Thursday, September 24, 2015

பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்ம யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 032

Religion by Devotion to the One Supreme God - Aksara–Brahma yoga! | Bhishma-Parva-Section-032 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 20) {பகவத் கீதை - பகுதி 8}

பதிவின் சுருக்கம் : மரணத்திற்கு முன்னர் எண்ணப்படும் இறுதி நினைவின் முக்கியத்துவம், பொருள் மற்றும் ஆன்மிக உலகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு, மரணத்திற்குப் பிறகு ஆத்மா பயணம் செய்யும் ஒளி மற்றும் இருள் பாதைகள் பற்றிய குறிப்புகளை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் விளக்குவது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, எது பிரம்மம்? எது அத்யாத்மம் {ஆத்மஞானம்}? எது செயல் {கர்மம்}? மேலும் அதிபூதம் {பூத அறிவு} என்று அழைக்கப்படுவது எது? அதிதெய்வம் {தேவ அறிவு} என்று அழைக்கப்படுவது எது? 8:1

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இங்கே அதியக்ஞன் {வேள்வி அறிவு கொண்டவன்} யார்? இந்த உடலில் அவன் {அதியக்ஞன்} எப்படி இருக்கிறான்? புறப்படும் நேரத்தில் தற்கட்டுப்பாடு கொண்டோரால் நீ எப்படி அறியப்படுகிறாய்?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 8:2


அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "அழிவற்றதாய், பரம்பொருளாய் இருப்பதே பிரம்மம். அத்யாத்மம் என்பது அதன் {ஆத்மாவின்} சொந்த வெளிப்பாடு {ஆத்மாவின் இயல்பை அறிவது} எனச் சொல்லப்படுகிறது. உற்பத்தியையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் விளைவிக்கும் காணிக்கையே (எந்தத் தெய்வத்துக்காவது வேள்வியில் கொடுக்கப்படுவது) செயல் {கர்மம்} என்று அழைக்கப்படுகிறது [1]. 8:3

[1] இங்கே செயல் {கர்மம்} குறித்த விளக்கத்தில் கங்குலி சற்றுக் குழப்புவதாகத் தெரிகிறது. "பூதபாவ: உத்பவகர: விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:" "bhuta-bhavodbhava-karo visargah karma-samjnitah" என்பது மூலம். இதன் பொருள் "உற்பத்தியையும் வளர்ச்சியையும் விளைவிக்கும் இயற்கையே கர்மம் எனப்படுகிறது" என்பதாகும். தெய்வத்துக்கான காணிக்கை என்ற பொருள் மூலத்தில் எங்கும் காணப்படவில்லை. இங்கே பாவ என்ற சொல் உற்பத்தியையும், உத்பவ என்ற சொல் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று ஸ்ரீதரர் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் கங்குலி.

{அழிவடையும்} இயற்கையைக் குறித்த {முடிவில்லாமல் மாறக்கூடியதே உடலின் இயல்பு என்ற} அறிவே அதிபூதம் {பூத அறிவு}. தலைவனைக் குறித்தது அதிதெய்வம் {தேவ அறிவு}, ஓ! உடல் கொண்டோரில் உயர்ந்தவனே {அர்ஜுனா}, {பரமாத்மாவான} என்னை உடலுக்குள் அறிதலே அதியக்ஞம் {வேள்வி அறிவு } [2] 8:4

[2] மேற்கண்ட சுலோகம் கங்குலியில் விடுபட்டிருக்கிறது.

(தனது) இறுதிக் கணங்களில் என்னை மட்டுமே நினைவில் கொண்டு, தனது உடலைத் துறந்து (இங்கிருந்து) புறப்படும் ஒருவன், எனது இயல்பை அடைகிறான். இதில் எந்த ஐயமுமில்லை. 8:5

இறுதியில் எந்த (தெய்வ) வடிவத்தை நினைவில் கொண்டு ஒருவன் தனது உடலைத் துறப்பானோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போதும் அதைத் தியானிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவன், அதனிடமே {அந்த தெய்வ வடிவத்திடமே} செல்கிறான். 8:6

