Saturday, September 26, 2015

சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 033

Religion by the Kingly Knowledge and the Kingly Mystery - Raja–Vidya–Raja–Guhya yoga! | Bhishma-Parva-Section-033 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 21) {பகவத் கீதை - பகுதி 9}

பதிவின் சுருக்கம் : அறிவியல்களுள் சிறந்ததும், மறைபொருட்களில் மேலானதுமான பக்தி யோகத்தின் தன்மை, மேன்மை, பயன் ஆகியவற்றை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் சொல்வது; செயல்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடவுளின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிருஷ்ணன்...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "எதை அறிந்தால் தீமையில் இருந்து நீ விடுபடுவாயோ, அந்த அறிவின் மிகப் பெரிய புதிரை, பொறாமையற்றிருக்கும் உனக்கு நடைமுறை அறிவுடன் இப்போது நான் சொல்லப் போகிறேன். 9:1

தூய்மையாக்கவல்லதும், நேரடியாகப் புரிந்து கொள்ளக்கூடியதும், புனித விதிகளுக்கு {தர்ம்யம் = அறத்திற்கு} இசைவானதும், பயில்வதற்கு எளிதானதும், (மேலும்) அழிவற்றதுமாகிய இஃது அரச அறிவியலும், ஓர் அரசப் புதிரும் ஆகும். 9:2

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, இந்தப் புனிதக் கோட்பாட்டில் {தர்மஸ்ய = அறத்தில்} நம்பிக்கையில்லாத மனிதர்கள் என்னை அடையாமல், அழிவுக்குள்ளாகக் கூடிய இந்த உலகத்தின் பாதையில் திரும்புகிறார்கள். 9:3


எனது மறைவடிவத்தால் இந்த அண்டம் முழுமையும் என்னால் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் {பூதங்கள் அனைத்தும்} என்னில் {நிலைபெற்று} இருக்கின்றன, ஆனால் நான் அவற்றில் {நிலைபெற்று} இருப்பதில்லை. 9:4

அதே போல அனைத்து பொருட்களும் என்னிலேயே இருப்பதுமில்லை. எனது தெய்வீக சக்தியைப் {ஈஸ்வரத்தன்மையுடைய எனது யோகசக்தியைப்} பார். அனைத்துப் பொருட்களையும் தாங்கி {ஆதரித்து}, அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் நானே (எனினும்) (அந்த) பொருட்களில் இருப்பதில்லை. 9:5

எங்கும் காணப்படக்கூடியதும், பெரியதுமான காற்று எப்போதும் வெளியில் {வானில்} பரவி வளர்வதைப் {ஆக்கிரமிப்பதைப்} போல, அனைத்துப் பொருட்களும் என்னில் அதே போல வசிக்கின்றன என்று அறிவாயாக [1]. 9:6

[1] காற்றானது வெளியை ஆக்கிரமிக்கும்போது, அஃதையோ, அதன் இயல்பையோ பாதிப்பதில்லை. அதே போல அனைத்துப் பொருட்களும் பரம்பொருளைப் பாதிக்காமல் பரம்பொருளிலேயே இருக்கின்றன என்று விளக்குகிறார் கங்குலி.

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, கல்பத்தின் {432 கோடி வருடங்களின் = 43200 லட்சம் வருடங்களின்} முடிவில் அனைத்துப் பொருட்களும் எனது இயல்பை அடைகின்றன. நான் மீண்டும் அவற்றைக் கல்பத்தின் தொடக்கத்தில் படைக்கிறேன் [2]. 9:7

[2] இங்கே சுட்டப்படும் எனது இயல்பு என்பது மறைவான தோற்றம் என்ற கொள்கை அல்லது மூலாதாரச் சாரம் என்று பொருள்படும் என்கிறார் கங்குலி. இங்கே சுட்டப்படும் கல்பம் என்பது விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணத்தின் காலக்கணக்கின் படி 432 கோடி வருடங்கள் ஆகும். அதாவது 43200 லட்சம் வருடங்கள் ஆகும். ஒரு கல்பம் 14 மன்வந்தரங்களைக் கொண்டதாகும். அறிவியலாளர்கள் கூற்றின் படி இந்தப் பூமியின் வயது 454 கோடி வருடங்களாகும்.

