"Arjuna, Seek to fight Bhishma!" said Krishna! | Bhishma-Parva-Section-022 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 10)
பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கு எதிராக அணிவகுப்பை ஏற்படுத்திய யுதிஷ்டிரன், தனது படையை உற்சாகப்படுத்தியது. யுதிஷ்டிரனும் புறப்பட்டது; முனிவர்கள் யுதிஷ்டிரனைத் துதித்து, அவனது வெற்றிக்காக வேண்டியது; பீமனைக் கண்டு கௌரவப் படை நடுங்கியது; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன் ஆகிய தகவல்களைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் படைப்பிரிவுகளுக்கு எதிரான வியூகத்தில் தனது துருப்புகளை அணிவகுத்து அனுப்பிய மன்னன் யுதிஷ்டிரன், "(சாத்திரங்களில்) சொல்லப்பட்டவைக்கு ஏற்புடைய வகையில் நமது படைகளை எதிர்வியூகத்தில் பாண்டவர்களாகிய நாங்கள் அனுப்புகிறோம். பாவமற்றவர்களே, உயர்ந்த சொர்க்கத்தை (அடைய) விரும்பி, நல்ல முறையில் போரிடுவீராக" என்று அவர்களைத் துரிதப்படுத்தினான் {யுதிஷ்டிரன்}.
(அந்தப் பாண்டவப் படையின்) நடுவில், தனது துருப்புகளுடன் கூடிய சிகண்டி அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டு இருந்தான். பீமனால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் படையின் முன்னணியில் நகர்ந்தான். (அந்தப் பாண்டவப் படையின்) தெற்குப் பிரிவு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வில்லாளியும், அழகனும், சாத்வத குலத்தின் போராளிகளில் முதன்மையானவனும், இந்திரனுக்கு ஒப்பானவனுமான யுயுதானனால் பாதுகாக்கப்பட்டு இருந்தது.
மகேந்திரனையே சுமக்கத் தகுந்ததும், அற்புதமான கொடிக்கம்பத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தாலும் ரத்தினங்களாலும் பலவண்ணங்களைக் கொண்டதும், (குதிரைகளுக்கான) தங்கக் கட்டுக்கயிறுகளைக் கொண்டதுமான தேரில், தனது யானைப் பிரிவுகளுக்கு மத்தியில் யுதிஷ்டிரன் இருந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, தந்தக் கைப்பிடியுடன் கூடிய தன் தூய வெண்குடை தனது தலைக்கு மேல் உயர்த்தப்பட்டு மிகவும் அழகாக இருந்தான். மன்னனை {யுதிஷ்டிரனை} வாழ்த்தியபடி பல பெருமுனிவர்கள் அவனை வலம் வந்தனர். பல புரோகிதர்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர், அவனது {யுதிஷ்டிரனின்} புகழைச் சொல்லும் துதிபாடல்களைப் பாடி, அவனை வலம் வந்தபடியே, ஜபங்கள், மந்திரங்கள், பயனளிக்கும் மருந்துகள் மற்றும் பல்வேறு பிராயச்சித்த சடங்குகளின் துணையுடன், அவனது {யுதிஷ்டிரனின்} எதிரிகளுடைய அழிவை விரும்பினார்கள். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, பசுக்கள், கனிகள், மலர்கள், பொற்காசுகள், ஆடைகள் ஆகியவற்றை அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுத்தபடி, தேவர்களின் தலைவனான சக்ரனைப் {இந்திரனைப்} போல முன்னேறிச் சென்றான்.
நூறு மணிகளால் இணைக்கப்பட்டதும், சிறந்த வகையிலான ஜம்பூநதத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அற்புதமான சக்கரங்களைக் கொண்டதும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருப்பதும், வெண் குதிரைகள் பூட்டப்பட்டிருப்பதுமான அர்ஜுனனின் தேர், ஆயிரம் சூரியன்களைப் போல அதீதப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. இந்த உலகத்தில், எவனுக்கு இணையான வில்லாளி இப்போதும் எப்போதும் இல்லையோ, அந்த அர்ஜுனன் காண்டீவத்துடன் நின்றிருந்ததும், குரங்கு {வானரம்_ஹனுமன்} கொடி கொண்டதுமான அந்தத் தேரின் கடிவாளங்கள் கேசவனால் {கிருஷ்ணனால்} பிடிக்கப்பட்டது.
உமது மகன்களின் படைகளை நசுக்குவதற்காக எவன் பயங்கர வடிவைக் கொள்வானோ, ஆயுதங்களற்ற எவன், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைத் தனது வெறுங்கரங்களைக் கொண்டே தூசிகளாகப் பொடியாக்குவானோ, விருகோதரன் என்றும் அழைக்கப்படும் அந்த வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், இரட்டையர்களுடன் {நகுலன் மற்றும் சகாதேவனோடு} சேர்ந்து, (பாண்டவர்களின்) தேர்ப்படைப் போர் வீரர்களைப் பாதுகாத்தான். விளையாட்டு நடை நடக்கும் சீற்றமிகு சிங்கங்களின் இளவரசனை {தலைமை சிங்கத்தைப்} போலவோ, பூமியில், (பூலோக) உடல் கொண்டு வந்த பெரும் இந்திரனைப் போலவோ இருந்தவனும், யானை மந்தையின் பெருமைமிக்கத் தலைவனைப் போன்றவனுமான ஒப்பற்ற விருகோதரனை {பீமனை}, (அந்தப் படையின்) முன்னணியில் கண்ட உமது தரப்புப் போர்வீரர்கள், சேற்றில் {அகப்பட்டு} மூழ்கும் யானைகளைப் போல, தங்கள் பலத்தை இழந்து அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த ஒப்பற்ற இளவரசனான குடகேசனிடம் {அர்ஜுனனிடம்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, "தனது படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, கோபத்தால் எவர் நம்மை எரிப்பாரோ, சிங்கத்தைப் போல நமது துருப்புகளை எவர் தாக்குவரோ, முன்னூறு {300} குதிரை வேள்விகள் எவர் செய்தாரோ, குருக்குலத்தின் கொடியான அந்தப் பீஷ்மர், அதோ இருக்கிறார்! மேகங்களால் மூடப்படும் பிரகாசமான பேரொளி போல, அவ்விடத்தில், அனைத்துப் புறங்களிலும், பெரும் வீரர்கள் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்திருக்கின்றனர். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அதோ அந்தத் துருப்புகளைக் கொன்று, அந்தப் பாரதக் குலத்துக் காளையிடம் {பீஷ்மரிடம்} போரிட முயல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.
ஆங்கிலத்தில் | In English |