எனவே, அனைத்து நேரங்களிலும் என்னை நினைத்துப் போரில் ஈடுபடுவாயாக. உனது மனதையும், அறிவையும் என்னில் நிலைக்கச் செய்தால், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை. 8:7

ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பிற பொருட்களில் செலுத்தப்படாத மனத்தைக் கொண்டு (பிரம்மத்தை) நினைத்து, தடங்கலற்ற செயலுடன் நுண்மத்தை அடைந்த ஒருவன், தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையை {பரமபுருஷனை} அடைகிறான். 8:8

{இறந்த பிறகு, இவ்வுலகத்திலிருந்து} புறப்படும் நேரத்தில் உறுதியான மனத்துடன், மதிப்புடன், நுண்மத்தின் சக்தியுடன், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றைப் புருவங்களுக்கு மத்தியில் செலுத்தி, (அனைத்தையும்) ஆள்பவனும், அணுவிலும் நுண்மையானவனும், அனைத்தையும் விதிப்பவனும், உணர முடியாத உருவத்தில் இருப்பவனும், இருளனைத்தையும் கடந்திருப்பவனுமான அந்தப் பழைமையானவனை நினைப்பவன் தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையையே {பரமபுருஷனை} அடைகிறான். 8:9-10

எந்த நிலையை அழிவற்றது என்று வேதங்களை அறிந்தவர்கள் தீர்மானித்திருக்கிறார்களோ, ஏக்கங்களில் {ஆசைகளில்} இருந்து விடுபட்ட தவசிகள் எதற்குள் நுழைவார்களோ, எதை எதிர்பார்த்து பிரம்மச்சரிய நோன்பு பயிலப்படுமோ, அந்த நிலையை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்வேன். 8:11

(இந்த) உடலைத் துறந்து இங்கிருந்து புறப்பட்டு, கதவுகள் அனைத்தையும் மூடி, மனத்தை இதயத்தில் அடக்கி, பிராணன் என்று அழைக்கப்படும் தனது உயிர்க்காற்றைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, தொடர்ந்த தியானத்தில் {யோகத்தில்} உறுதியாக நிலைத்து, ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே உச்சரித்து, என்னையே நினைப்பவன் உயர்ந்த இலக்கை {பரமகதியை} அடைகிறான் [3]. 8:12-13

[3] இங்கே "கதவுகள் அனைத்தும்" என்பது புலன்கள் என்றும், "மனத்தை இதயத்தில் அடக்குவது" என்பது பிற பொருட்களில் இருந்து மனத்தை விலக்குவது என்றும் பொருள் படும் என்றும், "மூர்த்நி Murdhni" என்பதை "புருவங்களுக்கு மத்தியில்" என ஸ்ரீதரர் விளக்குகிறார் என்றும் கூறுகிறார் கங்குலி

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிற பொருட்கள் அனைத்திலும் இருந்து விலக்கப்பட்ட மனத்தைக் கொண்டு எப்போதும் என்னையே நினைத்து, எப்போதும் தியானத்தில் எவன் ஈடுபடுவானோ, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} {என்னை} அணுக எளிதானவனாகவே நான் இருக்கிறேன். 8:14

உயர்ந்த முழுமையான என்னை அடைந்த உயர் ஆன்மா கொண்டோர் {மகாத்மாக்கள்}, துயரின் உறவிடமும், நிலையற்றதுமான மறுபிறப்பை அடைவதில்லை. 8:15

ஓ! அர்ஜுனா, பிரம்ம லோகம் முதற்கொண்டு கீழே உள்ள அனைத்து உலகங்களும் பிறப்பு சுழற்சியின் வழியாகவே செல்ல வேண்டும் {அனைத்து உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு}. எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னை அடைந்தால் மறுபிறவி கிடையாது [4]. 8:16

[4] அழிவுள்ள இந்த உலகங்கள் அனைத்தும் மறுபிறப்பைக் கொண்டிருக்கின்றன. அங்கே வாழ்பவர்கள் கூட மரணத்திற்கும், மறுபிறப்புக்கும் உள்ளாவார்கள் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

பிரம்மனின் பகலொன்று ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும், (அவனது) இரவு ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும் அறிந்தவர்களே பகல் மற்றும் இரவைக் குறித்து அறிந்தவர்களாவர். 8:17

