுரதா {சுரதாகாரம்} என்றும் அழைக்கப்படுகிறது; நான்காவது கம்பலம் என்ற பெயரில் அறியப்படுகிறது; ஐந்தாவது வர்ஷம் திரிதிமத் என்று அழைக்கப்படுகிறது; ஆறாவது பிரபாகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது; ஏழாவது வர்ஷம் கபிலம் என்று அழைக்கப்படுகிறது. இவையே தொடர்ச்சியான ஏழு வர்ஷங்கள் {கண்டங்கள்} ஆகும். இவற்றில், தேவர்கள், கந்தர்வர்கள், அண்டத்தின் பிற உயிரினங்கள் ஆகியன மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த வர்ஷங்களில் வசிப்போர் மரணிப்பதில்லை. அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருடர்களோ, மிலேச்ச குலங்களோ எதுவும் இல்லை. அங்கே வசிப்போர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனேகமாக வெள்ளை நிறம் கொண்டவர்களாகவும் மிக மென்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.

எஞ்சிய தீவுகளைப் பொறுத்தவரை, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, என்னால் கேட்கப்பட்டவை அனைத்தையும் நான் சொல்வேன். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமான மனதுடன் கேட்பீராக.

கிரௌஞ்சத் தீவில், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கிரௌஞ்சம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது, கிரௌஞ்சத்திற்கு அடுத்து வாமனகம் இருக்கிறது; வாமனகத்திற்கு அடுத்து அந்தகாரம் இருக்கிறது. அந்தகாரத்திற்கு அடுத்து [2], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மைநாகம் என்று அழைக்கப்படும் மலைகளில் அற்புதமான மலை இருக்கிறது. மைநாகத்திற்கு அடுத்துக் கோவிந்தம் என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த மலை இருக்கிறது. கோவிந்தத்திற்கு அடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நிவிதம் {நிபிடம்} என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. ஓ! உமது குலத்தைப் பெருக்குபவரே {திருதராஷ்டிரரே}, இந்த மலைகள் ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட வெளிகள் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் பெருகிக்கொண்டே செல்கிறது. அவற்றில் இருக்கும் நாடுகளைக் குறித்து இப்போது நான் உமக்குச் சொல்லப்போகிறன். நான் அதைக் குறித்துச் சொல்வதைக் கேளும்.

[2] வாமனகத்திற்கும் வாமனத்திற்கும் பொருளில் பெரிய வேறுபாடு கிடையாது. அதே போல அந்தகாரமும் அந்தகாரகமும் ஒன்றே என்கிறார் கங்குலி.

கிரௌஞ்சத்திற்கு அருகில் உள்ள பகுதி {நாடு} குசலம் என்று அழைக்கப்படுகிறது. வாமனகதிற்கு அருகில் இருப்பது மனோனகம் என்று அழைக்கப்படுகிறது. மனோனுகத்திற்கு அடுத்தப் பகுதி {நாடு}, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, உஷ்ணம் என்று அழைக்கப்படுகிறது. உஷ்ணத்திற்கு அடுத்துப் பிராவாரகம்; பிராவாரகத்திற்கு அடுத்து அந்தகாரகம். அந்தகாரத்திற்கு அடுத்து உள்ள நாடு முனிதேசம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த முனிதேசத்திற்கு அப்பால், சித்தர்களாலும், சாரணர்களாலும் மொய்க்கப்படுவதும் துந்துபிஸ்வநம் என்று அழைக்கப்படுவதுமான பகுதி {நாடு} இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றனர். இந்த நாடுகள் அனைத்தும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் வசிப்பிடங்களாக இருக்கின்றன.

புஷ்கரத்தில் {என்ற தீவில்} {புஷ்கரத்வீபத்தில்}, தங்கமும், ரத்தினங்களும் நிறைந்த புஷ்கரம் என்று அழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே தெய்வீகமான பிரஜாபதி {பிரம்மன்} எப்போதும் வசிக்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் பெருமுனிவர்கள் அனைவரும், அவனை {பிரம்மனை} நிறைவான வார்த்தைகளால் மரியாதையாக எப்போதும் வழிபடுகின்றனர். ஜம்பூத்வீபத்தின் பல்வேறு ரத்தினங்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன.