இயற்கைக்குக் கீழ்ப்படிவதன் விளைவால் நெகிழ்பவையான பொருட்களின் அந்தத் தொகுதி முழுவதையும், (சார்பற்ற) எனது சொந்த இயல்பை ஒழுங்கமைத்து, மீண்டும் நான் படைக்கிறேன் [3]. 9:8

[3] பிராக்ருதி என்பதை நான் இங்கே "இயற்கை" என்று கொள்கிறேன். இதையே வேறு உரையாசிரியர்கள், "கர்மம்" என்றும், "அந்தக் கர்மம் அல்லது செயலின் தாக்கத்தால் ஒரு குறிப்பிட்ட பொருளின் வடிவத்தை அமைக்க, படைப்பு நேரத்தின் போது அமைகிறது" என்றும் பொருள் கொள்கிறார்கள் என்கிறார் கங்குலி.

எனினும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கவலையில்லாமல் அமர்ந்திருப்பவனும், (படைப்பின்) அந்தச் செயல்களில் பற்றற்றவனுமான என்னை அந்தச் செயல்கள் பிணைக்காது {கர்ம பந்தத்தில் கட்டாது}. 9:9

கண்காணிப்பாளனான என் மூலம், மூலதாரமான இயற்கையானது (இந்த அண்டத்தில்) அசைவன மற்றும் அசையாதனவற்றைப் படைக்கிறது. இதன் காரணமாகவே [4அ], ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த அண்டம் (தோற்றம் மற்றும் அழிவு என்ற) தனது சுழற்சியைக் கடக்கிறது [4ஆ]. 9:10

[4அ] இங்கே இதன் காரணமாகவே என்பதன் பொருள், "எனது கண்காணிப்பின் கீழ்" என்று கொள்ளப்பட வேண்டும் என்கிறார் கங்குலி.

[4ஆ] இதனால்தான் இந்த உலகமே சுழல்கிறது என்கிறார் இங்கே பாரதியார்.

மனித உருவில்
வெளிப்பட்ட பரமாத்மா
அனைத்துப் பொருட்களின் பெருந்தலைவனான எனது தலைமையான இயல்பை {பரமநிலையை} அறியாமல், வீண் நம்பிக்கைகள், வீண் செயல்கள், வீண் அறிவு, குழம்பிய மனங்கள் ஆகியவற்றையும், அசுரர்கள் மற்றும் ராட்சசர்களின் மயக்க இயல்பையும் கொண்டவர்களான மூடர்கள், மனித உடலை ஏற்றிருக்கும் என்னைப் புறக்கணிக்கிறார்கள். 9:11-12

ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, ஆனால், உயர் ஆன்மா கொண்டவர்களோ {மகாத்மாக்களோ}, தெய்வீக இயல்பைக் கொண்டு, வேறு எதிலும் செலுத்தப்படாத மனத்தினால், அனைத்துப் பொருட்களின் மூலமாகவும், அழிவற்றவனாகவும் (என்னை) அறிந்து, என்னையே வழிபடுகிறார்கள். 9:13

எப்போதும் என்னைப் புகழ்ந்தோ, உறுதியான நோன்புகளுடன் உழைத்தோ, என்னை வணங்கியோ, மதிப்புடனும், எப்போதும் அர்ப்பணிப்புடனும் (அவர்கள் {யோகிகள்}) என்னை வழிபடுகிறார்கள் [5]. 9:14

[5] பல்வேறு முறைகளிலான வழிபாடுகள் இவை என்றும்; "மரியாதையுடனும், எப்போதும் அர்ப்பணிப்புடனும்" என்பது "இலக்கணப்படி மூன்று வகை வழிபாட்டாளர்களையே குறிக்கிறது" என்றும் ஸ்ரீதரர் சொல்வதாக இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.

மேலும் பிறர், அறிவு வேள்வியைச் செய்தும், (சிலர்) ஒருமையாகவும், (சிலர்) வேறுபட்டதாகவும் {பன்மையாகவும்}, (சிலர்) அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவனாகவும் எனப் பல வடிவங்களில் என்னை வழிபடுகின்றனர் [6]. 9:15

[6] இங்கே "அறிவு வேள்வியைச் செய்வது" என்பதை "வாசுதேவனே {கிருஷ்ணனே} அனைத்தும் என்ற நம்பிச் செய்வது" என்றும், "பல வடிவங்களில்" என்பதை "பிரம்மன், ருத்ரன் முதலிய இதர வடிவங்களில்" என்றும் பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.

