Virtue in work - Karma Yoga ! | Bhishma-Parva-Section-027 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 15) {பகவத் கீதை - பகுதி 3}
பதிவின் சுருக்கம் : பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் செயல்பாட்டை, அதன் பலன்களின் மீது பற்றில்லாமல் செய்வதான கர்ம யோகமே அர்ஜனனுக்கான சரியான செயல்வழியாக இருக்கும் என்பதை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் சொல்வது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, செயலைவிட அர்ப்பணிப்பே {பக்தியே, ஞானமே} மேன்மையானதாக உன்னால் கருதப்பட்டால், ஓ! கேசவா {கிருஷ்ணா}, இத்தகு பயங்கரச் செயலில் என்னை ஏன் நீ ஈடுபடுத்துகிறாய்? 3:1
சிலேடைகளால் {இருபொருள் கொண்ட [அ] தெளிவற்ற வார்த்தைகளால்} நீ எனது அறிவைக் {புத்தியைக்} குழப்புவதாகத் தெரிகிறது. எனவே, நான் நன்மையை அடையும்படி நிச்சயமான ஒன்றை மட்டும் (எனக்குச்) சொல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}. 3:2
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இங்கே இவ்வுலகில் இருவகை அர்ப்பணிப்புகள் {நம்பிக்கைகள்} இருக்கின்றன என்று என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டது; சாங்கியர்கள் அறிவின் மூலமும், {கர்ம} யோகிகள் செயலின் மூலமும் அவற்றை ஏற்கின்றனர். 3:3
செயல்படாமல் இருப்பதால் (மட்டும்), ஒரு மனிதன் செயலில் இருந்து விடுபட்டுவிடுவதில்லை. அதேபோல, (செயலைத்) துறப்பதால் மட்டுமே அவன் இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்துவிடுவதில்லை. 3:4
செயல்படாமல் யாராலும் ஒருக்கணம்கூட இருக்க முடியாது. {இயற்கையான குணங்களே அனைத்து உயிர்களையும் அவசரமாகச் செயல்புரிய வைக்கின்றன}[*]. 3:5
[*] அடைப்புக்குறிக்குள் இருக்கும் வாக்கியம் கங்குலியில் விடுபட்டுள்ளது.
புலன் உறுப்புகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மனதால் புலன் நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டே வாழும் மூட ஆத்மா கொண்ட மனிதன், நடிகன் {உண்மையை மறைக்கும் போலியானவன்} என்று அழைக்கப்படுகிறான். 3:6
எனினும், ஓ! அர்ஜுனா, மனத்தின் மூலம் (தனது) புலன்களைக் கட்டுப்படுத்தும் ஒருவன், செயல் உறுப்புகளைக் {கர்மேந்திரியங்களான செயற்பொறிகளைக்} கொண்டு, செயலின் (வடிவில்) அர்ப்பணிப்புடன் {கர்ம யோகத்தில்} பற்றில்லாமல் ஈடுபட்டால், அவன் (அனைத்துக்கும் மேலாக) சிறப்படைவான். 3:7
(எனவே), {விதிக்கப்பட்ட} செயலில் உன்னை நீ எப்போதும் ஈடுபடுத்திக் கொள்வாயாக. ஏனெனில், செயலின்மையைவிடச் செயலே சிறந்தது. செயலில்லாமல் உனது உடலைக் கூட உன்னால் தாங்கிக் {பராமரித்துக்} கொள்ள முடியாது. 3:8
இவ்வுலகில், வேள்விக்கான (நிகழ்த்தப்படும்) செயலைத் தவிர, மற்ற அனைத்து செயல்களும் {பற்றுதலில்} பிணைக்கப்பட்டவையாகும் {கர்ம பந்தம் கொண்டவையாகும்}. (எனவே), ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, அதற்காகவே, பற்றைக் களைந்து செயல்புரிவாயாக. 3:9
பழங்காலத்தில், படைப்புத் தலைவன் {பிரம்மன்} மனிதர்களையும், வேள்வியையும் ஒன்றாகப் படைத்து, "இதனால் (இந்த வேள்வியால்) பெருகுவீராக. இந்த (வேள்வி) உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் ஈடேற்றுவதாக இருக்கட்டும். 3:10
இதைக் {வேள்வியைக்} கொண்டு தேவர்களை வளர்ப்பீராக. (பதிலுக்கு) தேவர்களும் உங்களை வளர்க்கட்டும். இருதரப்பு நலன்களையும் இப்படியே நிறைவேற்றும் நீங்கள், (உங்களுக்கு) நன்மையானதையே அடைவீராக. 3:11
வேள்வியால் நிறைவடைந்த தேவர்கள், நீங்கள் விரும்பும் இன்பங்களை அளிப்பார்கள். அவர்களால் கொடுக்கப்பட்டதை (தானே) அனுபவித்துக் கொண்டு, அவர்களுக்கு {தேவர்களுக்குக் காணிக்கையின் மூலம்} கைம்மாறு செய்யாதவன் நிச்சயமாகத் திருடனே ஆவான்" என்றான் {பிரம்மன்}. 3:12
வேள்விகளில் எஞ்சுவதை உண்ணும் நல்லோர் {சான்றோர்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். தங்களுக்காக மட்டுமே உணவை சமைக்கும் அநீதியாளர்கள் பாவத்தையே ஈட்டுகின்றனர். 3:13
உணவில் இருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன; {மழையால் உணவு தோன்றுகிறது; மழை வேள்வியால் உண்டாகிறது}; வேள்வி என்பது செயலின் வெளிப்பாடாகும். 3:14.
