The Religion of Knowledge - Gnana–Karma-Sanyasa yoga ! | Bhishma-Parva-Section-028 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 16) {பகவத் கீதை - பகுதி 4}
பதிவின் சுருக்கம் : பக்தர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் எப்போதும் யோகத்தைக் கற்பித்துக் கொண்டு, பல பிறவிகளின் மூலம் தான் வாழ்ந்து வருவதைக் கிருஷ்ணன் வெளிப்படுத்துவது; உண்மையை அறிந்த அறிவாளி ஒருவரை ஆசானாக ஏற்பதன் முக்கியத்துவத்தைக் கிருஷ்ணன் வலியுத்துவது....
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "இந்த அழிவற்ற அர்ப்பணிப்பை (பக்தி முறைமையை) [1] {யோகத்தை} நான் விவஸ்வானுக்கு {சூரியனுக்கு} அறிவித்தேன்: விவஸ்வான் {சூரியன்} மனுவுக்கு அறிவித்தான்; மனு இக்ஷ்வாகுவுக்குச் சொன்னான். 4:1
[1] இங்கு மூலத்தில் "யோகம்" என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது. யோகம் என்பது பக்தி யோகத்தைச் சுட்டுகிறது போலும். அதனாலேயே கங்குலி a system of devotion என்று இங்கே சொல்கிறார்.
தலைமுறை தலைமுறையாக இப்படிப் பெறப்பட்டதால், அரசமுனிகள் இஃதை அறிய வந்தார்கள். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, காலப்போக்கில் அந்த அர்ப்பணிப்பு {யோகம்} இவ்வுலகில் தொலைந்து போனது. 4:2
அதே அர்ப்பணிப்புதான் (பக்திமுறைமைதான்) {யோகம்தான்} இன்று என்னால் உனக்கு அறிவிக்கப்படுகிறது. ஏனெனில், நீ என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் {எனது பக்தனாகவும்}, எனது தோழனாகவும் இருக்கிறாய். (மேலும்) இதுவோ {இந்த யோகமோ} பெரும்புதிராக இருக்கிறது" என்றான் {கிருஷ்ணன்}. 4:3
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "உனது பிறப்போ பிந்தையது; விவஸ்வானின் {சூரியனின்} பிறப்போ முந்தையது. அப்படியிருக்கையில், நீயே (அதை) முதலில் அறிவித்தாய் என்பதை நான் எப்படிப் புரிந்து கொள்வது?" என்று கேட்டான். 4:4
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! அர்ஜுனா, என்னுடைய பல பிறவிகள் கடந்தவிட்டன; உனக்கும் அப்படியே {பல கடந்துவிட்டன}. இவை அனைத்தையும் நான் அறிவேன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நீயோ அதை அறிய மாட்டாய். 4:5
(நான்) பிறப்பற்றவனாகவும், அழிவறியாதவனாகவும் இருப்பினும்; அனைத்து உயிரினங்களின் தலைவனாக (நான்) இருப்பினும், எனது (மூலப்பொருளின்) இயல்பின் படி {பிரகிருதியில் நிலைத்து}, என் மாயையால் (சக்தியால்) {ஆத்மமாயையால்} பிறப்பை அடைகிறேன். 4:6
ஓ! பாரதா {அர்ஜுனா}, அறம் {தர்மம்} அழிந்து, மறம் {அதர்மம்} எழுச்சியடையும்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன் [2]. 4:7
[2] இது மிக முக்கியமான ஸ்லோகமாகும். மூலத்தில் இது "யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத| அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||4-7||" என்று இருக்கிறது. இதற்குப் பாரதியாரின் உரை "பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்" என்று சொல்கிறது. மூலத்தில் தர்மம் அதர்மம் குறித்துப் பேசப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, கங்குலி பயன்படுத்தியிருக்கும் Piety {பக்தி}, Impiety {பக்தியின்மை} என்பனவற்றை அறம், மறம் என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். அச்சொற்களுக்கு அகராதியில் அப்படியும் பொருள் உண்டு.
நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீவினையாற்றுவோரை அழிக்கவும், அறத்தை நிறுவும் பொருட்டும், காலந்தோறும் {யுகந்தோறும்} நான் பிறப்பெடுக்கிறேன். 4:8
இப்படியே எனது தெய்வீகப் பிறப்பையும், செயலையும் உண்மையாக அறியும் ஒருவன், (தனது உடலைத்) துறந்த பின் மீண்டும் பிறப்பதில்லை {பிறப்பை அடைவதில்லை}; (மறுபுறம்), ஓ! அர்ஜுனா, அவன் என்னிடமே வருகிறான் {அவன் என்னையே அடைகிறான்}. 4:9
ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களும், முழுதும் நானாகவே இருந்தவர்களும், என்னையே நம்பி இருந்தவர்களும் ஆகிய பலர், அறிவு மற்றும் தவத்தால் தூய்மையடைந்து, எனது இயல்பை அடைந்திருக்கிறார்கள். 4:10
எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் மனிதர்கள் என்னிடம் வருவார்களோ, அந்தந்த வழிமுறைகளிலேயே அவர்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அனைத்துப் புறங்களிலும் {உலகம் முழுவதிலும்} மனிதர்கள் பின்பற்றுபவை எனது வழிகளே ஆகும் [3]. 4:11
[3] "கிருஷ்ணன் ஏற்காத வழிபடுவடிவங்கள் எதுவும் இல்லை" என்று அவன் சொல்வதாக இங்குச் சிறு சந்தேகம் எழலாம். ஆனால், "வழிபடுமுறைகள் எந்த வகையில் இருந்தாலும், வணங்கப்படுவது நானே" என்பதே இங்குப் பொருளாகும். கிறிஸ்தவத் தாக்கங்களின் கீழ், டாக்டர்.லாரின்சர் {Dr.Lorinser} அவர்களால் இயற்றப்பட்ட "கீதையின் வினோதமான கற்பிதங்கள்" என்பதற்கு {என்ற ஆக்கத்திற்கு}, K.T. டெலங் அவர்களால், முழுமையாகவும், பயனுள்ள வகையிலும் பதில் கொடுக்கப்பட்ட பிறகு, "இந்தச் செய்யுளின் இத்தகு சகிப்புத்தன்மை, அந்தக் கிறிஸ்தவ எழுத்தாளரின் கோட்பாட்டுக்குப் பொருந்தாது" என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை" என்கிறார் கங்குலி. இது கங்குலி மகாபாரதத்தை மொழிபெயர்த்த போது {1883-96 காலகட்டத்தில்} ஏற்பட்டிருந்த சர்ச்சையாக இருக்கலாம்.
இவ்வுலகில் செயலின் வெற்றியை விரும்புவோர் தேவர்களை வழிபடுகின்றனர். எனெனில், மனிதர்களின் இந்த உலகில், செயலின் விளைவாகவே வெற்றியை விரைவாக அடைய முடியும். 4:12
குணங்கள் மற்றும் கடமைகளில் உள்ள வேறுபாடுகளின்படி, நான்கு முறைகளிலான சாதிகளின் {வர்ணங்களின்} பிரிவுகள் என்னாலேயே உருவாக்கப்பட்டன. நானே அவற்றைப் படைத்தவனாக இருப்பினும், அவற்றைப் படைக்காதவனாகவும் {செயலற்றனாகவும்}, அழிவற்றவனாகவும் என்னை நீ அறிவாயாக [4]. 4:13
[4] "அதாவது, செயலற்றவனாகவும், அழிவற்றவனாகவும்" என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும். செயல் உழைப்பைக் குறிக்கிறது. எனவே, அஃது ஆற்றல் இழப்பையும் குறிக்கும். எனவே, "என்னில் செயலோ, ஆற்றல் இழப்போ இல்லை. நான் அழிவற்றவன்" என்றே இங்கே நாம் பொருள் கொள்ள வேண்டும்" என்கிறார் கங்குலி. முதல் வரியில் கங்குலி சாதிகள் எனக் குறிப்பிடுவது, மூலத்தில் "சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் " என்று இருக்கிறது. அதன் பொருள், "நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டன" என்பதாகும்.