வேத வேள்வி {ஹோமம்} நானே, ஸ்மிருதிகளில் {நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டவற்றில்} அறிவுறுத்தப்படும் வேள்வி நானே, சுவதா நானே, மூலிகைகளில் இருந்து உண்டாக்கப்படும் மருந்து நானே; மந்திரம் நானே, வேள்வி நெய் நானே, நெருப்பு நானே மற்றும் (வேள்வியில் அளிக்கப்படும்) காணிக்கையும் {அவியும்} நானே [7]. 9:16

[7] இங்கே மந்திரம் என்பதைத் தெய்வங்களை எழுப்பவதற்காகவும், பிற காரியங்களுக்காவும் சொல்லப்படும் புனித வரி அல்லது வரிகள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.

இந்த அண்டத்தின் தந்தை, தாய், படைப்பாளன், பெரும்பாட்டன் ஆகியவை நானே; ஓம் என்ற எழுத்து, ரிக், சாமம், யஜுஸ் ஆகியவையும், அனைத்தையும் தூய்மையாக்கும் வழிமுறையும், அறியப்பட வேண்டிய பொருள் ஆகியவையும் நானே. 9:17

குறிக்கோள், தாங்குபவன், தலைவன், கண்காணிப்பாளன், வசிப்பிடம், புகலிடம், நண்பன், மூலம், அழிவு, ஆதரவு, கொள்கலம் மற்றும் அழிவில்லா விதை ஆகியவை நானே.

வெப்பம் தருபவன் நானே, மழையை உண்டாக்கி நிறுத்துபவன் நானே; அழியாநிலை நானே, மரணம் நானே; ஓ! அர்ஜுனா, {இருப்பு} உள்ளவன் நானே, , {இருப்பு} இல்லாதவனும் நானே. 9:19

அறிவின் மூன்று கிளைகளை அறிந்தவர்களும், சோமச்சாற்றைப் பருகியவர்களும், வேள்விகள் செய்து என்னை வழிபடுவதால் பாவங்கள் நீங்கியவர்களும் சொர்க்கத்தில் நுழைய முயல்கிறார்கள்; தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} புனித உலகத்தை அடையும் அவர்கள், தேவர்களின் தெய்வீக இன்பத்தைச் சொர்க்கத்தில் அனுபவிக்கிறார்கள். 9:20

நெடுங்காலம் அந்தத் தெய்வீக உலகில் இன்புற்று இருக்கும் அவர்கள், தங்கள் நல்வினைப் பயன் {புண்ணியம்} தீர்ந்ததும், அழிவுடைய மனித உலகத்தினுள் மீண்டும் நுழைகிறார்கள். இப்படியே மூன்று வேதங்களின் கோட்பாடுகளை ஏற்றவர்கள், ஆசைக்குகந்த பொருட்களை விரும்புபவர்கள் ஆகியோர் வருவதும் போவதுமான நிலையை அடைகிறார்கள். 9:21

(இப்படி) எப்போதும் (என்னிடம்) அர்ப்பணிப்புள்ளவர்களில் வேறு எதிலும் தங்கள் மனங்களைச் செலுத்தாமல் (என்னையே) நினைக்கும் மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள். அவர்களுக்கு நான் பரிசுகளைக் கொடுத்து, ஏற்கனவே அவர்கள் வைத்திருப்பதைப் பாதுகாக்கிறேன். 9:22

பிற {அந்நிய} தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்ட அர்ப்பணிப்பாளர்கள் கூட {பக்தர்கள் கூட}, (ஒழுங்கின்படி இல்லாமல்) என்னையே {என்னை மட்டுமே} வணங்குகிறார்கள் [8].9:23

[8] ஆனால், அதனால் {முறையாக இல்லாததால்} அவர்கள் மீண்டும் பிறக்க நேரிடும் என்கிறார் கங்குலி.