வேதங்களில் {அதாவது பிரம்மத்தில்} இருந்தே செயல் தொடங்கியது என்பதை அறிவாயாக; சிதைவிலாதவனிடம் {பரமாத்மாவிடம்} இருந்தே வேதங்கள் தொடங்கின {பிரம்மம் உண்டாகியது}. எனவே, எங்கும் படர்ந்தூடுருவியிருக்கும் பிரம்மம் வேள்விகளில் நிறுவப்படுகிறது [**]. 3:15
[**] மேற்கண்ட சுலோகத்தின் மூலம் வேதங்கள் பிரம்மத்தில் இருந்து உண்டானவை. பிரம்மத்தோடு இருந்தவை என்று நிறுவப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இப்படிச் சுழலன்று கொண்டிருக்கம் {மேற்கண்ட படைப்பு} சக்கரத்தை இவ்வுலகில் பின்பற்றாதவனும், தனது புலன்களில் (ஈடுபட்டு) மகிழ்ந்து பாவ வாழ்வு வாழ்பவனுமான மனிதன் வீணாகவே வாழ்கிறான். 3:16
எனினும், தன்னில் {சுயமான ஆத்மாவில்} மட்டுமே பற்றுடையவன் {தன்னில் ஒளிர்பவன்}, தன்னில் மனநிறைவு கொள்பவன் மற்றும் தன்னிலே மகிழ்பவனான மனிதனுக்கு (செய்வதற்கு) செயல் {வேலை} எதுவும் கிடையாது. 3:17
செயலாலோ, செயலின்மையாலோ அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதே போல, அனைத்து உயிரினங்களிடமும் அவனுடைய {அப்படிப்பட்ட} பயனும் சார்ந்திருப்பதில்லை. {எந்தவிதப் பயனையும் அவன் கருதுவதில்லை; எந்த உயிரையும் அவன் சார்ந்திருப்பதில்லை} [1]. 3:18
[1] விரிவுரையாளர்களால் விளக்கப்படுவது போல, அத்தகு மனிதன் செயலால் புண்ணியத்தையோ, செயலின்மையால் அல்லது செயலைத் தவிர்ப்பதால் பாவத்தையோ அடைவதில்லை. உயர்ந்த உயிரினத்தில் இருந்து இழிந்த உயிரினம் வரை, அவற்றில் எதுவும் வேறு எதையும் சார்ந்திருப்பதில்லை என்றே இங்குப் பொருள்படுகிறது என்கிறார் கங்குலி.