செயல்கள் என்னைத் தீண்டுவதில்லை {பாதிப்பதில்லை}. செயல்களின் பலன்களில் எனக்கு விருப்பமில்லை. என்னை இப்படியே அறிந்து கொள்பவன், செயல்களால் பிணைக்கப்பட மாட்டான் {செயல்களின் விளைவாக ஏற்படும் பற்றால் கட்டப்பட மாட்டான்}. 4:14
விடுதலையை {முக்தியை} விரும்பியவர்களான பழங்கால மனிதர்கள் கூட, இதையறிந்தே செயலில் ஈடுபட்டார்கள். எனவே, மிகப் பழைய மூதாதையர்கள் செய்ததைப் போல, நீயும் செயலில் ஈடுபடுவாயாக. 4:15
எது செயல்? எது செயலின்மை என்பதில் கல்விமான்களும் குழம்புகின்றனர். எனவே, அதையறிவதால் நீ தீமையில் இருந்து விடுபடுவாய் (என்றே), செயலைக் குறித்து {செயலின் இயல்பைக் குறித்து} நான் உனக்குச் சொல்கிறேன். 4:16
செயலின் அறிவை ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; அதே போல, விலக்கப்பட்ட செயலின் {தீச்செயல்களின்} அறிவையும் ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; செயலின்மையையும் ஒருவன் அறிய வேண்டும். செயலின் நடைமுறைகள் புரிந்து கொள்ள முடியாதனவாகும். 4:17
செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காணும் ஒருவன், மனிதர்களில் அறிவுள்ளவனாவான்; அவன் அர்ப்பணிப்பு கொண்டவனாவான் {யோகியாவான்}; அவன் செயல்கள் அனைத்தையும் செய்பவனாவான். 4:18
(பலனில்) ஆசை மற்றும் (அதன் தொடர்ச்சியாக ஏற்படும்) விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, அறிவு எனும் நெருப்பால் செயல்கள் அனைத்தையும் எரித்தவனை அறிவாளி {ஞானி} எனக் கற்றோர் அழைக்கின்றனர் [5]. 4:19
[5] "காமஸங்கல்பவிவர்ஜிதா: Kama-sankalpa vivarjjitas. அதாவது, (பலனில் விருப்பம் எனும்) kama காமத்தில் இருந்து விடுபடுவது மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் sankalpa விருப்பம் அல்லது தீர்மானம். இப்படியே ஸ்ரீதரரும், சங்கரரும் விளக்குகின்றனர்" என்கிறார் கங்குலி.
செயலின் பலனில் உள்ள பற்றை {பந்தத்தைக்} கைவிட்டு, எப்போதும் மனநிறைவுடனும், யாரையும் சாராமலும் இருப்பவர்கள் யாரும் செயலில் ஈடுபட்டாலும்கூட, உண்மையில், அவர்கள் செயலற்றவர்களே {4:18ல் உள்ளபடி செயலில் செயலின்மை கொண்டோரே}. 4:20
ஆசையற்று, மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு, கவலைகள் அனைத்தையும் கைவிட்டு, உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே செயலில் ஈடுபடும் ஒருவன் பாவத்தை ஈட்டுவதில்லை [6]. 4:21
[6] மூலத்தில் chitta-ātmā சித்தாத்மா என்றிருப்பதில் Chitta சித்தம் என்று சொல்லப்படுவது மனமாகும். atma ஆத்மா என்று சொல்லப்படுவதோ, புலன்களாகும். இப்படியே ஸ்ரீதரரும் சங்கரரும் சொல்கிறார்கள் என்கிறார் கங்குலி. ஆனால் பாரதியோ ஆத்மாவால் கட்டுப்படுத்தப்படும் சித்தம் {மனம்} என இங்கே பொருள் கொள்கிறார்.