வேள்விகள் அனைத்தின் தலைவனும், அதை அனுபவிப்பவனும் {அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்பவனும்} நானே. எனினும், அவர்கள் என்னை உண்மையில் அறிவதில்லை; எனவே அவர்கள் {அந்நிய தெய்வங்களை வணங்குவோர்} (சொர்க்கத்தில் இருந்து) விழுகிறார்கள். 9:24

{தேவர்களை நோக்கி நோன்புகளைக் கொண்டோர் தேவர்களை அடைகிறார்கள் [9]} பித்ருக்களை நோக்கிய நோன்புகளைக் கொண்டோர் பித்ருக்களை அடைகிறார்கள்; பூதங்கள் என்று அழைக்கப்படும் தாழ்ந்த ஆவிகளுக்குத் (தங்கள்) வழிபாடுகளைச் செலுத்துவோர் பூதங்களை அடைகிறார்கள்; என்னை வழிபடுவோர் என்னையே அடைகிறார்கள். 9:25

[9] இது கங்குலியில் விடுபட்டுள்ளது.

இலை, மலர், கனி, நீர் ஆகியவற்றை மதிப்புடன் {பக்தியுடன்} எனக்குக் காணிக்கையளிக்கும் தூயோரிடம் இருந்து, மதிப்புடன் காணிக்கையளிக்கப்படும் அவற்றை ஏற்கிறேன். 9:26

நீ எதையெல்லாம் செய்வாயோ, எதையெல்லாம் உண்பாயோ, எதையெல்லாம் பருகுவாயோ, எதையெல்லாம் கொடுப்பாயோ, எந்தத் தவங்களில் எல்லாம் ஈடுபடுவாயோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எனக்காகக் காணிக்கையாகச் செய்யும் வழியில் அவற்றை அமைத்துக் கொள்வாயாக {அதை எனக்கே அர்ப்பணம் செய்}. 9:27

இப்படியே நல்ல மற்றும் தீய பலன்களைக் கொண்ட செயல்களின் பிணைப்புகளில் இருந்து நீ விடுபடுவாய். துறவு மற்றும் அர்ப்பணிப்பு {யோகம்} கொண்ட நீ விடுதலை அடைந்து என்னையே அடைவாய். 9:28

அனைத்து உயிரினங்களுக்கும் நான் ஒன்றாகவே {சமமாகவே} இருக்கிறேன்; எனக்கு வெறுப்பு நிறைந்தவனும், அன்புள்ளவனும் எவனும் இல்லை. எனினும், மதிப்புடன் என்னை வழிபடுபவர்கள் என்னில் இருக்கிறார்கள். நானும் அவர்களிடம் இருக்கிறேன். 9:29

மிகக் கொடிய நடத்தை கொண்டவன் ஒருவன், வேறு யாரையும் வழிபடாமல் என்னையே வழிபடுவானாகில், நன்கு செலுத்தப்பட்ட அவனது முயற்சிகளுக்காக, நிச்சயம் அவன் நல்லவனாகவே கருதப்பட வேண்டும். (அப்படிப்பட்ட மனிதன்) விரைவில் அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனாக மாறி நித்திய அமைதியை அடைவான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனன்} என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோர் தொலைவதில்லை {அழிவதில்லை} என்பதை அறிவாயாக. 9:30-31

ஏனெனில், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பாவப்பிறவிகள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் கூட என்னைப் பணிந்தால், உயர்ந்த இலக்கை {பரகதி} அடைகிறார்கள். 9:32

அப்படி இருக்கையில், எனது அர்ப்பணிப்பாளர்களாக {பக்தர்களாக} இருக்கும் புனிதமான அந்தணர்கள் மற்றும் துறவிகளைக் குறித்து நான் என்ன சொல்வேன்? நிலையற்றதும், துன்பம் நிறைந்ததுமான இந்த உலகிற்கு வந்ததால், என்னை வழிபடுவதில் ஈடுபடுவாயாக [10]. 9:33

[10] இமம் லோகம் {இந்த மனித உலகம்} என்று சொல்வது, "இந்த வடிவில் இருக்கும் அரச முனியான நீ" என்று பொருள்படலாம் என்று ஸ்ரீதரர் சொல்வதாக இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.

என்னில் உனது மனத்தை நிலைக்கச் செய்வாயாக; என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாகவும், என்னை வழிபடுபவனும் {தொழுபவனும்} ஆவாயாக; இப்படியே என்னைப் புகலிடமாகக் {பரமாகக்} கொண்டு நுண்மத்தில் {தற்கலப்பு யோகத்தில்} ஈடுபடும் நீ நிச்சயம் என்னையே அடைவாய்" என்றான் {கிருஷ்ணன்}. 9:34


ஆங்கிலத்தில் | In English