Tuesday, September 01, 2015

கௌரவர்களின் படை! - பீஷ்ம பர்வம் பகுதி - 016

The army of the Kauravas! | Bhishma-Parva-Section-016 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 4)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையின் தயாரிப்புகள் மற்றும் கௌரவத் தரப்பில் பதினோரு பிரிவுகளில் நின்றவர்கள் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் விவரிப்பது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இரவு கடந்ததும், "அணிவகுப்பீர்! அணிவகுப்பீர்!" என்று மன்னர்கள் அனைவரும் எழுப்பிய குரலொலி பெரிதாக இருந்தது. சங்கொலிகள் மற்றும் சிங்க கர்ஜனையை ஒத்திருந்த துந்துபி ஒலிகளோடும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குதிரைகளின் கனைப்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள், ஆரவாரமிக்க யானைகள் மற்றும் {வீரர்களின்} கூக்குரல்களோடும், கைக்கொட்டல் ஒலிகளோடும், போராளிகளின் முழக்கங்களோடும் எழுந்த ஆரவாரம் எங்கும் பெரிதாக இருந்தது.


குருக்கள் மற்றும் பாண்டவர்களின் பெரும்படைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்தில் எழுந்து, தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்தனர். பிறகு சூரியன் எழுந்ததும், உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பிலும், தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் உரிய கடும் ஆயுதங்களும், கவசங்களும், இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும் முழுமையாகக் காட்சியளித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல அங்கே காட்சியளித்தன. அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தன.

அங்கே இருந்த உமது தந்தை {பெரியப்பா பீஷ்மர்}, முழு நிலவைப் போல ஒளிவீசிக் கொண்டிருந்தார். விற்கள், வாள்கள், ரிஷ்டிகள் {இருபுறக் கூர் கொண்ட கத்திகள்}, கதாயுதங்கள், ஈட்டிகள், வேல்கள் மற்றும் பல்வேறு வகைகளிலான பிரகாசமிக்க ஆயுதங்களைத் தரித்தபடி படைவீரர்கள் (தங்களுக்கு) உரிய அணிகளில் தங்கள் நிலைகளை ஏற்றனர். {கௌரவர்களாகிய} நமக்கும், எதிரிக்கும் சொந்தமான பிரகாசமிக்கக் கொடிமரங்கள் பல்வேறு வடிவங்களிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன. தங்கத்தால் செய்யப்பட்டு, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரும் பிரகாசம் கொண்ட ஆயிரக்கணக்கான கொடிகள், போருக்காகக் காத்திருக்கும் வீரப் போராளிகள் கவசம் தரித்துக் கொண்டு கொடிக்கம்பங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அழகாக இருந்தன. காளைகளைப் போன்ற நீண்ட கண்களைக் கொண்ட மனிதர்களில் முதன்மையானோர் பலர், அம்பறாத்தூணிகளுடனும், தோலுறைக் கவசங்கள் கொண்ட கைகளுடனும், தங்கள் பிரகாசமிக்க ஆயுதங்களை உயர்த்திய படி தங்கள் படைப்பிரிவின் தலைமையில் நின்று கொண்டிருந்தனர்.

சுபலனின் மகன் சகுனி {1}, சல்லியன் {2}, ஜெயத்ரதன் {3}, விந்தன் மற்றும் அனுவிந்தன் என்ற அவந்தியின் இளவரசர்கள் இருவர் {4}, கேகயச் சகோதரர்கள் {5}, கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் {6}, கலிங்கர்களின் ஆட்சியாளன் சுருதாயுதன் {7}, மன்னன் ஜயத்சேனன் {8}, கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் {9}, சத்வ குலத்துக் கிருதவர்மன் {10} ஆகிய மனிதர்களில் புலிகளும், (அந்தணர்களுக்கு) அபரிமிதமான தானங்களை அளித்து வேள்விகளைச் செய்தவர்களுமான இந்தப் பத்துப் பேரும் {பத்து அணிகளைச் சேர்ந்தவர்களும்}, கதாயுதங்களைப் போன்று தோற்றமளித்த கரங்களுடனும், பெரும் துணிவுடனும் ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைமையில் நின்றார்கள்.

இவர்களும், இன்னும் பல மன்னர்கள் மற்றும் இளவரசர்களும், கொள்கைகளை அறிந்த வலிமைமிக்கத் தேர் வீரர்களும், துரியோதனனின் உத்தரவுக்குப் பணிந்து, கவசம் தரித்தபடி, தங்கள் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் நின்றார்கள். கருப்பு மான் தோல் உடுத்தியவர்களும், பெரும் பலம் உடையவர்களும், போரில் சாதித்தவர்களுமான அவர்கள் அனைவரும் துரியோதனனின் நிமித்தமாகத் திறன்மிக்கப் பத்து அக்ஷௌஹிணிகளின் தலைமையில் நின்று உத்தரவிட்டபடியே பிரம்மனின் உலகத்தை அடைவதற்கு மகிழ்ச்சியாகத் தயாரானார்கள்.

தார்தராஷ்டிரத் துருப்புகளை உள்ளடக்கிய, கௌரவர்களின் பதினோராவது {11} பெரும் படைப்பிரிவானது, அந்த முழுப் படைக்கும் முன்னணியில் நின்றது. அந்தப் படைப்பிரிவின் முன்னணியிலேயே சந்தனுவின் மகன் {பீஷ்மர்} நின்றார். தனது வெள்ளைத் தலைப்பாகை {வெண்கிரீடம்}, வெண்குடை, வெண்கவசம் ஆகியவற்றைத் தரித்திருந்த பீஷ்மர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தவறாத ஆற்றலுடன் உதிக்கும் சந்திரனைப் போல இருப்பதை நாங்கள் கண்டோம்.

தங்கப் பனை மரம் பொறித்த கொடியுடன், வெள்ளியாலான தேரில் வீற்றிருந்த அந்த வீரரைக் {பீஷ்மரைக்}, குருக்களும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் வெண்மையான மேகங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலக் கண்டார்கள். திருஷ்டத்யும்னன் தலைமையில் நின்ற சிருஞ்சயர்களுக்கு மத்தியில் உள்ள பெரும் வில்லாளிகள், (பீஷ்மரைக் கண்டு), வலிமைமிக்கச் சிங்கம் ஒன்று கொட்டாவி விடுவதைக் காணும் சிறு விலங்குகளைப் போலத் தெரிந்தார்கள். உண்மையில், திருஷ்டத்யும்னன் தலைமையில் இருந்த போராளிகள் அனைவரும், அச்சத்தால் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையே உமது படையின் அற்புதமான பதினோரு {11} பிரிவுகளாகும். அப்படியே பாண்டவர்களின் ஏழு {7} பிரிவுகளும் மனிதர்களில் முதன்மையானோராலேயே பாதுகாக்கப்பட்டது. உண்மையில், ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டிருந்த அந்தப் படைகள் இரண்டும், பெரும் முதலைகள் நிறைந்தவையும், கடுமையான மகரங்களால் கலங்கடிக்கப்பட்டவையுமான யுக முடிவின் இரு கடல்களைப் போலத் தெரிந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன் எப்போதும், இது போன்ற, இந்தக் கௌரவர்களுடையதைப் போன்ற இரு படைகள் மோதியதை நாம் கண்டதோ, கேட்டதோ இல்லை" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English