Monday, August 31, 2015

"துச்சாசனா, பீஷ்மரைக் காப்பாயாக!" என்ற துரியன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 015

"O Dussasana, protect Bhishma!" said Duryodhana! | Bhishma-Parva-Section-015 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : நடக்கும் போருக்காகத் திருதராஷ்டிரன் துரியோதனனைக் குற்றஞ்சுமத்தலாகாது என்று திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; துரியோதனன் துச்சாசனிடம் பேசியதைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில், இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நீர் தகுதியானவரே. எனினும், இந்தத் தவறுக்காகத் துரியோதனனைக் குற்றஞ்சாட்டுவது உமக்குத் தகாது. தவறான தனது சொந்த நடத்தையின் விளைவால் உண்டான தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறான நடத்தைகளுக்கு மற்றவர்களைக் காரணமாக்கக் கூடாது. ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பிற மனிதர்களுக்கு அனைத்து விதத்திலும் தீங்கிழைக்கும் ஒரு மனிதன், கண்டிக்கத்தக்க அவனது அந்தச் செயல்களின் விளைவாக, மனிதர்கள் அனைவராலும் கொல்லப்படத் தகுந்தவன் ஆவான்.

தீய வழிகளை அறியாதவர்களான பாண்டவர்கள், நெடுங்காலமாகத் தங்கள் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன், உமது முகத்தைப் பார்த்தபடியே, (தங்களுக்கு இழைக்கப்பட்ட) தீங்குகளைப் பொறுத்துக் கொண்டு, அவற்றை மன்னித்து, காட்டில் வசித்தார்கள்.

யோக சக்தியின் துணை கொண்டு காணப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் அளவிலா சக்தி கொண்ட மன்னர்களைக் குறித்துக் கேட்டு, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, உமது இதயத்தில் கவலை கொள்ளாதீர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை யாவும் முன்பே விதிக்கப்பட்டவையே.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருடைய அருளால் (யார் கொடுத்த வரத்தால்),  அற்புதமான தெய்வீக அச்சத்தையும், பார்வைப் புலனை விஞ்சிய காட்சியையும், பெரும் தொலைவுக்கான கேள்வியையும் {கேட்கும் திறனையும்}, பிற மக்களின் இதயங்களைக் {மனங்களைக்} குறித்த அறிவையும், கடந்த மற்றும் எதிர் காலங்களையும், விதிகளை மீறும் மனிதர்கள் அனைவரின் மூலம் குறித்த அறிவையும் [1], வானத்தின் ஊடாகச் செல்லக்கூடிய இனிமையான சக்தியையும், போர்க்களங்களில் ஆயுதங்களால் தொடப்பட முடியாத சக்தியையும், அடைந்தேனோ, அந்த (ஞானியும், உயர் ஆன்மா கொண்டவரும் [2]), பராசரர் மைந்தருமான உமது தந்தையை {வியாசரை} வணங்கி, அழகானதும், பாரதர்களுக்கு இடையில் ஏற்பட்டதும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்குவதும், உயரிய அற்புதம் நிறைந்ததுமான அந்தப் போரைக் குறித்து என்னிடம் இருந்து கேட்பீராக.

[1] இங்கே மூலத்தில் Vyotthiopatti vijananam என்றிருக்கிறது. அதில் Vyutthita என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய வார்த்தையாகும் என்கிறார் கங்குலி.

[2] "உயர்-ஆன்மா கொண்டவர்" மற்றும் "யாரால் எனக்கு வரம் அளிக்கப்பட்டதோ" என்ற வார்த்தைகளும், தொடர்ந்து வரும் 9வது ஸ்லோகத்ததில் தோன்றுகின்றன என்கிறார் கங்குலி.

விதிப்படி போராளிகள் அணிவகுக்கப்பட்டு, அவர்கள் போருக்குத் தயாராக இருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனிடம் துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். "ஓ! துச்சாசனா, பீஷ்மரின் பாதுகாப்புக்காகத் தேர்கள் விரைந்து செலுத்தப்படட்டும். நீ நமது படைப்பிரிவுகள் அனைத்தையும் (முன்னேறும்படி) விரைந்து ஏவுவாயாக. பாண்டவர்கள் மற்றும் குருக்களின் தலைமையிலான துருப்புகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பல வருடங்களாக நான் நினைத்து வந்த அந்த நேரம் இப்போது வந்திருக்கிறது. பீஷ்மரைப் பாதுகாப்பதை விட, இந்தப் போரில் (நமக்கு) மிக முக்கியமான செயலாக நான் வேறு எதையும் நினைக்கவில்லை. {அப்படி பீஷ்மர்} பாதுகாக்கப்பட்டால் பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களை அவர் {பீஷ்மர்} கொல்வார்.

அந்தத் தூய ஆன்மா கொண்ட வீரர் {பீஷ்மர்}, "நான் சிகண்டியைக் கொல்ல மாட்டேன். முன்பு அவன் பெண்ணாக இருந்தவன் என்று கேள்விப்படப் படுகிறது. இக்காரணத்திற்காக அவன் இந்தப் போரில் என்னால் கைவிடத் {புறக்கணிக்கப்படத்} தக்கவனாவான்" என்று சொல்லியிருக்கிறார். இதற்காகவே, பீஷ்மர் குறிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும். எனது வீரர்கள் அனைவரும் சிகண்டியைக் கொல்லத் தீர்மானித்துத் தங்கள் நிலைகளை ஏற்க வேண்டும். அனைத்து வகை ஆயுதங்களுடன் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கில் இருக்கும் துருப்புகள் அனைத்தும் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாக்கட்டும்.

பாதுகாக்கப்படாமல் இருந்தால், பெரும் பலம் படைத்த சிங்கத்தைக்கூட ஓநாய் வேட்டையாடிவிடக்கூடும். எனவே, நரியால் கொல்லப்படும் சிங்கத்தைப் போல, சிகண்டியால் பீஷ்மர் கொல்லப்பட நாம் விடலாகாது. பல்குனனின் {அர்ஜுனனின்} இடது சக்கரத்தை {இடது பக்க படையை} யுதாமன்யுவும், வலது சக்கரத்தை {வலது பக்க படையை} உத்தமௌஜசும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் இருவரால் பாதுகாக்கப்படும் பல்குனனே {அர்ஜுனனே} சிகண்டியைப் பாதுகாத்து வருகிறான். ஓ! துச்சாசனா, பீஷ்மரால் துறக்கப்பட்டு {புறக்கணிக்கப்பட்டு}, பல்குனனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டுவரும் அந்தச் சிகண்டி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} கொல்ல முடியாத வகையில் செயல்படுவாயாக" என்றான் {துரியோதனன்}".


ஆங்கிலத்தில் | In English