உழைப்பில்லாமல் ஈட்டியவற்றில் மனநிறைவு கொண்டு [7], முரண்பட்ட இரட்டைகளுக்கு {இருமைகளுக்கு} எதிராக மேன்மையாக எழுந்து, பொறாமையற்றிருந்து, வெற்றி தோல்விகளைச் சமமாக மதிப்பவன் ஒருவன், (செயல்பாடுகளின் மூலம்) செயலில் ஈடுபட்டாலும் கூட அதனால் {அந்தச் செயலால்} அவன் பிணைக்கப்படுவதில்லை. 4:22
[7] இங்கே மூலத்தில் யத்ருச்சாலாப yadrccha-labha என்ற சொல் கையாளப்பட்டுள்ளது; வேறு பதிப்புகளில் இதுவே gain out of its own accord என்று சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட சம்ஸ்க்ருத மற்றும் ஆங்கில வரிகளின் பொருள் "தானாக வந்தெய்தும் லாபம்" என்பதாகும். ஆனால், கங்குலியோ, இங்கே earned without exertion உழைப்பில்லாமல் ஈட்டியவை என்கிறார். இரண்டிற்கும் பெரிய அளவில் பொருள் வேற்றுமை இல்லாவிடினும் இரண்டும் ஒன்றல்ல.
வேள்வியின் [8] நிமித்தமாகச் செயல்படுவது {வேள்வி செய்வது போலச் செயலில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது}, பாசமற்றிருப்பது, (பற்றில் இருந்து) விடுபட்டிருப்பது, அறிவில் நிலைத்த மனம் கொண்டிருப்பது ஆகிவற்றைக் கொண்ட ஒருவனின் செயல்கள் அனைத்தும் {அந்தச் செயல்களில் அவனுக்குப் பற்றை ஏற்படுத்தாமல்} அழிவடைகின்றன. 4:23
[8] "இங்கே வேள்வி என்பது பரமாத்மா {அல்லது பிரம்மம்} என்று பொருள்படும். வேள்வியின் நிமித்தமாகச் செய்யப்படும் எதுவும் விடுதலை அடைவதற்காகச் செய்யப்படுவதே ஆகும்" என்கிறார் கங்குலி.
(நீர்க்காணிக்கைகள் ஊற்றப்படும்) பாத்திரம் பிரம்மமே; (காணிக்கையாக அளிக்கப்படும்) நீர்க்காணிக்கை பிரம்மமே; (நீர்க்காணிக்கையான) பிரம்மம் எதில் ஊற்றப்படுமோ, அந்த நெருப்பும் பிரம்மமே; செயலாக இருக்கும் பிரம்மத்திலேயே தனது மனதை நிலைக்கச் செய்யும் ஒருவன், {முடிவில்} தனது இலக்கான அந்தப் பிரம்மத்தையே அடைகிறான் [9]. 4:24
[9] "அத்தகு மனிதன், பிரம்மத்தை அடையாளம் காணும் வழக்கில் முழுமை அடைய நேர்ந்தால், செயல்கள் அழிக்கப்பட்டுவிடும் என்பதே இங்குப் பொருள்" என்கிறார் கங்குலி.
அர்ப்பணிப்புக் கொண்ட சிலர் {சில யோகிகள்} தேவர்களுக்கு வேள்வியைச் செய்கின்றனர். பிறர், வேள்வியின் மூலம், பிரம்ம நெருப்பில் காணிக்கையை இடுகின்றனர் [10]. 4:25
[10] இங்கே இரண்டாவது வரி, "பிரம்ம நெருப்பில் வேள்வியையே காணிக்கையாக இட்டு, தங்கள் செயல்களைக் கைவிடுகின்றனர் எனப் பொருள்படும்" என்கிறார் கங்குலி.