இந்தத் தீவுகள் அனைத்திலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிரம்மச்சரியம், உண்மை {சத்தியம்}, அங்கே வசிப்போரின் தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, அவர்களின் உடல்நலம், வாழ்நாள் அளவு ஆகியவை (வடக்கே) செல்லச் செல்ல அந்தத் தீவுகளைப் போலவே ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே தர்மம் மட்டுமே பின்பற்றப்படும் நிலங்கள் அனைத்தும் ஒரே நாடு என்பதால், அந்தத் தீவுகளில் உள்ள நிலங்கள் ஒரு நாட்டை மட்டுமே கொண்டிருக்கின்றன. தலைவனான பிரஜாபதி {பிரம்மதேவன்}, தனது செங்கோலை உயர்த்தியபடி, அந்தத் தீவுகளைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே வசிக்கிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனே {அங்கே} மன்னனாக இருக்கிறான். அவனே {பிரம்மனே} அவர்களுடைய அருள் நிலைக்கு ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறான். அவனே, தந்தையாக இருக்கிறான், அவனே பாட்டனாகவும் இருக்கிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவனே அங்கே இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தையும் காக்கிறான். ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, சமைக்கப்பட்ட உணவு தானே அங்கே வருகிறது. அதையே உயிரினங்கள் தினமும் உண்கின்றன. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, இந்தப் பகுதிகளுக்கு {நாடுகளுக்கு} அடுத்துச் சமம் என்று அழைக்கப்படும் உறைவிடம் {சமதரை} காணப்படுகிறது. அது நட்சத்திர வடிவில் நான் மூலைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதில் முப்பத்துமூன்று {33} மண்டலங்கள் இருக்கின்றன.

ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, அங்கேதான் அனைவராலும் துதிக்கப்பட்டபடி நான்கு அரசயானைகள் இருக்கின்றன [3]. ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவை வாமனம், ஐராவதம் ஆகினவும் மற்றொன்றும், சுப்ரதீகமும் ஆகும் [4]. மதப்பெருக்குள்ள கன்னங்களும். வாயும் {முகமும்} கொண்ட அவற்றின் அளவுகளைக் கணக்கிட நான் துணியமாட்டேன் [5]. அவற்றின் நீளம், அகலம், கனம் ஆகியன எப்போதும் உறுதியற்றதாக நிலைத்திருக்கிறது. அங்கே அந்தப் பகுதிகளில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துத் திசைகளில் இருந்து காற்று சீரற்ற வகையில் வீசுகிறது [6]. தங்கள் வழியில் இருக்கும் அனைத்தையும் உயர இழுக்க வல்லவையும், பெரும் பிரகாசமும் கொண்ட அந்த யானைகள், தாமரை நிறத்தில் இருக்கும் தங்கள் துதிக்கைகளின் நுனிகளால் அவற்றைப் {காற்றைப்} பிடிக்கின்றன {தடுக்கின்றன}. அப்படிப் பிடித்ததும் அதே வேகத்தில் அவை அவற்றை எப்போதும் வெளியே விடுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூச்சுவிடும் அந்த யானைகளால் இப்படி விடப்படும் காற்றே அந்தப் பூமிக்கு வருகிறது. அதனாலேயே அங்கிருக்கும் உயிரினங்கள் மூச்சை இழுத்து வாழ்கின்றன" என்றான் {சஞ்சயன்}.

[3] திக் கஜம். அதாவது உலகத்தைத் தாங்கி நிற்கும் யானை. இந்து தொன்மங்களில் இப்படி நான்கு இருக்கின்ற. சில இடங்களில் பத்து என்றும் குறிப்பிடப்படுகின்றன என்கிறார் கங்குலி.