எனவே, செய்யப்பட வேண்டிய செயலை {செயலின் பலனில்} பற்றில்லாமல் எப்போதும் செய்வாயாக. பற்றில்லாமல் செயல்புரியும் மனிதன் பரம்பொருளை அடைகிறான். 3:19
செயலால் மட்டுமே ஜனகரும், பிறரும் தங்கள் நோக்கங்களை அடைந்தனர். தங்கள் கடமைகளைச் செய்யும் மனிதர்களைக் கருதிப்பார்த்து, {உலகிற்குக் கற்பிப்பதற்காக}, செயல்படுவதே உனக்குத் தகும். 3:20
பெரும் மனிதன் ஒருவன் {உயர்ந்தோன்} செய்வதை எல்லாம், இதர மக்களும் செய்கிறார்கள் {பின்பற்றுகிறார்கள்}. அவர்களால் (பெரும் மனிதர்களால்) அமைக்கப்பட்ட {நிர்ணயிக்கப்பட்ட} குறிக்கோள்களையே சாதாரண மனிதர்கள் பின்பற்றுகிறார்கள் [2]. 3:21
[2] இங்கே குறிப்பிடப்படும் Itaras "இதரர்" என்ற சொல் "பிறர்" என்ற பொருளைத் தராது; இழிந்தவர்கள் என்ற பொருளையே இங்குத் தரும் என்கிறார் கங்குலி. ஆனால் தாழ்ந்தோர் எனப் படிப்பதைவிட இங்கே இதர மக்கள் என்று படிப்பதே சிறப்பு. பல உரைகள் இதரர் என்றே இருக்கின்றன. பாரதியும் இங்கு "மற்ற மனிதர்கள்" என்றே குறுப்பிடுகிறார். தத்வவிவேசனீ "ஏனையோர்" என்று சொல்கிறது. பிரபுபாதர் "பொதுமக்கள்" என்று சொல்கிறார். எனவே இங்கு நான் கங்குலி சொல்வதில் இருந்து மாறுபட்டே மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, (என்னால்) அடையப்படாத எதுவும் இல்லாததால் {நான் அனைத்தையும் அடைந்திருப்பதால்}, மூன்று உலகிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆயினும்கூட நான் செயலில் ஈடுபடுகிறேன். 3:22
எந்நேரத்திலும் நான் சோம்பலில்லாமல் செயலில் ஈடுபடுகிறேன். ஏனெனில், ஓ! பார்த்தா, அனைத்துப் புறங்களில் இருந்தும் எனது வழியை மனிதர்கள் பின்பற்றுவார்கள். 3:23
நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் சீர்குலைந்துவிடும். மேலும் அதனால் {அந்தச் சீர்குலைவால்} கலப்பை ஏற்படுத்தி, நானே இந்த மக்களை அழிக்க காரணமாக வேண்டியிருக்கும். 3:24
[3] saṅkarasya kartā "ஸங்கரஸ்ய கர்தா" என்றே இருக்கிறது. கங்குலியோ இங்கே சாதிகளில் கலப்பை ஏற்படுத்தி என்று சொல்கிறார். சாதிகள் என்ற சொல் மூலத்தில் இல்லை. இதற்குப் பாரதியார் "குழப்பத்தை ஆக்கியோன்" என்று உரை பெயர்த்திருக்கிறார். தத்வவிவேசனீ "சீர்குலவை ஏற்படுத்தி" என்கிறது. பிரபுபாதர், "தேவையற்ற ஜனங்கள் தோன்றுவதற்குக் காரணமாவேன்" என்று பெயர்த்திருக்கிறார். இந்த சுலோகத்தின் ஆங்கில வரியின் பொருளை மூலத்தோடு ஒப்பிட்டு, மேலும் நான்கு புத்தகங்களுடனும் ஒப்பிட்டு, கங்குலின் மொழிபெயர்ப்பில் தெரிந்த பொருள் மாறுதலை மட்டுமே நான் இங்கு திருத்தியிருக்கிறேன்.
ஓ! பாரதா {அர்ஜுனா}, அறியாமை கொண்டோர், பயனில் பற்றுடன் எப்படிச் செயல்படுகிறார்களோ, அப்படியே அறிவுடைய ஒருவன், மனிதர்களைத் தங்கள் கடமைகளை நோற்க வைக்க {மக்களைச் சரியான பாதையில் நடக்க வைக்க}, பயனில் பற்றில்லாமல் செயல்பட வேண்டும். 3:25
செயலில் {செயலின் பலனில்} பற்றுடையோரும், அறியாமை கொண்டோருமான மனிதர்களுக்கு மத்தியில், அறிவில் {புத்தியில்} குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது; (மறுபுறம்) அர்ப்பணிப்புடன் செயல்படும் அவன் {அறிஞன்}, அவர்கள் அனைவரையும் {அறியாதோரை} அனைத்து (வகை) வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். 3:26
அனைத்து செயல்களும், எல்லா வழியிலும் இயற்கையின் குணங்களுடனேயே செய்யப்படுகின்றன. எனினும், ஆணவத்தில் மயங்கிய மனம் கொண்ட ஒருவன் {அஞ்ஞானி}, தன்னைத்தானே செயல்படுபவனாகக் கருதிக் கொள்கிறான். {செயலைத் தானே செய்ததாக நினைத்துக் கொள்கிறான்}. 3:27