பிறர், கட்டுப்பாடு எனும் நெருப்பில், செவி முதலிய {கண், மூக்கு, நாக்கு, தோல் ஆகிய} தங்கள் புலன்களை (வேள்விக் காணிக்கையாக) இடுகிறார்கள். (மேலும்) பிறர், புலன்கள் எனும் நெருப்பில் ஒலி முதலிய புலன்நுகர் பொருட்களை {தன்மாத்திரைகளை = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை} (நீர்க்காணிக்கையாக) இடுகிறார்கள் [11]. 4:26
[11] "கட்டுப்பாடு எனும் நெருப்பில் புலன்களைக் காணிக்கையிடுவது என்பது யோகப் பயிற்சியின் மூலம் புலன்களை அடக்குதல் என்றே பொருள்படும். புலன்நுகர் பொருட்களைக் காணிக்கையிடுதல் என்பது அப்பொருட்களில் பற்றற்றிருப்பது என்றே பொருள்படும்" என்கிறார் கங்குலி.
(மேலும்) பிறர், அறிவால் மூண்ட சுயக்கட்டுப்பாட்டின் மூலம், புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும், உயிர்காற்றின் {உயிர்மூச்சின்} செயல்பாடுகளையும் அர்ப்பணிப்பு என்ற நெருப்பில் {யோகத்தீயில்} இடுகிறார்கள் [12]. 4:27
[12] "தியானம் அல்லது யோகத்திற்காக வாழ்வின் செயல்பாடுகளை நிறுத்துவது என்று" இங்கு விளக்கமளிக்கிறார் கங்குலி.
மேலும் பிறர், செல்வ வேள்வி, தவத்துறவு வேள்வி, தியான வேள்வி, (வேத) கல்வி வேள்வி, அறிவு வேள்வி ஆகியவற்றையும், இன்னும் பிறர் கடும் நோன்புகளைக் கொண்ட தவத்தையும் செய்கின்றனர் [13]. 4:28
[13] "இங்கே, செல்வத்தைத் தானமளிப்பதையும், தவத்துறவுகளையும், தியானம் மற்றும் கல்வியையும் கொண்டதே வேள்வியாகும். இங்கே இரண்டாவது வரியின் முதல் சேர்மத்தை ஸ்ரீதரர் வேறுவிதமாக விளக்குகிறார். அவரது கூற்றின்படி, அது கல்வியும் அறிவும் அல்ல; மாறாகக் கல்வியால் கிட்டும் அறிவாகும்" என்கிறார் கங்குலி.
சிலர் மேல்நோக்கு உயிர் காற்றை (பிராணத்தை), கீழ்நோக்கு உயிர்க்காற்றில் (அபானத்தில்) காணிக்கையிடுகின்றனர்; சிலர் கீழ்நோக்கு உயிர் காற்றை, மேல்நோக்கு உயிர்க்காற்றில் காணிக்கையிடுகின்றனர்; சிலர் மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு உயிர்க்காற்றுகளின் பாதையை அடைத்து, அந்த உயிர்க்காற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் {பிராணாயாமத்தில்} தங்களை அர்ப்பணிக்கின்றனர். 4:29
பிறர் உணவைக் கட்டுப்படுத்தி, உயிர்க்காற்றுகளை உயிர்க்காற்றுகளிலேயே காணிக்கையிடுகின்றனர் [14]. வேள்வியை அறிந்தவர்களும், வேள்வியால் தங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டவர்களுமான இவர்கள் அனைவரும், வேள்வியில் எஞ்சிய அந்த அமிர்தத்தை உண்டு நிலைத்த பிரம்மத்தையே அடைகின்றனர். வேள்வி செய்யாதவனுக்கு இவ்வுலகமே கிடையாது எனும்போது, ஓ! குரு குலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, அடுத்த உலகம் ஏது? 4:30,31
[14] "இவை அனைத்தும் யோகத்தின் பல்வேறு வகைகளாகும். அல்லது யோகப் பயிற்சியின் பல்வேறு நிலைகளாகும்" என்கிறார் கங்குலி.