[4] அதாவது கன்னங்களில் இருந்தும் வாயில் இருந்தும் மதம் ஒழுகுதல். இணை சேர்கைக்கான காலத்தில், ஒரு யானையின் உடலில் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட வகைச் சாறு வெளியேறுகிறது. அதுவே மதநீர் என்று நம்பப்படுகிறது. பலமான, மூர்க்கமான யானையின் உடலில் இருந்து வெளிவரும் சாறின் அளவு அதிகமாக இருக்கும் என்கிறார் கங்குலி.

[5] Tasya (Tad என்பதின் ஒருமையாகும்) மற்றும் sa (Tad என்பதின் ஆண்பால் ஒருமையாகும்) என்ற இவை இரண்டும் நான்கு யானைகளையே குறிக்கின்றன. Gaja-chatushtaya என்பதும் ஒருமையேயாகும் என்கிறார் கங்குலி.

[6] Asamyadha என்பது உண்மையில், "கட்டுக்கடங்காத", அல்லது "தடையற்ற" என்ற பொருள்படும். அதாவது சுதந்திரமாக அல்லது ஒழுங்கற்ற வகையில் என்ற பொருள் படும் என்கிறார் கங்குலி.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, இது குறித்து நீ மிக விரிவாக எனக்கு அனைத்தையும் சொன்னாய். அந்தத் தீவுகளின் அமைப்பையும் நீ குறிப்பிட்டுவிட்டாய். இப்போது, ஓ! சஞ்சயா, என்ன எஞ்சியுள்ளதோ, அவற்றைச் சொல்வாயாக" என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "உண்மையில், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீவுகள் அனைத்தும் உமக்கு விளக்கப்பட்டுவிட்டன. இப்போது, வானத்தின் இருப்பவை, சுவர்ணபானு ஆகியவற்றைக் குறித்தும், ஓ! கௌரவர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அவற்றின் அளவுகளைக் குறித்தும் உண்மையாகச் சொல்லப் போவதை இப்போது கேட்பீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுவர்ணபானு {ராகு} வட்டவடிவிலானது என்று கேள்விப்படப்படுகிறது. அதன் விட்டம் பனிரெண்டாயிரம் {12,000; ஆரம்:12000/2=6000} யோஜனைகள் என்றும், அதன் சுற்றளவு மிகப் பெரியதாக இருப்பதால் நாற்பத்திரண்டாயிரம் {42,000} யோஜனைகள் இருப்பதாகவும், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் கற்றோரால் சொல்லப்பட்டுள்ளது [7].

[7] சுற்றளவு கிட்டத்தட்ட விட்டத்தை விட மூன்றரை மடங்கு இங்கே குறிப்பிட்டதைப் போலவே இருக்கிறது. அடுத்த விகிதமோ, நிச்சயம் சற்று குறைவாக, மூன்றும் ஏழில் ஒரு பங்குமாக இருக்கிறது. ஒரு வட்டத்தின் விட்டம் மற்றும் சுற்றளவு குறித்த விகிதத்தைப் பண்டைய இந்துக்கள் தோராயமாக அறிந்து வைத்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார் கங்குலி.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நிலவின் விட்டம் பதினோராயிரம் {11,000} யோஜனைகளாகக் குறிப்பிடப்படுகிறது. குளிர்ந்த கதிர்களைக் கொண்ட அந்த ஒப்பற்ற கோளின் {நிலவின்} சுற்றளவோ, ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, முப்பத்தெட்டாயிரத்துத் தொள்ளாயிரம் {38,900} யோஜனைகள் கொண்டதாக இருக்கிறது.

நன்மையானதும், வேகமாக நகர்வதும், ஒளி தருவதுமான சூரியனின் விட்டம், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} யோஜனைகளாகவும், பெரிதாக இருப்பதன் விளைவால், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே} அவனது சுற்றளவு முப்பத்தைந்தாயிரத்து எண்ணூறு {35,800} யோஜனைகளாகவும் கேட்கப்படுகிறது [8].