ஆனால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, குணம், செயல்பாடு ஆகியவற்றில் (தனது = ஆத்மாவின்) வேறுபாடுகளை அறிந்தவன் எவனோ, அவன் தனது புலன்கள் மட்டுமே அவற்றின் நோக்கங்களில் ஈடுபடுகின்றன (தான் என்ற ஆத்மா அல்ல) என்று கருதி, அச்செயலில் பற்று கொள்வதில்லை [4]. 3:28
[4] "சுலோகத்தின் இரண்டாவது வரியில் உள்ள மூலச் சொற்களின்படி, "குணங்கள் குணங்களில் ஈடுபடுவதாக எண்ணி" என்றே பொருள் வரும். இதில் முதலில் சொல்லப்படும் குணங்கள் "புலன்கள்" என்பதையும், இரண்டாவது சொல்லப்படும் குணங்கள் "புலன்நுகர் பொருட்கள்" என்பதையுமே இங்குக் குறிக்கின்றன. இங்கே கருத்து என்னவென்றால், "குறிப்பிடப்படும் அவற்றின் வேறுபாட்டை அறிந்த ஒருவன், தனது ஆன்மா செயல்படுகிறது என எப்போதும் நினைக்க மாட்டான். ஏனெனில், புலன்கள் தங்களுக்குரிய பொருட்களில் ஈடுபடுவதன் விளைவே செயலாகும்" என்கிறார் கங்குலி. இங்கே பிரபுபாதர் கங்குலிக்கு இசைவாகவும், பாரதியாரும், கோயந்தகரும் "குணங்கள் குணங்களில் ஈடுபடுகின்றன" என்றும் பெயர்த்திருக்கிறார்கள்.
இயற்கையின் குணங்களால் மயங்கியோர், குணங்களால் செய்யப்பட்ட செயல்களில் பற்றுதலைக் கொள்கிறார்கள். சரியான அறிவு கொண்ட ஒருவர், நிறைவற்ற அறிவு கொண்ட அவர்களைக் {பற்றுதல் கொள்பவரைக்} குழப்பக் கூடாது. 3:29
தன்னில் {ஆத்மாவில்} செலுத்தப்பட்ட (உனது) மனத்தால் அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து, உனது (இதயத்தின்) பலவீனம் அகன்று, ஆசை, பற்று ஆகியவை இல்லாமல் போரில் ஈடுபடுவாயாக [5]. 3:30
[5] "அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து" என்பது, "நீ செய்யும் அனைத்தைம் எனக்காகவே செய்கிறாய் என்று நம்பிக்கையுடன்" என்ற பொருளைத் தரும் என்கிறார் கங்குலி.
அற்பத் தடைகளை எழுப்பாமல், நம்பிக்கையுடன், எனது இந்தக் கருத்தை எப்போதும் பின்பற்றும் மனிதர்கள், செயலின் மூலமே {கர்ம பந்தத்திலிருந்து = செயல் பற்றிலிருந்து} இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்துவிடுகிறார்கள். 3:31
ஆனால், அற்பத்தடைகளை ஏற்படுத்தி, இந்த எனது கருத்தைப் பின்பற்றாதவர்களோ, பாகுபாடு ஏதுமில்லாமல், அறிவனைத்தையும் இழந்தவர்களாகி அழிகிறார்கள் என்பதை அறிவாயாக. 3:32
அறிவுடைய ஒரு மனிதன், தனது சொந்த இயல்பின் படி செயல்புரிகிறான். அனைத்து உயிரினங்களும் (தங்கள்) இயல்புகளையே பின்பற்றுகின்றன {தன்வசமின்றி செயல்புரிகின்றன}. எனவே, கட்டுப்பாட்டால் என்ன சாதிக்க முடியும்? 3:33
புலன்கள், தங்களுக்குரிய புலனுகர் பொருட்களின் மீது நிலைத்த பற்றையோ, வெறுப்பையோ கொண்டிருக்கின்றன. ஒருவனின் பாதையில் தடைகளாக இருக்கும் இவற்றுக்கு ஒருவன் அடிபணியக் கூடாது. 3:34
குறையோடு செய்யப்பட்டாலும், ஒருவனது சொந்த கடமை {ஸ்வதர்மம் = தன்னறம்}, வேறொருவரால் சரியாகச் செய்யப்படும் செயலை விடச் {பரதர்மத்தைவிட = அயலறத்தைவிட} சிறந்ததே ஆகும். ஒருவனது சொந்த கடமையில் (செயல்படுகையில்} ஏற்படும் மரணம் விரும்பத்தக்கதே. மற்றொருவனின் கடமை (அதைப் பின்பற்றினால், அது), அச்சத்தையே (அதனுடன்) சுமந்து வருகிறது. {தன்னறத்தில் ஈடுபடுகையில் இறப்பதே மேல். அயலறம் அச்சத்தையே தரும்}" என்றான் {கிருஷ்ணன்} [6]. 3:35
[6] நன்றாகச் செய்யப்படும் அந்நிய தர்மத்தைக் {அயலறத்தைக்} காட்டிலும் குறையோடிருப்பினும் சுயதர்மமே {தன்னறமே} ஒருவனுக்குச் சிறந்தது. சுயதர்மத்தில் {தன்னறத்தில்} ஈடுபட்டு ஒருவன் இறந்தாலும் அது மேன்மையானதே. ஆனால், அந்நிய தர்மத்தைப் பின்பற்றினால் விளைவது அச்சம் நிறைந்த பயங்கரமே என்பதே இங்குப் பொருள்.