(பிரம்மனின்) பகல் தொடங்கும்போது வெளிப்படுபவை அனைத்தும் மறைந்திருந்ததில் {அவ்யக்தம் = உருவமற்றதில்} இருந்து தோன்றுகின்றன {பிரபவந்தி}; (அவனது) இரவு வரும்போது, மறைவுபட்டது என்று அழைக்கப்படுவதற்குள்ளேயே அனைத்து பொருட்களும் மறைந்து போகின்றன. 8:18

உயிரினங்களின் அதே தொகுதி, மீண்டும் மீண்டும் பிறக்கின்றன; இரவு தொடங்கும்போது மறைகின்றன, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, (மீண்டும்) பகல் வரும்போது (செயலின் சக்திக்கு) கட்டுப்பட்டுப் பிறக்கின்றன. 8:19

எனினும், அனைத்து பொருட்களும் அழிக்கப்படும் போது அழியாததும், மறைவைக் {அவ்யக்தத்தைக்| கடந்ததும், நித்தியமானதும், மறைவானதுமான மற்றொரு பொருள் இருக்கிறது. 8:20

அது {அந்தப் பொருள்} மறைவானதாகவும், அழிவில்லாததாகவும் சொல்லப்படுகிறது. அஃதை அடைந்த பிறகு, மீண்டும் யாரும் திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததால், அஃதை உயர்ந்த இலக்கு {பரமகதி} என்று அவர்கள் {பகலிரவை அறிந்தவர்கள்} அழைக்கிறார்கள். அதுவே எனது உயர்ந்த நிலையாகும் {பரமபதமாகும்}. 8:21

வேறு எந்தப் பொருளிலும் கவனம் செலுத்தாது, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, எவனில் அனைத்துப் பொருட்களும் இருக்கிறதோ, எவனால் இவை அனைத்தும் ஊடுருவப்பட்டுள்ளதோ, அந்தத் தலைமையானவனே {பரமாத்மாவே}, அடையத்தக்கவனாவான். 8:22

ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, அர்ப்பணிப்பாளர்கள் {யோகிகள்} (இந்த வாழ்வில் இருந்து) எங்குப் புறப்படும்போது, எந்த நேரங்களில் எல்லாம் திரும்ப மாட்டார்கள், அல்லது திரும்புவார்கள் என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். 8:23

நெருப்பு, ஒளி, பகல், வளர்பிறை, சூரியன் வடக்கே இருக்கும் ஆறு மாதங்கள் {உத்தராயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் {இறக்கும்} பிரம்மத்தை அறிந்த மனிதர்கள், பிரம்மதை அடையும் இவ்வழியில் செல்கிறார்கள். 8:24

புகை, இரவு, தேய்பிறை மற்றும் சூரியன் தெற்கே இருக்கும் ஆறு மாதங்கள் {தக்ஷிணாயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் அர்ப்பணிப்பாளன் {யோகி}, சந்திர ஒளியை அடைந்து திரும்புகிறான். 8:25

ஒளி மற்றும் இருள் ஆகிய இரு பாதைகளே இந்த அண்டத்தில் நிலைத்தவையாக (நிலைத்த இரு பாதைகளாக) கருதப்படுகிறது. ஒன்றின் மூலம், (ஒருவன்) எப்போதும் திரும்பாதவாறு போகிறான்; மற்றொன்றின் மூலம், ஒருவன் திரும்பி வருவான் (வரப்போகிறான்). 8:26

ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்த இரு பாதைகளையும் அறிந்த எந்த அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} மயக்கமடைவதில்லை. எனவே, ஓ! அர்ஜுனா, அனைத்து நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் {யோகத்துடன்} இருப்பாயாக. 8:27

வேதங்களில் (வேத கல்வியில்), வேள்வியில், தவத்தில், தானங்களில் பரிந்துரைக்கப்படும் புண்ணியப் பலன்களை அடைந்து, (இங்கே சொல்லப்பட்ட) அனைத்தையும் அறிந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன் முழுமையை அடைந்து, தொடக்க {ஆதி} மற்றும் தலைமையான {பரம} நிலையையும் அடைகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 8:28


ஆங்கிலத்தில் | In English