இப்படியே வேதங்களில் ஏற்படும் {சொல்லப்பட்டுள்ள} வேள்விகள், பல்வேறு வகைகளில் இருக்கின்றன. அவை அனைத்தும் செயலின் மூலம் விளைபவையே என்பதை அறிவாயாக. இஃதை அறிந்தால் நீ விடுதலையடைவாய் {முக்தியடைவாய்}. 4:32
{மேற்கண்டது போன்ற} வேள்வி அறிவு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, செயலின் பலனில் (பலனை அடைவதில்) ஈடுபடும் அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மேன்மையானதாகும். ஏனெனில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செயல்கள் அனைத்தும் அறிவிலேயே முழுமையடைகிறது {முழுமையாக உட்கொள்ளப்படுகிறது} [15]. 4:33
[15] "அஃதாவது, அறிவை அடைந்தால், செயல்களின் பலன்கள் அடையப்படுகின்றன. அல்லது அவற்றின் முடிவாவது வரையறுக்கப்படுகிறது" என்கிறார் கங்குலி.
வணக்கம் {நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல்}, கேள்வி {விசாரணை}, தொண்டு {சேவை} ஆகியவற்றின் மூலம் அஃதை (அறிவை) அடைவாயாக. உண்மையைக் {சத்தியத்தைக்} காணக்கூடிய அறிவுடையோர் {ஞானிகள்}, அந்த அறிவை உனக்குக் கற்பிப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} அஃதை அறிந்து கொள்வதால், மீண்டும் இத்தகு மயக்கத்தை நீ அடையமாட்டாய்; அஃதை அறிந்து கொள்வதால், (அண்டத்தின்) முடிவிலா உயிரினங்களை (முதலில்) உன்னிடத்தில் {உனக்குள்} கண்டு, பிறகு என்னிடத்திலும் நீ காண்பாய். 4:34-35
பாவிகள் அனைவரிலும் பெரும்பாவியாகவே இருந்துவிட்டாலும் கூட, அறிவு எனும் படகைக் கொண்டு பாவங்கள் அனைத்தையும் நீ கடந்துவிடுவாய். 4:36
விறகைச் சாம்பலாக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல, ஓ! அர்ஜுனா, அறிவு எனும் நெருப்பு, செயல்களனைத்தையும் சாம்பலாக்கிவிடும். 4:37
ஏனெனில், அறிவைப் போன்று தூய்மையாக்கும் பொருள் வேறு எதுவுமில்லை. அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் வெற்றியடையும் ஒருவன், தனது முயற்சி ஏதுமில்லாமலேயே தகுந்த நேரத்தில், அதைக் {அறிவைக்} கண்டடைந்துவிடுகிறான். 4:38
அதில் {யோகத்தில்} நம்பிக்கையும், தீவிரமும் கொண்டு, தனது புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் அறிவை அடைகிறான்; அறிவை அடைந்ததும், குறுகிய காலத்திலேயே {விரைவிலேயே} அவன் உயர்ந்த மன அமைதியைப் {பரசாந்தியைப்} பெறுகிறான். 4:39
அறிவும், நம்பிக்கையும் இல்லாது, மனம் நிறைந்த ஐயங்களைக் கொண்டவன் தொலைந்து {அழிந்து} போகிறான். மனம் நிறைந்த ஐயத்தைக் கொண்டவனுக்கு இவ்வுலகமோ, அடுத்ததோ {அடுத்த உலகமோ}, இன்பமோ கிடையாது. 4:40
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் செயலைத் துறந்து, அறிவால் ஐயம் விலகப்பெற்று, சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனைச் செயல்களால் கட்டுப்படுத்தவே முடியாது. 4:41
எனவே, அறியாமையால் தோன்றி, உனது மனதில் குடிகொண்டிருக்கும் இந்த உனது ஐயத்தை, அறிவெனும் வாளால் அழித்து, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைப்பாயாக. ஓ! பரதனின் மகனே {அர்ஜுனா}, எழுவாயாக" என்றான் {கிருஷ்ணன்}. 4:42
ஆங்கிலத்தில் | In English |