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! விருஷ்ணி குலத்தின் மகனே {கிருஷ்ணா}, விருப்பமில்லாவிட்டாலும், ஏதோ ஒரு சக்தியால் வற்புறுத்தப்படுவதைப் போல, யாருடைய {எதனுடைய} தூண்டுதலால் ஒரு மனிதன் பாவத்தைச் செய்கிறான்?" என்றான் {அர்ஜுனன்}. 3:36
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "பேராசையின் பண்பால் உண்டானவையான ஆசை {காமம்} அது; கோபம் {குரோதம்} அது. {ரஜோ குணத்தில் பிறந்த காமக்குரோதமே அது}; அனைத்தையும் விழுங்குவதும், பெரும் பாவமுமான இதையே இவ்வுலகில் எதிரிகளாக அறிவாயாக [7]. 3:37
[7] நிறைவேறாத ஆசை, கோபத்தில் முடிகிறது. இப்படியே விரிவுரையாளர்கள் சொல்கிறார்கள் என்று சொல்கிறார் கங்குலி.
நெருப்பானது புகையாலும், கண்ணாடியானது தூசியாலும், கருவானது கருவறையாலும் மறைக்கப்படுவதைப்போல, இது {அறிவு} விருப்பத்தால் {எதிரியான காமக்குரோதத்தால்} மறைக்கப்பட்டிருக்கிறது. 3:38
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நெருப்பைப் போலவே நிறைவடையாத ஆசையின் {காமத்தின்} வடிவில் இருக்கும் நிலையான எதிரியான இதுவே {ஆசையும் கோபமுமே} அறிவாளிகளின் அறிவை மறைக்கின்றது. 3:39
புலன்கள், மனம் மற்றும் அறிவு ஆகியனவே இதன் {ஆசை மற்றும் கோபத்தின்} வசிப்பிடங்களாகச் சொல்லப்படுகின்றன. இவற்றைக் கொண்டே அஃது (ஒருவனது) அறிவை மறைத்து, பண்புருவமான தன்னியல்பை {உருவமேற்ற ஆத்மாவின் சுயத்தை = ஜீவாத்மாவை} மயக்குகிறது. 3:40
எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, முதலில் (உனது) புலன்களைக் கட்டுப்படுத்தி, இந்தப் பாவத்தைக் கைவிடுவாயாக {அழிப்பாயாக}. ஏனெனில், இது கல்வியாலும், தியானத்தாலும் அடையப்பட்ட அறிவை அழிக்கிறது. 3:41
(செயல்திறனற்ற இந்த உடலைவிட) புலன்களே உயர்ந்தவை எனச் சொல்லப்படுகிறது. புலன்களைவிட உயர்ந்தது மனமாகும். மனத்தைவிட உயர்ந்தது அறிவாகும். ஆனால் அந்த அறிவையும் விட உயர்ந்தது அதுவாகும் {ஆத்மாவாகும்} [8]. 3:42
[8] இங்கே பரமாத்மா என்றும் பொருள் கொள்ளலாம் என்று சொல்கிறார் கங்குலி.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, இப்படியே அறிவை விட உயர்ந்ததை {ஆத்மாவை} அறிந்து கொண்டு, (உனது) தன்னிலையை {சுயத்தை} தன்னிலையாலேயே கட்டுப்படுத்தி, வெல்வதற்குக் கடினமானதும், ஆசை என்ற வடிவத்திலானதுமான எதிரியைக் கொல்வாயாக {கைவிடுவாயாக}" என்றான் {கிருஷ்ணன்}. 3:43
ஆங்கிலத்தில் | In English |