[8] வேறு பதிப்பில் இங்கே வேறு அளவுகளும் குறிப்புகளும் சொல்லப்படுகின்றன. அவை பின்வருமாறு : ராகு கிரகத்தின் பரப்பானது பன்னிரெண்டாயிரம் {12,000} யோஜனைகளாகும். அது முப்பத்தாறாயிரம் {30,000} யோஜனைகள் சுற்றளவு கொண்டதென்றும், அதைக்காட்டிலும் ஆறாயிரம் {6,000} அதிகச் சுற்றளவு {36,000} கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. சந்திர மண்டலம் பதினோராயிரம் {11,000} பரப்புள்ளதென்றும், முப்பத்துமூவாயிரம் {33,000} யோஜனைகள் சுற்றளவு உள்ளதென்றும், சந்திர மண்டலத்தின் பரப்பானது ஐம்பத்தொன்பதாயிரம் {59,000} யோஜனை அளவுள்ளதென்றும் சொல்கிறார்கள். சூரியனை பத்தாயிரம் {10,000} யோஜனை விஸ்தாரம் உள்ளதென்றும், முப்பதாயிரம் {30,000} யோஜனை சுற்றளவு உள்ளதென்றும், சொல்கிறார்கள். சூரியன் சந்திரனை விட ஐம்பத்தெட்டாயிரம் {58,000} யோஜனை பெரியதென்றும் கேள்விப்படுகிறோம்.

இவை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அர்க்கனால் {கற்ற மனிதனால்} கணக்கிடப்பட்ட பரிமாணங்கள் ஆகும். ராகு கிரகம், பேரளவு கொண்டதன் விளைவால், அது சூரியனையும், சந்திரனையும் குறிப்பிட்ட காலங்களில் விழுங்குகிறது. இதை நான் உமக்குச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன். அறிவியலின் கண் கொண்டு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீ கேட்டது அனைத்தையும் நான் இப்போது சொல்லிவிட்டேன்.

அமைதி {சமாதானம்} உமதாகட்டும். சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள படியே நான் அண்டத்தின் கட்டுமானத்தை இப்போது உமக்குச் சொன்னேன். எனவே, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனனைத் தணிப்பீராக [9]" என்றான் {சஞ்சயன்}.

[9] இந்தச் சுலோகத்தின் முதல் வார்த்தை பலவாறாக உரைக்கப்படுகிறது. வங்காள உரைகளில் அது 'Yathadishtam' என்றிருக்கிறது. அதுவே, பம்பாய் உரைகளில் 'Yathoddishtam.' என்றிருக்கிறது. பின்னது {'Yathoddishtam.'} பின்பற்றப்பட்டால் சாத்திரம் என்று மேலே குறிப்பிட்ட படியே இருக்கும். உண்மையில், இரண்டாவது வரி "துரியோதனனைத் தணிப்பீராக" என்றே இருக்கிறது. ஆனால் இதுபோன்ற புவியியல் செய்திகளைக் கேட்டுவிட்டு திருதராஷ்டிரன் தனது மகனை எப்படித் தணிக்கப்போகிறான் என்பதைக் காண எளிதாக இல்லை என்கிறார் கங்குலி.

ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, இந்த அழகிய பூமி பர்வத்தைக் கேட்ட ஒரு க்ஷத்திரியன் செழிப்பை அடைகிறான். தனது விருப்பங்களை அனைத்தையும் அடைந்து, நீதிமான்களின் பாராட்டையும் பெறுகிறான். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், கவனமாக நோன்புகளை நோற்று, இதைக் கேட்கும் ஒரு மன்னன், தனது வாழ்நாள், தனது புகழ் மற்றும் சக்தி ஆகிய அனைத்தையும் மேம்படுத்திக் கொள்கிறான். (இறந்து போன) அவனது தந்தைகள், பாட்டன்களும் இதனால் நிறைவை அடைகிறார்கள். நாம் இப்போது இருக்கும் இந்தப் பாரதக் கண்டத்தில் இருந்து பாயும் புண்ணியங்கள் அனைத்தையும் குறித்து நீர் இப்போது கேட்டுவிட்டீர்" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English